POST: 2020-03-24T09:59:21+05:30

தினசெய்தி நாளிதழில் 23.03.2020 அன்று வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! ( பகுதி – 27)

தினசெய்தி நாளிதழில் 23.03.2020 அன்று வெளியான கட்டுரை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! ( பகுதி – 27 )

‘‘தமிழர்களுக்கே உரிமையான விழா..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
=========================================
மாநாடுகள் நடத்துகின்ற மரபை ஒட்டியே பல்கலைக்கழகங்களை உருவாக்குவது – பட்டங்கள் பெறுவது – பட்டமளிப்பு விழாக்கள் நடத்துவது போன்ற எண்ணங்களின் ஆர்வ அலைகள் எங்கும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தன. பல்கலைக்கழகம் என்பது கல்லூரிகளைத் தன் கட்டமைப்பில் அமைத்துக்கொண்டு உயர்நிலை ஆய்வை ஒவ்வொரு துறைக்கும் நடத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாயிற்று.
பல்கலைக்கழகத்தைப் பற்றியே அறிஞர் நியூமென் ஒரு நூலை எழுதியிருக்கிறார். பள்ளி – உயர்நிலைப்பள்ளி -மேல்நிலைப்பள்ளி – கல்லூரி – பல்தொழிற்கல்லூரி என்ற அடுக்கில் பல்கலைக்கழகங்கள் சிகரங்களாக அமைந்தன. கொல்கத்தா – மும்பை – சென்னை முதலிய மாநகரங்களில் அரசே பல்கலைக்கழங்களை நிறுவின. பன்மொழிகள், பலகலைகள், அறிவியல் விரிவுகள், பொருளியல் புதுமைகள், மொழித்துறையில் அகராதிகளை அமைத்தல் என்ற நிலையில் பல்கலைக்கழகங்கள் அமைந்தன.
பொதுமை நீங்கி ஒவ்வொரு துறைக்கும் – பிரிவுக்கும் – மொழிக்கும் – கலைக்கும் தனியாக ஒரு பல்கலைக்கழகம் என்ற வளர்ச்சி நுண்மை நோக்கிய கனவில் உருவாயிற்று. பொது மருத்துவம் உடல் முழுவதையும் ஆராய்ந்த காலம் போய் மகப்பேறு, குழந்தைநலம், முதுமைநலம் கண் காது மூக்கு, பற்கள், தோல் தொடர்பானவை, பால்வினை, தொற்றுநோய், செரிமானம், இதயம், நுரையீரல், முடநீக்கு, மருந்தாய்வு, அறுவைத்திறம், உறக்கமின்மை, மரத்துப்போதல், நீரிழிவு, காசம், உளவியல் என நூற்றுக்கு மேற்பட்ட கிளைகள் தனித்துறைகளாக விரிந்தன.
பொறியியலும் இவ்வாறுதான். இந்த நோக்கத்தில் அறிவியலைக் கருத்திற் கொண்டு மொழிக்குள்ளே துறைப்பிரிவுகளைத் தொடங்க முடியுமா என்பது தீராத ஐயம். தமிழே தெரியாமல் தமிழ்த் தொடர்பான துறைகளில் அறிஞர்கள் அயல்நாடுகளில் தலைமை தாங்கியதிற் நாம் அறிவோம். மேலும், வேதப் படிப்பும், வடமொழிப் பிடிப்பும், வடமொழிப் பல்கலைக்கழங்களை உருவாக்கின. பந்தற்கர் ஆய்வு நிறுவனத்தில் பாரதம் வெளியிடுவதே ஒரு பணியாக இருந்தது. பல்கலைக்கழகச் சிந்தனையே மேலை நாட்டாரின் மன வயப்பட்டதாகும். ஆர்வத்தால் தனியார் பல்கலைக்கழகங்கள் காளான்கள் போல முளைத்ததைக் கண்டோம்.
செட்டிநாட்டரசர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்குப் பெருமிதம் சேர்த்ததால் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்றே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அனைவரும் அரவணைத்து மகிழ்ந்தனர். இந்தச் சூழலில்தான் ஒரு குழுவை அரசே அமைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வரைபடத்தைப் பெற்றது.
தாயின் மடியிலிருந்து விழுந்த நாள் முதல் சவலைக் குழந்தையாகவே தள்ளாடி நடந்ததை நாம் கண்டோம். என்றாலும், தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற தொடர் கரைகடந்த ஆர்வத்தைப் புரட்சித்தலைவரின் மனத்தில் பொங்க வைத்தது. உயரிய கனவுகளோடு தமிழ்ப் பல்கலைக்கழகத்தை ஆண்டுக்கொருமுறை புதுமையாக்கும் போக்கோடு புரட்சித்தலைவர் நெஞ்சையள்ளும் தஞ்சை மாநகரில் பெருவுடையார் கோயில் போல தமிழுடையார் கோயிலாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
விண்ணில் பறந்துவரும் விமானத்திலிருந்து த மி ழ் என்ற மூன்று எழுத்துகளும் கண்ணில் பட்டு ஒளிருமாறு மூன்று சிகரங்களாக அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டார். இது பழங்கதை. புரட்சித்தலைவரின் தொடக்கவிழாப் பேச்சைப் படிக்கும் போதே இவ்வாறெல்லாம் என் நினைவலைகளில் மிதந்தேன்.
17.09.1981 ஆம் ஆண்டு தஞ்சைத் தரணியில் தமிழ்ப் பல்கலைக் கழகக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கு கொண்டு தமிழ்மனம் ததும்ப புரட்சித்தலைவர் ஆற்றிய உரையை இங்கே பதிவிடுகிறோம்…
அந்த உரை…
‘‘தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்படிருக்கிறது என்ற வகையில் மூன்றாவது நாளாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை முடித்து வைத்துப் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை. பின்னால் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அச்சாரமாகத் தொடங்கி வைக்கும் பேச்சாகத்தான் நான் இங்குப் பேச வேண்டும் என்று கருதுகிறேன்.
தமிழைப் பற்றிப் பேசுவதற்கும், தமிழில் எழுதுவதற்கும், தமிழிலே சிந்திப்பதற்கும் ஒரு முடிவு கிடையாது என்பதை இந்த உலகம் உள்ள அளவும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு நம்பிக்கை என்பதையும், உண்மை என்பதையும் உணர்ந்திருக்கின்றோம். அந்த வகையில்தான் இந்தக் கருத்தை நாம் ஏற்றுக்கொள்வோம் என்ற வகையில் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
எனக்கு மாபெரும் பொறுப்பு ஒன்றைத் தந்திருக்கிறார்கள். பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று பெரியார் பிறந்த நாளில் பொறுப்பைத் தந்தவர்களுக்கு நான் என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.
15ஆம் தேதியிலிருந்து இதுவரையில் தமிழை நன்கு புரிந்து கொண்டவர்கள், அறிந்து கொண்டவர்கள், ஆய்ந்து கொண்டவர்கள் எத்தனையோ கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். “முதலில் நான் தெளிவாக ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன். இது எந்தக் கட்சிக்கும் சொந்தமான விழா அல்ல, இது தமிழக மக்களுக்குச் சொந்தமான நிகழ்ச்சி என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதில் யாருக்காவது பெருமை என்றால், தமிழ் பேசுகின்ற தமிழை ஏற்றுக் கொண்டிருக்கின்ற, தமிழனாக வாழ்கின்ற, தமிழுக்குச் சொந்தகாரனாக இருக்கின்ற அத்தனைப் பேருக்கும் பங்குண்டே தவிர, ஆட்சியிலே இருக்கின்றோம் என்பதற்காக எங்களுக்கோ அல்லது எங்களோடு நண்பர்களாக இருக்கின்ற சிலருக்கோ அல்லது இதை வாழ்த்துகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கோ எந்தவித சொந்த பந்தம் கிடையாது. யார் எங்கே இருந்தாலும் தமிழர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் அத்தனைப் பேருக்கும் சொந்தமுண்டு என்பதை ஆழமாக, அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய பிரச்சினை மிகப்பெரியது. தமிழைப்பற்றிச் சொல்லும் பொழுது தமிழுக்கு யாரும் விளம்பரம் தேடித்தர வேண்டாம் என்று சொல்லிவிடலாம். ஆனால், வேதனையோடு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 30, 40 வயது வரை ஒரு தமிழன் அதுவரை எழுதப்படிக்க தெரியாதவனாக இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் தமிழை நன்றாகப் படித்து தெரிந்து கொண்டு பல புத்தகங்ளைப் பார்த்து கருத்து விளக்கங்கள் தரக்கூடிய அளவுக்குத் திறமை பெற்ற பிறகு அவன் பொறியியல் திறமை பெற்றவனாக வரவேண்டுமானால் அதற்கான வழிவகை தமிழில் இருக்கிறதா என்றால் இல்லை. படித்தவன் வர முடியாது. வழக்கறிஞராக வர முடியாது. என்றால் நிச்சயமாக முடியாது. அதற்குத் தமிழிலே சட்ட விளக்கங்கள் இல்லை.
ஆபிரகாம் லிங்கனைப் பற்றிச் சொல்லுவார்கள் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார் என்றும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார் என்றும், திடீரென்று ஒருநாள் இந்த வேலை வேண்டாம். நான் படித்து வக்கீலாக விரும்புகிறேன் என்று படித்துப்பட்டம் பெற முடிந்ததென்று, இன்று தமிழனால் அப்படிச் செய்ய முடியுமா?
தமிழ் தெரிந்த ஒரு குடிமகன் இன்றைய தினம் பல்வேறு தொழில்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியுமா என்றால் தமிழில் இல்லை. இதைவிட வேறு வெட்கக் கேடு இல்லை. இதை நாம் தலைக்குனிவோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றாலும், நாம் இந்த உணர்வை யாருக்காவது ஏற்படுத்த வேண்டுமென்றால் நம்முடைய மூதாதையர்கள் எப்படி இருந்தார்கள்? அவர்கள் என்னென்ன திறமையோடு இந்தத் தமிழை நாட்டுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும் நாம் சொல்லித்தான் தீரவேண்டி இருக்கிறது.
இந்தத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் நான் கனவு கண்டு கொண்டிருப்பது பல்வேறு கலைகளெல்லாம் அதற்குள் இணைத்து அதை ஒன்றுபடுத்தி உலகெங்கும் சொல்லிக் கொடுக்கும் வகையில் அந்தப் பணியைச் செய்யக்கூடிய திறமையைத் தமிழர்களுக்குக் கொடுக்க இந்தத் தமிழ்ப்பல்கலைக் கழகம் உதவ வேண்டும் என்பது எனது பேராசையாகும். இதற்கு அயல் மாநில – அயல் நாடுகளின் அறிஞர்களையெல்லாம் அழைத்து வழிகாட்ட கேட்க இருக்கிறேன்.
நான் 15ஆம் தேதி சொன்னதை அழுத்தமாகச் சொல்கிறேன். தம்பி சோமசுந்தரத்துக்குத் தெரியும். நினைத்தது போல ஒன்று நடக்கவில்லை அது வேறு கதை . இதற்குத் துணைவேந்தராக இருக்கிற திரு. சுப்பிரமணியம் அவர்களும், முத்தமிழ் காவலர் அவர்களும், திரு. குழந்தைசாமி போன்றவர்களெல்லாம் எந்த அளவு அக்கறை காட்டினார்கள் என்பதையும், அதன் விளைவு ஐந்து புலங்கள் என்று பிரித்துப்பார்க்க முடிகிறது என்பதையும் எண்ணி அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும், பாராட்டும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்தக் குழு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இருக்கும். அந்தக் குழு யோசனைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கும். அந்தக் குழு கலைக்கப்படமாட்டாது. அந்த குழு தன் பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தமிழக அரசினுடைய முடிவு.
ஒருவர் சொன்னார். நாங்கள் 600 ஏக்கர் வேண்டுமென்று சொன்னோம். 1,000 ஏக்கர் ஒதுக்கியிருக்கிறார் என்று சொன்னார். அதுகூடப் போதாது என்பது என் பேராசை, ஏனென்றால் ஒவ்வொரு புலங்களும் தனித்தனியாக இருந்துவிட வேண்டும். ஓட்டலில் உணவு அருந்தும் இடம் போல அமைந்து விடக்கூடாது. அவர்கள் பணிகளைச் செய்து முடித்த பின் கூடிப் பேசத் தனியிடம் இருக்க வேண்டும். பேருந்து நிறுத்த தனி இடம் இருக்கவேண்டும் கடைகள் இருக்க வேண்டும். ஆனால், வேறு கடைகள் அங்கு இல்லாமல் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்! இதையெல்லாம் நான் சொல்லக் காரணம் நிலைமைகள் நம்மை வற்புறுத்தினாலும் எச்சரிக்கையாகச் சில காரியங்களைச் செய்யவேண்டும். செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரியார் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றுவார் என்று சொன்னார்கள். எனக்கு அந்தச் சிறப்பு இல்லை. சிறப்புரை ஆற்றுவதைவிட பேசியவர்களின் சிறப்பைப் பற்றிக் கூறுவது நல்லதாக இருக்கும்.
இது இறுதிக் கூட்டம் என்பது இல்லை. இறுதி என்பது தமிழுக்குக் கிடையாது. தமிழ்ப் பெருங்குடி மக்களை நான் கை கூப்பி வணங்கிக் கோருவது ஒன்றுதான். தயவு செய்து இந்தத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியலை நுழைய அனுமதிக்காதீர்கள் என்று பணிவோடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அதே போல் 15ஆம் தேதி சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சாதி மதம் என்ற எண்ணமே இங்கு வரக்கூடாது. வந்தால் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியும் கெட்டுப்போகும். தமிழர்களின் வாழ்வும் பாழ்பட்டுப் போகும் என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றையும் உள்ளே நுழைய விடாதீர்கள், மதம் வந்தால் ஜாதி வந்துவிடும். மாவட்டம் வந்துவிடும், இந்த இரண்டும் வந்தால் அரசியல் தானாக வந்துவிடும். ஆனால், இதைப் போன்ற புனிதமான தமிழகக் கோயில் என்று சொல்லக்கூடிய பல்கலைக் கழகத்தில் எதையுமே நுழைய விடாதீர்கள்.
சமஉணர்வு, சமவாய்ப்பு, சமத்துவம், சமதர்ம நிலைமை இவைகளே தர்ம நிலைமை இவைகளை வைத்தே அந்த அடிப்படை இருக்க வேண்டும் என்று சொல்ல விழைகிறேன்.
இந்த நல்ல நேரத்தில் தமிழைப்போற்றி, தமிழை வளர்த்து, தமிழைப் பாராட்டி, தமிழனாக வாழ்ந்து, தமிழின் பெருமையைக் காப்பற்றி மற்றவர்கள் நம்மைக் காப்பாற்றி மற்றவர்கள் நம்மைப் பின்பற்றக்கூடிய அளவிற்குத் தமிழை உயர்த்துகின்ற அளவிற்கு நாம் ஒன்றுபட்டு எந்த மனக் கசப்பிருந்தாலும் வேறுபாடு இருந்தாலும் தமிழ் வெற்றி பெற்றாக வேண்டும். தமிழர் வாழ்ந்தாக வேண்டும் என்ற வகையிலே ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் வைத்து இந்த அளவு ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.’’
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *