=========================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..!
(பகுதி – 18)
நான் கண்ட எம்.ஜி.ஆர்..!
=========================================
நானும் அப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பெருந்தகை ஜெகத்ரட்சகனும் கல்கத்தா போயிருந்தோம். அந்தநேரம்தான் அன்னை தெரசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.
எதிர்பாராமல் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே அன்னை தெரசாவின் செவிலியர் கூடம் அமைந்திருந்தது. நாங்கள் இரண்டு பேரும் நுழைந்தபோது செவிலியர் இருவர் அந்தத் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குப் பின்னால் பெருக்குவதை மேற்பார்வையிட்டுக் கொண்டே மெல்ல நடந்து வந்தார் அன்னை தெரசா. நாங்கள் இருவரும் வணக்கம் செலுத்தி, உங்களுக்குப் பாராட்டுகள் என்றோம். வேறு எவரும் இல்லை. உடனே, ஜெகத்ரட்சகன் சென்னையில் நாங்கள் ஒரு விழா நடத்தவிருக்கிறோம், நீங்கள் வர வேண்டும் என்று பரிவோடு அழைத்தார். மறு பேச்சில்லை. அதற்கென்ன வருகிறேன் என்று இசைந்தார்.
உங்கள் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எப்படி இருக்கிறார் , நலந்தானே ,திரை உலகத்தில் நடித்த காட்சிகளிளெல்லாம் தூய்மை, துப்புரவு, நற்பண்புகளெல்லாம் பரப்பியதை அயல் நாட்டிலிருந்து வந்த இரண்டு துறவிகள் என்னிடம் பாராட்டினார்கள் என்று சொல்லி ஜெகத்ரட்சகன் என்ற பெயருக்கு பொருள் கேட்டார், புன்முறுவலோடு ” ரட்சகன் ” என்ற சொல்லைத் துதிப்பதில் கேட்டிருக்கிறேன்.
இந்தத் தகவலைத் திரும்பி வந்ததும் புரட்சித்தலைவரிடம் தெரிவித்ததும், அவருக்குப் பெரிய மகிழ்ச்சி. நாங்கள் நினைத்து அழைத்தது ஒரு பாராட்டு நிகழ்ச்சிக்குத்தான் , பொன்மனச்செம்மல் கை பட்டதும் அது ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியாக மாறியது.
வள்ளுவர் கோட்டத்தில், அந்த மாபெரும் பாராட்டு விழா நடந்தது. அவசர அவசரமாக அன்று காலை நாற்பது பேரைக் கொண்ட குழுவினரைக் கொடைக்கானலுக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அங்கே மாண்புமிகு பரூக் அப்துல்லா அவர்களின் தலைமையில் மகளிர் பல்கலைக் கழகத்திற்குத் திடீரென்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் என்று பெயரிட்டார்.
அப்போதுதான் அந்தக் கொடைக்கானல் சுற்றுலா மாளிகைக்கும் ஷேக் அப்துல்லா அரண்மனை என்ற பெயரையும் இட்டார். அதுவரை இந்த முடிவுகள் எவருக்கும் தெரியாது.
பிறகு அதே நாள் மாலை 03.00 மணிக்குள் திரும்பி அனைவரும் வள்ளுவர் கோட்டத்துக்குத் திரும்பி வருமாறு செய்து அன்னை தெரசாவுக்குப் பாராட்டு விழாவையும் நடத்தினார்.
புரட்சித்தலைவர் நீண்ட உரைகளை ஆற்றுவார் தன் மனத்தில் பட்டதை பேசி விடுவார் .அன்னை தெரசாவிடத்தில் ஒன்றும் பேசவில்லை, “அண்ணா – நீங்கள் பேசுவதை நான் மொழி பெயர்த்துவிடுகிறேன் என்றேன் ,பேச நா வரவில்லை, இரக்கமே என் எதிரில் நிற்கிறது என்றார். அதை நான் அன்னை தெரசாவிடம்
காதில் சொன்ன போது அவர் கண் இமைகளைத் துடைத்துக்கொண்டார் .
தான் மனம் வைத்தால், முடிவுகளைத் தானே சில நொடிகளில் அவற்றை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடத்தில் எப்போதும் ததும்பி வழிந்தது
“நினைத்ததை நடத்தியே —
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !”
என்ற பாட்டு வரிகள் அவர் பிறந்து வளர்ந்த நாள் முதல் அவர் நரம்புகளில் பின்னிக்கிடந்த பெருமிதமாக விளங்கியது .
அவரின் அருங்குணத்தை அறிந்துகொள்ள எண்ணற்ற சான்றுகள் பல உண்டு.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவரின் பிறந்த நாள் விழாவில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை சான்றாகக் குறிப்பிடலாம்.
அந்த உரை…
‘‘நான் வணங்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழிநடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
காலையில் இங்கு பேசிய சில பெருமக்களுக்கு இப்போது நான் பதில் சொல்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். குன்றக்குடி அடிகளார் அவர்கள் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன், வணங்குகிறேன்.
திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்தபோது, ஏற்க முடியாது; எத்தனையோ நூல்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக அவை அனைத்தையும் தள்ளிவிட்டு திருக்குறளை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று இந்திய அரசு தெரிவித்ததாக அடிகளார் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
என் முயற்சியை நான் இத்துடன் நிறுத்திக்கொள்ள மாட்டேன். ஆங்கிலத்தில் இன்னொரு கடிதத்துடன் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் ஒன்றையும் இணைத்து அனுப்ப இருக்கிறேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வார்களே அதற்கேற்ப என்னால் முடிந்தவரை தட்டிப்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் , கதவு திறக்கும் நாள் என்றேனும் வரும் என்று காத்திருக்கலாம். காலம் வெல்லும்.
இன்னொன்றையும் அடிகளார் சொல்லியிருக்கிறார்கள். திருக்குறளில் உள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள் வகுத்து, அமலாக்க வேண்டும். அது அரசியல் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். உளமார – மனமார வரவேற்கிறேன்.
எங்களுடைய கடமைகளை முழுமையாகச் செய்வோம். எந்த அளவு சட்டங்களுக்கு உட்பட்டுச் செயலாக்க முடியுமோ அந்த அளவு செய்ய விழைகிறோம் என்பதை, திருவள்ளுவர் திருநாளில் முதல்வர் என்ற முறையில் அடிகளாருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ” மக்கள் குரல் தான் மகேசன் குரல் ” என்று எங்கள் அண்ணா மனத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள் .
ஒரு சகோதரியிடம் ஒரு திருக்குறளைப் பற்றி நான் கூறினேன். அவர்கள் தொலைபேசி வாயிலாக அந்தக் திருக்குறளின் எண் என்னவென்று கேட்டார்கள். நான் சொன்னேன்! பத்து நிமிடம் கழித்து, என்னிடம் கோபித்துத் தொலைபேசியில் பேசினார்கள். காரணம் அவருக்கு அந்த திருக்குறள் விளங்கவில்லை .
எளிமையாகவும் – எவரும் விளங்கிக் கொள்ளும் வகையிலும் உரைநடையில் எழுதுகிற உரைகளுக்கு அரசு என்ன ஊக்கம் தரவேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை நான் முதலில் நின்று செய்வேன் என்ற வகையில் எனக்கு வழிகாட்ட தமிழறிஞர்களை என் பக்கத்தில் வைத்திருக்கிறேன் .
அண்ணா அவர்களின் கொள்கைப்படி !
5-ஆவது உலகத் தமிழ்நாட்டுக்குச் சில எதிர்ப்பு இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். என்றாலும் தமிழ்ப் பெரியார் சிலர் மனம் திறந்து பாராட்டினார்கள். அது அவர்களை வாழ வைத்த தமிழுக்குத் தந்த மாபெரும் பாராட்டு என நான் கருதுகிறேன்.
அண்மையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கினோம் . இதற்கு எதிர்ப்பு எவரும் தெரிவிக்கவில்லை . நாட்டு நன்மைக்காக மக்களுக்குப் பயன்படும் பணிகளை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும்.
தமிழருக்கு தமிழுக்குத் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் தொண்டினைச் செய்யும்போது தயவுசெய்து ஒத்துழைப்புத் தாருங்கள். நாங்கள் செய்கிற பணியில் குறையிருந்தால் அப்படிச் செய்யக்கூடாது. இப்படிச் செய்யுங்கள் என்று யோசனை கூறுங்கள். உலகில் எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள் கிடையாது. இன்னும் ஆராய்ச்சியில்தான் பல பிரச்சினைகள் உள்ளன. முடிவைக் கண்டுபிடித்தவர் யாரும் இல்லை. பிளவுகளால் தமிழ் அழிந்துவிடக்கூடாது- தமிழினம் அழிந்துவிடக்கூடாது.
பெண்களுக்குத் தனிப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று பாரதியார் விழாவில் சொன்னேன். இதற்குக் கூட எத்தனை எதிர்ப்பு, ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுவரும்போது, பெண்களுக்கென்று தனிப் பல்கலைக் கழகம் எதற்காக என்று கேட்கிறார்களே நான் என்ன செய்யட்டும் ?
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்ட 75 ரூபாய் ஓய்வூதியத்தை 250 ரூபாயாக ஆக்கியபோது பாராட்ட வேண்டும்.
பரிசு பெறும் நூல்களைப் பள்ளிகளில், நூலகங்களில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. அந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுச் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போதும் படித்து முடித்த பிறகும் விளையாடுவதற்கு நேரமில்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு தமிழ்ப் பண்பாட்டுக்கு ஊறுநேராத வகையில்-தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கக் கூடிய வகையில் அடிப்படை விளையாடல்களின் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கராத்தே என்னும் விளையாட்டைப் பலர் கற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த விளையாட்டு தமிழகத்தில் இல்லை என்று கருதுகிறார்கள்; அது தவறு. காலால் அடிப்பதைக் கையால் தடுக்கப் பயிற்சி செய்யும் தற்காப்பு முறை தமிழிலே-தமிழகத்திலே இருந்தது. வன்முறைக்குத் துணை போகிறவர்களைத் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்புக்கும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் உதவும் கராத்தே விளையாட்டைக் கற்றுக்கொள்வது அவசியம்: அதில் குழந்தைகள் தேர்ச்சி பெற நாம் அக்கறை காட்ட வேண்டும்.
இங்கே பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு தொகையை நாம் வழங்கியிருக்கிறோம். இது அவர்களுடைய தகுதிக்கு ஏற்றதல்ல. நம்மால் முடிந்ததை அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறோம். இவ்வளவுதானா எங்களுக்கு என்று அவர்கள் எண்ணாமல் மேலும், மேலும் முனைந்து எழுத வேண்டும். தமிழறிஞர்கள் வாழ்ந்தால்தான் எங்கள் பணியைத் தொடர முடியும். மேலும், மேலும் யோசனைகளைச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அண்ணா நாமம் வாழ்க ! நன்றி! வணக்கம் !’’
என்று உரையை நிறைவு செய்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளைத் தொடர்வோம் …
– ஔவை நடராசன்
, தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment