தேரோட்டம் நின்றது !
=================
நிமிர்ந்த தோற்றமும் – திமிர்ந்த ஞானச் செருக்கும் அணி செய வாழ்ந்து நீதியுலகில் நேர்மைக்கு உரமூட்டிய பெருந்தகை நீதியரசர் மோகன் கலை மனமும் – கவிதை புனையும் திறமும் வாய்ந்தவர் .
புரட்சித்தலைவர் தமிழக அரசின் சார்பில் உலகக்கவிஞர்கள் மாநாட்டுக்கு இருபது பெயர்களில் இருவர் பெயரைத் தெரிவு செய்திருந்தார் .
நீதிக்கு ஒருவர் , தமிழுக்கு ஒருவர் என்று அவர் பரிவாகக் கூறியபோது நான் நெளிந்தேன் .
சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உலகக் கவிஞர் மாநாட்டில் நீதியரசர் மோகன் தான் தலைமை தாங்கினார் .
முற்போக்கு உணர்வும் – சீர்திருத்தச் சிந்தனையும் – தன்மான உணர்வும் – துணிவும் அவர் பண்பு நலங்களாகும் .
தீர்ப்புரைகளில் பகுத்தறிவுச் சிந்தனைகள் பளிச்சிட்டன.
பத்துநாளுக்கு ஒருமுறையேனும் அவர் அழைப்பதும் – நாட்டு நடப்பைப் பற்றி நகை மிளிரப் பேசுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார் .
வயதின் சுமை என்னை வளைய வைக்கிறது என்று வலியோடு பேசினார் .
மனைத்தக்க மாட்சியுடைய திலகவதியார் மறைவுக்குப் பிறகு அவருக்கு ஆறுதல் கூற ஆருமே இல்லையென்றார் .
அருட்செல்வரின் மனங்கவர்ந்தவர் .ஏ பி டி நிறுவனத்தில் அவர் தந்தையார் தான் முதல் மேலாளராகப் பணியாற்றியதை – அப்பாவுக்கும் அவர் பெரிதும் வேண்டியவர் என்பதை ஒருமுறை போற்றிக் குறிப்பிட்டார் . .
நீதியரசர் எம் .எல் முடித்து வெற்றி வாகை சூடியதைப் பலமுறை பாராட்டி மகிழ்ந்தார் .
நீதியரசரின் மறைவு நெஞ்சை நெகிழ வைக்கிறது .
—– முனைவர் ஔவை நடராசன்

Add a Comment