POST: 2020-01-19T10:28:50+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (19.01.2020) வெளியான கட்டுரை

மனைவி மாட்சிமை இல்லாதது… வாழ்க்கை அன்று..!

பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தின் சுவையைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று முதுமொழிக் காஞ்சியின் முத்தான பாடல்களில் ஒரு சிலவற்றின் இன்சுவை தொட்டு அவற்றின் பொருள் அறிந்து இலக்கிய இன்பம் நுகரலாம்…

முது மொழிக் காஞ்சி
அறிமுகவுரை

முதுமொழி, முது சொல் என்னும் சொற்கள், பழமொழியைக் குறிப்பன. காஞ்சி என்னும் சொல், நிலையாமையைக் குறிப்பது. ஆனால், ‘முதுமொழிக் காஞ்சி’ என்பது, நிலையாமை குறித்த பழமொழிகளாக அமையா நூல்.

இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கிக் கூறுவதால், ‘புறப்பொருள் வெண்பா மாலை’ கூறும் முதுமொழிக் காஞ்சித் துறைக்குரிய தெளிபொருளாக அமைந்துள்ளது. புறப்பொருள் வெண்பாமாலையில், முதுமொழி காஞ்சித்துறை அமைந்துள்ளது. அதனை, ‘மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி’ என்ற, தொகைச் சூத்திரம் சுட்டியுள்ளது.

‘உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர் பெருமக்கள் எடுத்தியம்புவது’ என்னும் இவ்விலக்கணம், ‘முதுமொழிக் காஞ்சி’ என்னும் நூலுக்குப் பொருந்துவதாகும். காஞ்சி என்பது, மகளிர் இடையிலணியும் ஒருவகை அணிகலக் கோவையைக் குறிப்பது போல, முதுமொழிகள் பலவும் கோத்த நூல், முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்பாரும் உளர். அங்ஙனமாயின், ‘அறிவுரைக்கோவை’ என்னும் பொருள்பட்டும் நிற்கும். ‘இன்னிலைய காஞ்சி’ என்று அடைமொழி கொடுத்து இப்பாடல் உரைப்பது, நூலின் தெளிவு முதலியன கருதி இருக்கலாம்.

இந்நூல், பத்தடிகளைக் கொண்ட பத்துப் பாக்களை உடையது. ஒவ்வொரு பாவிலும், பத்துப் பத்து முதுமொழிகள் உள்ளன. பத்துப்பாக்களின் முதலடிகள் அனைத்துமே, ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்றே தொடங்குவன.

இந்நூலாசிரியர், மதுரை கூடலூர்க் கிழார். பிறந்த ஊர் கூடலூராகவும், வாழ்ந்த ஊர் மதுரையாகவும் இருக்கலாம்.

அறிவுப் பத்து
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
ஈரம் உடைமை ஈகையின் அறிப
சேரா நல்நட்(பு) உதவியின் அறிப
கற்றது உடைமை காட்சியின் அறிப
ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப
சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப
சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப
சீருடை யாண்மை செய்கையின் அறிப

ஆரவாரமுடைய கடல் சூழ்ந்த மண்ணுலகத்து மக்களுக்கெல்லாம், பெருங்குலப் பிறப்புடைமையை, உள்ளத்தின் பண்பாகிய அன்பெனும் தாயீன்ற அருளுடைமையினால் அறியலாம். அந்த அருளுடைமையைச் செய்யும் கொடையினால் அறியலாம். தளராத நல்ல நட்பினை உற்றுழியுதவியினால் அறியலாம். கசடற்க் கற்றதை நூலறிவின் தன்மையினால் அறியலாம். உயர்வுடைமையை எதிர்கொள்ளும் கொள்கையினால் அறியலாம். சிறுகடில் பறிந்தமையைப் பெருமிதத்தினால் அறியலாம். வஞ்சனை செய்வதனால், திருடனாதலை அறியலாம். சொல்லில் தளர்ச்சியிருப்பின் எத்தளர்ச்சியையும் அறியலாம். அறிவுத்தளர்ச்சி இருப்பின், பிறிதொரு தளர்ச்சியையும் அறியலாம். சிறப்புடைய ஆளுந்தன்மையை செய்யும் செயலால் அறியலாம்.

அல்லப் பத்து

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்
தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று
ஈரலில் லாதது கிளைநட் பன்று
சோராக் கையன் சொன்மலை யல்லன்
நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்
நேராமற் கற்றது கல்வி யன்று
வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று
அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று
திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று
மறுபிறப் பறியாத் ததுமூப் பன்று.

ஆரவாரமுடைய கடல் சூழ்ந்த மண்ணுலகத்து மக்களுக்கெல்லாம், குணமறிந்து வாழாதவள் மனைவி அல்லள். மனைவி மாட்சிமை இல்லாதது, வாழ்க்கை அன்று. நெஞ்சில் அருளில்லாதது, சுற்றம் அன்று. வஞ்சனையுள்ள கீழ்மகன், சொல்மலை அல்லன். பொருந்தாத உள்ளமுடையவன், நட்பு செய்தவன் அல்லன். தேர்ந்து தெளியாமல் கற்றது. கல்வியன்று. வாழ்வாங்கு வாழாமல் வருத்தப்பட்டது வருத்தமன்று. அறநெறியின்படி வறியார்க்குக் கொடுக்காதது ஈகை அன்று. ஒழுக்கத்தின் வழியில் நின்ற, நோற்காதது நோன்பன்று. மறுபிறப்பை அறியாதது முதுமையன்று.

இல்லை பத்து

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை
ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை
வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை
வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை
இயைவது கரத்தலின் கொடுமை இல்லை
உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை
நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை
இசையின் பெரியதோர் எச்ச மில்லை
இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை
இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை

ஆரவாரமுடைய கடல் சூழ்ந்த மண்ணுலகத்து மக்களுக்கெல்லாம், மக்கட் செல்வத்தினால், பெறுகின்ற பேற்றைவிட வேறு பேறென்பதில்லை. உலக ஒழுகலாற்றினை அறிவதைக் காட்டிலும் சிறந்த நலம் வேறில்லை. அனுகூலமுள்ள வழக்கைக் காட்டிலும் நல்ல வழக்கென்பதில்லை. அனுகூலமற்ற வழக்கைக் காட்டிலும் தீய வழக்கென்பதில்லை. இயல்வகை மறைத்தலைக் காட்டிலும், தீமையானதென்பதில்லை. பழிப்புரை இல்லாதவன் என்பதனால், சாதலென்பதில்லை. விருப்பத்தைக் காட்டிலும் பெரிதாக ஒரு வறுமையென்பதில்லை. யாசித்தலைக் காட்டிலும் பெரிதாக ஓர் இகழ்ச்சியென்பதில்லை. இயலாதோராகிய யாசிப்பவர்க்குக் கொடுப்பதனால் அடையும் சிறப்பைப்போல வேறு சிறப்பென்பதில்லை.

எளிய பத்து
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது
உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது
ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது
குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது
துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது
இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது
உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது
பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது
பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது
சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது

ஆரவாரமுடைய கடல் சூழ்ந்த மண்ணுலகத்து மக்களுக்கெல்லாம் புகழுடைமையை விரும்பியோர்க்கு மறுமையில் விண்ணுலகப்பேறு எளிதாக அமையும். பெருங்கொடியவர்க்கு மிகுபோரென்பது எளிதாக அமையும். அன்பின் குழவியாகிய அருளுடைமையைத் தம் உள்ளத்தில் நிறைந்தவர்க்கு, விரும்பிய கொடைக் குணம் எளிதாக அமையும். உள்ளத்தில் கோள் சொல்லும் குணங்கொண்டவர்க்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதென்பது மிகவும் எளிதாக அமையும். துன்பங்கண்டு தவளாதவர்க்கு இன்பமென்பது எளிதாக அமையும். இன்பங்கண்டு இறுமாந்தவர்க்குத் துன்பம் எளிதாக அமையும். உணவை மிகவாக விரும்புவோர்க்கு மிகுபிணி எளிதாக அமையும். மகளிரை மிகவும் காமுறுவோர்க்கு உண்டாகும் கொடிய பழிபாவம் எளிதாக அமையும். பெருங்குடும்பச் சுமையுடையோர்க்குப் பகுத்துண்டு வாழுங்குணம் எளிதாக அமையும். பற்றுக்கோடு இல்லாதவர்க்கு மிகுகொலை புரிதலென்பது எளிதாக அமையும்.

தண்டா பத்து
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்
கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.
ஆரவாரமுடைய கடல் சூழ்ந்த மண்ணுலகத்து மக்களுக்கெல்லாம் வாழ்வின் உயர்நிலையை வேண்டுபவன் சான்றோர் கூறிய பயன் மொழிகளை எந்நாளும் விட்டு விலக மாட்டான். வாழ்வின் பெருமிதப் பண்பையெண்ணி மகிழ விரும்புவோன். பல்வேறு புகழ்ச்சிகளைப் பெருவதின்றும் தன்னை விலக்கிக் கொள்ளமாட்டான். அறிவினைத் துலங்க வைக்கும் கல்விச் செல்வத்தைப் பெறவிரும்புவோன் அதற்குரிய தொடர் முயற்சியைவிட்டு விலகமாட்டான். வாழ்வில் நிலைபெற்று நிற்க வேண்டுமென்று விரும்புவோன் பற்று நீங்கிய வாழ்வு செய்வதின்றும் ஒருபோதும் விலகமாட்டான். நல்வாழ்க்கை வேண்டுமென விரும்புவோன் அதற்கரிய உபாயத்தினை விட்டு விலகமாட்டான். செருக்கினை வேண்டுவோன் அதற்கரிய தகுதிப்பாட்டினை விட்டு விலகமாட்டான். இன்பத்தையே பெரிதாக எண்ணி விரும்புவோன் துன்பத்தைவிட்டு விலகமாட்டான். துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு மகிழ்பவன் இன்பத்தினின்றும் விலகமாட்டான். பாதுகாப்பை விரும்பக்கூடியவன் வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தவறமாட்டான். சிற்றின்பத்தை விரும்புவோன் வெளிப்படையற்ற சைகைச் செயல் செய்வதினின்றும் நீங்க மாட்டான்.

– முனைவர் , இயக்குநர்,

மொழி பெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

தொடர்புக்கு: dr.n.arulGmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *