POST: 2020-05-30T10:26:33+05:30

===========================================
தினமணி நாளிதழ் 29-05-2020
பக்கம் – 6
===========================================

அன்புள்ள ஆசிரியருக்கு…
edit.dinamani@gmail.com

வள்ளுவரும்…

1) ஔவை அருள் எழுதிய நோய்த்தொற்றும் ஷேக்ஸ்பியர் சிந்தனையும் கட்டுரை (21/05/2020) படித்தேன். இனி வள்ளுவரும், தமிழ்ச் சான்றோர்களும் நோய்த்தொற்று நுணுக்கங்கள் குறித்து எழுதியதை தாங்கள் கட்டுரையாக்கலாம். தினமணிக்குப் பாராட்டு.

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்,
சென்னை.

அருமை…

2) காலத்திற்கு ஏற்ற அருமையான அறவுரை கூறும் கட்டுரை. ஷேக்ஸ்பியர் காலத்தில் கொள்ளை நோய்த்தாக்கங்கள் அடுத்தடுத்து இருந்ததும், அந்நேரங்களிலும் மக்களுக்காக அவர் எழுதிய நாடகங்களையும் ஒப்பீடு செய்து வடித்திருக்கும் கட்டுரை அருமை.

மணிமேகலைக் கண்ணன்,
சென்னை

மாறுபட்ட கோணத்தில்…

3) புதுமையான யாரும் சிந்திக்காத வகையில், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை எவ்வளவு பெரிய செய்தி. கையுறையாளர் மகன் ஷேக்ஸ்பியர் என்பதும், அவரே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்ற குறிப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். intuition என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உய்த்துணர்தல் என்ற தமிழ்ச்சொல் இரண்டடி நிமிரச் செய்தது.
முனைவர் பா. கிருஷ்ணன்,
சென்னை.

பாராட்டு…

4) ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்திற்கு நான் பலமுறை சென்று வந்தவன். லியர் மன்னன் கதையை நாடகமாகப் பார்த்தபோது எனக்கு நண்பர் மொழிபெயர்த்துச் சொன்னார். அதைக்கண்டு நான் சிலிர்ப்படைந்தேன். தினமணியை தீந்தமிழ் வளர்ப்பதாக மாற்றி வருவதை மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்.
சென்னை.

அறிவார்ந்த…

5) இந்தக் கட்டுரை ஓர் அறிவார்ந்த மாறுபட்ட முயற்சி. ஷேக்ஸ்பியரை மீண்டும் வாசிக்கச் செய்து எங்களின் இளமைக்காலத்து இலக்கிய நினைவுகளைக் கிளரச் செய்து அதை நிகழ்காலக் கொள்ளைநோயோடு ஒப்பிட்டு அசைபோடும் ஒரு சூழலை உருவாக்கிய கட்டுரையாளருக்கும், தினமணிக்கும் நன்றி.

கே.பி. மணிக்குமார்,
மதுரை.

—————————————————————————–
கிருமி வென்ற சேரன்…

6) ஔவை அருள் எழுதிய நோய்த்தொற்றும் ஷேக்ஸ்பியர் சிந்தனையும் கட்டுரை (21/05/2020) படித்தேன். ‘கிருமி வென்ற சேரன்’ என்றுதான் கட்டுரையாளரைப் பாராட்ட வேண்டும். தீந்தமிழை நாளும் பருக வைக்கும் தினமணியை என்னவென்று பாராட்டுவது? காலத்துக்கும் கல்வெட்டாய் கட்டுரையாளரின் கட்டுரை அமைகிறது. ஷேக்ஸ்பியருக்கு இதை விடப் பெரிய மரியாதையை யாரும் தர முடியாது. நோய்த்தொற்றுப் பற்றி மாமேதை எண்ணியதைத் தமிழின் பொன்வரிகளாக எண்ணியெண்ணி தினமணி வெளியிட்டது சாலப் பெருமையாகும். கொள்ளைநோய்க் கிருமி என்பது நிணநீர்ச் சுரப்பிக்களின் சிறப்புக்களைச் சீர்கெடுக்கின்ற ஒன்று என்பது கட்டளைக்கல்.

கவிப்பேரரசு வைரமுத்து,
சென்னை.
—————————————————————————–

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *