தின செய்தி நாளிதழில் இன்று (16.03.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசனின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 26)
‘‘உலகத் தமிழ்ச் சங்கத்துக்கான அச்சாரம்!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
=========================================
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழுக்காக எண்ணற்ற ஆகச்சிறந்த செயற்பாடுகளை செய்துள்ளார். அவ்வகையில் ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் மெச்சத் தகுந்த வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1981ஆம் ஆண்டு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை சீரோடும் சிறப்போடும் நடத்தினார்.
மாநாடு என்றதும் அது தொடர்பாக சில நினைவுப்பரல்கள் சிலவற்றை இங்கே உதிர்க்காமல் இருக்க முடியவில்லை. மதுரை மூதூரில் – ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு பெரும் சிறப்போடு நடைபெற்றது.
மாநாட்டை நினைக்கும்போதெல்லாம் என் மனத்தை நெருடுகிற நிகழ்ச்சிகளும் நடந்தன. மாநாட்டில் பொதுநிலைக் கருத்தரங்கத்திற்கு நான் பொறுப்பாளராக இருந்தேன். ஆய்வுக் கருத்தரங்கத்தைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடத்தினர்.
மாநாட்டில், என்னுடைய தந்தையாருக்கு அவருடைய தமிழ்ப் பணிகளைப் பாராட்டிப் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி பொன்னாடை அணிவித்து பத்தாயிரம் ரூபாய் பரிசு தந்தது, அவருக்குப் பேரின்பம் தந்தது. அந்த மகிழ்ச்சியோடுதான் மாநாடு முடிந்ததும் அவர் மறைந்தார். என் தந்தையார் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி அந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு என்பதால், அம்மாநாட்டு நிகழ்வுகள் என் நெஞ்சத்தில் எந்நாளும் நெகிழ்த்திக் கொண்டே இருக்கும்.
அதேபோல அந்த மாநாட்டில்தான் தன்னுடைய ஆர்வமிகுதியால் தமிழரின் தோற்றம் பற்றியும் – கடல் கொண்ட தென்னாடு பற்றியும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முழக்கமிட்டுச் சோர்ந்து விழுந்தார் மதுரை மருத்துவமனையிலேயே சில திங்கள் இருந்து மறைந்தார் .
நான் ஒரு திங்களாக தொடர்ந்து மதுரையில் என் தந்தையாரோடு தங்கியிருந்ததால் என் இல்லத்தில் அதுவரை இல்லாத ஒரு தொலைபேசி அளித்ததைக் கண்டு என்னுடைய அன்னையார் அடைந்த மகிழ்ச்சியும் என்னை உருக வைக்கிறது.
நான் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் அவர்கள் எடுத்துப் பேசி அடைந்த மகிழ்ச்சியும் என்னால் வாழ்வில் மறப்பதற்கில்லை.
கருத்தரங்கத்தில் காலையும் மாலையும் ஒவ்வொரு பொருண்மைக்கும் நான் வரவேற்புரை – நிறைவுரை ஆற்றுவதைக் கேட்பதற்காகவே புரட்சித்தலைவர் வந்து அமர்ந்திருந்த காட்சிகள் என் மனத்தைப் பெரிதும் நெகிழச் செய்தன.
நாவேந்தர் காளிமுத்துவின் நல்லுரை அந்த மாநாட்டுக்கு மகுடமாக ஒளிர்ந்தது.
காவியக்கவிஞர் வாலி முதன்முதலில் கவியரங்கத்துக்குத் தலைமை தாங்கி மாபெரும் வெற்றி பெற்றதும் இந்த மாநாட்டில்தான்.
இந்த மாநாடு என் வாழ்வில் மறக்க முடியாத நினைவேடாகும்.
அம்மாநாட்டில் பொன்மனச்செம்மல் ஆற்றிய தொடக்க உரையும் உலகத் தமிழ்ச் சங்கம் வரலாற்றுத் திரைப்படத்தை தொடங்கி வைத்து ஆற்றிய இனிய உரையும் நம் இதயத்தைவிட்டு என்றும் நீங்காது. மாநாடு நடக்குமா நடக்காதா என்ற ஐயம் தோன்றிய அத்தருணத்தில், அனைவரின் ஐயம் அகன்று அத்தனை சிறப்பாக உலகத்தமிழ் மாநாடு நிகழ்ந்தேறியது.
அம்மாநாட்டில் பொன்மனச்செம்மலின் தொடக்க உரையும்… திரைப்பட தொடக்க விழா உரையும்…
‘‘ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு ஓராண்டுக்கு முன்பேயே நடத்தியிருக்கவேண்டும், தவறிவிட்டது. இப்போது கூட, குறிப்பிடப்பட்ட தேதியில் இதை நடத்துவார்களோ, மாட்டார்களோ என்று பலர் சந்தேகப்பட்டனர். தள்ளி வைத்துவிடுவார்கள் என்று கூடச்சிலர் கருதினர். அறிஞர்கள், அதிகாரிகள், இளைஞர்கள், பொறுப்புமிகுந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுத்தால் எதையும் எங்கேயும் எப்படியும் நடத்திக்காட்ட முடியும் என்பதைத்தான் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டின் தொடக்க விழா எடுத்துக்காட்டுகின்றது.
உலகத்தமிழ் மாநாடு என்னும் அரிய மாநாட்டை தமிழகத்தில் தொடங்குவதற்கு வித்திட ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களின் உழைப்பும் எனது தெய்வம் எனது ஆசான்-பேரறிஞர் அமரர் அண்ணா அவர்கள் இரண்டாவது மாநாட்டில் ஏற்றிருந்த முழுமையான பொறுப்பும், என்னை ஆட்டிப் படைத்து இந்த மாநாட்டை நடத்துகின்ற வகையில் எனக்கு ஊக்கத்தைத் தருகின்றது.
இன்று அமரர் அண்ணா அவர்கள் நம்மிடையே இல்லை; ஆனால், அவர் எனது இதயத்தில் இருந்து எனக்கு ஊக்கத்தையும் நல்ல கருத்தையும் தந்து என்னை வழிநடத்திச் செல்கிறார் என்பதை நான் மறுக்க முடியாது. இது மூடநம்பிக்கை என சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இது நியாயமான நம்பிக்கை ஆகும்.
பல பெரியவர்கள் இந்த மாநாடு கூடுவதற்கு ஆதரவு நல்கினார்கள். இந்திபேசும் மாநிலத்தவர்கள், ஆந்திரா மாநிலத்தவர்கள் மராட்டிய மாநிலத்தவர்கள் தொலைபேசியின் மூலம் அடிக்கடி தமிழ் மாநாடு எப்போது என்று என்னை வினவியவாறே இருந்தார்கள். இங்கே தமிழ் குறித்து பல பிரச்சினைகள் பேசப்பட்டன. அவற்றிற்கு வழிகாணும் முறை பற்றியும் சொல்ல முயன்றார்கள். வெவ்வேறு கருத்துகளை சொன்னார்கள். அதற்காகத்தான் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது.
குழந்தையைப் பெற்றவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் உற்றவர்கள் இந்தச் சட்டையைக் குழந்தைக்குப்போடு-அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர் இந்த ஆசானைத் தேர்ந்தெடு என்றெல்லாம் கருத்துகள் தெரிவிப்பது போல தமிழைப் பாதுகாக்க… தமிழை வளர்க்க… யோசனை சொல்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். ஆராய்ச்சிக் கருத்தரங்கில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுகின்றன. எல்லோரும் ஒரே எண்ணத்தைத் திரும்பத்திரும்ப சொல்வதற்காக அல்ல மாநாடு, அவர்கள் தங்களது ஆற்றலை… வலிமையை… பயன்படுத்தி தமிழைப் பாதுகாக்கும் வழியைச் சொல்கின்ற மாநாடு இது.
தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் தேவை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். வரவேற்கிறேன். ஆனால், சீர்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு மேலும்மேலும் எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டு போகக் கூடாது. ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன. அது உலக மொழியாகும் வாய்ப்பை பெற்றுள்ளது. எனவே, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் எழுத்துகளைக் குறைப்பதாக அமையவேண்டும் அதிகமாக்கக் கூடாது.
தமிழ் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சிலர் குறிப்பிட்டார்கள். இராமநாதபுரத்தில் ஒருவகையாக, மதுரை மாவட்டத்தில் ஒரு விதமாக, நெல்லை மாவட்டத்தில் ஒரு விதமாக கோவையில் ஒரு விதமாகத் தமிழ் பேசப்படுகிறது. இவற்றை ஒன்றுபடுத்தவேண்டும் என்றால் மிகப் பெரும் பணி செய்யவேண்டும். தமிழக அரசு இதனைத் தக்க வகையில் செய்யும்.
தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசக்கூடிய மொழி வேண்டும் என்றார்கள். ஏற்றுக்கொள்வோம்; ஆனால், இலக்கணரீதியாக அந்த மொழி அமைய வேண்டும் என்பது மட்டுமல்ல ஏழை மக்களின் உள்ளத்தைத் தொடும் மொழியாக அது இருக்கவேண்டும். பேசும் மொழியும், எழுதும் மொழியும் ஒருங்கிணையும் நிலையை உருவாக்கவேண்டும் என்பது சுமையானதோர் பொறுப்பு அதனை உணர்ந்து ஏற்றுச் செயல்புரிய வேண்டும்.
உலகத் தமிழ்ச் சங்கம் ஒன்றை இங்கே தமிழக அரசு அமைக்கும், பேரறிஞர்களிடம் அது ஒப்படைக்கப்படும். நிருவாகத்தை மட்டும் அரசு கவனித்துக்கொள்ளும். இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மக்கள் அக்கறை கொள்ள வேண்டும். செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாளில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் உலகத் தமிழ்ச்சங்கம் தமிழ் வளர்ச்சிக்கு விழா எடுக்கும்.
தமிழ் ஆட்சி மொழியில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தமிழ் வழக்கு மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக மட்டுமல்ல வழக்குமன்றத்தில் தீவிரமாக்கப்பட முயற்சி நடைபெறும்.
உலகத்தின் பல நாட்டுப் பிரதிநிதிகளும் தமிழைப் பாராட்டிப்பேச வந்திருக்கும் இந்த நேரத்தில் ஒன்றை நினைவுகூர்தல் வேண்டும். நாம் ஒரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். அந்தப் போராட்டம் யாரையும் எதிர்த்தல்ல, எந்த மொழியையும் எதிர்த்தல்ல, யாரையும் சிறையில் தள்ளுவதல்ல, அந்தப் போராட்டம் யாரையும் அழிவுப்பாதைக்கு அனுப்புவதல்ல அந்தப் போராட்டம் நாமே நமக்குள் நடத்திக் கொள்ள வேண்டிய போராட்டம் அது. தமிழில்தான் பேசுவேன் என்று நமது உள்ளத்து உணர்வுடன் போராட வேண்டும் நாம். தமிழன் என்றொரு இனமுண்டு என்பதைத் திரைப்படத்தில் மட்டும் பாடிக்காட்டுவதோடு நின்றுவிடாமல், தமிழ் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான் முன்பு, இலங்கை தி.மு.க-வின் அழைப்புடன் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கு என்ன பேசுவது என்பது குறித்து அமரர்
அண்ணா அவர்களிடம் கேட்டேன்.
“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நமக்கும் கலாசாரத்தொடர்பு உண்டே தவிர, அரசியல் தொடர்பு கிடையாது”. என்று அண்ணா அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதை அங்கு சென்று நான் தெரிவித்தேன் இலங்கைத் தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். இலங்கைத் தமிழருக்கு எந்தெந்த வகையில் ஆதரவு தர முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் தருவோம். அந்த நாட்டின் ஆட்சி முறை குறித்து தலையிட முடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவிப்பது என் நீங்காத நினைவு என உணர்கிறேன்.
அரசியல் சம்பந்தம் இன்றி முழுக்க முழுக்க தமிழுக்கு மட்டும் நடத்தப்படும் மாநாடு இது என்பதால் அரசியல் குறித்து நாம் கவலைப்படாமல் தமிழ்மொழி குறித்து, தமிழ் வளர்ச்சி குறித்து, இலக்கியம் குறித்து, கலாசாரம் குறித்து இம்மாநாடு கருத்துரை தெரிவிக்கிறது.
தமிழைப் பயன்படுத்துவது குறித்து நாம் அக்கறை செலுத்தும் போது, சாதாரண உழைக்கும் மக்களுக்குத் தெரிந்த தமிழை நாம் உருவாக்குவோம். அப்படி உருவாக்கும் மொழியில் இலக்கியம் இருக்கவேண்டும். கண்டிராஜன் என்னும் நாடகத்தில் ஒரு பாடல் வரும். அந்தப் பாடலில் நயம் இருக்கும். ஆனால், யாருக்கும் அதன் பொருள் எளிதில் புரியாது. அப்படி இருந்தால் பயன் என்ன?
வாழ்க்கையில் அனைவரும் பேசும் ஒரே மாதிரி மொழியை அமைக்கவேண்டும். அதைச் செய்ய உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுவைத் தவிர வேறு ஒரு நிறுவனம் கிடையாது. அந்தப் பணிக்கு நீங்கள் எல்லாரும் காட்டுகின்ற ஒத்துழைப்புக்கு அடையாளம்தான் இந்த உலகத் தமிழ் மாநாடு.’’ என்று தொடக்க உரை நிகழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
அத்துடன் உலகத்தமிழ் மாநாட்டில் திறந்தவெளி திரைப்பட அரங்கத்தில் உலகத் தமிழ்ச் சங்கம் திரைப்படத்துவக்க விழாவில் உரை ஆற்றிய புரட்சித்தலைவர்,
‘‘இந்தப் படத்திலே சொல்லப்பட்டுள்ள கருத்துகள் பற்றி அறிஞர் பெருமக்கள் தங்களது எண்ணங்களை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். இதற்கு மேலும் ஏதேனும் வரலாற்று உண்மைகள் இருந்து தெரியப்படுத்தினால், ஏதேனும் மாற்றங்கள் செய்து இந்தப்படத்தை இன்னும் எடுக்க முடியும். இலெமூரியா கண்ட வரலாறு இளமை முதலே என்னோடு ஊறிப்போன ஒன்றாகும். இருபத்து நான்கு அல்லது இருபத்தைந்து வயதில் ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படித்ததால் தோன்றிய எண்ணம் இந்தப் படத்தைப் பார்க்கின்றபோது நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறேன்.
படம் பார்த்து முடிந்ததும் நீதிபதி மகராஜன் அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு மிகவும் அற்புதமாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள் என்று மனப்பூர்வமாகப் பாராட்டினார். இந்தப் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்பவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக, தமிழிலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர்களாக, செம்மையாக எண்ணியதை வெளியிடும் திறமையும் உள்ளவராக இருக்கவேண்டும் எனத் தேடினேன். ப.நீலகண்டன் அவர்கள்தான் எனக்குக் கிடைத்தார். இதற்கு அவர்தான் சரியானவர் என்று நான் நம்பினேன்; நம்பிக்கெடவில்லை; வெற்றியே பெற்றிருக்கிறேன். இதில் ஏதாவது குறையிருந்தால் அதை ஏற்கும் பொறுப்பு என்னையே சேரும்.
தமிழ்ப் பெருமக்கள் அத்தனை பேரும் இதை ஓர் அடையாளச் சின்னமாக வைத்துக்கொண்டு மேலும் ஆராய வேண்டும் என்ற கருத்திலேயே இந்தப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதற்காகச் செய்யப்பட்ட செலவு வீண் விரயமில்லை. கேரள முதல்வர் அவர்கள் இங்கே பேசும்போது தமிழும் மலையாளமும் சகோதர மொழிகள் என்று குறிப்பிட்டார். தாயும் மகளுமே தவிர, அக்கா தங்கை அல்ல. அந்த வகையில் நாயனாரும் தமிழர்தான். நம்முடைய மாநிலங்களுக்கு இடையிலான உறவு பிரிக்கமுடியாதது. ஒன்றைப் பெறுகிற போது ஒன்றை விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும். எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும், ஒரு நல்ல காரியம் செய்கிறபோது அதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது. எதை விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதை விட்டுக் கொடுக்க வேண்டும். இதை, கண்ணகி கோயிலுக்காகத்தான் சொல்கிறேன். வரப்புச் சண்டை போல எதற்காக?
இந்தப் படத்திற்கான உரையாடலையும் எழுதி இயக்கிய நீலகண்டன் அவர்களையும், உடன் ஒத்துழைத்த ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், காட்சிகளை அமைக்கப்பாடுபட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இது மக்களுக்காக எடுக்கப்பட்ட படமே தவிர, வியாபார நோக்கோடு பிடிக்கப்பட்டது அல்ல.’’
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment