=============================================
தினசெய்தி நாளிதழில் இன்று (06.03.2020) வெளியான
கட்டுரை
=============================================
பன்முகப் பேரொளி – நானி பல்கிவாலா..!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பிறந்த குடும்பத்தால் பெருமிதம் கொண்டவர்கள் பார்சி மக்கள். பார்சி குலத்தில் மேதைகளே பிறப்பார்கள் என்று பாராட்டிச் சொல்வதுண்டு. மும்பையிலேயே வாழ்ந்த பார்சி இனத்தவர் கேரளத்திலும் – புதுவையிலும் – தமிழகத்திலும் முன்னூறு ஆண்டுகளாக குடிபெயர்ந்து வாழ்ந்தார்கள்.
இராயபுரத்தில் பார்சி மக்களின் கோயிலாகிய “அக்னிக் கோயில்” நூற்றாண்டுப் பெருமையோடு இன்றும் உள்ளது. சென்னை மாநகரத்துக்கு ஷெரிபாக விளங்கிய கிளப்வாலா அம்மையார் சமுதாயப் பணிக்காகவே இன்றும் நினைக்கப்படுவார்.
நானி ஆர்த்தீர்ஸ் பல்கிவாலா, ஜனவரி 16, 1920 – இல் மும்பையில் ஓர் எளிய பார்சி குடும்பத்தில் பிறந்தார். பார்சி மரபின்படி தாம் செய்த தொழில்களால் அவர்கள் அறியப்பட்டார்கள். பல்கி என்றால் பல்லக்கு என்ற பொருள்படும், வண்ணமயமான பெட்டிகளை குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையில் அமைக்கும் தொழில் சார்ந்தவர்கள் என்ற வகையில் பல்கிவாலா எனப்பட்டார். அவரின் பெற்றோர் ‘நானாபாய்’ என்று அவரை அழைத்தார்கள். மற்றவர்கள் அவரை ‘நானி பல்கிவாலா’என்று கூறினார்கள்.
அவர் தனது பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை பம்பாயில் முடித்தார். தூய சேவியர் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றார். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேண்டும் என்பது அவரின் இலட்சியமாக இருந்தது. கல்லூரியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இன்னொரு பார்சி அம்மையார் அந்தப் பணியில் சேர்ந்தார். ஆங்கிலப் பெரும் பேராசிரியராகத் திகழ வேண்டிய பல்கிவாலா பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். பள்ளியில் படிக்கும்போது, திக்குவாய் குறைபாடு இருந்தும் தனது விடா முயற்சியால் நாடு புகழும் நாவேந்தராக மாறினார்.
வாய் திறந்து பேசினால், முத்துப் போலச் சொற்றொடர்களை – வைர வார்த்தைகளை மாணிக்க மேற்கோள்களைக் கொட்டியவர் பல்கிவாலா. ஒருமுறை, அவர் மெக்காலே பிரபுவின் மேற்கோள், நாடு போற்றும் அளவுக்கு மின்னியது.
“Fortune, that lays in sport the mighty low,
Age, that to penance turns the joys of youth. Shall leave untouched the gifts which I bestow.
The sense of beauty and the thirst of truth.”
தமிழாக்கம்…
‘‘அழகின்பால் நான் கொண்ட அளப்பறிய ஆவலை
உண்மையின்பால் எனக்குரிய தணிப்பரிய வேட்கையை
வலியோரை எளியோரைப் புரட்டிப் போடும் விதியின் விளையாட்டோ
இளமைக் களிப்புகளை திசை திருப்பி தண்டிக்கும் கால மாறாட்டமோ
தொடுவதற்கும் துணிந்ததில்லை.’’
நாடறிந்த நல்லறிஞராகிய பல்கிவாலா சட்டம், நீதி, அரசியலமைப்பு, வருமான வரி, வரவு செலவுத் திட்டம், கல்வி நலம், பொருளியல் வளம், பழமையைப் போற்றும் பண்பு, நாள் தவறாமல் உலக இலக்கியங்களை படித்துப் பயன்படுத்திய படைப்புத்திறம் முதலிய பரிமாணங்களில் சிகரத்தை பல்கிவாலா தொட்டார்.
நாடறிந்த சட்ட மேதையாகத் திகழ்ந்து அரசியலமைப்புச் சட்டத்தின் நிபுணராக விளங்கியதோடு அரசியல் அமைப்புச்சட்டத்தை தொடுகிறபோதே புனித நூலைத் தொடுகிற மனம் அமையவேண்டும், அரசியலமைப்பை எழுத்துக்கு எழுத்து எண்ணிப்ப்படித்து உள்வாங்கியவர்களாக மக்கள் தலைநிமிர்ந்திருக்க வேண்டும். அரசியல் என்பது பண்பாளர்களின் கரங்களை அலங்கரிக்கும் கங்கணமாகும்.
நெருக்கடி நிலை வந்த போது நெருப்புப்பொறிகளைக்கக்கி வாதிட்டார். வெப்பமும் – விவேகமும் கலந்த அந்த வழக்குரைகள் ஒப்பற்றவை. பல்கிவாலாவை எங்கே… எப்போது பார்க்கலாம் என்று மக்கள் விரும்பினார்கள். மைய அரசின் நிதிநிலை அறிக்கை வெளிவந்த பிறகு அவர் மும்பையிலும் – தில்லியிலும் – சென்னையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட அவையில் தேன்மழையாக அவர் பேசும் ஆய்வுரைக்கு காத்திருந்தார்கள்.
மூதறிஞர் இராஜாஜி தாம் தொடங்கிய சுதந்திரா கட்சிக்கு பல்கிவாலாவைத் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினார். கட்சி சார்ந்த பதவிகள் எனக்கு வேண்டாம் என்ற நிலையான மனத்தை அவர் வளர்த்திருந்தார். எனினும், பிரதமர் மொரார்ஜி தேசாய் அவருடைய பன்முகப் புலமையைப் பாராட்டும் விதத்தில், அமெரிக்க நாட்டின் தூதுவராக நியமனம் செய்தார்.இரண்டாண்டுகள்தான் அந்த பொறுப்பில் அவர் இருக்க முடிந்தது.
வங்கிகள் தேசியமயமாக்கல், கல்வி நிறுவனங்களை நடத்த சிறுபான்மையினர் உரிமைகள், மன்னர் மானிய ஒழிப்பு, பத்திரிகைகளின் சுதந்திரம், மண்டல்குழு ஆகிய சிக்கல்கள் தொடர்பான வழக்குகளில் தம் சட்ட அறிவு, வாத உரிமைத்திறமை ஆகியவற்றை நிலைநாட்டினார். அலகாபாத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் சார்பாக வாதிட்ட இவர், பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது அதனை எதிர்த்தார்.
புதுமையைப் போற்றும் மனமிருந்தாலும் பழமையில் ஊறியதால் நவீன சிந்தனைகளை அவர் விழுங்க முடியாமல் திணறினார். உண்மைக்கு வாதிட்டது போலவே பொய்மைக்கும் வாதிட்ட பரிதாபம் அவருக்கும் நேர்ந்தது. காலத்தின் கோலமும் மனக் குழப்பமும் அறிஞர்களை பல நிலைகளில் திசை திருப்பிவிடும் .
அறிஞர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், அறிவுக்கூர்மைக்கு அடையாளமாவார். தன் மனைவியார் மறைந்த பிறகு, மனத்துயரைத் தாங்க முடியாமல், நாள்தோறும் அவர், தம்மிடத்தில் நேரில் வந்து பேசியதாக நம்பினார். நம்பாமல் இருக்க முடியவில்லை என்றாலும், நான் நம்பித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அவருக்கே உரிய புதுமைச்சொற்கள் புனைந்த புதிர் உரையாக மொழிந்தார். அதே நிலை, அறிஞர் பல்கிவாலாவுக்கும் நேர்ந்தது. அவருடைய அருமைத் துணைவியார் நர்கீசு மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்வு இருண்டதாகப் பொருமினார்.
தனது 82-ஆம் வயதில் 2002 டிசம்பர் 11 அன்று மும்பையில் நானி பல்கிவாலா மரணமடைந்தார். ‘இந்தியா ஒரு சிறந்த சட்ட அமைச்சரை ,நிதியமைச்சரைப் பெறாமலேயே போய்விட்டது’ நாடறிந்த நாவலராகவும், நல்லறிஞராகவும் திகழ்ந்த பல்கிவாலாவின் பன்முக ஆளுமையும் அவர் படைப்புகளில் மின்னிய ஆங்கில மேற்கோள்களும் எவராலும் என்றும் மறக்க முடியாதவை.
=============================================================================
பல்கிவாலா தம் அன்னையாரைப்பற்றி மனமுருகி எழுதிய நிலையில் அவர் எடுத்துக் காட்டிய மேற்கோள் பாடல்…
“I asked God for strength, that I might achieve:
I was made weak, that I might learn humbly to obey.
I asked for health, that I might do greater things:
I was given infirmity, that I might do better things.
I asked for riches, that I might be happy:
I was given poverty, that I might be wise.
I asked for power, that I might have the praise of men:
I was given weakness, that I might feel the need of God.
I asked for all things, that I might enjoy life;
I was given life, that I might enjoy all things.
I got nothing that I asked for-but everything
I had hoped for. Almost despite myself, my unspoken prayers
were answered. I am among all men, most richly blessed.”
தமிழாக்கம்…
பெயரறியாப் போராளியின் வேண்டுதல்
வெற்றிகளை எட்டத்தக்க வலிமையினை இறைவனிடம் கேட்டேன்
ஆனால், ஆன்றவிந்தடங்கும் விதத்தில் நுண்மை ஆக்கப்பட்டேன்
செயற்கரிய செய்வதற்கான உடல்நலம் கேட்டேன்
சிறந்தவற்றையே செய்வதற்கான மென்மையைப் பெற்றேன்
மகிழ்ச்சிக்கான வளத்தைக் கேட்டேன்
செம்மையாக வாழ்வதற்கான வறுமை வழங்கப்பட்டது
மனிதப் புகழ்ச்சி கருதி பேராற்றல் கேட்டேன்
இறையாற்றலின் இன்றியமையாமையை உணரத்தக்க நலிவடைந்தேன்
வாழ்க்கையைக் களிப்பதற்கான அனைத்தையும் கேட்டேன்
அனைத்தையும் களிப்பதற்கான வாழ்க்கை கிடைத்தது
கேட்டவை யாதொன்றையும் அடைந்தேனில்லை
ஏற்றவை அனைத்தும் கைவரப்பெற்றேன்
வாய்மொழிந்த வேண்டுதல்கள் எவையும் கவனிக்கப்படவில்லை
ஓசையற்ற வேண்டல்கள் உறுதிப்படுத்தப்பட்டன
உலக மாந்தர் அனைவரிலும் பெருவளம் பெறும் பேறு பெற்றேன்.
=============================================================
சில ஆண்டுகள் கழித்து இந்திய அரசு இவருக்கு பத்மவிபூஷன் விருது அளித்து சிறப்புச் செய்தது. சங்கரா நேத்ராலயாவிற்கு இவர் அளித்த மிகப் பெரிய நன்கொடையின் காரணமாக அந்நிறுவனம் அவரை இன்றும் வணங்குகிறது. பாரதிய வித்யா பவன் அவரை முன்னாள் துணைத் தலைவராகப் போற்றி வருகிறது. அமெரிக்க நாட்டிலுள்ள பிரின்ஸ்டன் மற்றும் லாரன்ஸ் பல்கலைக்கழகங்களும் பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களும் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளித்து தலைசிறந்த அறிஞராக மதித்தன.
”நானி 100” என்னும் இத்தருணம், ஒரு மிகப்பெரிய மனிதனின் வாழ்க்கையை கொண்டாடுவதற்கான நேரமாகும். ஆனால், இந்நேரத்தில் அவரின் புகழைப் பாடுவதோடு நின்றுவிடக்கூடாது. நானியும் அதனை விரும்ப மாட்டார். அவரின் திறமைக்கு சவால்விடும் வகையிலான வினாக்களுக்கு மத்தியில் இருப்பதையே அவர் விரும்புவார்.
இந்திய அரசியலமைப்பைச் சிதைவுறாமல் பேணிக் காத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு. ” இந்தியாவிற்கு இறைவன் அளித்த அருட்கொடை” என மூதறிஞர் இராஜாஜி அவர்களால் போற்றப்பட்ட இந்த மாமேதையை இன்றும் தமிழகப் பட்டிமன்ற மேடைகளில் சிறப்பாகப் பேசும் உரையாளர்களைப் “பட்டிமன்றப் பல்கிவாலா” என்று ஒளவை நடராசன் பரிவோடு விளிப்பதை பலர் இன்று நினைவு கூறலாம்.
“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை ஒரு மணியாரம்” என்று பாரதியார் பாடினார். மணியாரம் பல்வேறு மணிகளைக் கொண்டது நான்மணிமாலை, நவரத்தினமாலை என்று குறிப்பிடுவது போல நானி பல்கிவாலாவின் நல்லுரைகளையெல்லாம் மணிமாலைகள் என்று குறிக்கலாம்.
– முனைவர் ஔவை ந.அருள், தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment