==========================================
தினசெய்தி நாளிதழில் 25.03.2020 அன்று வெளியான
உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களின்
கட்டுரை
==========================================
வயிற்றுணவினும்
செவிக்குணவு சுவை மிகுந்தது..!
நீதிபதி ஒருவருடன் உரையாடுகையில், ஓய்வுபெற்றுக்கொண்ட நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று என்னைக் கேட்க, அவர்க்கு நான் “ஓய்வுகொள்ளுகிறேன்” என்றேன். உடனிருந்த நண்பர்கள் கல்லென்று சிரித்தனர். “இல்லை; ஏதாகிலும் ஒரு வேலை செய்தல் வேண்டுமே; உடல் நலத்துக்கு அது மிகவும் வேண்டுவதொன்றாயிற்றே என்று கேட்டேன்’’ என்றார். ‘ பொள்ளாச்சி வள்ளல் திரு. நா.மகாலிங்கம் அவர்கள் விரும்பிய வண்ணம் திருவருட்பாவுக்கு உரையெழுதுகின்றேன்’’ என்று விடை கூறினேன்.
நூலுக்கு உரை எழுதுவது ஒரு வேலையாகுமா? வேலை என்றால் செய்பவருடைய தனித் தன்மையை (Individuality) வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்; நூலாசிரியர் வெளியிட்ட கருத்துகளை, அவற்றை மூடியிருக்கும் அரிய சொற்களை நீக்கி, எளிய சொற்களால் உரைப்பதுதானே உரை; அதனை எழுதுவது ஒரு வேலையாக எப்படிக் கருதுவது என்றார் அவர்; நிலைமை அது வாயின் நீதிமன்றத்தில் வழக்காடச் செல்லும் மக்கள் பொருட்டு நீதிபதிக்கு வழக்கெடுத்து உரைக்கும் வழக்கறிஞர்கள் செய்வது வேலையாகுமா? அதுவும் உரைகாரர் உரை வேலை போல்வது தானே; அது சிறந்த வேலையாகப் பொருள் பயந்து மக்களை உயர்த்தியிருக்கிறது அல்லவா? நீங்களும் அக்கூட்டத்தில் வளர்ந்து வந்தவர்தானே ? என்றேனாக, மேற்கொண்டு தொடர்ந்து பேச்சிடையே உரையாசிரியரது உரை மரபு விரிவாக நினைக்கப்பட்டது; அங்குப் பரிமேலழகர் உரை சிறப்பிடம் பெற்றது. அவரது உரைநலம் இக்கட்டுரையின் பொருள்.
நமது தமிழ் மொழிக்குப் பெருமை தருகின்ற நூல்களில் தொல்காப்பியம், திருக்குறள் என்ற இரண்டு நூல்களும் தலைசிறந்தனவாகும். அவற்றுள் தொல்காப்பியம் எழுத்தும், சொல்லும், பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எழுத்தும், சொல்லும், உணர்வும், ஒழுக்கமும், வாழ்வும், பண்பாடும், பிறவும் உரைக்கின்றது. திருக்குறள் தமிழரிடை நிலவிய அறமும், பொருளும், இன்பமுமாகிய நினைவும், சொல்லும் செயலுமாகிய கூறுகளைக் குறட்பாக்களால் உரைக்கின்றது. அதற்கு உரைகண்ட ஆசிரியர் பலர்.
அவர்களில் நுண்மாண் நுழைபுலச் செல்வராய், தமிழ் மரபோடு வட நூல் மரபும் நன்குணர்ந்த தமிழ்ச் சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை தனிப்பெரும் நூலாகப் பயிலத்தக்க பண்பு அமைந்தது. தமிழில் மேன்மையான நூல்கள் எனச் சிலவற்றை நானூறு, ஐந்நூறு ஆண்டுகட்கு முன் ஒரு பெரியவர் ஆராய்ந்து தொகுத்துக் கூறினார். அவர் இன்னார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும், அவர் உரைத்தது வெண்பா வடிவில் இருக்கிறது.
“வள்ளுவர்மெய் யன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தஉரை-ஒள்ளியசீர்த் –
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் –
தண்டமிழின் மேலாம் தரம்’
என்பது அவ்வெண்பா. இவ்வெண்பாவை நோக்குமின்; திருக்குறள், தொல்காப்பியத் தொண்டர் புராணம் எனப் பல நூற்களைத் தொகுத்த அந்தப் பெரியவர், அவற்றிற்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது, பரிமேலழகர் உரைக்குப் பழங்காலப் புலவர் – பெருமக்கள் எத்தகைய மதிப்பு வைத்திருந்தனர் என்று நமக்கு அறிவிக்கின்றது.
மேலும் பரிமேலழகர் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலுக்கும் உரை எழுதியிருக்கிறார், என்றாலும் அது திருக்குறள் உரைபோல வளமும், வனப்பும், திட்பமும், நுட்பமும் செறிந்தில்லை. அதனால் அந்த உரை பரிமேலழகர் உரைதானோ? என்று ஐயுறுவாரும் உண்டு. நிலைமை இப்படி இருப்பதால்தான், பரிமேலழகர் உரை என்றால் யாவரும் திருக்குறள் உரை ஒன்றையே நினைக்கிறார்கள் – இந்த வெண்பாவில் “ தெள்ளு பரிமேலழகர் செய்த உரை ‘’ என்பது திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையையே என்று பலரும் சொல்கிறார்கள். இத்தகைய சிறப்போடு விளங்குவதால்தான் பரிமேலழகர் உரையின் அழகு காண்பதில் அறிஞர்களுக்குப் பெரும் விருப்பம் உண்டாயிற்று.
அதனை நோக்குவாம். ‘ செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ” என்பது ஒரு திருக்குறள். செவிக்குணவாகிய நல்ல அறிவுடைக் கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பில்லாதபோது வயிற்றுக்கு உணவு தரவேண்டும் என்பது இதன் பொருள். இதற்குப் பரிமேலழகர் செவிக்குணவாகிய கேள்வியில்லாதபொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்று உரை கூறுகின்றார்.
இனி இந்த உரையிற் கருத்தைப் புகுத்திப் பரிமேலழகர் அழகு செய்வதைக் காண்போம். திருவள்ளுவர் செவிக்குணவு என்பது எதனை செவிக்குணவாவது கேள்வி என்று சொல்லுகிறார் திருவள்ளுவர், செவிக்குணவு இல்லாதபோது வயிற்றுக்குத் தரப்படும் என்றால் செவிக்குணவு இருக்கும்போது வயிற்றுக்கு உணவு தரப்படாது என்று தெரிகிறது.
உணவு எனப்படுவதால் செவிக்குணவு, போல வயிற்றுணவும் யாவருக்கும் வேண்டத்தக்கது. செவிக்குணவு தந்து கொண்டே வயிற்றுணவு கொண்டாலென்ன எனின், வயிற்றுணவினும் செவிக்குணவு சுவை மிகுந்தது. ஆகையால் இரண்டையும் சமமாக்குவதற்குப் பரிமேலழகருக்கு விருப்பம் இல்லை. அவர் வயிற்றுணவைவிட, செவி உணவு சிறந்தது என்பாராய் “சுவை மிகுதியும் பிற் பயத்தலுமுடையது கேள்வி . அது உள்ள பொழுது வயிற்றுணவு அறிஞர்களால் விரும்பப்படாது ஒழிகிறது என்று பரிமேலழகர் கண்டு, இதனால்தான் திருவள்ளுவர் செவிக்குணவு இல்லாதபோது வயிற்றுக்கு உணவு தரப்படும் என்றார். இனி, செவிக்குணவு – இல்லாத போது தரப்படும் வயிற்றுணவையும் “சிறிது’’ ஈயப்படும் என்பது எவ்வாறு பொருந்தும் என்று ஒரு கேள்வியை மாணவன் பரிமேலழகரிடம் கேட்கிறான்.
அதற்கு விடை கூறும் பரிமேலழகர் வயிற்றுணவு மிகுமானால் இடையூறு உண்டாகும் என்று நினைக்கிறார். ஆகவே, அவர் வயிற்றுணவு பெரிய தாயவழி – வயிற்றுணவு மிகுமானால்- அது நோயும், காமமும் விளைவித்தலின் திருவள்ளுவர் “சிறிது’’ என்று போடுவதுதான் பொருத்தம் என்று பரிமேலழகர் கூறுகிறார். இது கேட்ட மாணவன், “சிறிது’’ என்பது ஏன் ? -சிறிதும் இல்லையானால் நோய் முதலியன குறையும் அல்லவா?’’ என்று வினவுகிறான். அவனுக்குப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார். “அது தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டு” என்று சொல்கிறார்.
பின்னிருந்து கேட்டற் பொருட்டு என்பதாயின், அவ்வாறு கேட்பதற்குரிய வலிமையும், தெளிவும் தருவது வயிறு. அவ்வயிற்றிற்குத் தருகின்ற உணவை இழிந்தோர்க்குச் சொல்வது போல “ஈயப்படும்”என்று சொல்வது பொருத்தமா? என மாணவன் கேள்வி கேட்கிறான். இக்கேள்வியை நினைத்துப் பார்த்த பரிமேலழகர் அது பொருத்தம்தான் என்பராய் “ஈதல் வயிற்றது இழிவு – தோன்ற’’ நின்றது என்று கூறுகிறார், அது எவ்வாறு பொருந்தும் என்றால், உணவு மிகுமானால் வயிறு காமமும், நோயும் உண்டு பண்ணுவதால்தான் ‘’ஈயப்படும்’’ என்று சொல்லுதல் பொருந்தும் என்கிறார்.
இவ்வாறு ஒவ்வொரு குறட்பாவுக்கும் அழகொழுகத் தருக்க நெறியில் உரை எழுதும் பரிமேலழகர் கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைச் சூழவுள்ள நாட்டில் வாழ்ந்தவர். அவர் காலத்தில் மூன்றாம் இராசராசனும், மூன்றாம் இராசேந்திரனும் சோழ நாட்டை ஆண்டனர்.
திக்கன் என்ற விசயகண்டகோபாலன் காஞ்சிபுரப் பகுதியில் – நாடு காவல்புரிந்தான். அந்நாளில் வாழ்ந்தவர் பரிமேலழகர், திரிபுவனச் சோழனான ஆனைமேலழகர், (கல். 4:852) நச்சினார்க்கினியர், வண்டு உரைப் பெருமாளான பரிமேலழகர் (கல். 4:854) முதலிய சான்றோரின் தூய தமிழ்ப் பெயர்கள் பின்னாளில் மறைந்து வீழ்ந்தன. அவ்வீழ்ச்சி நீர்வளமும் நிலவளமும் பொருந்திய ஊர்கள் சதுர்வேதிமங்கலங்களாக மாறி, பின்னர் அனைத்தும் மறைந்த வரலாற்றோடு ஒத்த தனி வரலாறு ஆகும்.
இப்பரிமேலழகர் திருக்குறட்கு எழுதியுள்ள உரை மிகவும் சிறந்ததெனத் தமிழறிஞர் அனைவரும் ஒருமுகமாகப் பாராட்டுகின்றார்கள் பரிமேலழகருக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் புலவர்கள் தோன்றித் திருக்குறட்கு உரை கண்டாரேனும், பொதுவகையில் நோக்கினால் – பரிமேலழகர் உரைத்த உரைக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ உரை எழுதினோர் இல்லை என்று கூறுவது மரபு. இதனை வற்புறுத்துவது போல,
‘’பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ-நூலில் பரித்தவுரை எல்லாம் பரிமேலழகன், தெரித்தவுரையாமோ தெளி”
என்றொரு பழம்பாட்டு நாட்டில் நிலவுகிறது. அன்றியும், பரிமேலழகர் உரையைத் தழுவியும், ஒற்றியும் எழுதின உரைகளை அறிஞர்கள் மேற்கொண்டதோடு, வேறுபட்டும் மாறுபட்டும் செய்த உரைகளை ஏலாது ஒழிந்தமையே ஒரு சான்றாகும்.
பழந்தமிழ் நூல்கட்கு உரை காண்பது படிப்பிப்போர், நூல்களைப் பிறர் படித்துப் பொருள் விளங்கிக்கொள்ளுமாறு செய்யும் செயல் வகையுள் ஒன்று. அருஞ் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும், அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுள் முதல் வகையை அரும்பதவுரை என்றும், கண்ணழித்துரை என்றும், பதவுரை என்றும், பின்னதைப் பொழிப்புரை என்றும் கூறுவர். உரைக்கப்பட்ட உரையின்கண் அடங்கிய கருத்துகளை வினா விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்கிடையை அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. இன்றுள்ள தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரைகாரர் தோன்றி, உரையெழுதியது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு உள்ளேதான் என்று கூறல் வேண்டும்.
அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. எனினும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழைமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்ப வைத்து சோக்கும் போது, உரைகாரர் வழிவழியாக மேற்கொண்டிருந்த மரபு ஒன்று வெளிப்படுகிறது. எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று செறிகளால் மேற்கொண்ட இலக்கண இலக்கியங்கட்கு உரை காண் பது அம்மரபு. அம்மரபு, பிற்கால நூல்களான நன்னூல், நேமிநாதம், பாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறதேயன்றி, இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பழைய உரை முறையை மறவாது கடைப் பிடித்ததொன்றே பரிமேலழகர்க்குத் தனிச் சிறப்பையும், அவர் உரைக்கு அழகையும் தருகிறது.
எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு, நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகந்து கண்டு, அறிவுநெறியால் ஆராய்ந்து உரைக்கும் மாண்பும், அருமையும் அமைந்ததாகும். மேற்போக்காக நுனிப்புல் மேயும் விலங்கு நோக்கம் இந்நாளில் வேற்று மொழிப் பயிற்சியால் மக்களிடையே பெரிதும் பரவி இருக்கிறது.
அன்றியும் கல்வியின் நோக்கம், அறிவும், ஒழுக்கமும் பெறுவது என்பதைக் கைவிட்டு, ஏலாதன செய்தேனும் வயிறு வளர்ப்பது என்பது கொள்கையாக மாறியதனால் இவ்விழிநிலை உண்டாயிற்று. இக்கருத்துடையாரே வழிவழியாக வாழ்வியல் தலைவர்களாக வந்தமையால், இந் நிலைமை மேன்மேலும் ஆதரவுபெற்று வளர்ந்துவருகிறது. நூலாசிரியர் கூறும் கருத்துகளை, ‘ஏன்? எப்படி?’ என எழும் வினா விடைகளால் நுண்ணறிவு கொண்டு தூய்மை செய்து கொள்வது உயர்நிலை மாணவர் கல்வி முறையிலேயே கைவிடப்பட்டுள்ளது. அதனால் கல்வி பயில்வோரிடையே காரண, காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் பயிற்சி தேய்ந்து போயிற்று. பரிமேலழகர் ஒருவரே அதனை ஓரளவு விடாது கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் பெரிதும் முயன்று வெற்றிபெற்றுள்ளார். எனினும் அவர் வேற்று மொழி மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்த்தும், வாதனை வயத்தால் சில பல குறட்பாக்களில் குழறுபடை செய்து குற்றப்படுகிறார். ஆனாலும், அதுபற்றி அவரது உரை மாண்பும் அழகும் குன்றுவதில்லை.
– பேராசிரியர் ஔவை. சு.துரைசாமிப் பிள்ளை

Add a Comment