தினசெய்தி நாளிதழில் இன்று (04.05.2020) வெளியான ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
===============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 33)
‘‘மன அமைதிக்கான வரப்பிரசாதம் இசை..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
சென்னையில் ஓர் இலங்கை மாணவர் சிவபாலன் இசைக்கல்லூரியில் இடம் கேட்டு வந்தபோது, “ஒரு பாட்டு பாடு” என்றார் புரட்சித்தலைவர், விழித்த மாணவனிடம், “ஓசை, ஒலி” என்ற பாடலை பாடச் சொன்னார்.
“ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.”
– என்ற பாடலை சிவபாலன் இனிமையாகப் பாடியதை மிகவும் லயித்துக் கேட்டு மகிழ்ந்தார் புரட்சித்தலைவர்.
குறிப்புரை: `ஓசை, ஒலி’ என்பன, `சத்தம், நாதம்’ என்னும் பொருளுடையன. `வெற்றோசையும் பொருளோசையும்’ என ஓசை இருவகைப்படும். அவற்றுள், வெற்றோசையை `ஓசை’ என்றும், பொருளோசையை `ஒலி’ என்றும் பொருள்பட நாவுக்கரசர் தேவாரத்தில் அமைந்தது.
சிவபாலனால் என் சிறப்பு பன்மடங்கு உயர்ந்தது. அவருடைய நினைவலைகள் எவ்வளவு நீண்டன என்று வியந்தேன். இந்தநிலையில் புரட்சித்தலைவரின் இசை உரையை வாசிக்கலாம்.
‘‘நாதப்பிரும்மம்” என்பார்கள். இதிலிருந்து அதற்குண்டான தனி மதிப்பை நாம் அறிய முடியும். ஓசையை உண்டாக்கும் சக்திதான் காற்று. வசந்த காலத்திலும் காற்று வீசுகிறது. கடல் குமுறிக் கொந்தளிக்கும் காற்று வீசுகிறது. முன்னதற்குத்தான் தென்றல் என்று பெயர். பின்னதற்குப் பெயர் புயல் அல்லவா..!
ஸ்வரம், சுருதி, ராகம் இவை மூன்றும் நாதத்தின்… அதாவது ஓசையின் நல்லிசைக்குரிய ஜீவ அம்சங்கள், ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் இவை ஏழும் இசையின் ஸ்வரங்கள். இந்த ஏழையும் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
தேவாரம், திருவாய்மொழிப் பாடல்களுக்குப் பலவகையான பண்கள் உள்ளன. அந்தப் பண்களுக்கு ஏற்ற இராகங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாகச் சிலவற்றைச் சொல்லலாம். தமிழில் உள்ள பண்ணான நட்டபாடைக்குரிய இராகங்கள் நாட்டை…
இந்தளம் – மாளவ கௌளை.
தக்கேசி – காம்போதி.
கௌசிகம் – பைரவி.
குறிஞ்சி – அரிகாம்போதி.
இந்தப் பண் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று விரைவில் எல்லாப் பண்களுக்கும் உரிய இராகங்களை அறியும் வாய்ப்பு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பண்பு இருக்கிறது. அதேபோல கருநாடக இசைக்கும் ஒரு பண்பு இருக்கிறது. தமிழ்மறையான திருக்குறளில் கூறப்பட்டுள்ள நீதி முறைகள் எல்லாமே தமிழ்ப் பண்புகள் அன்புடைமை, அருளுடைமை, அடக்கமுடைமை, வாய்மை இப்படி எத்தனையோ பண்புகள்.
அவ்வாறே, கருநாடக இசைக்கும் பல இலக்கணங்கள் உண்டு. மனித இலக்கணம் போல இசைக்கும் இலக்கணம் இருக்கிறது. குறிப்பிட்ட கட்டுக்கோப்பைத் தாண்டக் கூடாது என்று வரம்பு உண்டு. சுதியோடு சேர்ந்து பாடவேண்டிய அவசியம் உண்டு தாளம் தவறக்கூடாது. இப்படிப்பட்ட விதிகள் ஏராளம். அவை அனைத்தையும் அறிந்து, தெளிந்து முறைப்படி கடைப்பிடிக்கவேண்டும். ஆதலால் இதற்கு மிகவும் `சாதகம்’ தேவை அதாவது பயிற்சி வேண்டும். பயிற்சியில் முதிர்ச்சி பெறுவதற்குப் பொறுமை வேண்டும். ஆர்வமும் ஈடுபாடும் அசைவிலாத ஊக்கமும் அனைத்துக்கும் மேலாக பக்தியும் வேண்டும்.
இராகங்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவைக்கு மாதர் திலகங்களின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.
கல்யாணி – பைரவி
நீலாம்பரி – ஜகன்மோகினி
வசந்தா – இப்படிப் பலப்பல. இதற்கு என்ன காரணமாக இருக்கும்!
`விண்’ என்ற உத்தரத்தில் அன்பு என்கிற தாம்பு இட்டு, `மண்’ என்ற தொட்டிலிட்டு, `கண்வளராய்’ என்று கனிவோடும் கருணையோடும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் அன்போடும் அரவணைப்போடும் `இன்னிசை’ என்றும் செல்வச் சேயைத் தாலாட்டிச் சீராட்டும் தாய்க்குலத்தினர் அல்லவா அவர்கள்! அதனால்தான் பெரும்பாலான இராகங்களின் பெயர்களில் அவர்கள் கொலுவிருக்கிறார்கள்.
பாட்டோடு பண் இணைய வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். திருவள்ளுவர் இதை ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்:
“பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்!” என்கிறார்.
தாட்சண்யம் என்பார்களே, அகல் இல்லாதபோது, கண் இருந்தும் பயனில்லை என்ற கருத்தைச் சொல்லவந்தவர், உவமையாகப் பண் பற்றிச் சொல்லுகிறார். “பாடலோடு இணையாவிட்டால் பண் என்ன ஆகும்?” என்று கேட்கிறார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே `டென்ஷன்’ எனப்படும் உணர்ச்சி வேகம் நிறைய இருக்கிறது. எல்லாத் துறைகளிலுமே பொறுப்புள்ளவர்களுக்குப் பொதுவாக ஏற்படும் பரபரப்பு நிலை இது!
இப்படிப் பரபரப்பான நிலை உண்டாவதால் உடல் நிலை பாதிக்கப்படும் என்றும், மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்வதுண்டு. இதற்கு ஒரு வரப்பிரசாதம் போன்றதுதான் இன்னிசை.
“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா.”
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். இயற்றியிருக்கிறார் என்று நான் சொல்லவில்லை. அது செய்யுளாக மட்டுமாக இருந்தால் அப்படிச் சொல்லலாம். இசையோடும் இணைந்திருப்பதால் `பாடியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டேன்.
தமிழிலே மாபெரும் கவிஞர்கள் பல கவிதைகளை இயற்றியிருக்கிறார்கள். அவர்களின் கவிதைகள் இசையுடன் பாடப்படும்போதுதான் உயிர் பெற்று உலவும் நிலை பிறக்கிறது.
நந்தனார் கீர்த்தனையை அனுபவிக்கிறோம். மாபெரும் கவிஞரான கோபால கிருஷ்ண பாரதியார் சுடர்விட்டுத் திகழ்கிறார்.
`சின்னஞ் சிறு கிளியே’ என்ற கவிதை இசையோடு ஒலிக்கிறது-மகாகவி பாரதியார் ஒளி வீசுகிறார்.
`தமிழுக்கு அமுதென்று பேர்!’-இசையோடு ஒலிக்கிறது-பாவேந்தர் காட்சி அளிக்கிறார்.
தத்துவப் பாடல் ஒன்று, பாடப்படுகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை நம்முன்னே காட்சி அளிக்கிறார்!
இப்படி, கவிஞர்களின் படைப்புகள் இசையோடுகலக்கும் போது, அவற்றிற்கும் அவற்றைப் படைத்தவர்களுக்கும் புகழ் உண்டாகிறது.
“ஆன்ம வெளியில் மூழ்கித் திளைப்போர்க்கு
அச்ச முண்டோடா!
மனமே!
தேன்மடை இங்கே திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!” என்கிறார் பாரதியார்.
“தேன்மடை திறந்து விட்டது, தேக்கி மகிழ்ந்து ஆடுவோம்” என்றால், என்ன தேன் அது! இசைத்தேன்! இனிமை மயமான சங்கீதத் தேன் அது!
நான் எனது மிகச் சிறிய பிராயத்திலேயே இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடகக் கம்பெனியில் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவன். அந்தக் காலத்தில் நாடகம் என்றால், வள்ளித் திருமணம், சம்பூர்ண இராமாயணம், மகாபாரதம், சத்தியவான் சாவித்திரி, நந்தனார் என்பவை போன்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடகங்களாகத்தான் இருக்கும். மேடையிலே எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள், சுப்பையா பாகவதர் போன்றவர்கள் அற்புதமான பாடல்களை விரிவாகப் பாடி மக்களைக் கவர்வது வழக்கம். புகழ்பெற்ற நாடகங்கள் எல்லாம் இசைக்கு முதலிடம் தரும் நாடகங்களாகத்தான் இருக்கும். என்னுடைய `தொழில் வாழ்க்கை’யை நாடகக் கம்பெனிகள் மூலம் தொடங்கியதால் எனக்கும் இளம்பிராயத்திலிருந்தே இசையை ரசிப்பதில் அளவற்ற ஆர்வம் இயல்பாகவும், சூழ்நிலை உதவியாலும் ஏற்பட்டிருந்தது; இசையில் பாண்டித்யம் இல்லாவிட்டாலும் நான் இசையை ரசிப்பதன் மூலம் அமைதியைப் பெற விரும்புகிறேன்.
உண்மையிலேயே கருநாடக இசையின் அடிப்படையில் அமைந்த அழகான சுத்தமான பாடல்களை படங்களில் அமைக்கச் செய்து நான் ரசித்து அனுபவித்து வந்திருக்கிறேன். கருநாடக இசை பின்னுக்குப் போய் விட்டது என்றும், மெல்லிசை என்ற பெயரில் மலிவான இலக்கணச் சுத்தமில்லாத பாட்டுக்கள் புகழ் பெற்றுவிட்டன என்றும் பலரும் இன்று குறை சொல்லுகிறார்கள். ஆனால், எனக்குத் தெரியும் ஒரு காலத்தில் பல திரைப்படங்கள் வெற்றியடைந்ததற்கு அவற்றினுடைய கருநாடக இசை மரபின்படி அமைக்கப்பட்ட பாட்டுக்களே காரணம் ஆகும் என்பது; இன்றும் நம்மில் பலர், பாபநாசம் சிவனின் பாட்டுக்களைத் தியாகராஜபாகவதர் திரைப்படங்களிலே பாடியதை, எவ்வளவு ரசனையோடு கேட்டு மகிழ்கிறோம் என்பது எனக்குத்தெரியும்.
இன்று திரைப்படங்களிலும் அத்தகைய நல்ல இசை இடம் பெறுவதற்கு அடிப்படையான ஆர்வமும் எண்ணமும் கொண்டு, திரைப்பட இசை இயக்குநர்கள் சிலர் அம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இடத்தில் ஒரு செய்தியைக் குறிப்பிட விரும்புகின்றேன். மேலை நாடுகளிலும்கூட இந்தப் பிரச்சினை இருக்கின்றது. ‘வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக்’ என்ற இசையின்பால் மக்களுக்கு உள்ள விருப்பம் குறைந்து ‘பாப் மியூசிக்’ போன்ற நாகரிக இசையில் மக்கள் அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள் என்ற குறையை அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். அதேபோல இன்று நம்முடைய குடும்பங்களிலும் இசைக்கு உள்ள ரசனை, ஓரளவு மாறுபட்டிருக்கின்றது. இதை நாம் எச்சரிக்கையோடு கவனித்தாக வேண்டும்.
எந்த ஒரு கலையும் ஆற்றின் நீரோட்டம் போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். தேங்கிப் போனால் அதனுடைய அழகும், இனிமையும் குறைந்து போய்விடும். இந்தக் கருத்து இசைக்கும் பொருந்தும் நம்முடைய மக்கள் துரிதமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். நிதானமாகவும், நீண்டநேரம் கவனம் செலுத்தியும் நுட்பமாகவும் கலைகளை ரசிக்க அவர்களுக்குப் பொழுது இருப்பதில்லை. ஒரு காலத்தில் இசைப் பேரறிஞர் இராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் ஒரு ராகத்தை இரவு முழுவதும் விடிய விடிய நாதசுரத்தில் வாசிப்பார்கள். கிராமங்களில் பல கோயில்களில் இரவு ஒரு மணி வரையில் சங்கீதக் கச்சேரி நடப்பதுண்டு.
ஆனால், இன்று சங்கீத சபாக்களில் நிகழும் மேடைக் கச்சேரிகள் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருப்பதில்லை. வானொலியில் இசைக் கச்சேரியை ஒலிபரப்பும்போது ஒன்றரை மணி நேரம்தான் ஒளிபரப்பப்படுகிறது. அதிலும் நல்ல பாடகர்களைச் சேர்ந்தாற்போல் பாடவிடாமல் நேரத்தை இரு பிரிவாகப் பிரித்துத் தந்து பாடச்சொல்கிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். டெலிவிஷனில் அதே இசைக்கச்சேரி முக்கால் மணிநேரந்தான் இடம் பெறுகிறது. ஆகவே, இன்று நல்ல இசையையும் கூடச் சுருக்கமாகவும், அதே சமயத்தில் இனிமையாகவும் கேட்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். மெல்லிசை இன்று மக்களிடையேயும், இளம் சமுதாயத்தினரிடையேயும் பிரபலமாக இருப்பதற்கு இதுதான் காரணம். நம்முடைய கருநாடக இசையை அழகான, சுருக்கமான வடிவத்தில், இனிமை குறையாமல் பாடச் செய்தால், அது அனைத்து மக்களையும் கவரமுடியும்; இளம் சமுதாயத்தினரிடையேயும் பிரபலமாக இருப்பதற்கு இதுதான் காரணம். நம்முடைய கருநாடக இசையை அழகான, சுருக்கமான வடிவத்தில், இனிமை குறையாமல் பாடச் செய்தால், அது அனைத்து மக்களையும் கவரமுடியும்; இளம் சமுதாயத்தினரையும் ஈர்க்க முடியும்.
‘கலாசாரம்’ என்ற சொல்லைத் தமிழில் ‘பண்பாடு’ என்னும் சொல் பண்-பாடு என்று பிரிந்து அழகான மற்றொரு பொருளையும் தருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்ற அரிய தன்மை இந்தப் ‘பண்பாடு’ ஆகும். அதோடு, நுண்கலைகளின் காவலராகத் திகழ்ந்த அவர்கள் பண்-பாடுவோரைப் பாராட்டிப் போற்றுகின்ற பண்பாட்டைக் கொண்டவர்கள்!
அந்தப் பண்பாட்டைக் கடைப்பிடிக்கின்ற நான் பண்-பாடுவோரோடு கலந்து மகிழவும் இசையோடு நெஞ்சை இசையச் செய்யவும் ஒரு நல்வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு, எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க இசை, வாழ்க தமிழ், வாழ்க அண்ணா நாமம்.”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment