===============================================
தினசெய்தி நாளிதழில் (11.11.2019) அன்று வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
===============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் !
***********************************************************************
(பகுதி – 8)
பிறர் மனம் நோகாமல் திருத்தும் குணாளர்..!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எம்.ஜி.ஆர் மறைவதற்கு, ஓராண்டுக்கு முன்னால், என்னைப் பதவியில் இருந்து மாற்றியபோது, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி யிருக்கிறேன். அப்போது, அவர் எந்தளவிற்கு, நிலைகுலைந்து போயிருந்தார் என்பதையும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும், அந்த அனுபவங்கள் என் மனத்தின் நினைவலைகளில் எப்போதும் நிழலாடிக் கொண்டுதானிருக்கும்.
திடுமென்று ஒருநாள், என்னைப் பதவியில் இருந்து, மாற்றி விட்டார்கள். என்னுடைய வருத்தம் இதுதான். தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறையில், அரசுச் செயலாளராக இருந்த, என்னை மாற்றவே முடியாது. அதற்குத் தக்க பதவி, வேறு துறைகளில் இல்லை. இயல்பாக சிலர் எனக்கெதிரான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
எம்.ஜி.ஆரிடத்தில், ‘‘அவருக்குப் பேச வரவில்லை. வாய் குழறுகிறது. பேசாதவர், என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று உங்களைப் பற்றி, வாய்க்கு வந்ததைப் பேசுகிறார் நடராஜன்’’ என்று கதை கட்டியிருக்கிறார்கள். என்னைப் பற்றி, ஒரு கருத்து இருக்குமானால், அவர் மிகத்தெளிவாக இருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், என்னைப் பதவியில் இருந்து மாற்றினார்கள். மாற்றியவர்கள் ரொம்பத் தெளிவாக, என்னைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்து விட்டார்கள்.
போக்குவரத்துத் துறையின் தலைவராக இருந்த திரு.எஸ்.டி.காசிராஜனை, தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையில் அமர்த்தினார்கள். தக்கவரும் தகுதிமிக்கவருமான நல்லறிஞரான அவரை அமர்த்தியதில் நான் உள்ளன்போடு வரவேற்றேன். பெருமிதம் கொண்டேன்.
எம்.ஜி.ஆர். இவ்வளவு நிலைகுலைந்து விட்டாரே என்று, நான் வருத்தப்பட்டேன். இரு திங்கள் கழித்து, தலைமைச் செயலாளராக இருந்த, பண்பின் திலகம் பத்மநாபன், ஒரு நியமன ஆணையை வெளியிட்டார். உலகத் தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர் என்ற பதவியில், அரசுச் செயலாளர் தரத்தில் இயங்குவார் என்று, ஆணை வெளியிட்டார். மதுரையில் பணிகள் நடைபெற்றாலும், சென்னைத் தலைமைச் செயலகத்தில், அவர் இருந்த அறையிலேயே, அந்தப் பணிகளைத் தொடரலாம் என்றும், அந்த ஆணையில் கூறியிருந்தார். அதனை, மிக நன்றியோடு, நான் நினைக்க வேண்டும்.
அதன்பின், ஓர் அரங்கத்தில், முதலமைச்சரைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ‘‘இங்கே வாருங்கள்’’ என்று சொன்னார். என் தோள்களைத் தொட்டு, எப்போதும்போல, அவர் பேசினார். ‘‘என்ன அண்ணா இப்படி நடந்து விட்டதே!’’ என்றேன். ‘‘என்ன நடந்தது?’’ என்று கேட்டார்.
அவரது காதில், நாம் சொல்ல வேண்டிய நிலைமை. அது, அவருக்கு விளங்கவில்லை. ‘‘என்னை மாற்றியிருக்கிறார்கள். உங்களைப் பார்த்துக் கேட்கலாம் என்று வந்தேன். ஆனால், உங்களைப் பார்க்க முடியவில்லை’’ என்று சொன்னேன். தொடர்ந்து, அவரால் பேச முடியவில்லை. ‘‘சரி அண்ணா’’ என்று, நான் கிளம்பிவிட்டேன். ஆனால், அவரது பார்வையில், பழைய கனிவு இருந்தது.
ஒருமுறை அயல்நாடுகளைப் பற்றி வந்த மொழிபெயர்ப்பு குறிப்பில், ஸ்ரீலங்கா என்பதை நான் இலங்கை என்று எழுதிவிட்டேன். இலங்கை என்றுதான் அரசின் செய்தித்தாள்களிலும், அறிக்கையிலும் எழுதப்படுவதை நான் கண்டிருக்கிறேன். அப்போது இருந்த தலைமைச் செயலாளர், என்னை அழைத்து, “ஒரு நாட்டின் பெயரை அவர்கள் ஒலிப்பது போலத்தான் எழுத வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஸ்ரீலங்கா என்ற பெயரை இலங்கை என்று உங்கள் விருப்பம்போல் எழுதுவதா?” என்று கேட்டார். நான், எதிர் உரை ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டேன். அவர்கள் ஸ்ரீலங்கா என்றே திருத்திக் கொண்டார்கள். அந்த நாளில், நான் மொழிபெயர்ப்புத் துறையில் இருந்தபோது, இலங்கை தூதுவரகத்தில் இருந்து திங்களுக்கு ஒருமுறை வீரகேசரி இதழை அனுப்பி வைக்குமாறு கேட்டு அவர்கள் அனுப்புவது வழக்கம். அதில் தலைப்பிலேயே இலங்கை என்று பெரிய எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதுபோலவே, என்னிடத்தில் இருந்த இலங்கை நாணயம் ஒன்றை தேடி எடுத்து தந்தார், என் தனிச் செயலாளர். அதிலும், இலங்கை என்றே பொறிக்கப்பட்டிருந்தது.
இரண்டொரு நாள் கழித்து, புரட்சித்தலைவரைப் பார்த்து, வேறொரு தகவலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, நானே முந்திக்கொள்ளாமல் எடுத்து வந்த கோப்பில் வீரகேசரி இதழை இணைத்து வைத்திருந்தேன். திரும்பிப் பார்த்த புரட்சித்தலைவர், “அட, இது என்ன இலங்கை தினத்தாள் ஆயிற்றே, உங்களுக்கு வருகிறதா? “ என்று கேட்டார். “தூதரகத்திலிருந்து, திங்களுக்கு ஒருமுறை ஒரு பத்துநாள் தாளை எனக்கு அனுப்புவார்கள். அவர்கள் மொழிபெயர்க்கும் திறத்தை நாமும் பின்பற்றலாமே என்று கேட்டிருந்தேன்” என்று கூறினேன். அந்த தாளை இரண்டுமுறை புரட்டிப் புரட்டிப் பார்த்தார். சரி என்று என்னை அனுப்பிவிட்டார். நான் திரும்பி வந்ததும், தலைமைச் செயலாளர் என்னிடம் பேசினார். “நான் சொன்ன கருத்து பொதுவான கருத்து, இலங்கை என்று எழுதியது மிகப் பொருத்தம்தான், இதைப்போய் புகாராகச் சொல்லிவிட்டீர்களே?” என்று என்னை கேட்டார். “ஐயா, நான் அப்படி ஒன்றுமே அதைப்பற்றி பேசவில்லை. பிழையிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்”என்று தொலைபேசியில் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது, புரட்சித்தலைவர், தலைமைச் செயலாளரிடம் “இலங்கை என்றே எல்லா இடத்திலும் எழுதச்சொல்லுங்கள்’’ என்று கூறினாராம். பிறர் மனம் நோகாமல் திருத்தும் குணத்தை, புரட்சித்தலைவர் எப்படி கைவரப்பெற்றிருந்தார் என்பதை நினைத்துப் பார்த்து வியந்தோம்.
ஐவீர் அருவீர் எழுவீர் போல மதிப்புயர்ந்த மனங்கவரும் உணவகங்களை தமிழக அரசே தொடங்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் விரும்பினார். சுற்றுலாத்துறை இந்தப் பணியில் ஈடுபட்டு மாவட்டத் தலைநகரங்களிலும் குறிஞ்சி நகரங்களிலும் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். அந்த வகையில்தான் மதுரை மாநகரில் கட்டப்பட்ட மாளிகையாக தமிழக அரசின் உணவகம் உருவாயிற்று.
திடுமென ஒரு நாள் என்னை அழைத்து, ‘‘இராஜராஜன் என்ற பெயர் வைக்க வேண்டும். உணவகம், விடுதி என்ற பெயர்கள் வேண்டாம். ஓட்டல் என்றே இருக்கட்டும்’’ என்றார். நான் சிரித்துக் கொண்டே, “அண்ணா, வருகிறவர்களை ‘ஓட்டல்’ என்பதுதான் எங்கள் நோக்கம் என்று மாறிவிடக்கூடாது” என்று நான் சொன்னேன். அந்தக் கருத்து புரட்சித்தலைவருக்குப் பிடிக்கவில்லை. சரி என்று சொல்லி நான் என்னுடைய அறைக்குத் திரும்பிவிட்டேன். அன்று மாலையே ஓட்டல் இராஜராஜன் என்று அறிக்கையில் எழுதினார்கள்.
நான் அன்றாடம் மாலை 06.00 மணியளவில், கவியரசி திருமதி.சௌந்தரா கைலாசம் அம்மையார் இல்லத்திற்கு அவர் பெறாத மகன் போல அன்றாடம் சென்று பேசி வருவது வழக்கம். பின்னர், நான் புறப்படும்போது 09.00 மணியிருக்கும், அப்போது சொன்னேன், “அம்மா, மாமன்னன் இராசராசனுக்கு மதுராந்தகன் என்று ஒரு பெயர், மதுரையை எரித்தவன் என்று பொருள். மதுரைக்கு எதிரியான இராஜராஜன் பெயரை மதுரை மாநகர் உணவு விடுதிக்கு வைப்பது பொருத்தமாகத் தெரியவில்லை.
புரட்சித்தலைவரிடத்தில் என்னால் எடுத்துச் சொல்ல முடியவில்லை. உடன் இருந்தவர்கள் அவர் சொல்வதுதான் சரி என்று ஆமோதித்தார்கள். ஆமாம் என்று தலையசைத்தார்கள்.” என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
மறுநாள் காலை, புரட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து பேசினார்கள். நான் 11.00 மணிக்கு முதலமைச்சரைச் சென்று பார்த்தேன். என்னை எப்போதுமே அருகில் அழைத்து ஒரு கையை தோளில் வைத்துக் கொண்டு பேசுவது புரட்சித்தலைவர் வழக்கம். “இராஜராஜன் பெயரை எடுத்து விட்டேன். ஓட்டல் தமிழ்நாடு என்று இனிமேல் அழைக்கப்படும். சுற்றுலாத்துறைக்கும் சொல்லிவிட்டேன். எங்கே சொன்னால் எது நடக்கும் என்று அவ்வைக்கு நன்றாகத் தெரிகிறது. நீங்களே சொல்லியிருக்கலாமே என்ன பயம்?” என்று புன்னகையோடு அனுப்பினார். உரிய நேரத்தில், உரியவர்கள் மறுப்பாகச் சொன்னாலும்கூட சொல்லுகிற முறையில் கனிவிருந்தால் காதாரக் கேட்டு தன் கருத்தை மாற்றிக்கொள்கிற திறம் எம்.ஜி.ஆரின் பெருமைக்கு ஆணிவேராக அமைந்திருந்தது.
தொடர்வோம்… பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment