POST: 2020-05-17T10:32:22+05:30

தினசெய்தி நாளிதழில் இன்று (17.05.2020) வெளியான கட்டுரை

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

தமிழ் திரிந்த சொற்கள்..!

===============================================

மொழிக்கலப்பு – தொல்காப்பிய நெறி ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் நூற்பாவில், பொருள் குறிப்பவையே சொற்கள் எனக் கண்டுரைத்தார் தொல்காப்பியர். செய்யுளில் வழங்கப்படும் சொற்களாக இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகைச் சொற்களைக் குறிப்பிடுகின்றார்.

‘‘இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.” – தொல். சொல். 397

இயல்பாகத் தமிழில் அமைந்த சொற்கள், தமிழ் திரிந்த சொற்கள் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த உள்நாடுகளில் வழங்கப்பட்ட திசைச் சொற்கள், இவற்றோடு இணைந்து வடசொல்லும் புனையும் தமிழ்ச் செய்யுளில் இடம்பெறும் என்பது இதன் பொருளாகும். இந்நூற்பாவை விளக்கிய இலக்கண விளக்கம், விரிவாகப் பல செய்திகளைத் தருகிறது.

‘‘செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்திலும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்திலும்
தம் குறிப்பினவே திசைச்சொல் என்ப.” – நூற்பா. 174

செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டன் கண்ணும், பதினெண் நிலத்துள் தமிழாகிய ஒரு மொழி நிலத்தை ஒழிந்த மற்றைப் பதினேழ் நிலத்தின் கண்ணும் குறிப்பினான் வழங்கு வனவற்றைத் திசைச்சொல் என்று சொல்லுவர் ஆசிரியர். செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனையும்,

‘‘தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன் வடக்கு – நன்றாய
சீதமலாடு புகால்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட்டெண்.”

என்றும், தென்பாண்டி நாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும், குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும், வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும், பூழி நாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும், அருவா நாட்டார் செய்யைச் செறு என்றும், அருவாவட தலை நாட்டார் புளியை எகினம் என்றும், சீதநாட்டார் தோழனை எலுவன் என்றும் பன்னிரு நாட்டவர் வழக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ் இல்லாத பதினேழ் நிலத்தினையும் ‘சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுகுடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கவுடம், கடாரம், கடுங்குசலம், தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதினேழ் புவிதாம் இவையே எனப்பகுத்துரைத்து, அருணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவம், அங்கம் என்ற தொடக்கத்தனவும், இவற்றின் பரியாயமும் இவற்றின் பகுதியுமாய் இவற்றுள்ளே அடங்கும் என்றும் குறிப்பிட்டார்.

அந்தோ என்பது சிங்களச்சொல்; கரைய, சிக்க, குளிர என்பன கருநடச்சொல் எருத்தைப் பாண்டில் என்பது தெலுங்குச் சொல்; மாமரத்தைக் கொக்கு என்பது துளுவச்சொல் எனக் காணலாம். ஒழிந்த சொற்களும் வந்து கலக்கும் என மொழிக்கலப்புத் தமிழில் நிகழும் முறையை அறியலாம். தொல்காப்பியம் சுட்டிக்காட்டும். இருவகைத்தமிழ் – செந்தமிழ் கொடுந்தமிழ் எனவும், தென்பாண்டி நாடு முதல் புனல் நாடு ஈறாகிய பன்னிரண்டும் கொடுந்தமிழ் நாடு என்றும், மயிலை நாதர் முதலிய நன்னூல் உரையாசிரியர்கள் கொண்டனர். தொல்காப்பிய உரையாசிரியர்கள் வேணாட்டையும் புனல் நாட்டையும் நீக்கிப் பொங்கர் நாடு ஒளிநாடு என்பவற்றைக் கொண்டனர். உரையாசிரியர் பொதுங்கர் நாடு என்று பொங்கர் நாட்டைக் குறிப்பிடுகின்றார்.

இவ்வாசிரியர், தமிழ்ஒழி பதினேழ் நிலங்கள் பற்றி மயிலை நாதர் உரைத்தவற்றையே தாமும் உரைத்தார். மேலும்,

‘‘கன்னித் தென்கரைக் கடற்பழந் தீவம்
சிங்கம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலுங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இருநில ஆட்சி
அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையின் சொல்நயம் உடையவும்”

என்றார் அகத்தியனார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இனி நச்சினார்க் கினியர் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நிலத்தையும், புறம் சூழ்ந்த பன்னிரு நிலமாவன சிங்களமும், பழந்தீவும், கொல்லமும், கூபமும், கொங்கணமும், துளுவும், குடகமும், கருநடமும், கூடமும், வடுகும், தெலுங்கும், கலிங்கமும் ஆம் என்று கூறுவார். தெய்வச் சிலையாரும் இக்கருத்தினரே.

இவ்வாசிரியர் கொடுந்தமிழ் நாட்டுச் சொற்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டுகள் பலவும் மயிலைநாதர் உரையை ஒட்டியனவே. அவற்றுள் அருவாநாட்டார் செறுவைச்செய் எனக்கூறுவர் என்பதும், நச்சினார்க்கினியர் பன்றி நாட்டார் செறுவைச் செய் என்பர் என்பதும் மயிலைநாதர் கருத்து.

நாடுகளின் பெயர் இயற்பெயர் திசைச்சொல்
தென்பாண்டிநாடு எருமை சோறு ஆ பெற்றம் சொன்றி
குட்டநாடு தாய், ஞாய் தள்ளை, ஞெள்ளை
குடநாடு தந்தை அச்சன்
கற்காநாடு வஞ்சர் கையர்
வேணாடு கோட்டம் கிழார்
பூழிநாடு நாய், சிறுகுளம் ஞமலி, பாழி
பன்றிநாடு செறு செய்
அருவாநாடு செறு, சிறுகுளம் செய், கேணி
அருவாவடதலைநாடு குறுணி, புளி குட்டை, எகினம்

இவை தமிழ் நீங்கிய பதினேழ் நிலச் சொற்களுள், பண்டை உரையாசிரியரால் அறிவிக்கப்பட்டவை. இவற்றைப் பண்டை உரையாசிரியர்கள் கூறியவாறே இவரும் கொண்டார் என இலக்கண விளக்கமும் நீண்ட விளக்கமளிக்கிறது. திசைச்சொற்கள் என்பவை தமிழ் நாட்டிலுள்ள பகுதிகளில் மட்டும் வழங்கிவரும் சொற்கள் என்றும் பிற மொழிச் சொற்கள் என்பவை வடமொழி என்றும் தெ.பொ.மீ. விளக்கமுரைக்கிறார். எனவே, இயற்சொல், திரிசொல், திசைச்சொல் ஆகிய மூன்றுமே தமிழின் வடிவமைப்புகள் என்பதும், வடமொழி என்பது பிறநாட்டிலிருந்து வந்து கலக்கும் நிலையிலிருந்த அயன் மொழி என்பதும் புலனாகின்றன. வடமொழிக் கலப்பைத் தடுக்கவியலாத நிலையில், அம்மொழிச் சொற்களைத் தமிழாக்கி எழுத வேண்டும் என்றும் தொல்காப்பியர்,

‘‘வடசொற் கிளவி வடவெழத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.”

எனக் கூறி வடவெழுத்துகளுக்கு இணையாகத் தமிழ் எழுத்துகளை எழுத வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மொழிக்கலப்பு காலந்தோறும் நிகழ்ந்ததையும், கலப்பினைத் தடுக்க வடமொழி எழுத்துகளை நீக்கித் தமிழ் வயப்படுத்த வேண்டும் என்ற நோக்கும் இதனால் நிலவிற்று. காலமாற்றத்தின் கடுஞ்சுழற்சியில் இக்காற்றைத் தடுக்கக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை ஒரு புறம் வலியுறுத்தினாலும், மறுபுறம் குலைவு நேர்ந்தபடியே இருந்தது. புது வெள்ளம் தடுக்கக் கரையிட்டாலும், ஆறாக எல்லையில்லாமல் நீர் பெருக்கெடுத்தோடியது.

ஆத்திசூடி முதலான நீதிநூல்களில் வருகின்ற ஈராயிரத்து இருபது சொற்களுள் வடசொல்லாவன நூற்றைம்பத்தாறு. இது நூற்றுக்கு எட்டு வீதமும் ஆகவில்லை. நறுந்தொகையில் வெற்றி வேற்கை அறுநூறு சொற்களுள் இருபானான்கு வடசொற்கள் அமைந்துள்ளன. இது நூற்றுக்கு நான்கே ஆகிறது. நைடதம் வடமொழியினின்றும் மொழி பெயர்க்கப்பட்ட நூலாயினும், அதனுள் சராசரியில் மூன்று பாட்டில் இரண்டு வடசொல்லின் மிகுவது அருமை. திரிகடுகத்தில் இருபத்தைந்து வடசொற்கள் உள்ளன. இது நான்கு வெண்பாவிற்கு ஒரு வடசொல் ஆகின்றது. நான்மணிக்கடிகை முற்றும் தடவிப் பார்த்ததில் இருபது வடசொல் கண்டோம். திருக்குறளில் ஒரோவோரதிகாரத்து இரண்டும் ஒவ்வொன்றில் ஒன்றுதானும் காண்பதரிதாய் இரா நின்றது.

நாலடியில் ஐந்து வெண்பாவில் ஒரு வடசொல் காண்பது கடினமாக இருந்தது. கலித்தொகையில் கலிப்பாட்டு ஒவ்வொன்றிலும் வடசொல் ஒன்றின் மிக்கிலது. கல்லாடத்தில் அகவல் ஒன்றில் ஐந்தின் மிக்க வடசொல் இல்லை. பத்துப்பாட்டைப் பதமுறச் சுவைத்த விடத்துப் பற்பானுறும் சிற்சினுறுமாய வரிகள் கொண்ட பாட்டு ஒவ்வொன்றிலும் வடசொற்கள் நான்கைந்தின் மிகவில்லை. அவை தாமும் வடசொல்லோ தமிழ்ச் சொல்லேயோ என ஐயம் கொள்ளுதற்கு ஏதுவாக நின்றன. சைவ வைணவ சமய நூல்களாகும் திருவாசகம், தேவாரம், நாலாயிரப்பிரபந்தம் முதலியவற்றில் மேலே காட்டின அளவிலும் வடசொற்கள் மிக்குள்ளன. இன்னும் சோதிடம் முதலியவற்றை நோக்குமிடத்து வடசொற்கள் பின்னும் பலவாம். இவ்வாறு கணக்கிட்டுக் காணுமிடத்துக் காலத்தால் பின்னே போகப் போகத் தொன்மையான இலக்கியங்களில் அம் மொழிக்கலப்புக் குறைந்து கொண்டே போகின்றது என்பதும், அதனால் தன்னால் இயன்ற தனித் தமிழ் ஒரு காலத்து உளதாயிருந்தது என்பதும் பட்டம் பகலாகத் தெளிவுபடுகின்றது என்பது அவர் தந்த அறிவுரை.

– முனைவர் ஔவை ந.அருள்,
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *