POST: 2020-04-27T09:55:37+05:30

தினசெய்தி நாளிதழில் இன்று (27.04.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 32)

‘‘இசையச் செய்யும் இசை..!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

மன்னர் சரபோசி கல்லூரியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுகிற பொழுது புரட்சித் தலைவர் தன் குழுவினரைக் கொண்டு `இன்பக்கனவு’ என்ற நாடகம் நடத்த வந்தார். அப்போது புரட்சித் தலைவரிடம் நெருக்கமாக இருந்த கவிஞர் முத்துக்கூத்தன் என்னை அழைத்துப் போனார். மாணவப் பருவத்திலேயே என்னை அறிந்தவர் புரட்சித் தலைவர். என் மாணவன் பஞ்சநதி ஈசன் புரட்சித் தலைவரை கண்டால் போதும் என்று தவம் கிடந்தவன். ஓதுவார் மகன் இனிய இசை வளத்தால் எவரையும் பாடி ஈர்த்தவன். அவனையும் உடனழைத்துச் சென்றேன். “அவ்வை மாணவனா நீ?” என்று சொல்லி, “ஒரு பாட்டு பாடு” என்றார் பொன்மனச் செம்மல் அவனிடம்.

`உலகிற்கு ஒன்றாய் நின்றவன் நீ’ என்ற இரண்டாம் தொடரை எடுத்து உரக்கப் பாடி, `ஓசை ஒலியெலாம் ஆனாய் நீ’ என்று முடித்தான். மெய் மறந்து நின்ற புரட்சித் தலைவர் தன் பையில் இருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். என்னைப் பார்த்து உங்கள் கல்லூரிக்குப் பேச வருகிறேன் என்று சொன்னார். அத்துடன், “அது என்ன ஓசை, ஒலி?” என்று கேட்டார் எனக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.

அண்ணா, ஓசை என்றால் அலை ஓசை, ஒலி என்றால் வானொலி என்று கூறினேன்.

இசை உலகத்தில் சப்தம், நாதம் என்று சொல்வார்களாம். தமிழ்தான் என் தலையைக் காத்தது. இரண்டும் மயங்கி வருவதும் உண்டு என்று சொன்னேன். அதனை வாழ்நாள் முழுவதும் அவர் மறந்தது இல்லை.

இந்த நிலையில், 21/12/1978 அன்று புரட்சித்தலைவர் சென்னை இசைக் கழகத்தின்(சங்கீத வித்வத் சபை) 52ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரையைப் படிக்கலாம்…

‘‘இசைக் கலைக்குத் தொண்டு செய்யும் விற்பன்னர்களும் இசைக் கலையை இல்லத்தில் வளர்க்கும் தாய்மார்களும் நல்ல இசையை ரசனையுடன் பாராட்டிப்போற்றும் பெரியோர்களும் இங்கு இசை விழாவைத் தொடங்கி வைக்கக் கூடியிருக்கிறீர்கள். இத்தகைய மேலோர் குழுமிய அவையில் நிகழவிருக்கும் இசை விழாவைத் தொடங்கி வைக்குமாறு என்னை அழைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த விழாவைத் தொடங்கி வைப்பது உண்மையில் நானல்ல; நீங்கள்தான்!

இறைவனின் தேரை இழுப்பதற்காக, அவ்வூர் மரபுப்படி குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது அமைச்சர் ஒருவரையோ அழைப்பார்கள் அவரும் தேரின் வடத்தைத் தொடுவார். அதை ஒருவர் தூக்குவதுகூட எளிதல்ல. ஊர் மக்கள் ஒன்று கூடித் தேரை இழுத்து, ஊர்வலம் சுற்றி மீண்டும் தேரை நிலைக்குக் கொண்டு வருவார்கள். ஆனால், ஏடுகளிலே வெளிவரும். ‘‘அமைச்சர் அல்லது ஒரு பிரமுகர் தேரை இழுத்தார்” என்று. அதுபோல உங்களில் ஒருவனாக, இசையை, இசை மேதைகளை ஆராதிக்கும் முதற்தொண்டனாக, இந்தப்பணியில் ஈடுபட வாய்ப்பளித்துள்ளீர்கள். தமிழகத்தின் முதல்வர் என்பதற்காக அல்லாது, இசை, இசையோடு தொடர்பு கொண்ட நாடகம், மற்றும் நுண்கலைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட ஒரு ரசிகன் என்ற முறையிலும் இந்த உயர்வு எனக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இந்த இசைக் கழகம் பொன்விழாச் சிறப்புப் பெற்று, இப்பொழுது 52ஆவது விழாவை எட்டியிருக்கிறது. 52 என்ற எண்ணின் கூட்டுத் தொகை ஏழு. இசை, ஏழு ஸ்வரங்களில் உண்டாவது. ஆகையால், இந்த விழா இசையோடு எவ்வளவு நயமாக ஒட்டியிருக்கிறது என்பதை இதிலேயே உணர்ந்து நான் ரசிக்கிறேன். ‘‘ஏழிசையாய் – இசைப் பயனாய் நின்றவன்” என்று நம் முன்னோர்கள் வழிபாட்டில் கூறியுள்ளார்கள். அந்த ஏழு இங்கேயும் இருக்கிறது. நாத உபாசனை என்பார்கள் பெரியோர்கள். இசை மூலமாக இறைவழிபாடு செய்வது என்று அதற்குப் பொருள்.

இறைவழிபாடு என்றால், இறைமைக் குணங்களைக் கைக்கொண்டு வழிப்படுதல் என்றும் பொருள் கொள்ளலாம். மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவன் கடவுளின் வாரிசாகக் கருதப்படுவான். அந்த மனிதத் தன்மையை அடைவதற்குத் தன்னைப்போல் பிறரை நினைக்கும் குணம் தேவை. எல்லாம் ஒன்று என்ற எண்ணம் உண்டாக வேண்டும். இசை ஒன்றுதான் ‘‘ஒன்ற” வைக்கும் ஆற்றல் கொண்டது பாடுகின்றவர் கருதியோடு ஒன்றும்போது, மற்றவர்கள் அவரோடு ஒன்றிவிடுகிறார்கள். சுருதி கொஞ்சம் கலைந்தால்கூட ஒன்றுகிற நிலை கலைந்துவிடும். உருகிப் பாடும்போது கண்களில் நீர் மல்குவதைக் காண்கிறோம். இது தனக்காக உகுக்கும் கண்ணீரலல. மற்றவருக்காக மற்றவரின் மனத்தில் நிலையான ஆனந்தத்தை ஏற்படுத்த உகுக்கின்ற கண்ணீர்!

‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” – என்ற செய்யுள் வரியை நாம் கேட்டிருக்கிறோம். கண்ணனைக் காதலனாக – சேவகனாக – சற்குருவாக – சீடனாக – காதலியாகக் கூட பாவித்துப் பாடினார்கள். அந்த பாவம் ஐக்கியமடைந்த ஆன்மாவின் புனித சங்கமத்தில் உருவாகும் உன்னத நிலை. நாத உபாசனை (இசை வழிபாடு) இருக்கிறதே, இதில் எந்த விதமான பேதத்திற்கும் இடம் கிடையாது. மனம் உள்ளவர்களின் மனங்களையெல்லாம் ஈர்க்கும் ஆற்றல், அதாவது இசையவைக்கும் சக்தி கொண்டது அந்த இசை.

நாத உபாசனை என்று சொல்வதோடு –

‘நாதயோகம்’ என்றும் சொல்வார்கள்.

‘பூதங்கள் ஒத்துப் புதுமை தரல் விந்தையெனில்

நாதங்கள் சேரும் நயத்தினுக்கு ஈடாமோ.” என்றார் பாரதியார்.

நாதங்கள் சேரும் நயம்தான் நாத யோகம். அத்தகைய புனிதமான பேரானந்த மண்டலத்திற்கு நம்மை அழைத்துப் போகும் நல்லிசை – மரபுவழி இசையாகும்; அதாவது கருநாடக சங்கீதமாகும். பொதுவாக – இசை நம்முடைய தமிழ்க் குடும்பங்களில் ஒன்றிப் போன ஓர் அம்சம் ஆகும். சின்னஞ் சிறு குழந்தையைத் தூங்கவைக்க, தாய் குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுப் பாடுவது வழக்கம்.

அக்கால இலக்கியத்தைப் பார்த்தாலும் இசையினுடைய முக்கியத்துவம் நமக்குப் புலப்படுகிறது. அன்று வாழ்ந்த பாணர்கள் மன்னர்களைக்கண்டு யாழ் மீட்டி, இசை பாடித் தம் திறமைக்கு ஏற்ப அன்பளிப்பாகப் பொன்னும் மணியும் பெற்று வீடு திரும்புவார்களாம்.

வழியிலே பாலை நிலங்கள், காடுகள், ஆகியவற்றைக் கடந்து வரும்போது – அவர்களைக் கள்ளர்கள் வழிமறித்துக் கொள்ளையடிக்க முயலுவார்களாம். அந்தப் பாணர்கள் இனிமையான பாடல்களைப் பாடி, அந்தக் கள்ளர்களையும் மயக்கி, அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றுவிடுவார்களாம்.

கோயில்களில் மங்கல விழாக்களில் நாதசுரம் இசைப்பது தமிழர்களுடைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நாதசுரம் மங்கல விழாவுக்கே உரியது.

மங்கல இசைக்கு என்று தனியாகவும், மற்றைய நிலையை வெளிப்படுத்த வேறு வகையாகவும் வாத்தியங்களை வகுத்தக் கையாண்டவர்கள் நம் மூதாதையர்கள்.

அக்காலத்திலிருந்து நாட்டியம் தனிச் சிறப்புப் பெற்று வந்திருக்கிறது. இசை, காதால் கேட்டு அனுபவிப்பது, நாட்டியமோ கண்ணால் பார்த்ததும் காதால் கேட்டும் அனுபவிப்பது.

தமிழ் நூலான சிலப்பதிகாரத்தில் இசையையும் நாட்டியத்தையும் பற்றிய எண்ணற்ற விசேடக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. நாட்டியம் மகேசனைத் தொழுவதற்கும் மன்னர்களை மகிழ்விப்பதற்கும் பயன்பட்டது. நாட்டியமாடுவதற்கென்றே ஒரு பகுதியினர் இருந்த காலம் அது. பிற்காலத்தில் அந்த அற்புதக் கலை எல்லோருக்கும் பொதுவாகப் பரவி, இன்னார்தான் ஆட வேண்டும் என்ற நிலை மாறி, ஆடற்கலையில் வல்லவர்களாக எல்லோருமே ஆகலாம் என்ற அளவுக்கு, விரிவடைந்திருக்கிறது.

ஏன் அப்படி..!

காதில் இன்பத் தேனைப் பாய்ச்சுகிறது இசை! அந்த இசையின் ஒலி இதயத்தில் எதிரொலிக்கிறது!

அதோடு உடல் முழுவதும் பரவுகிறது. ஒவ்வொரு நரம்பையும் தட்டி எழுப்புகிறது!

பரவசம் ஊட்டுகிற ஓர் அபூர்வ மின் சக்தியாகி, நம்முடைய உடலின் ஒவ்வோர் அணுவையும் தீண்டி, ஒருவிதப் புதுமைக் கிளர்ச்சியை-மலர்ச்சியை-நெகிழ்ச்சியை-பூரிப்பை உண்டாக்கி விடுகிறது. நம்மிடமுள்ள எல்லாவற்றையுமே தன்வசப்படுத்திக் கொண்டுவிடுகிறது. சோர்வு உற்சாகமாகிறது… கவலை களிப்பாக மாறுகிறது…

கோபம் சாந்தமாகிறது… பகைமை நட்பாகிறது.

ஆழ்வார் பாசுரங்களில் ஒன்று நினைவுக்கு வருகிறது.

‘‘கோவிந்தன் குழல் ஊதின போது

மட மயில்களோடு மான்பிணைப் போல

மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ,

உடைநெகிழ, ஓர் கையால் துகில் பற்றி

ஒல்கி, ஓடரிக்கண் ஓட நின்றனரே!” – என்று பாடுகிறார். குழலின் மெல்லோசை தருகின்ற பரவச நிலையை இப்படிச் சுவை ததும்ப வருணிக்கிறார் ஆழ்வார்.

‘‘நாதமே முக்கலை-நாதம் மூவெழுத்து

நாதமே முக்குணம்-நாதமே முப்பொருள்

நாதம் மூவுலகாகி விரித்து-

நாதமாம் பரத்தில் லயித்தது பாரே.

நாதம் பரத்தில் லயித்திடும் அதனால்

நாதம் அறிந்திடப் பரமும் அறியலாம்” – இது ஓர் அகவல் பாடல்.

மேற்சொன்னவாறு மூன்று மூன்றாக விவரிக்கபட்ட இந்த நாதத்தின் மும்மூர்த்திகளாகத் திகழ்ந்தவர்கள் தியாகராசர், தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆவார்கள். இவர்கள் மூவருமே ஆரூரைச் சார்ந்தவர்கள். ஆனாலும் ஓரூரைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும், உலகத்தில் இசையை ரசிக்கின்றோர் வாழ்கின்ற அத்தனை இடங்களுக்கும் சொந்தமானவர்கள் இவர்கள். அறிவியல் துறையிலே மிக உயர்ந்து நிற்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட நமது இசைக் கலைஞர்கள் நமது கருநாடக இசையை முழக்கிப் புகழ்பெற்றுத் திரும்புகிறார்கள். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் உள்ளத்தை உருகவைத்ததையும், ஐக்கிய நாடுகள் சபையிலே பலநாட்டு மக்களின் ரசனையையும் ஒன்றுபடுத்தி அவர்களால் புகழப்பட்டதையும், நாம் அறிவோம்! நம் இசை நாடு கடந்த, கடல் கடந்த ஒரு கலையாகும். அதுபோலவே, காலம் கடந்தும் நிலைத்து நிற்பதாகும்.

இசையாகிய தேனைப் பருகுவதற்கு அடிப்படை வடிவம். அந்த வடிவத்தைக் கீர்த்தனைகளாக்கி வழங்கிய மேலோர்கள் இந்த மும்மூர்த்திகள். முற்காலத் தமிழகச் சிறப்புக்கும், பண்பாட்டு மேன்மைக்கும், சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் காரணமாக இருந்தது போல, பழம்பெரும் கருநாடக இசையின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் இந்த இசை – மூவேந்தர்கள் அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களின் பாடல்கள் வடமொழியிலும் தெலுங்கு மொழியிலும் அமைந்திருக்கின்றன. அவற்றைக் கேட்கும்போது மனம் உருகினாலும், அந்த உருக்கம் அவற்றின் பொருளையும் நாம் அறிந்து கொள்ளும்போது இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘‘தமிழ்த் தியாகய்யா” என்று போற்றப்படும் பாபநாசம் சிவன், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர் முதலானவர்களின் பாடல்களைப் பாடக் கேட்கும்போது, இசையின் இனிமையோடு, பொருளையும் சுவைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

சிலர் தமிழில் இந்த இசைப்பாடல்கள் அமைந்தால் அவற்றின் சிறப்பு குன்றிவிடுமோ என அய்யப்படுகிறார்கள். தமிழ் மொழி எந்த மொழிக்கும் புனிதத்தில் குறைந்ததில்லை. நம் தமிழகத்தில் பிறந்து, தமிழிலேயே பாசுரங்கள் இயற்றிய பன்னிரு ஆழ்வார்கள் வழங்கியுள்ள தேவாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்பும் பெருமையும் உண்டு என்று தெய்வத்தொண்டில் ஈடுபட்ட ஆன்றோர்களும் கூறியுள்ளார்கள்.

‘‘ ‘செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி’ என்கையாலே, தமிழ் மறைகளும் மிகமிகத் தொன்மையானவை. வடமொழி மறை ஒன்று சம்ஸ்கிருத வேதத்தைச் சொல்வது, தமிழ் மறைகள் என்றென்றும் உண்டு என்று நினைத்தேதான் சொல்லப்படுகிறது. நான்கு வேதங்களுக்கு ஆறு அங்கங்கள், எட்டு உபாங்கங்கள் இருப்பதுபோல, நம்மாழ்வார் பணித்த தமிழ் மறைக்குத் திருமங்கையாழ்வார் பாடியருளிய ஆறு அங்கங்களும் மற்றைய எட்டு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களும் அமைந்திருக்கும்” என்று சிறப்பு மிகுந்த எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறியிருக்கிறார்.

இசை, மொழியைக் கடந்தது என்றாலும், சொந்த மொழியில் பாடல்கள் அழகாகப் பாடப்படும்போது அவற்றின் பொருளையும் சேர்த்து அனுபவிக்க முடிவதால், இனிமை – ரசனை அதிகமாகிறது. கீர்த்தனைகள் ஆனாலும், பாடல்களானாலும் சொற்களுடைய அழகும், பாவமும் தெரியும்படியாகப் பாடவேண்டும். ஒரு சில இசைப் பேரறிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு பாடும்போது சொற்கள் உருவிழந்து போகின்றன என்பது, ரசிகர்கள் பலரும் சொல்லிக்கொள்ளும் குறையாகும். ஆனால், தமிழ்ப்பாடல்களையும் கீர்த்தனைகளையும் சொற்களுடைய அழகு சிறிதும் குறையாமல் நயமாகத் திருமதி கே.பி.சுந்தராம்பாள், திருமதி டி.கே.பட்டம்மாள் முதலானவர்கள் பாடக் கேட்டு ரசித்திருக்கிறேன்.

இந்த விழாவிலே பாராட்டப் பெறும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்கூட தெலுங்கிலே கீர்த்தனைகளை இவ்வாறு அழகுடன் பாடுவதை நான் பலமுறை கேட்டு அனுபவித்திருக்கிறேன். ரசித்து மகிழாதவர் இல்லை.

இசை, மொழிக்கு அழகு தருவது மட்டுமல்லாமல், அதனுடைய வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்பதே என் ஆசை. மதுரையிலே தமிழ் வளர்க்கும் பல்கலைக் கழகத்தில் இசை ஆராய்ச்சிக்கும் ஒரு பகுதியை நிறுவியிருப்பது, இத்தகைய ஆர்வத்தினால்தான் என்று இங்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.”

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *