நேற்றைய நினைவு … 2
இராணி வாராந்தரி – 29.09.1986
===========================
ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
….. முனைவர் ஔவை நடராசன்
பட்ஜெட்டு = பாதீடு
=================
பட்ஜெட்டு என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “பாதீடு” என்ற தமிழ்ச் சொல் பொருத்தமாக இருக்கும்.
“பாதீடு” என்றால், பகுத்து இடுதல் (பங்கிடுதல்) என்று பொருள். (பகுத்து உண்பதை “பாத்தூண்” என்பார்கள்).
அரசாங்கத்தின் வருமானத்தை இராணுவச் செலவுக்கு இவ்வளவு, கல்விச் செலவுக்கு இவ்வளவு என்று பங்கிடுவதைத்தானே “பட்ஜெட்டு” என்கிறோம்?
இலக்கியச் சொல்
பட்ஜெட்டு என்பது தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ஒரு சொல். வெற்றி பெற்ற ஒரு வேந்தன், வெற்றிப் பொருளை வீரர்களுக்குப் பகுத்துக் கொடுத்ததை “பாதீடு தந்தனர்” என்று “புறப்பொருள் வெண்பா மாலை” குறிப்பிடுகிறது.
ஈழத் தமிழர்கள் “பாதீடு” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். “அமைச்சர் பாதீடு தாக்கல் செய்தார்”. “பாதீடு பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது” என்று எல்லாம் தமிழ் இதழ்கள் எழுதுகின்றன.
அறிய வேண்டும்
ஒரு புதிய சொல்லைப் படைக்குமுன், அதற்கு ஈடான சொல் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களிடம் குறிப்பாகப் பட்டி தொட்டிகளில் – மக்களிடம் பேச்சு வழக்கில் இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.
கடல் கடந்த தமிழர்கள் – குறிப்பாக ஈழத் தமிழர்கள் சில நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றையும் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.
ஒன்று திரள வேண்டும்
தமிழ்நாட்டில் கூட, கலைச் சொற்களை, அறிவியல் சொற்களைப் படைப்பதில் அரசும், பெருஞ்சித்திரனார், திருவாரூர் சரவணத் தமிழன், பழ.கருப்பையா போன்ற அறிஞர்களும், நெய்வேலி உலகக் கழகம் போன்ற அமைப்புகளும், குறள்நெறி, குறளீயம், தமிழ்ப் பாவை, செந்தமிழ்ச் செல்வி போன்ற இதழ்களும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த முயற்சிகள் எல்லாம் ஒன்று திரட்டப்பட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Add a Comment