POST: 2020-04-30T10:28:06+05:30

என்றும் குறையாத ஏற்றம் – ஔவை நடராசன்-85
=============================================

—- இலக்கியச் சுடர் த.இராமலிங்கம்.

வட சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்டம் அளாவிய மாணவ-மாணவியர் பேச்சுப் போட்டியை நடத்தியது.

எங்கள் பள்ளியிலிருந்து நானும் நண்பரும் போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தோம். பரிசு கிடைத்தது.

பரிசு வழங்கும் விழாவிற்கு மிகப்பெரிய தமிழறிஞர் ஔவை வருகிறார் என்று தெரிவித்து அந்தப் பரிசை வாங்குவதற்கு எங்களை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் பங்கு கொண்ட தமிழறிஞர்தான் ஔவை நடராசன் அவர்களாவார்..

அந்தப் பெயரையே முதன் முதலில் அப்போதுதான் கேட்டேன். அரங்கத்தில் இருந்த எல்லோருமே பள்ளி மாணவர்கள். அப்பொழுது +2 இல்லை. பத்தாம் வகுப்பு என்று இருந்தது. ஆனால், ஒரு மாணவன் கூட அரங்கத்தில் அப்படி இப்படித் திரும்பவில்லை. அவருடைய பேச்சில் தங்களை இழந்து கேட்டுக் கொண்டிருந்த பாங்கினைப் பார்த்தபோது, என்றைக்காவது இப்படிப் பேச முடியுமா என்று பள்ளிப் பருவத்திலேயே எனக்குத் தோன்றியது.

அதன் பின் பள்ளி முடித்து நான் கல்லூரி வந்த நிலையில், திரு.சுகி.சிவம் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுக் குன்றக்குடி அடிகளார் நடத்திக் கொண்டிருந்த தமிழ்நாடு தெய்விகப் பேரவையில் இணைந்து செயலாற்றக்கூடிய சூழல் நேர்ந்தது. தெய்விகப் பேரவையின் சார்பில், சிவராத்திரி அன்று இரவெல்லாம் பட்டிமன்றம் நடத்துவார்கள். இரவு தொடங்கி விடியற்காலை 2.30 மணிக்குத்தான் முடியும்.

அதற்கு பலமுறை ஔவை அவர்கள் வந்திருக்கிறார்கள். அப்போதும் அவருடைய பேச்சைக் கேட்டு வியந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நெருக்கமான பழக்கம் இல்லை. பின்பு அரசு நடத்தும் விழாவில், குன்றக்குடி அடிகளால் நடுவராக இருக்க, ஔவை அவர்களும், மறைந்த நன்னன் அவர்களும் பேசிய ஒரு வழக்காடு மன்றம், திருக்குறளைப் பற்றியது. நான் ஒரு பார்வையாளனாக அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது கலைவாணர் அரங்கம் என்று அழைக்கப்பட்ட அரங்கத்தில் அந்த விழா நடந்தது.

ஒரு வழக்காடு மன்றத்தில் எதிரில் பேசுபவரை எப்படி மடக்க முடியும் என்று அன்றுதான் உணர்ந்து கொண்டேன். அடிகளார் அவர்கள், ஔவை அவர்களின் பெயரைச் சொல்லி, எழுந்திருக்கக்கூடாது, எழுந்தால் இந்த அவை நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை செய்யக்கூடிய அளவுக்கு எழுந்து நிமிர்ந்து வழக்காடுபவரைப் பேச விடாமல் செய்யக்கூடிய இவரின் பாங்கைக் கண்டேன்.

அதற்குப் பின்னால், ஏராளமான கம்பர் விழாக்களில், புதுவை, காரைக்குடி போன்ற பிற இடங்களில், அப்போதெல்லாம் நெருக்கமான பழக்கம் இல்லாவிட்டாலும்கூட, மேடைகளில் அவர் என்னை அறிமுகப்படுத்துவதை நான் பார்த்து வியந்திருக்கிறேன்.

பின்பு அவருடன் பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் இருந்த இலக்கிய அமைப்புகள் அவரின் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன.

செஞ்சி திருக்குறள் பேரவையில் ஒரு விழாவிற்கு இவர் வரமுடியாத நிலை ஏற்பட்டபோது அந்த விழாவை நடத்துவதற்கே அவர்கள் தயக்கம் காட்டினார்கள்.

அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடிக்கும். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்.

சென்னையின் புற நகர்ப் பகுதியில் ஒரு மாலையில் நிகழ்ச்சி. அங்காடிச் சந்தைப் பகுதியில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நல்ல வெளிச்சம் இருந்தது. நடுவராக இவர் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று மின்சாரம் தடைபட்டது. எந்த சலனமும் இல்லாமல் ஔவை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரை ஐயா என்று அழைத்து, கரண்ட் போய்விட்டது என்றபோது, கரண்ட் இருந்தபோதெல்லாம் யார் கேட்டார்கள் என்று கூறிவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

நான் வழக்கறிஞரான பின்னர், அவர் மீது ஈடுபாடும் மரியாதையும் மிகுந்தன. தமிழறிஞர்கள் என்ற அமைப்பை நாங்கள் வட சென்னையில், சேர்ந்து நடத்தியபோது, அவர் ஆலோசனை வழங்கினார். எங்கள் விழாக்களில் அவர் ஆர்வத்தோடு வந்து பேசுவார்.

உச்ச நீதிமன்ற நீதியரசரான இராமசுப்பிரமணியன் மற்றும் நானும் சென்று அவரைத் தலைமைச் செயலகத்தில் சென்று சந்திக்கும்போது, இலக்கியம் தொடர்பாகப் பேசுவோம்.

பார்வையாளர்கள் சென்ற பின்னர், அவருடைய உதவியாளர் துளசிராமன் அவர்களை அழைத்து மோரும், சுண்டலும் பரிவோடு கொடுப்பார்.

நான் உரிமையாகச் சில சமயம் அவரிடம் கோபப்படுவேன். அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஒரு சமயம் ஒரு செய்தியில் நான் அவரிடம் கருத்து முரண்பாடு கொண்டேன். அது குறித்துக் கடிதம் எழுதினேன். நான் வறுமைக் களத்தில் காய்ந்து போனாலும்கூட, பண வெள்ளத்தில் அழிந்து போகமாட்டேன் என்று எழுதினேன். கடைசியாக, நாதியில்லை என்று என்னை ஊர் சொல்லலாமா? இங்கு நீங்கள் இருந்தும் எனக்கு அந்தப் பேர் வரலாமா? என்று எழுதினேன்.

கடிதம் அனுப்பிய பின்னர் மிகுந்த அச்சப்பட்டேன். இரண்டு நாட்களில் ஏவி.எம். மண்டபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றபோது, அவர் என் பெயரைச் சொல்லி ஔவை என்னை அருகில் அழைத்தார். அன்பு கனிந்துப் பாராட்டினார்.

ஒருவர், இலக்கியச் சுடரின் பேச்சு உங்களைப்போல் என்று முடிப்பதற்குள் எனக்கும் மேல் என்று சொல்லுங்கள் என்று பரிவோடு பாராட்டியதை கேட்டு என் முகத்தில் நாணம் படர்ந்தது.

பின்னர் இரண்டு நாட்களில் என் கடிதத்திற்குப் பதில் போட்டிருந்தார். சங்க இலக்கியத்தில் புற நானூற்றில் தாடியை மை அணல் காளைக்கு ஏன் மனக்கோபம் என்று என் இளந்தாடியைக் குறித்து எழுதியிருந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அவரும், அம்மா தாரா அம்மையாரும் வந்திருந்தபோது, பேசினோம். தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு அவருடன் மகிழுந்தில் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அனைவரிடமும் அன்பைக் காட்டியவர் அவர். அவருடன் பழகியதே எனக்குச் சிறப்பானது.

கொட்டுகிற மழையில் என் திருமணம் நடந்தபோது, திருமணம் நடந்து முடிந்த பின்னர், வெளியூரில் இருந்து வருவதால் தாமதமாக வந்தேன் என்று எனக்கு மிகுந்த பெருமிதம் தந்தார்.

இன்று தொழில் மற்றும் பிற காரணங்களால் அவரைக் கண்டு பேசும் வாய்ப்புக் குறைந்தாலும் அந்த அன்பும் மதிப்பும் எனக்கு என்றும் குறையாது என்பதுதான் உண்மை.

என் மீதும் என் பேச்சின் போதும் அவர் காட்டிய பரிவு எப்போதும் பொங்கி வழியும். மேடைத் தென்றலாகிய ஔவை அவர்கள் பல்லாண்டு வாழ்க!

/////////////////////////

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *