POST: 2020-05-11T09:39:36+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (11.05.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 34)

‘‘பணத்தைவிடப் பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது…!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

===============================

வாழ்வு, கலை, பண்பாடு, ஒழுக்கம், இலக்கியம் என்பனவற்றை ஒரு வரிசையாகக் கருதும் வழக்கம் தமிழ் மக்களிடம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கலையால் பண்பாடும் பண்பாட்டால் ஒழுக்கமும் வளர வேண்டும் என்று ஒரு கருத்து எப்போதும் இருந்தது.

கலை மனம் கொண்டவர்கள், உணர்வின் உயர்ந்த நிலையை உணர்ந்தவர்கள் என்பதாலும் அந்த உணர்வு மனித நேயத்துடன் பின்னிப் பிணைந்ததென்றும், அறிஞர்கள் கருதுவார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் தோல்வியடைந்த பின்னர் வந்த கழக ஆட்சி என்று நாம் கருதினாலும், பேரறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்கள் என்பதோடும், அவர்கள் இயல்பாகக் கலை மனம் கொண்டவர்களாகவே திகழ்ந்தார்கள்.

கலை மனம் உடையவர்களுக்கு வாழ்வு, பண்பாடு, இலக்கியம், கவிதை, நாகரிகம் முதலிய கூறுகளையெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிதாக இருக்கும். அந்த வகையில்தான் கலை உணர்ச்சி என்பது பொதுவாக அனைவரின் மனத்தை ஈர்ப்பது என்றாலும், அந்தத் துறையிலேயே தங்களுடைய வாழ்வைக் கழித்தவர்களுக்குக் கலையின் ஆர்வமும், பெருமிதமும், பாராட்டும் வாழ்க்கையில் ஒரு தனிச்சிறப்பை உருவாக்கித் தந்திருக்கிறது.

அந்த வகையிலேதான், கலை வாழ்வு என்பது, நுணுக்கமான வாழ்வு என்பது பற்றிச் சொல்லாமல், நடிப்பு என்பது, ஒரு வாழ்வில் நடப்பது போன்ற இடர்ப்பாடான ஒரு கலை என்று யாரோ ஒருமுறை எழுதியிருந்தார்கள். அதற்கு விளக்கம் சொல்ல வந்தபோது, நடிப்பது வேறு, நடப்பது வேறு, என்பதை இரண்டாகப் பிரித்துப் பார்த்துக் கொள்கிற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் அமையும்.

நடிப்பின் மீது, கைக்கொள்கிற பேரார்வம், நடிகர் தன் உள்ளத்திலிருந்து எடுத்துச் சொன்னாலும்கூட, இது நடிப்புதானோ என்று எண்ணுகிற ஒரு மயக்கம் ஏற்படுவது இயல்பாகும்.

இந்திப் படங்களைப் பார்த்த நாட்களில், என் மனத்தைக் கவர்ந்தவர்கள் ராஜ்கபூரும், நர்கீஸ் என்ற நடிகையும் ஆவார்கள். அவர்கள் இருவரின் படங்களைப் பார்த்தபோது, இருவரும் நடிப்பதாகவே நான் நினைக்கவில்லை. வேறொரு இல்லத்தில் நடப்பதை அல்லது வாழ்வில் நடப்பதைத்தான் அவர்கள் நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைத்தேன்.

நர்கீஸும், ராஜ்கபூரும் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் மிகப்பெரிய செல்வாக்கான பெருமிதத்தோடு இருந்தார்கள். ஏன், சோவியத் நாட்டிற்கு அவர்கள் இருவரும் சென்று திரும்பிய பிறகு, சோவியத் நாட்டு மக்களில் பலர் தம்முடைய மக்களுக்கு ராஜ்கபூர், நர்கீஸ் என்ற பெயரையே இட்டு மகிழ்ந்தார்கள் என்று நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், திடுமென்று, ஒருநாள் நடிகர் ராஜ்கபூரும், நர்கீஸும் பிரிந்துவிட்டார்கள் என்பது மட்டுமில்லை, ராஜ்கபூர் நடிப்பு என்பது வேறு, வாழ்வு என்பது வேறு என்பதைத் தெரிந்து கொள்ளாமல் மக்கள் மயங்குகிறார்கள். எனவே, நர்கீஸ் ஒரு நடிகை அவ்வளவுதான் என்று சொன்னார்.

இது ஒரு பெரிய திடுக்கீட்டை மக்களுக்கு அந்த நாளில் ஏற்படுத்தியதை நான் நினைக்கிறேன். ஏனென்றால், கலை வாழ்வு என்பது அவ்வளவு நெளிவு, வளைவு உடையது. இதில், தான் நடித்த காட்சிகளில் எல்லாம் தன்னை நல்லவனாகவே, உயர்ந்தவனாகவே காட்டி, அதுபோன்ற வாழ்க்கையைத்தான் தாம் முடிந்த வரையில் நடத்த வேண்டும் என்று முயன்று அந்தத் தோற்றந்தான் மக்களுக்கு முன்னால் எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வத்தோடு முயன்று வெற்றி பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமை புரட்சித்தலைவர் அவர்களைத்தான் சாரும். எனவே, அவர் கலையைப் பற்றியும், நடிகர்கள் படும் துயரைப் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி எப்படிப் பாராட்டுகளால் பெருகியது பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசிய இந்தப் பேச்சை நாம் காணலாம்.

1981-ஆம் ஆண்டு நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் புரட்சித் தலைவர் ஆற்றிய உரை…

‘‘சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு இங்கே நினைவுக்கு வருகின்றன. இதுவரை எங்கும் சொல்லாத நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அவற்றைச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கே டி.கே.சம்பங்கி பொற்கிழி வாங்கினார்கள். அவர்களை இன்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்க முடியும்? பலருக்கு ஞாபகம் இருக்காது. ‘மைனர் ராஜாமணி’ என்னும் படத்தை டைரக்டர் ராஜா சாண்டோ இயக்கிக் கொண்டிருந்த சமயத்தில் நடிப்புலகில் எனது ஆசானாகத் திகழ்ந்த காளி என்.ரத்தினம் என்னை ராஜா சாண்டோ அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வாய்ப்புத் தருமாறு கூறினார். அப்போது ராஜா சாண்டோ கூறினார்; ‘‘உன்னைவிடச் சிறந்த நடிகர் ஒருவரை அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டேன். அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார். அந்தப் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அந்த நடிகர்தான் டி.கே.சம்பங்கி. மங்கள கானசபா என்ற ஒரு சபையை அவர் நிறுவியிருந்தார். அந்தச் சபையைக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி என்.எஸ்.கே. நாடக மன்றமாக ஆக்கினார். இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது.

இங்கே இளையவர்களுக்குப் பாராட்டுத் தரும்போது முதியவர்கள் நினைக்கலாம். ‘நாங்கள் எங்கோ கிடக்கிறோம் இந்த இளைஞர்கள் சுகமாகத்தானே இருக்கிறார்கள் இவர்களுக்கு ஏன் பாராட்டு என்று! அதே நேரத்தில் இளைஞர்கள் நினைக்கலாம். இந்த முதியவர்களுக்கெல்லாம் எதற்குப் பாராட்டு? அவர்கள்தான் ஆண்டு முடித்து விட்டார்களே! எங்களைப் போன்ற இளைஞர்களைப் பாராட்டினால் எங்களுக்கு அது ஊக்கம் தருவதாக அமையும் என்று!’

‘‘இங்குச் சிலரைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இங்குச் சில சகோதரிகளை நானே பேசச் சொன்னேன். தங்களது அனுபவங்களைத் தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலைகளைச் சொல்ல வேண்டும் என நான் விரும்பினேன். சில அனுபவங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் ஆகியவற்றை அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது தவறான பாதையில் போகும் மற்றவர்களுக்கு அது எச்சரிக்கையாக இருக்கும்.”

இங்கே எம்.ஆர்.வாசவாம்பாள் கலைமாமணி விருது பெற்றார்கள். மிகச்சிறந்த ஆர்மோனியக் கலைஞரான இவர் பங்கு பெறும் நாடகத்தைப் பார்ப்பதற்கு மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்கிய காட்சியை நான் கண்டிருக்கிறேன். இத்தகைய புகழ் பெற்ற கலைஞர் பலர் இருந்திருக்கின்றனர்.

கலைஞர்கள் தாங்கள் பாராட்டப்படும்போது அவர்களுக்குக் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடுயிணை கிடையாது. ஒரு கோடி ரூபாய் கொடுக்கும்போதுகூட ஏற்படாத அந்த மகிழ்ச்சி, பாராட்டப்படும்போது அவர்களுக்கு உண்டாகிறது. பாராட்டுப் பெறும்போது, அது அவர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையை அவர்களுக்கு அளித்து மேலும் மேலும் உழைக்க வைக்கிறது. இங்கே ஒரு சிறு பையன் விருது வாங்கினான். அவனது தந்தைதான் சுருளிராஜன். மக்களை எல்லாம் தமது நகைச்சுவை நடிப்பில் சிரிக்க வைத்த பெருமை அவருக்கு உண்டு. இன்று அவர்தம் மனைவியைக் கண்ணீர் வடிக்கவைத்துச் சென்றுவிட்டார்.

நகைச்சுவை நடிகர் என்னத்தே கண்ணையா இங்கே விருது பெற வந்தார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். இன்னும் என்னத்தே கண்ணையா தானா என்று? மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற கலைஞர்கள் தங்கள் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்களா என்றால், அதற்கு உத்தரவாதம் தரப்படவில்லை. இங்கே ஒன்றை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஆடை அலங்காரம் செய்தாலும் என்னதான் சுவையான உணவு உண்டாலும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சி கொஞ்சநேரம் இருக்கும். ஆனால், கலை உணர்வு கொண்டிருந்தால் கண்ட காட்சியைப் பிறகு எண்ணி எண்ணி மகிழலாம்.

இங்கே விருது பெற்ற பன்மொழிப் புலவர் அறிஞர் அப்பாதுரையார் பற்பல நூல்களை எழுதியுள்ளார். அவரது நூல்கள் எல்லாம் படித்து இன்புறத்தக்கது. படிப்போரை அந்நூல் புதுமையில் ஆழ்த்துகின்றன. கலைஞன் என்பவன் மனிதனில் இருந்து பிரித்து வைப்பதற்குரிய சொல்லாகும். கலையை யாரும் விலை பேச முடியாது; விலை பேசவிடக்கூடாது.

ஒருவன் நடப்பதைப் பார்த்து, என்ன அழகாக நடக்கிறான் பார் என்கிறோம். சிரிப்பதைப் பார்த்து என்ன அழகாகச் சிரிக்கிறான் பார் என்கிறோம். அழகாக உடை உடுத்தியிருப்பதைப் பார்த்து என்ன அழகாக உடை உடுத்தியிருக்கிறான் பார் என்கிறோம். சிலர் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காகக் கோபத்தில்கூட நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று கூறுவார்கள். பிறருக்கு மகிழ்ச்சியூட்டப் பிறரை நிம்மதிப்படுத்த கலை பயன்படும் என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகளாகும்.

கலை உணர்வுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்களிடத்தில் ஏற்றத் தாழ்வு உணர்ச்சி தோன்ற முடியாது. சாதி, மதபேதங்கள் தலை காட்ட முடியாது. கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை, பண்பாடு ஆகியவற்றுடன் நடந்து கொள்வதும் கலைதான். மதங்கள் பல இருந்தாலும் அவை போதிக்கும் கோட்பாடுகள் ஒன்றுதான். சைவ மதமாயினும், வைணவ மதமாயினும், புத்த மதமாயினும், சமண மதமாயினும் அந்தந்த மதத்தினர் தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மீறி நடந்தால் மதத்திற்கு விரோதமான செயலாகிவிடும்.

மனித சமுதாயத்தில் தமிழினத்துக்கென ஒரு மரபு, பண்பாடு, பழக்க வழக்கம் உள்ளன. அதை மீறி நடப்பவர்கள் தமிழர் அல்லர் தமிழ்ச் சமுதாயத்துக்குச் சொந்தக்காரர் அல்லர். கலைஞர்கள் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது கலை வெற்றி பெறும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது கலை, கலைவாணர் சொல்லியது போல அது கூட்டத்தைக் கலைக்கும் கலையாக ஆகிவிடும்.

கலையை வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்தக்கூடாது, கலையை விலைபேச வேண்டும் என்ற முறையிலே கலைஞர்கள் நடந்துகொள்ளக் கூடாது. கலையைக் கலையாக மதித்து கலைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்தான் இங்கே இன்று பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். நமது ஆளுநர் அவர்கள் இங்கே கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்கள். அவர்களது உரையிலிருந்து, அவர்கள் தமிழை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்க் கலையை அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எத்தனையோ கலைஞர்கள் நல்ல நிலைக்கு வந்தும் இன்றும் கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நடிகர் சங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் உறுதியாகிறது. அதற்கு அரசும் தன்னாலான உதவிகளைச் செய்யும். இங்குத் திறக்கப்பட்டுள்ள கலை மேதைகளின் படங்களை வைக்க மன்றக் கட்டடத்தில் இடம் போதவில்லை என்று செயலாளர் குறிப்பிட்டார். நான் அவருக்கு விளையாட்டாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நீதிமன்றக் கட்டடம் சிறிது. ஆனால், தீர்ப்பு பெரிது. இதைச் சொல்லி நான் ஏமாற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

கட்டடம் கட்டுவதற்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். அழியாத கலைக்கு ஒரு நல்ல கட்டடம் கட்ட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும்.”

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *