POST: 2020-03-12T10:25:46+05:30

முரசொலி – 11.03.2020

நெஞ்சைப் பிழிகிறது!
*****************************

ஆயிரம் ஆசிரியர்கள் ஒருங்கு திரண்டாலும், ஒரு பேராசிரியராக முடியாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவுக்கனலாகத் தமிழ் பயில வந்த நாள் முதல், என் தந்தையாரும் நானும் அவருக்குத் தெரிந்தவர்கள்.

பத்து வயதில், நான் சிதம்பரத்திற்குச் சென்று பேராசிரியருடைய தந்தையார் கொள்கைக் கோமான்,

கல்யாண சுந்தரம் அவர்களை பார்த்து பேசி வந்திருக்கிறேன்.

பேராசிரியரிடத்தில் மூன்றாண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவன். பேராசிரியர், கடுகளவு பிழையைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத கடுஞ்சினம் கொண்டவராக இருந்தார்.

பேராசிரியர் அறிவழகனும், நானும் நெருங்கிய நேயம் கொண்டவர்கள். தொல்காப்பியன், நான், அறிவழகன், கிருஷ்ணகிரி தோழர் சாது நால்வரும் எப்போதும் ஒரு வட்டமாக இருந்தோம்.

அவன் என் பேச்சைக் கேட்காதவன், நீங்கள் அவன் பேச்சைக் கேட்பவர்கள் என்று கேலியாக எங்களைப் பார்த்து சொல்வார்.

பேராசிரியர், அமைச்சராக இருந்தபோது, அவர் துறையிலேயே நான் பணியாற்றினேன். எல்லோரும் போல இல்லை. அவன் எனக்கு வேண்டியவன். அவனை உடனே அனுப்ப வேண்டும் நிறுத்தக்கூடாது என்று செல்லமாக அவர் தனிச்செயலாளரைக் கடிந்துக்கொண்டதை நினைத்து, என் கண்களில் நீர் மல்குகிறது.

கொடை வள்ளல் அழகப்பச் செட்டியார் மாளிகையில் அவர் அமைச்சராக இருந்தபோது, அந்த இல்லத்தில் வாழ்ந்தார்.

ஒருமுறை என் தந்தையார், சென்னைக்கு வந்திருந்தபோது, அரசுப் பணியில் நான் சேராத நாளில், அவரோடு நான் அந்த இல்லத்திற்குச் சென்றேன். நால்வரோடு பேசிக்கொண்டு அமர்ந்து இருந்தவர், திடுமென எழுந்து, என்னைப் பார்த்து உனக்கு அறிவிருக்கிறதா? அப்பாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயே? என்று பரிவாகப் பேசிவிட்டு அப்பாவும் இங்கேதான் இருக்கிறார் நீங்கள் போய் பாருங்கள் சார் என்று அப்பாவையும் என்னையும் அனுப்பினார்.

திருக்குறளுக்கு விளக்கம் வரைந்துக் கொண்டிருந்தார், கலியாண சுந்தரம் அவர்கள். இப்படியெல்லாம் காலம் கடந்து 93 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் காண்பதற்காக கீழ்ப்பாக்கம் சென்றேன். பெருங்கூட்டம். என் பெயரைச் சொல்லி, அன்போடு அழைத்துக் கொண்டு போனார்கள். துணைவேந்தராக பணியாற்றிய அம்மையார் அழைத்துக் கொண்டு போனார். அப்போது என்னைப் பார்த்து, நீ ஒரு நாற்பதாண்டு கால நோயாளி. நான் சொல்கிறபடி உனக்கு சித்த மருத்துவத்தில் நம்பிக்கை இல்லை. நீரிழிவு கனன்றோடும் அதனால்தான் உன்னை முதலில் அழைத்தேன். நான் உன் மனத்தில் இருப்பதும், நீ என் மனத்தில் இருப்பதும் இன்று நேற்றல்ல, போய்வா என்று அனுப்பினார்.

இன்று நான் இருக்கிறேன். நீங்கள் நெஞ்சில் மட்டும்தான் இருக்கிறீர்கள். நீடிய வாழ்வும் நிலைத்த புகழும் இனமான பெருமிதமும் இலக்கிப் புதுமை வளமும் ஓர் தன்னுடைய எண்ணம்போன்ற முறையில் துள்ளி மிதக்க விட்ட ஆசிரியர் பெரும என்று அரற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

— முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *