தின செய்தி நாளிதழில் இன்று (17.11.2019) வெளிவந்த கட்டுரை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
” ஆரவாரிக்கும் அளப்பரியப் பெருங்கடல்..!”
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ஆங்கிலேயக் கவிஞர் சாமுவெல் டெய்லர் கோலெரிட்ஜ் இயற்றிய ‘‘தொன்மைக் கடலோடியின் இசைப்பாடல்’’ ஒன்று மட்டிலுமே அவர் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பின் அவருக்கு இரட்டை நோபல் பரிசுகளை ஈட்டிக் கொடுத்திருக்கும்! அவோன் கவிஞரைப் பற்றி அவர் ‘‘பல்லாயிரம் கோணங்களில் சிந்திக்கவல்ல ஷேக்ஸ்பியர்’’ (myriad minded Shakespeare)என்கிறார். எந்நாட்டவராலும், எக்காலத்தவராலும் ஒருமித்த குரலில் இம்மண் கண்ட மாமேதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஷேக்ஸ்பியர் ஒருவர் மட்டிலுமே!
2012-ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. ஷேக்ஸ்பியருடைய நாடக அரங்கம் அவருடைய காலத்தில் இருந்ததைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. அது ஒலிம்பிக் கிராமத்தின் முகாமையான ஈர்ப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஷேக்ஸ்பியருடைய நினைவாலயங்களிலேயே மெய்மை மிளிர்ந்த காட்சியாக விளங்கியது. அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த கருவூலங்களுக்கிடையே, நெல்சன் மண்டேலா ரோப்பென் தீவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அவர் படித்த ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடக நூலின் படியொன்று அவருடைய நினைவுக்குறிப்புகளுடன் வைக்கப்பட்டிருந்தது.
நியூட்டன், டார்வின், சர்ச்சில் ஆகியோரைப் பற்றிய குறிப்பெதுவும் அங்கே காணப்படவில்லை. இங்கிலாந்தினுடைய மாண்புமிகு மைந்தனான ஷேக்ஸ்பியருக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக இலண்டன் அதனைப் பற்றிக் கொண்டுவிட்டதாகவே தோன்றியது. பிரிட்டன் தனது வரலாற்றின் மாண்பமைந்த காலகட்டத்தின்போது இங்கிலாந்தின் அறிவாற்றலின் ஒப்பில்லா மரபுவழி வைப்பாக உலகுக்குக் காட்டுவதற்குத் தனித்தகைமை வாய்ந்தவராக, நியூட்டனோ, டார்வினோ, சர்ச்சிலோ அல்லது வேறு எவருமோ அல்ல, ஷேக்ஸ்பியர் மட்டுமே விளங்கினார். இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் எனும் நாடகத்திலுள்ள ஷேக்ஸ்பியரின் சாகாவரம் பெற்ற வரிகளை நினைவுகொள்ளுங்கள். கௌந்த்தின் ஜான் இங்கிலாந்தைப் புகழ்வதில் ஆழ்ந்திடும் பேரானந்தத்தைப் பாருங்கள்;
‘‘பீடுமிக்க பூமியே! மார்ஸ் தேவதையின் இருப்பிடமே!
விண்ணுலகின் மாற்றான மற்றொரு ஈடென் தோட்டமே!
ஊடுருவலுக்கும் போர் எனும் கொடிய கரத்திற்கும் எதிராக
இயற்கை தனக்குத் தானே கட்டிக் கொண்ட
தகர்க்கவொண்ணாக் கோட்டையே!
மகிழ்ச்சிமிக்க மக்களை ஈன்றெடுத்த
சின்னஞசிறு உலகே!
வளங்குன்றிய நாடுகளின் காழ்ப்புக் கண்படாமல்
அரண்மதிலாகவும் அகழியாகவும் பாதுகாப்புப் பணியாற்றும்
வெள்ளிப் பெருங்கடல் நடுவே பதிக்கப்பெற்ற
விலைமதிப்பற்ற அரியவகை மாணிக்கமே!
இந்நிலத்துண்டு, இந்நிலப்பரப்பு, இந்தநல்லாட்சி,
இந்த இங்கிலாந்து அனைத்துமே பேறு பெற்றவை!
தமது மரபின் மானம் காக்கும் மருட்சியும்
பிறப்பால் புகழும் கொண்ட
மாமன்னர்களைப் பெற்றெடுத்த கருவறை;
பேணிவளர்த்த செவிலித்தாய்…!
அருவியெனக் கொட்டும் உருவகப் பெருக்கு! எந்தவொரு கவிஞனும், எந்தவொரு மொழியிலும் எக்காலத்தும் இந்த விதத்தில் நாட்டைப் பாராட்டிப் பாடியதுண்டா? ஒலிம்பிக் போட்டிகளைக் காணக் குழுமியிருந்த மாபெரும் கூட்டத்தின் அனைத்துப்பிரிவினரும் அந்த மாபெரும் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நாடக அரங்கினைக் கண்டுகளித்ததாகச் செய்திகள் எட்டின.
ஹெய்சென்பெர்க்கினுடைய ‘உறுதியற்றதன்மை கோட்பாட்டைப் படிக்கும் பொழுது அல்லது டைராக்கினுடைய சமன்பாட்டைப் புரிந்து கொள்ளும் பொழுது ஒருவித குதூகலத்தில் நாம் ஆழ்ந்திடலாம். ஆனால், அதனை, ஹேம்லெட் நாடகத்தில் ‘இருப்பதா? மரிப்பதா?’ அல்லது, லியர் மன்னனுடைய ‘அன்பார்ந்த இயற்கையே, கேள்! பாசமிகு தேவதையே கேள்’ போன்றவற்றைப் படிக்கும் போது ஏற்படுகின்ற மயிர்க்கூச்செரியச் செய்யும் அனுபவத்துடன் ஒப்பிட முடியாது. மேலும், ‘தகுதிமிக்கவை உயிர்த்திருக்கின்றன‘ எனும் கோட்பாட்டையோ, டிஎன்ஏ மரபொப்புமை முறையையோ படிக்கும் பொழுது நம்முள் பேருவகை பூப்பது உண்மைதான். ஆனாலும், மேக்பெத்தில் ‘நாளையும் மறுநாளையும்..’’ ஜூலியஸ் சீசரில் ‘‘குதிரை மீது வீற்றிருக்கும் அப்போலோவைப் போல ஏனிந்த மனிதன் இருபுறமும் கால்போட்டு இந்தக் குறுகிய உலகில் பயணிக்கிறான்…’’ போன்ற ஷேக்ஸ்பியர் எழுத்தோவியங்களைப் படிக்கும்போது ஆழ்ந்துவிடுகின்ற பேரானந்தத்தை அனுபவிக்க முடிவதில்லையே! இத்தகைய மாபெரும் அறிவியல் மேதைகள் அனைவரும் அளப்பரிய திறம்படைத்த மதிப்பிற்குரிய மனிதர்கள் என்பதில் ஐயமில்லை.
பெரும்பாலானோரைப் போல, அறிவியல் அறிவியல்தான்; இலக்கியம் இலக்கியம்தான்; இரண்டையும் ஒப்பிடக் கூடாது என்று நம்மால் கூற இயலாது, வெறுமனே மடிந்து போகக் கூடிய இரு வேறு புலங்களை ஒப்பிடும்போது அது உண்மையானதுதான். ஆனால், ஷேக்ஸ்பியரைப் பொறுத்தவரை மட்டிலுமே, ஏனைய அனைத்து நிலையற்றவற்றிற்கும் மிக உயரத்தில் உள்ள அதி உன்னத மேதையைப் பற்றிப் பேசுகிறோம்!
மிகவும் புகழ்பெற்ற விண்வெளி இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பேரியக்க மண்டலம் குறித்த முழுமையானதொரு கொள்கையை வகுப்போமானால், மனிதனுடைய இருப்பின் நோக்கத்தையும் பேரியக்க மண்டலத்தையும் நன்கு புரிந்து கொள்ளலாம்; அதன் வாயிலாக கடவுளின் எண்ணத்தையும் அறிந்து கொள்ளலாம் என்று கூறினார். இக்கருத்து, அலெக்ஸாண்டர் போப் தன்னுடைய ‘‘மனிதனைப் பற்றிய கட்டுரை’’-யில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அவர் வரைந்தார், ‘‘உங்களை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்! இறையாற்றல் ஆய்ந்து தெரிவிக்க வேண்டும் என்று எண்ணாதீர்! மனித இனத்தைப் பற்றிய முறையான ஆய்வு மனிதன் மட்டிலுமே!’’ பேரியக்க மண்டலத்தை இறையாற்றல் படைத்ததனால், மனிதன் அதில் தனது பங்கினைப் புரிந்து கொள்வதன் வாயிலாக படைப்பினுடைய ஒட்டுமொத்த நோக்கத்தையே புரிந்து கொள்வான் என்பது போப்பினுடைய திண்ணிய எண்ணம். போப் அத்தகைய குறிப்புரைகளை அளிப்பதற்கு 130 ஆண்டுகளுக்கு முன்பே ஷேக்ஸ்பியர் மட்டுமே சரியாக அதையே நிறைவேற்றினார். நமது இருப்பினுடைய ஒவ்வொரு பான்மையையும் ஆய்ந்தறிந்தார்; நமது வாழ்க்கையை ஆளுமை செலுத்துகின்ற ஒவ்வொரு உணர்வெழுச்சியையும் துருவி ஆய்ந்தார்; மனித வரலாற்றில் வேறு எவரைக் காட்டிலும் மிகச் சிறப்பாக மனித இயல்பினைப் புரிந்து கொண்டார்.
அதனால்தான் நாம் ஷேக்ஸ்பியரைக் கற்கவேண்டும். அவருடைய எழுச்சியூட்டும் நாடகங்களிலிருந்து சிறப்பு வாய்ந்த பகுதிகளை நாள்தோறும் நமக்கு நாமே ஒப்புவித்துக் கொள்ளலாம். அவற்றின்பால் இடையறாத தொடர்பு கொள்வது அவருடைய வல்லமைமிக்க மனத்தை ஊடுருவக் கூடிய அகப்பார்வையைப் பெறுவதற்கு இறுதியில் உதவக்கூடும்.
மனித வாழ்க்கையின் தரத்தை அளவிடற்கரிய விதத்தில் மேம்படுத்தியுள்ள தூய அறிவியல், தொழில் நுட்பத்தினுடைய கற்பனைவளமிக்க ஆக்கங்களைக் குறைத்து மதிப்பிட முயல்வதாகத் தவறாகப் புரிந்து கொள்ளலாகாது. எந்தவொரு அறிவார்ந்த விவாதத்தை எடுத்துக் கொண்டாலும் அவை அவ்வளவுதாம்! அப்பொழுது கூட, தனித்ததொரு மனிதன் என்றோ இறையாற்றலென்றோ வில்லியம் ஷேக்ஸ்பியரை நோக்கி நழுவிச் செல்வதைத் தடுக்கவியலாது.
தாமஸ் தி குயென்ஸி தன்னுடைய புகழ்பெற்ற ‘‘மேக்பெத்தில், வாயிற்கதவு தட்டப்பட்ட போது’’ என்கிற படைப்பில் தீட்டியிருக்கும் ஷேக்ஸ்பியர் குறித்த அவருடைய பெற்றிமிக்க வரிகளை நினைவுபடுத்திக் கொள்ளாதிருக்க இயலாது; ‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ! உனது படைப்புகள் ஏனைய பெரும் புலவர்களால் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது. அவை, பகலவனின் பேரொளிப் பிழம்பு, ஆரவாரிக்கும் அளப்பரிய பெருங்கடல், விண்ணெங்கும் வாரி இரைக்கப்பட்ட விண்மீன் கூட்டம், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்த் தோற்றம், பொழிந்துறைந்த பனித்திரள், பெய்யெனப் பெய்த மழை, மரஞ்செடிகளின் இலைகளில் திரண்ட திவளைகள், சுழன்றடிக்கும் சூறாவளி, பெருங்குரலெடுத்துறுமும் இடியேறு போன்ற இயற்கைத் திருநடனங்களை ஒத்தவை; புலனனைத்தையும் அடக்கி ஒடுக்கி முழுச் சரணடையும் பொழுது மட்டிலுமே மூளைக்கு எட்டக் கூடியவை!’’
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தனது ‘‘திண்டெர்ன் அபே’’ யில் கீழ்க்கண்ட ஆற்றல்மிகு வரிகளை யாக்கத் தூண்டிய அதே உணர்வெழுச்சிக்கு இதனை வாசிக்கும் யாவரும் வசப்பட்டுவிடுவர்.
‘‘என்னுடைய இத்தனை கால வாழ்க்கையில்
முதன்முறையாக உணர முடிந்தது!
என்னை ஆனந்தமாக அலைக்கழிக்கக் கூடிய
ஏதோவொன்று இருக்கிறது!
உயர்ந்தெழுந்த எண்ணங்களுக்குள்ளே
உள்ளத்தின் ஏதோவொரு மூலையில்
என்னுள் இரண்டறக் கலந்துவிட்ட
உன்னதமானதோர் உணர்வு!
அதன் இருப்பிடமோ,
சென்றடையும் சூரியன்களின் ஒளிக்கோலம்!
உருண்டையாக ஒடுங்கிப் போன கடற்பரப்பு!
ஓயாதுலவும் காற்று!
நீல விசும்பு! மனிதனின் நிறைந்த மனம்!
ஓர் அசைவு, ஓர் எழுச்சி
சிந்திக்கவல்ல அனைவரையும்
சிந்தனைக்கான அனைத்துப் பொருண்மைகளையும்
உந்துகிறது!
அனைத்துப் பொருட்களூடேயும் உருள்கிறது!
ஷேக்ஸ்பியர் உன்னதமானதொரு மேதை. தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டக் காலத்தில் உருவாக்கப்பட்ட பூதாகரமான எந்திரங்களோ, பேரண்டப் பெருவெளியில் மனிதன் தனது எல்லை கட்டிய அறிவைக் கொண்டு துருவி அறிந்த அறிவாக்கமோ, கேட்கப்படாத மெல்லிசை என்று கிரீஸ் நாட்டுப் பழஞ்சி்ன்னங்களை கீட்ஸ் குறிப்பிட்டானே அதன் இனிமையோ, எல்ஜின் பளிங்குகளின் எழில்நலமோ, உள்ளத்தை உருக்கவல்ல பெத்தோவனின் இசையோ ஷேக்ஸ்பியரின் எழுச்சிமிகு பாடல்கள் முன்னே போட்டியிட்டு வெற்றிகொள்ள வல்லவை அல்ல! பன்னெடுங் காலத்திற்குப் பின்னர், மனிதயினம் மறைந்து நீண்ட காலம் கழிந்த பிறகு, ஏதேனும் அந்நிய நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் நமது எளிய புவிக்கோளத்திற்கு வருகைதர நேர்ந்தால், ஐன்ஸ்டினுடைய சார்பியல் கொள்கையையோ, டைரேக்கினுடைய குவாண்டம் இயந்திரவியலையோ, டார்வினுடைய பரிணாமக் கொள்கையையோ, கிரிக்கினுடைய இரட்டைச் சுழல் தத்துவத்தையோ, ஆன்மாவை உலுக்கும் ஷேக்ஸ்பியருடைய கவிதைகளைப் போல வியந்து போற்றப் போவதில்லை!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர்,
மொழி பெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment