==============================================================
உகரம். ஏப்ரல், 2019 இதழில் முனைவர் ஔவை நடராசன் அவர்கள் குறித்து
அறிஞர் ப.குணசேகர் எழுதிய கட்டுரை
==============================================================
அறிவுலக மேதை !
================
நகத்திற்கு விரலில்
இருக்கும் வரைதான் மதிப்பு
நதிக்கு ஓடும் நீர்
இருக்கும் வரைதான் மதிப்பு
நகரத்திற்கு நல்லோர்
இருக்கும் வரைதான் மதிப்பு
நட்பிற்கு இதயம் இணைந்து
இருக்கும் வரைதான் மதிப்பு
ஔவை நடராசனுக்குத் தமிழ்
‘ந’ இருக்கும் வரை மதிப்பு; தமிழ்
நா இருக்கும் வரை மதிப்பு நட்பு,
தீரா அன்பிற்குள் அடைக்கலம் நண்பர் இரா. சனார்த்தனம் – இளமையிலிருந்து முதுமை வரை உலகத் தமிழ்ப் பேரவை தலைவராக இருந்த சனார்த்தனம்… ஒளவை நடராசனைப் பற்றிச் சொன்னது என்ன? அவரைச் “சின்ன அண்ணா என்றுதான் அழைப்போம். அறிஞர் அண்ணாபோல் சொற்பொழிவுத் திலகமாக விளங்குகிறார் அறிஞர் ஔவை நடராசன். புதுமைக் கருத்துக்களை மேடையில் அமர்ந்த வண்ணமே சிந்தித்து உதிர்க்கும் நல்ல தமிழறிஞர் அவர். அவர் ஓர் அறிவுலகமேதை; அவரை அறியாதவர் பேதை; தமிழுக்கு அவர் ஒரு தனிப்பாதை; தமிழ் உலகம் எப்போதும் திறந்து வைக்கும் காதை. மேதை என்பது தானே உணர்வது; தானே பொலிவது; தமிழ் கண்டெடுத்த மேதை அவர்.
1970களில் நடந்தது இது… கோவையில் ஒரு பட்டிமன்றம். கண்ணகியா, மாதவியா என்பது பட்டிமன்றத் தலைப்பு. ஔவை நடராசன் அணியில் இடம் பெற்றேன். கையில் நிறைய குறிப்புகள். அவர் அதனை வாங்கினார். பார்த்தார். அவையினர்க்கு வழங்கினார் கைதட்டல் முழக்கம் எங்கும். அவர் தலைமையில் பேச வாய்த்தது நான் செய்த பேறு.
மதுரையில் நடந்த உலகத் தமிழ்மாநாட்டில் மாலைப்பொழுதில் ஒரு கருத்தரங்கு. அதில் அவர் நெறியாளராக இருந்தார். 23 பேர் பேச்சாளர்கள் வரிசையாக முறைப்படுத்திப் பேச முன்னுரிமை கோரினர்; நேரமின்மை தலைக்கு மேல் தொங்கிய கொடுவாளாக இருந்தது. தலைப்பு ‘தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா’ என்பது. ஒவ்வொருவரும் பேச நீண்டநேரம் கேட்டனர். ஆளுக்கு 15 நிமிடங்கள் என்று ஒதுக்கியது. குறுகிப்போய் 5 நிமிடம் 3 நிமிடம் என்று ஆனது. நெறியாளர் எங்களிடம் சொன்னார். அவை திரண்டு இருப்பது உங்கள் பேச்சைக்கேட்க அல்ல உங்கள் முகங்களைக் காண! தமிழ்நாட்டில் இத்தனை எழுத்தாளர்கள் உள்ளனர் என்று காட்டத்தான்.
ஏமாற்றம் அடையவில்லை. தமிழின் ஏற்றம் தெரிந்தது. அவர் ஒரு ஊக்க ஊற்று. தன்னைத்தேடி நாடி வருபவரிடம் கேள்விகேட்டுத் திறமையை வெளிக் கொணர்வதில் அவருக்கு நிகர் அவரே. கேள்விகளால் ஒரு புத்தகம் என்ற பாப்லோ நெரூடாவை மொழிபெயர்த்த நேரம். கண்ணாடிகளை விழுங்கும் கண்ணாடி என்ற நூல் வெளியிட்டேன்.
“எல்லா நதிகளும் இனிப்பானால்
கடலுக்கு எங்கே இருந்து வந்தது இந்த உப்பு”
என்ற கவிதையை எப்போது எங்கே பார்த்தாலும் எங்கே அதைச் சொல்லுங்கள் என்று கேட்பார் நானும் தயங்காமல் சொல்வேன். என்னை அடையாளப்படுத்த நினைவுப்படுத்த அந்தக் கவிதையே குறிப்பாக வைத்து இருந்தார்போலும். நூலினைக் கொடுத்தால் தொலைபேசி எண்ணை அதில் எழுதுங்கள் என்று வலியுறுத்துவார். நூல் நயம் தொலைபேசியிலே தொடங்கும். கேள்வி கேட்கும் சாக்ரடீஸ் உரையாடல் கலையில் உயர்ந்ததுபோல இவரும் கலகலப்பான உரையாடல் நிகழ்த்துவார். அறிஞர் அண்ணா ‘ஒரு புகழ்க் கோபுரம்’ என்ற நூலினைக் கையில் வைத்து இருந்தேன். அதில் என்னிடம் ஒரே பிரதிதான் இருந்தது. தனக்கு வேண்டும் என்று கேட்டார். என்ன செய்வது என்று திகைத்தேன். பக்கத்தில் இருந்தவர்களிடம் இந்த எழுத்தாளர் அறிஞர் அண்ணாவோடு பழகியவர். இவரை உடனே பேச அனுமதியுங்கள் என்றார்.
நதிநீர் இணைப்புப் பற்றி ஒரு கருத்தரங்கு எத்திராஜ் கல்லூரியில் நடந்தது. விழாவை ஏற்பாடு செய்தவர் எனதருமை நண்பர் இரா. சனார்த்தனம். எகிப்தில் ஒரு நதி ஆறுமாதம் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுமாதம் மேற்கு நோக்கிப் பாயுமாம். அது போல் நம் நாட்டில் உள்ள நதிகளைச் செய்தால் என்ன தண்ணீர்ப்பஞ்சம் எழாது – அல்லவா என்று அவரது பேச்சை அவை பெரிதும் பாராட்டியது என் நினைவில் நிற்கும் பேச்சு. புதுக்கவிதையில் அறிவியல் என்ற எனது நூலினை வழங்க அண்ணாநகருக்குச் சென்றேன். அது குறித்துக் கேட்டார். பிறகு என்னை அழைத்துக் கொண்டு சென்று பாலாஜி பவனில் சிற்றுண்டி உண்ணச் செய்தார். அவரது விருந்தோம்பல் சிறப்பை முழுதும் கண்டேன்.
நீதியரசர் மோகன் வீட்டிற்குச் செல்லுவோம் என்றார். அவர் எனது உறவினர் என்றேன். நீதியரசர் தன் துணைவியாரை இழந்த நேரம். அவருடைய வீடு மயிலாப்பூரில் வெங்கட கிருஷ்ணா தெரு என்றேன். வீட்டைக் கண்டுபிடிக்க மிகுதியான நேரம் செலவழிந்தது. பலரைக் கேட்டுக் கண்டு பிடித்தோம். அப்போது எனது நூலாக மொழியின் ஒளித் துளி என்ற நூல் தயாரித்தபடி இருந்தேன். தமிழில் Vertical என்றாலும் செங்குத்து என்கிறோம். Perpendicular என்றாலும் செங்குத்து என்கிறோம். இரண்டுக்கும் இருவேறு சொற்கள் இல்லையே என்றேன்.
புதிய சொல்லாக்கமாக நெடுப்பக்க கவிதைகள் என்று போட்டுள்ளேன். அதற்கு அவர் நெடுமியம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே என்று ஆலோசனை வழங்கினார் அவர். ஒரு சிந்தனைச் செம்மல் என்று எனது உள்ளம் கொண்டாடியது.
தியாகராய நகரில் எனது நூலான பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும் என்ற நூலை கவிதா பதிப்பகத்திலே வாங்கி முதல் பிரதியை அவரிடம் தந்தேன். பலர் தமிழறிஞரைச் சூழ்ந்து இருந்தனர். இருந்தபோதிலும் எனது நூலை உடனே படிக்கத் தொடங்கிவிட்டார். சுற்றி இருந்த மக்கள் செய்வதறியாது நின்றனர். அணுகுவோர்க்கு அன்பு பாராட்டும் சிந்தனைச் செம்மல் அவர் 2016ல் எனது 80வது பிறந்தநாள் விழாவில் கஜல்பரல்கள் உவமைக்களஞ்சியம் என்ற இரண்டு நூல்கள் வெளியாகின. கஜல் பற்றி புதுப்புதுக் கருத்துக்களைச் சொன்னார். அவை, மெய்மறந்து கேட்டது; மேம்பாடு அடைந்தது அந்த நூல் தமிழுக்குக் கிடைத்த புதுமைப் பெட்டகம் அவர் தமிழ்நாடு கிடைத்த சிந்தனைச் செல்வம் தமிழினத்திற்குக் கிடைத்த மென்காற்று வீசும் இலக்கிய மேடை!.

Add a Comment