POST: 2020-01-17T10:03:38+05:30

தினசெய்தி நாளிதழில் இன்று (17.01.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
==============================================
கொடுத்துக் கைச்சிவந்த குமணன் மனம்..!
==============================================

பொன்மனச்செம்மலின் புகழ் ஒளி வீசும் பிறந்தநாள் நினைவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நினைவில் புரண்ட நிகழ்வுகளை எழுதிக் காட்டிப் போற்றுகிறேன்…

புரட்சித்தலைவர் அவர்களை நான் கல்லூரியில் மாணவனாகப் படித்தபோதே அறிவேன். பச்சையப்பன் கல்லூரியில் என்னோடு பயின்ற நண்பர் கணேசன் ஒரு தனித்தேர்வுக்குப் பணம் செலுத்தப் பெரிதும் அல்லலுற்றார். அதற்கென்ன இன்னொரு பத்து நாள் இருக்கிறதே, நான் ஒரு கடிதம் எழுதிப் புரட்சித்தலைவருக்கு அனுப்புகிறேன், எனக்கு அவருக்கு நேர்முகமாகத் தெரியாது, ‘நாடோடி மன்னன் வெளியிட்டபோது சிற்றரங்கில் திருமதி சௌந்தரா கைலாசம் அம்மையார் என்னைப் புரட்சித்தலைவருக்கு அறிமுகப்படுத்திப் பச்சையப்பன் கல்லூரி மாணவன் என் மகன் போல உங்கள் மீது கொள்ளை விருப்பம் கொண்டவன் என்றார்.

உடனே, திரும்பி உங்கள் பெயர் என்ன என்று கேட்டார். ஔவை நடராசன் என்று சொன்னேன். எனக்கு நினைவிருக்கிறது, சுரதாவோடு அண்ணனைப் பார்க்க வந்தீர்கள் அல்லவா? என்று கேட்டார். அவருடைய நினைவாற்றலின் நீளம் என்னைத் திணற வைத்தது. இதை மனத்தில் வைத்துக் கொண்டு, கணேசன் கடிதத்தை அனுப்புவோம் என்று அனுப்பிவிட்டோம்.

வெள்ளிக் கிழமை அது. திங்களன்று காலை என் வகுப்பைத் தேடி ஒருவர் வந்து, நான் எம்.ஜி.ஆர். படக்குழுவில் இருந்து வருகிறேன், கணேசுக்கு எவ்வளவு பணம் கட்டவேண்டும், எங்கே கட்ட வேண்டும் என்று என் கடிதத்தைக் காட்டினார்.

கணேசன் இயற்பியல் படிக்கிறவர், உடனே அவரிடத்தில் சென்றோம். பணம் கட்டி ரசீதை அவர் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். முல்லைக்குத் தேர் கொடுத்த கதை மிகையாக இருந்தாலும் இது முடிகிற செயல்தான் என்று தோன்றியது. தமிழ் மாணவன் கடிதத்தைக் கண்டு நிதி வழங்கிய குமணன் குணம் முதலமைச்சருக்கு இயல்பாக அன்றே திகழ்ந்தது.

திருவிடை மருதூரில் திருவாசக விழா ஆயிரம் ஆண்டை நினைவுகூர்ந்து, எந்த விளம்பரமும் இல்லாமல் சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள் திருவிடை மருதூர் திருக்கோயிலில் விழா நடத்தினார்கள். அம்மையாருக்கு இருந்த செல்வாக்கினாலும் திருவாசகத்தின் மீது கொண்ட உருக்கத்தினாலும் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாயை அந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்துவிட்டார். ஆரவாரமில்லாமல் அவரும் வந்து சேர்ந்தார். புரட்சித்தலைவர், தலைமை அமைச்சர் வருவதற்குப் பதினைந்து மணித்துளிகளுக்கு முன்னர்ப் பெரிய முன்னறிவிப்பில்லாமல் மூன்று கார்களுடன் வந்தார்.

திருக்கோயில் முன்றிலில் விழா தொடங்கியது. தலைமை அமைச்சரோடு நான்தான் உடன் சென்றேன். உடனே என்னைத் திரும்பிப்பார்த்து, உங்கள் எம்.ஜி.ஆர் எங்கே என்று கேட்டார், முதலமைச்சர் திருவிடை மருதூர் திருக்கோயிலில் திருவாவடுதுறை மடத்தின் விருந்தினர் மாளிகை முகப்பில் அமர்ந்திருந்தார். நான் பதில் சொல்லாமல் நின்றேன். தலைமை அமைச்சர், ‘’ஓ! உங்கள் முதலமைச்சர் திராவிடக் கழகத்தார் அல்லவா?’’ என்று ஆங்கிலத்தில் கேட்டு, என்னோடு கோயிலைப் பற்றிய விவரங்களைக் கேட்டபடி நடந்தார். வழிபாடு முடிந்து மாலையும் கையுமாக நாங்கள் திரும்பினோம்.

முதலமைச்சர் கையில் Keep this with you என்று ஒரு மாலையைத் தலைமையமைச்சர் மொரார்ஜி தேசாய் கொடுத்தார். முதலமைச்சர் வணங்கி வாங்கிக்கொண்டார். நாங்கள் நிகழ்ச்சி அரங்கிற்குச் சென்றுவிட்டோம். நான் வருவேன் வழிபாட்டில் பங்குபெற மாட்டேன் அவர் சௌந்தரா கைலாசம் அம்மையாரிடத்தில் சொன்ன பொருள் மொழியை அவர் காப்பாற்றியதை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அதேபோல மற்றொரு தருணத்தில், காலை 11 மணி இருக்கும், தலைமைச்செயலகம் பரபரப்பாக இருந்தது .முதலமைச்சர் தம் அறைக்கு வந்திருக்கிறார் என்று பொருள். அமைச்சர்கள் கூட்டம், செயலர் கூட்டம், விருந்தினர் வருகை என்று நிகழ்ச்சிகள் முதலியவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.. திடீரென்று முதலமைச்சர் உடனே அழைக்கிறார் என்று செய்தி வந்தது. நான் உடனே விரைந்து ஓடினேன். ஒரு காரோட்டி பற்றிய முறையீடு இடம் பெற்றிருந்த கோப்பு அது. அது என்ன கார் ஓட்டி என்று எழுதியதைத் திருத்திக் காரோட்டி என்று எழுதுகிறீர்கள். கார் ஓட்டி என்றால் என்ன தப்பு என்றார் முதலமைச்சர். அச்சத்தோடு, அண்ணா கார் ஓட்டி என்றால் இரண்டு சொற்கள். ஒரு சொல்லாக வரவேண்டும் என்பதால் அப்படி எழுதினேன் என்றேன். அதுவென்ன! வரவேண்டும் என்பதால் அதென்ன! விளங்க வேண்டாமா என்று அதட்டும் குரலில் கேட்டார் புரட்சித்தலைவர். அண்ணா நான் படகோட்டி பார்த்துத் தமிழ் படித்ததனால் காரோட்டி என்று எழுதிவிட்டேன் என்றேன். அடுத்த நொடியே அன்பணைப்பாக என்னை இழுத்தணைத்துக் கொண்டார். அப்படிச் சொல்ல நீங்கள்தான் வேண்டும் என்று அன்புதழைக்கச் சொன்னார். இந்த நிகழ்வு என் நினைவில் அப்படியே நிலைத்துவிட்டது.

இன்னும் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும், தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில் ஒரு தொடக்க நிலை உரையாளராக என்னுடைய பணியைத் தொடங்கினேன். அப்போது மாணவர்கள் மத்தியில், எனக்குச் செல்வாக்கு இருந்தது. திடீரென்று தஞ்சை நகரில், எம்.ஜி.ஆர். ஒரு நாடகம் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு. அவரைக் கல்லூரிக்கு அழைத்துவந்து, பேசவைக்கலாம் என்று நான் மாணவர்களிடத்தில் சொன்னேன். மாணவர்களுக்கும், எம்.ஜி.ஆர். மீது மாபெரும் காதல், ஐயோ! நம் ஆசிரியர் இங்கே எம்.ஜி.ஆரை அழைத்து வரப்போகிறார் என்ற பெருமிதம்.

அப்போது கல்லூரி முதல்வர் என்னைப் பார்த்து, “எம்.ஜி.ஆரை அழைத்து வர, உங்களால் முடியுமா?’ என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். சரபோஜி மன்னர் கல்லூரிக்கு எம்ஜிஆர் வரப் போகிறார் என்பதை அறிந்ததும், தஞ்சையே கலகலத்துப் போயிருந்தது. எம்ஜிஆரைச் சந்தித்து, அவரைக் கல்லூரிக்கு அழைப்பதற்காக, நான் சென்றேன். அந்தச் சமயத்தில் எம்ஜிஆருடன் பணியாற்றிக் கொண்டு, திரைப்படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார் கவிஞர் முத்துக்கூத்தன்.

நான் மாணவனாக இருந்த போதே, அவரோடு பழகியதுண்டு. ஏனென்றால், நானும் கவிஞர் சுரதாவும் சிலநேரங்களில் படப்பிடிப்புகளுக்குப் போவோம். அப்போது புரட்சித் தலைவரின் படப்பிடிப்புத் தளங்களுக்கும் சென்றிருக்கிறோம். கவிஞர் முத்துக்கூத்தனை, அந்தச் சமயங்களில் நான் சந்தித்திருக்கிறேன். என்மீது, மிகுந்த அன்பு காட்டுவார். அந்த நட்பினால், எம்ஜிஆரைப் பார்க்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது. என்னைப் பார்த்தவுடன் கட்டியணைத்துக் கொண்டார். “எப்படியிருக்கிறாய்? பேசாமல் என்னோடு வந்து சேர்ந்து விடு’ என்றார். எப்போதுமே தன்னைச் சந்திப்பவர்களிடத்தில், அவர் தனியன்பு காட்டுவார். நம்மிடத்தில் என்ன திறமை இருக்கிறது என்று இவ்வளவு அன்பு காட்டுகிறார் என்று நமக்கு எண்ணத் தோன்றும். ஆனால், எல்லோரிடத்திலும் அவ்வாறுதான் பழகுவார் எம்ஜிஆர். விதம் விதமான உணவுகளைக் கொண்டுவந்து, அதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள் என்று உபசரித்தார். இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயம். என்னுடன் இரண்டு ஆசிரியர்களையும் அழைத்துப் போயிருந்தேன். அவர்களுக்கு என்னைப் பற்றி, மிகப்பெரிய மதிப்பு ஏற்படும்படி, எம்ஜிஆர் நடந்துகொண்டார். இது ஒரு சிறப்பான குணம் அல்லவா!

சிலநேரங்களில் நம்முடைய மதிப்பு முழுவதையும், இன்னொருவருக்கு எதிரில் காட்டத் தவறி விடுவார்கள் பலர். கல்லூரிக்கு வரச் சம்மதம் தெரிவித்தார் எம்ஜிஆர். நாங்களும், மகிழ்ச்சியோடு திரும்பினோம். காலை பத்தரை மணியளவில், கல்லூரிக்கு வந்தார் எம்ஜிஆர். தஞ்சையே, அங்கு திரண்டிருந்தது. கூட்டத்தினரைப் பார்த்து, ‘நான் அரைமணிநேரம்தான் பேசுவேன்’ என்றார் புரட்சித்தலைவர். அவர் பேசத்தொடங்கி, அரைமணிநேரம் ஆனபின்பு, அவர் கையில் இருந்த கைக்கடிகாரத்தில் அலாரம் அடித்தது. அதுவே எங்களுக்கு, மிகப்பெரிய வியப்பு. காரணம், கைக்கடிகாரத்தின் அலாரம் அடிக்கும் ஓசையை, நாங்கள் அதுவரை கேட்டதேயில்லை. அதற்காகவே, தனியாகக் கைதட்டினார்கள். இதைப் பார்த்ததும், எம்ஜிஆர் சிரித்துக் கொண்டார். நண்பகல் ஒரு மணிவரை, அந்தக் கூட்டத்தில் பேசினார் எம்ஜிஆர். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் எம்ஜிஆர். மாணவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவர்களுக்குக் கையெழுத்து இட்டுத் தந்தார். கல்லூரி முதல்வர் அருகில் இருக்கும் போதே, ‘நடராஜன் என்னோடு வந்துவிடுங்கள்’ என்று அவருடைய காரிலேயே அழைத்துக் கொண்டு போனார். அது என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி!

இப்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆருடனான மகிழ்த்தும் நெகிழ்த்தும் எண்ணற்ற நினைவுகள் என் மனத்தில் ஏராளமாக நிறைந்திருக்கின்றன. அவை அனைத்தும் சுவாசக்காற்றைப்போல் மனம் முழுதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். என்றாலும் அவற்றில் ஒன்றிரண்டை எம்ஜிஆரின் பிறந்த நாளான இன்று தினசெய்தி வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

-ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை

தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *