POST: 2020-03-02T10:34:43+05:30

==============================================
தினசெய்தி நாளிதழில் 01.03.2020 அன்று வெளியான கட்டுரை
==============================================

பன்மொழிகளில் பதினெண்கீழ்க்கணக்கு
•••••••••••••••••••••••••••••••••

தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியில்
காண இப்புவி அவாவிற்று

என்ற புரட்சிக் கவிஞரின் கனவு உள்ளம் நிறைவேறி வருகிறது என்று ஓரளவேனும் மனநிறைவு காணலாம் .

தமிழிலக்கியங்களை ஆங்கில அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மொழிபெயர்த்தனர். சீரிய மொழிபெயர்ப்புக்களாக அவை அமைந்திருந்தும் மீள் பதிப்புக்களைக் காண முடியாமல் காலச் சோர்வுக்கு இரையாயின. மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழ் இலக்கியங்களில் சங்கநூல் முதல் சாத்திர நூல் வரை அறிஞர் பலரால் மொழிபெயர்க்கப்பட்டன. சான்றாக அறிஞர் ஐசக் தம்பையா தாயுமானவர் பாடல்களை செவ்விய ஆங்கிலத்தில் நூறாண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். பத்துப்பாட்டும் மொழிபெயர்ப்பாக அறிஞர் செல்லையாவால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு நூல்கள் மொழியாக்கம் பெற்றுத் தொகுக்கப்படாமல் உள்ளன.

புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து தம் புத்திலக்கியப் படைப்புக்களோடு தமிழிலக்கிய மொழியாக்கங்களையும் துணுக்குகளாகச் செய்துள்ளனர் .இந்திய மொழிகளிலும் அயல் மாநிலத்தவர் மொழியாக்கம் செய்தனர். இப்படி மொழியாக்க மடலங்களைத் தொகுப்பதை ஓர் அரும்பணியாக தமிழ்ப்பல்கலைக்கழகமோ – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமோ ஒரு நாள் செய்யுமென எதிர்பார்க்கலாம்.

எந்த நிறுவனமும் முதல் வேலை மொழிபெயர்ப்பு என்று முழக்கமிடுவதோடு சரி…. சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் அறிஞர் பாலகிருஷ்ண முதலியாரைக் கொண்டு தமிழிலக்கிய மொழியாக்கப் பணிக்கு ஆற்றிய பணி இணையற்றது. இந்த நிலையில் தான் தமிழக அரசு சங்கம் மருவிய நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆணையிட்டது.

சங்க இலக்கியங்கள் எனப் போற்றப்பெறும் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும், பதிணெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் வழங்குவர். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதியே பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எனக் குறிப்பிடப்பட்டது.

இந்தப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை எடுத்துரைக்கும் பழைய வெண்பா உண்டு.

நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.

இவ்வரிசையில் திருக்குறள் அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மாமணியாக விளங்குகிறது. இந்த நூல்கள், வாழ்வின் நடைமுறை உண்மையையும் ஒழுக்கங்களையும் பண்பாட்டையும் வற்புறுத்துவதை முதன்மையாகக் கொண்டு படைக்கப்பட்டன. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாகத் திருக்குறளைச் சீன மொழி, அராபிய மொழி, கொரிய மொழிகளில் மொழிபெயர்த்து நூல்களாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தனிமனிதச் சால்பு பிறர் நலம் பேணுங் கொள்கை, நன்னெறி,துறவுக்கொள்கை ஆகியவற்றை இரண்டு முதல் ஏழு நூற்றாண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூல்கள் வலியுறுத்துகின்றன. பதினெண் கீழ்கணக்கு நூல்களை மூன்று வகைகளாகத் தொகுக்கலாம்.

1.அற நூல்கள்:
காதலுக்கும், வீரத்திற்கும் வாழ்வியல் அறநெறிகளை வலியுறுத்திய இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்பட்டன.

அற இலக்கியங்கள்

1.நாலடியார்
2.நான்மணிக்கடிகை
3.இனியவை நாற்பது
4.இன்னா நாற்பது
5.திரிகடுகம்
6.ஆசாரக்கோவை
7.சிறுபஞ்சமூலம்
8.முதுமொழிக்காஞ்சி
9.பழமொழி நானூறு
10.ஏலாதி
11.திருக்குறள்

ஆகிய நூல்களும்,

2.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

1.கார் நாற்பது
2.ஐந்திணைஐம்பது
3.திணைமொழி ஐம்பது
4.ஐந்தினை எழுபது
5.திணைமாலை நூற்றைம்பது
6.கைந்நிலை

ஆகிய ஆறு நூல்களும்,

3.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

1.களவழி நாற்பது ஆகிய ஒரு நூலும் அடங்கும்.

சங்கம் மருவிய இத்தொகுதியுள் முதுமொழிக்காஞ்சி நீங்கலாக அனைத்து நூல்களும் வெண்பா யாப்பில் அமைந்தவை.
இந்த நூல்களின் சில பாடல்களின் செருமானிய, பிரெஞ்சு, மலையாளம், இந்தி, தெலுங்கு மொழியாக்கங்களைக் காணலாம்….

பொய்கையார் இயற்றிய
களவழி நாற்பது

நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து,
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல்
துப்புத் துகளின் கெழூஉம் – புனல் நாடன்
தப்பியார் அட்ட களத்து. 1

செருமனி மொழியில்…

Kaḷavaḻināṟpatu
„40 Verse über das Schlachtfeld“
verfasst von POYKAIYĀR

Auf dem Schlachtfeld, auf welchem der Herr über die Wasser die flüchtenden Feinde erschlug, vermischt sich das von Schwertern geschlagene Blut derer, die am Morgen auszogen, [nur] um in der Schlacht zu fallen, am Nachmittag zu roten Kristallen, nachdem es am Vormittag zu Matsch geworden waren, unter den Füßen der Elefanten, die [darin] herumtrampelten.

பிரெஞ்சு மொழியில்…

KALAVALIE NÄTPATOU
L’auteur : Poaikaieâre

Le dimanche s’est arrivé, sur le champ de bataille qui a amené les crimes de Chola, Les jambes des éléphants de guerre étaient mélangées au sang qui venait de mourir.
Dans l’après –midi la lumière du soleil est séchée par les éléphants,
puis coule et coule comme un corail. 1

இந்தி மொழியில்…

पोय्कैयार
विरचित

कळवऴि नार्पतु
समराङ्गण चालीसा

नाळ ञायिरु उर्र चेरुविर्कु वीष्नदवर
वाळ माय कुरुदि कळिरु उऴक्क, ताळ मायन्दु,
मुर्पगल एल्लाम कुषम्पु आगि , पिर्पगल
तुप्पुत तुकळिन केषूउम – पुनल नाडन
तप्पियार अट्टकळत्तु । १

தெலுங்கு மொழியில்…

కలం వలీ నలభై [రణరంగ దృశ్యాలు –నలభై ]

సూర్యుడుదయించిన వేళ ,పోరు మొదలైన వేళ
రిపులవరసను చీల్చగా ఖడ్గములు పారిన నెత్తురు, ఏనుగుల పాదాలు
తగిలి పగలంతా సగం ద్రవమై,ఆ పైన గట్టిపడి పొడిగామారి
పగడపు ధూళిలా, గాలిలోఎగిరింది కుంకుమ శోభతో
పునల్ నాటన్ పోరాడే యుద్ధ భూమి నిండా

மலையாள மொழியில்…

കളം വഴി നാല്പത്

ഞായറുദിച്ചനേരം ഉറ്റ ചെരുവിങ്കല് മാണ്ടവര്
വാള് പാഞ്ഞതാലൊഴുകിയ കുരുതി ഇറച്ചവ പിന് താനേ ഉറഞ്ഞ്
മുര്പകലെല്ലാം കുഴമ്പായ് പിര്പകല്
പവിഴത്തൂള്പോലായ് പടര്ന്നു പരവിടുന്നിതാ
പുനല് നാടന് അടരാടും അടര്ക്കളം തന്നിലായ്

ஆந்திர மாநிலத்து, விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் திரு. எல்.ஆர். சாமி (எ) இலட்சுமண இராமசாமி தெலுங்கில் மொழிபெயர்ப்பைச் சிறப்பாக வடிவாக்கினார். இவர், 300 கதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்த சிறப்புக்குரியவர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த திரு. சந்திரசேகரன் நாயர் மலையாள மொழிபெயர்ப்பைச் சிறப்பாக மொழிபெயர்த்தார். தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றவர். இவர், திருமந்திரம், திருவருட்பா ஆகிய நூல்களை மலையாள மொழியில் மொழியாக்கம் செய்தவர். மலையாள மொழிபெயர்ப்பை இவர் சிறப்பாகச் செய்துள்ளார்.

திருமதி. இராஜலட்சமி சீனிவாசன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர். இந்தி மொழிபெயர்ப்பை வனப்பாக நிறைவேற்றியுள்ளார். முனைவர் பட்டம் பெற்ற இம்மொழிபெயர்ப்பாளர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நூலைத் தமிழிலும், சமற்கிருதத்திலும் மொழியாக்கம் செய்தவர். மேலும், கல்கியின் படைப்புகள் மற்றும் பாரதியார் கவிதைகளை சமற்கிருதத்தில் மொழியாக்கம் செய்தவர். தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றவர்.

திருமதி.உல்ரிக் நிக்கோலசு செருமனி நாட்டைச் சேர்ந்த கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார். அப்பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்குகிறார். தந்தை பெரியாரின் சிந்தனைகளை செருமனி மொழியில் மொழியாக்கம் செய்தவர். சென்னையைச் சார்ந்த திருமதி வத்சலா, தெரிவு செய்யப்பட்ட பாரதியார் பாடல்களை செருமானிய மொழியில் மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் செருமனி மொழிபெயர்ப்பை வனப்பாக நிறைவேற்றியுள்ளார். திருமதி வத்சலா, தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றவர். திருமதி. உல்ரிக் நிக்கோலசு உலகத்தமிழ்ச் சங்க விருதினைப் பெற்றவர். கூடுதலாக முனைவர் ஜேனாஸ் பக்குலஸ், ஈடல்பெர்க் பல்கலைக்கழக ஆ,ய்வாளரும் செருமானிய மொழிபெயர்ப்பில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

திரு.சச்சிதானந்தம் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். பிரான்சு நாட்டில் மிகப்பெரிய அளவில் தமிழ்ப் பயிற்சிக் கூடத்தினை அங்கிருக்கும் மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நடத்தி வரும் சிறப்புக்குரியவர். பிரான்சு அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர். அண்மையில் தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்க விருது பெற்றவர். தமிழ் நாட்டைச் சார்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் பிரெஞ்சு மொழியின் மதிப்புறு பேராசிரியராகவும் திகழ்கிறார். இவர், பிரெஞ்சு மொழிபெயர்ப்பைச் செம்மையாக நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – இந்தி, மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு மற்றும் செருமானிய மொழிகளில் நிறைவேற்றம் பெற்றுள்ளன .நாளுக்கு நாள் மொழியும் – சொல்லும் – நிலையும் – நினைவும் – சுழலும் மாற்றங்களைக் பெற்று வருகின்றன .இந்நிலையில் ஆண்டுக்கொரு மொழிபெயர்ப்பு என்று ஒரு நூலுக்கே பல மொழியாக்கங்கள் வருவதை ஏற்கவேண்டும்.

திசையெட்டும் மொழியாக்க இதழின் ஆசிரியப் பெருந்தகை திரு.குறிஞ்சிவேலன் அவர்களின் அரிய முயற்சியாலும், சலியான உழைப்பாலும், தன்னலமில்லாத நல்லுறவினாலும் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிபெயர்ப்பாளர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்று, மொழியாக்கப் பணியும் இனிதே நிறைவுற்றதும் இவரையேச் சாரும்.

திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் 100க்கும் மேலான மொழியாக்கங்கள் வெளி வந்துள்ளன. அறத்தை வலியுறுத்தும் அருமை வாய்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இப்படித் தொடர்ந்து மொழியாக்கப் புதுமுகங்களை காணுமாக …
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது – யாம்
அறிகிலாத போது – தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா ? – நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா ?

– பாவேந்தர்

தமிழறம் வாழ்க !
முனைவர் ஔவை ந.அருள், தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *