தின செய்தி நாளிதழில் இன்று (24.05.2020) வெளியான கட்டுரை
9. அருந்தமிழும் அன்றாட வழக்கும்
தமிழின் தனித்தன்மை..!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================
“இன்றளவும் வழங்கும் தமிழை மேனோக்காகக் காண்பவரும் அதன் சொற்களின் தனித்தன்மையைக் காணலாம்” என்பார் எடுத்துக்காட்டி விளக்குவது இது:
உழவும் கலப்பையும், காரும் கயிறும், குண்டையும் நுகமும், சாலும் வயலும், வாய்க்காலும் ஏரியும், மடுவும் ஏற்றமும் பிறவும், பயிர்களையும், நட்டலும் கட்டலும், முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளான் இயன்றனவே. தமிழர்கள் வதியும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கிடையும், புழைக்கடையும், கூரையும் வாரையும், கூடமும் மாடமும், தூக்கும் தூணும், கல்லும் கதவும், திண்ணையும் குறடும், தரையும் சுவரும், மண்ணும் மானும், மற்றவுந் தமிழே. தலையும் காலும், கண்ணும் காதும், மூக்கும் மூஞ்சியும், வயிறும் மார்பும், நகமும் தசையும், நாவும் வாயும், பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தனித் தமிழன்றோ தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர், சீரூர், ஆரூர், பேரூர், புத்தூர், புற்றூர், சேய்ஞ்ஞலூர், மணலி, நெல்லூர், நெல்லை, கொன்னூர், குறட்டூர் என்னும் இடப் பெயர்களும், செவ்வாய், வியாழம், வெள்ளியும் ஆகிய கிழமை பெயர்கள் தமிழ்ப் பெயர்களே. தொண்ணுற்றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களில் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை. ஆழாக்கு உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, துணி, கலன் என்னும் முகத்தலளவையும், இன்னும் கீழ்வாயிலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.
தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும், காயும் கறியும், பாலும் பழமும், நெய்யும் தயிரும், உப்பு முதல் ஒன்பதும், பருப்பு முதல் பத்தும், தமிழ்ச் சுவையே. எழுத்தும் சொல்லும், பொருளும், யாப்பும், அணியும் ஆகிய ஏடுஞ் சுவடியும், எடுத்துப் பார்க்குமிடமெல்லாம் தமிழே. துணியும் அணியுந் தமிழே. தொழும் கடவுளும் தமிழ் மயமே. வீடும் நாடும், காடும் மேடும் ஆகிய எங்கும் தமிழ் மயமாகவே இருக்கின்றது. தமிழின் தனிச்சிறப்பை ஏற்க மறுப்பாரும் இருந்தமையன்றோ வியப்பு.
இது தொடர்பாகச் ‘செந்தமிழ் வழக்கு’ என்னும் நூலில் புலவர் இளமுருகனார், உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் பயின்றுவருஞ் சொற்களைப் பற்றிச் சிறிது ஆராயலாம் என்று தொடங்கி விரிந்த கருத்துகளை வழங்கியுள்ளார். சொல்லாவது, பொருளை அறிவிக்கும் ஆற்றலுடைய எழுத்தொலியாகும். அஃது, இருதினைப் பொருள் தன்மையையும், ஒருவர் உணர்ந்து கொள்வதற்குக் கருவியாகும். பொருள்களைப் புலப்பட விளக்கும் தன்மையை நோக்கி வடநூற் புலவர் சொல்லை விளக்கு என்பர். அது குறித்துச் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ‘‘சொல்லெனப்படுஞ் சோதி தோன் றாதாயின், எல்லை நீர் ஞாலத்தில் எப்பொருள்தான் புலப்படும்? ஆதிபகவனை அறிவதும் இல்லை. ஆகமங்களை அறிவதும் இல்லை! அறம், பொருள் முதலியவற்றை அறிவதும் இல்லை. அவற்றை வலி யுறுத்தும் பழஞ்சரிதங்களை அறிவதும் இல்லை. தங்கருத்தைப் பிறர் அறிவதும் இல்லை. பிறர் கருத்தைத் தாம் அறிவதும் இல்லை அறியாமை யாண்டும் தலைப்படும். உலகம் தலைதடுமாறும். ஆதலால் உலகை வழங்கிவரச் செய்வது சொல்லெனப்படுஞ் சோதியென்றே சொல்லுக” என்றார்.
சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்பனவாம். இவற்றைப் பெயர், வினை, இடை, உரிச்சொற்களுடன் சேர்த்தவழிப் பத்தாகும்.
இவற்றுள் இயற்சொல்லாவது, உலக வழக்குக்குரிய செஞ்சொல்லாகும். இயற்சொல் – இயல்பாய்ப் பொருள் உணருஞ்சொல். அச்சொல் செந்தமிழ் நிலத்துக்குரியதாய்க் கற்றார்க்குங் கல்லாதார்க்கும் ஒப்பத் தன் பொருளை விளக்குந் தன்மையுடையது. தமிழ்மக்கள் பேசுதற்கும் உரைநடையில் எழுதுதற்கும் இயல்பாய் அமைந்த சொல்லென்பது கருத்து.
அடுப்பு, நெருப்பு, நிலம், நீர், காற்று, பகல், இரா, மலை, ஆறு, கடல், குளம், விளக்கு, உப்பு, புளி, வீடு, கோயில், மக்கள், காடு, மேடு, பள்ளம், யானை, குதிரை, நடந்தான், இருந்தான், பார்த்தான், கற்றான், கொன்றான், தின்றான் என்பனவும் பிறவும் இயற்சொற்களாம். மக்கள், நாளிலும் பொழுதிலும் தம் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைத் தாம் உணரவும் அச்சொற்கள் பெரிதும் துணை புரிவன.
புதுப்பொருள்களும், புதுக்கருத்துகளும், புது நிகழ்ச்சிகளும், புது நுகர்ச்சிகளும், பிறக்குந்தோறும் உலகவழக்குச் சொற்களை மக்கள் பெருக்கிக் கொள்வர். இவ்வாறு உலக வழக்குச் சொற்களை நாளடைவிலே பெருகி மொழியை வளப்படுத்தும். இனி, இவ்வுலக வழக்குச் சொற்களேக்கல்லாதாருங் கற்றாரும் வழங்குவாராதலின், ஒருசேர அவருள் கற்றார் அவற்றை இலக்கண நெறிக்கு ஏற்ப வழங்கு வரென்றும், கல்லாதார் அந்நெறியிகந்து வழங்குவரென்றும் அறியலாம். கற்றார் வழக்கே உயர்வழக்கென்றும் கூறுவர். உலகவழக்குச் சொற்கள் இழிவழக்காக மாறுவதைச் சிறிது விளக்குவோம். பார்த்தான், கொன்றான், தின்றான். கோபம், நுங்கு, பனாட்டு, ஆற்றங்கரை, அகப்பை, ஒன்று. ஆண்பிள்ளை, இளநீர், கடற்கரை, கைம்மாற்று. சிவப்பு, சுவர், சுருட்டு, கிரகணம், புடைவை, பிட்டு, திறப்பு, பன்றி, பாகற்காய், நாற்றம் என்பனவற்றை இக்கால எழுத்தாளர், பாத்தான், கொண்டான், தின்னான், கோபம், நொங்கு, பினாட்டு, ஆத்தங்கரை, ஆப்பை, ஒண்டு, ஆம்பிளை, இளனி, கடக்கரை, கைமாத்து, சிகப்பு, சிவர், கிராணம், பிடவை, புட்டு, துறப்பு, பண்டி, பாவக்காய், நாத்தம் என்று தாம் எழுதும் நூல்களில் வழங்கிவரக் காண்கின்றோம்.
இச்சொற்களுக்கு இலக்கண அமைதியில்லை. பார்த்தான் என்பதற்குப் பார் என்பது பகுதி, பார், நோக்கு, பார்த்தல், பார்த்தான், பார்த்தாள் என்று எழுதியவழியே நோக்குதல், நோக்கினான், என்ற பொருள்படும். பார்த்தான் என்பதற்குப் பகுத்தான் என்பதும் பொருள். பாத்தல் – பகுத்தல், ஆகவே, இரண்டுக்கும் பொருள் வேறுபாடு மிகுதியுமுண்டு. பார்த்தலும் பாத்தலும் ஒன்றெனக் கருதிக்கொள்ளும் வழக்குமிகுமாயின் பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்டல் அரிது என்னும் திருக்குறளைப் படிப்போர், தான் உண்பதைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்க உண்னும் இயல்புடையவனைப் பசி என்னும் தீய நோய் தீண்டாது, என்று பிழையாகப் பொருள் கொண்டு திருவள்ளுவர் கருத்தை மாறாக விளங்கிப் பெரிதும் மயங்குவரன்றோ இவ்வாறே ஏனைய சொற்களையும் பொருத் திக் காண்க. ஆகவே, இழிவழக்குச் சொற்கள் எழுத்திற் புகுந்து ஆட்சி செய்யுமாயின், செந்தமிழ் வழக்குச் சொற்களெல்லாம், பொருளில் மாறுபட்டுத் தமிழ் மொழி முழுவதுஞ்சிதையும், ஆதலினாலன்றோ செந்தமிழ்ச் சான்றோர் இழிவழக்கை வழக்கென்று கொள்ளாது. உயர் வழக்கையே உலக வழக்கென்றும், சான்றோர் வழக்கென்றும், அவ்வழக் கின் நிலைப்பாட்டை மரபென்றும், வரையறுத்துக் கொள்வாராயினர் ஆசிரியர் தொல்காப்பியனாரும், இக்கருத்தை உணர்த்தவே, “மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்” என்று இலக்கணஞ் செய்தார். இவ் வழக்கை மீறிக் கல்லாதார் பேசுவது போலவே எழுதிச் சிறுகதை இலக்கியஞ் செய்தல் வேண்டும் என்பார் கொள்கை, செந்தமிழ் வழக்கை அழித்துக் கொடுந்தமிழ் வழக்கை நிலைநாட்டும் கொடுமையாகும்.
செய்யுள் வழக்குச்சொற்கள்
உரைநடை இலக்கியங்கட்கு இயற்சொற்களே பெரிதும் உரிமையுடையன என முன்னர்க் காட்டினோம். செய்யுள் வழக்குக்கு அவ்வியற்சொல்லும், திரிசொல்லும், வடசொல்லும், திசைச்சொல்லும் ஆகிய நால்வகைச் சொற்களும் உரிமையுடையன. அவற்றுள்ளே திரிசொற்கள் செய்யுட்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாம். அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுள்மொழி என்பர். திரிசொல் இயற்சொல்லின் வேறாயது. திரிதல் வேறுபடுதல், வேறுபடுதலாவது, இயற்சொற்போல வெளிப்படையாகப் பொருள் விளங்காது. கல்வியறிவால் உணர்வதாய் அமைவது. ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அமையும். திரி சொல் இயற்சொல்லின் வேறாய் நின்று அரிதிற் பொருள் விளக்குஞ் சொல். இயற்சொல்லினுந் திரிசொல்லே இலக்கியத்துக்கு இன்றியமையாதது. திரிசொல் இல்லையாயின், சுருங்கச் சொல்லுதல் கூடாது. சுவைபெறப் பெய்தலும் கூடாது. மோனை, எதுகை முதலியன அமைதலுங் கூடாது. கவிநடையும் வேறுபட்டு இழியும், என்று கூறிப் போந்தார்.
வடசொல்
ஆரிய சொல் தமிழ்நடை பெற்று வழங்குதல் வடசொல்லெனப்படும். தமிழ்நடை பெறுதலாவது, தமிழோசைக்கு இணங்கி அதற்கு நிகரான தமிழெழுத்தால் அமைவது. வடமொழியோசையும், அதற்குரிய எழுத்தும் அமைய நிற்பன ஆரியச் சொல்லென்றும், தமிழ் நடைபெற்றுத் தமிழே போல விரவி நிற்பன வடசொல்லென்றும் பகுத்துணர்ந்து கொள்ளலாம். தமிழ் இயற்கை ஒலியுடையதாகலின், உரப்பியும், எடுத்துங்கனைத்தும் கூறும் வடவெழுத்துகளை நீக்கி, அவற்றுக்கு நிகரான தமிழ் எழுத்துகளை இட்டு வழங்குதலைத் தொல்காப்பியனாரும் நன்னூல் பவணந்தியாரும் அவரையுள்ளிட்ட ஆசிரியர் எல்லாரும் வேண்டினர். செந்தமிழ் வழக்கை மதித்து நூல் செய்த சங்ககாலச் சான்றோரும், இடைக்காலச் சான்றோரும், பிற்காலச் சான்றோரும், இக்காலச் சான்றோரும், அம்மரபினை வழுவவிடாது பெரிதும் பேணி வருவாராயினர்.
செயற்கை ஒலிகளையுடையது ஆரியம். அவ்வாரியமொழிச் சொற்களைத் தமிழ்நடைப்படுத்தாது கிடந்தாங்கு வழங்குதலினால், இனிய செந்தமிழ்க்கு அமைந்த இனிய நல்லோசை வளங்குன்றிவிடும். எழுத்துகளின் இன்னோசை அமைப்புத் திரியும். நாளடைவில் அவ் வழக்குத் தமிழின் மொழி நடையை மாற்றி அது பிறிதொரு மொழியாகத் திரிதற்குத் துணை செய்யுமென்க. அவ்வாறே அருந்தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமாகத் திரிந்ததை மொழி வரலாற்றால் அறிகின்றோம். அத்துணை சிறந்த பாதுகாப்பினை ஆசிரியர் தொல்காப்பியனார் ஐயாயிரவாண்டுகளுக்கு முன்னரே தமது இலக்கண நூலிற் செய்தமை பாராட்டற்பாலதாம்.
‘‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே,
என்றும்,
சிதைந்தன வரினு மியைந்தன வரையார்.”
என்றும் பொதுவகையில் இலக்கணவரம்பு செய்தார். அச்சூத்திரங்களை விளக்கிய சேனாவரையர், ‘‘வடசொற்கிளவியாவது, வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம். எனவே, பொதுவெழுத்தால் இயன்ற வடசொல்லும் செய்யுள் செய்தற்குச் சொல்லாம் என்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன. பொதுவெழுத்தால் இயன்றனவேயன்றி வடவெழுத்தால் இயன்ற வடசொல் சிதைந்துவரினும் பொருத்தமுடையன செய்யுளிடத்து வரையார். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய்வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க என்று கூறியதும் நோக்கியறிக.
– முனைவர் ஔவை ந.அருள், தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment