POST: 2020-03-22T10:16:31+05:30

===============================================
தினமணி நாளிதழில் 23.02.2020 அன்று கலா ரசிகன் பகுதியில்…
===============================================

மகாகவி பாரதியால் பற்றி எத்தனை எத்தனையோ பேர் எத்தனை எத்தனையோ எழுதிவிட்டார்கள்.
அத்தனையும் எழுதிய பின்னும் இன்னும் எழுதிக்கொண்டே இருக்க எத்தனை
எத்தனையோ இருக்கின்றன. அதுதான் எட்டயபுரத்துக் கவிராஜனின் தனிச்சிறப்பு.

ஆண்டுதோறும் பாரதியார் குறித்த நூல் ஒன்றைப் பிரசுரித்து, பாரதியார் பிறந்த நாள் விழாவில்
வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது ஸ்ரீராம் நிறுவனம். கடந்த ஆண்டு
‘பாரதியார் பதில்கள் 100’ என்ற நூலை வெளியிட்டார்கள். பாரதியார் குறித்த 100 கேள்விகளுக்கு
முனைவர் ந.அருள் பதலளித்திருக்கிறார். இந்த ஆண்டு அதையே மேலும் விரிவுபடுத்தி
‘நாளும் நினைவோம் பாரதியார் 366’ என்கிற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதென்ன பாரதியார் 366 என்றுதானே கேட்கிறீர்கள்? இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 நாள்கள்
என்பதால் 366 நாள்களுக்கு தினமும் ஒரு தகவல் என்பதாக பாரதியார் பற்றிய செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் முனைவர் ஔவை அருள்.

‘சோஷலிசம், கம்யூனிசம்’ என்கிற சொற்களுக்கு அபேதவாதம், சமதர்மம் என்று பலர் தமிழில் பொருள் கூறினர். பொதுவுடமை என்கிற சொல்லை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான் என்கிற தகவல் உள்பட, 366 பதிவுகளைத் தொகுத்து வழங்குகிறது இந்தப் புத்தகம்.

பாரதியார் குறித்து பாரதிதாசன் கூறியிருக்கும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பாரதியார் மறைந்து ஓராண்டுக்குப் பிறகுதான் தன் பெயரை ‘பாரதிதாசன்’ என மாற்றிக்கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தினம், அதற்குக் கூறும் காரணம் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டிருக்கிறது.

‘நான் பாரதிதாசன் எனப் புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அவர் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்தததுதான் அதற்குக் காரணம். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தான். சென்ற காலத்தில் அவரைப் போல சாதியை எதிர்த்தவர் எவரையும் நான் கண்டதில்லை.

பாரதியார் சாதியை எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தொன்றியது’ என்று பதிவு செய்கிறார் முனைவர் ந.அருள்.

பாரதியார் குறித்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் வைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அத்தியாவசியக் கையேடு. பாரதி பற்றிப் புரிந்துக்கொள்ள விழைவோருக்கு இது கையடக்க நூலகம். பாரதி அன்பர்களுக்குத் தவிர்க்க முடியாத இன்னொரு தரவுத் தொகுப்பு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *