POST: 2020-06-08T08:21:51+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (08.06.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 38)
‘‘புரட்சித்தலைவரின் இலட்சியக் கனவு..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

புரட்சித்தலைவர், தாம் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கொண்டாடப்பட்ட பெருவிழாக்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை அந்த ஆண்டு முழுவதும் அந்த விழாவை எங்கும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் ததும்ப நிகழ்ச்சிகளை உருவாக்கினார். புரட்சித்தலைவருக்கு பெருந்துணையாக இருந்தவர் தியாகச் செம்மலாகத் திகழ்ந்த அறிஞர் கா.திரவியம் ஆவார். தலைமைச் செயலாளராக அமர்ந்திருந்து அவர் அரசாணை வெளியிட்டதை நினைவுகூர்கிறேன். அரசாணையை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்தெண்ணிச் செதுக்கி அழகுபடுத்திய பெருமை தலைமைச் செயலாளரின் தனிச் சிறப்பாக இருந்தது. அந்த ஆணையின் படி வருமாறு:

உலக வரலாற்றில், வேறு எந்தக் கவிஞருக்கும் ஓர் ஆண்டு முழுவதும் அவர் பிறந்து வளர்ந்த மாநிலத்தில் மட்டுமின்றிப் பிற பாரதம் அளாவிய பிற மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் நூற்றாண்டு விழா இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை என்று பிறர் பேசம் பெருமிதம் புரட்சித்தலைவருக்கு எப்போதும் உடன் இருந்தது.

தமிழக அரசு நிதி நல்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உன்னதமான நூற்றாண்டு விழா மலரை வெளியிட உயர்ந்த அறிஞர் குழு அமைத்து ஏற்பாடு செய்தார். முப்பதுக்கு மேற்பட்ட அயல் மொழிகளில் அந்த மொழிகளின் வடிவமைப்பிலும், அவற்றின் மொழிபெயர்ப்பாக அயல் நாட்டு தூதர்களின் வாழ்த்துச் செய்தி இடம்பெற வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பத்தைத் துணை வேந்தர் சை.வே.சிட்டிபாபு சிறப்பாக நிறைவேற்றியதை எவரும் மறக்க முடியாது.

நூற்றாண்டு மலருக்கு வாழ்த்துரை வழங்கிய புரட்சித்தலைவர் எழுதிய தொடர்களை அவ்வாறே காணலாம்.
நாம் புகழ்ந்து பாராட்டுகின்ற தனிச்சிறப்புகளுக்கு மகாகவி பாரதியார் முற்றிலும் தகுதி வாய்ந்தவர். தாம் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமின்றித் தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் மேன்மை பெற்றுத்தரும் கவிதைத் தொண்டினை ஆற்றியவர் மகாகவி பாரதியார்.
இந்தியப் பெருநாட்டு மக்களனைவரும் சிறப்பாகத் தமிழக மக்கள் மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் பெற்று சிறப்பானக் கல்வி கற்றுச் செம்மையான வாழ்வு நடத்த வேண்டும் எனப் பாரதியார் கண்ட கனவுகளை நனவாக்கும் பொறுப்பு தமிழ்ச் சமுதாயத்துக்கும் நமது அரசுக்கும் என்றும் உண்டு. அப்பணியே என் இலட்சியப் பாதையாகும்.

அறிவியலில் வளர்ச்சி பெற்றிருக்கும் மேற்கு நாடுகளுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே, பாரதியாரின் நெஞ்சக் கனலாகக் கொழுந்துவிட்டெரிந்தது. இலக்கியச் சுவையும் கவிதை அழகும் பெரிதாக இருந்தன என்றாலும், அவரிடம் சமுதாய முன்னேற்றத்தையே முழுமுதல் குறிக்கோளாகக் கொண்டு தான் வாழ்ந்த காலத்து மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பினார்.

சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை பேணுதல், அயராது உழைத்தல், நாட்டின் நலனை முன்னிறுத்தல், குறுகிய சிறுமைகளை வேரறுத்தல், அச்சத்தை அகற்றுதல் போன்ற மானிடத்தின் முக்கியப் பொருண்மைகளில் மகாகவிக்கு இருந்த ஆழமான நம்பிக்கை நம்மை எப்போதும் எழுச்சிபெறச் செய்யும்.
பாரதியார் பெயரால் பல்கலைக்கழகம் கண்டோம். எட்டையபுரத்தில் பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைத்தோம், மகளிருக்காகத் தனிப் பல்கலைக்கழகம் உருவாக்க முற்பட்டுள்ளோம் என்று இப்படி எங்கும் எதிலும் எப்போதும் பாரதியின் எண்ணங்களைப் பரப்புவதை இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறோம்.

இந்த வாழ்த்துரையை, அவர் பலவகையில் ஆட்சியில் நிறைவேற்றினார்.
பாரதியாரின் வாழ்வில் புரட்சி, புதுமை, பெண்ணுரிமை, பாரத அன்னை வழிபாடு, பராசக்தி ஆராதனை முதலிய அனைத்தியல்புகளையும் வங்க மாநிலத்திலிருந்தே அவர் பெற்றார். பாரதியாரின் முதல் கவிதை, வங்கமே நீ வாழி என்ற பாடல்தான் என்று சுதேசமித்திரனில் வெளிவந்தது.
நூற்றாண்டு விழாவின், சிறப்பாகத்தான் மேற்கு வங்க மாநிலக் கொல்கத்தா மாநகரில், ராஷ்பிகாரி அவென்யு அருகில் விவேகானந்தர் பூங்காவின் அருகில் ஏரிச்சாலை என்று அழைக்கப்பட்டிருந்த தெருவின் பெயர் கவி பாரதி சாரணி என்று மாற்றப்பட்டதோடு தமிழக அரசு வழங்கிய முழு உருவ வெண்கலச் சிலையைக் கல்கத்தாவில் நிறுவியதை புரட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஜோதிபாசு வந்திருந்தும் அவர் விழாவில் பேசவில்லை.

புரட்சித்தலைவர் பேசினால் போதும் என்று மகிழ்ந்தார். புரட்சித்தலைவர் தமிழில் பேசியதை வங்க மொழியில் மொழிபெயர்க்க இருவர் முயன்றும் திணறினார்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாமா என்று கேட்டதற்கு ஆங்கிலம் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் மிகச் சிறப்பு வாய்ந்த பெருமைக்குரிய தமிழ்ச் சங்கமாகும். பாரதியார் பாடல்களைக் கட்டுரைகளைப் பழந்தமிழர் ஆராய்ச்சி நூல்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும், வங்காளத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமை கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தைச் சாரும்.

கொல்கத்தா அறிஞர்கள் ப.நா.தியாகராஜன், மு.சீனிவாசன், கவிஞர் கா.சு.மணியம், கோபாலசுந்தரம், வெங்கடேசுவரன், இராமன், நாராயணசாமி முதலியோர் கண்ட நெடுநாள் கனவு கொல்கத்தாவில் அன்று நிறைவேறியது. கொல்கத்தா தமிழ் மக்கள் திரண்டு கண்கலங்க கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அந்த விழாவில் புரட்சித்தலைவர் பேசிய உரைதான் தொடர்கிறது…

‘‘நான் வணங்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழிநடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
அஸ்திவாரம் உறுதியாக இருந்தால்தான் அதன்மீது கட்டப்படும் கட்டடம் உறதியாக இருக்கும். அப்படித்தான் வங்கம், தமிழகம் இரண்டும் காலங்காலமாக அன்பாலும், பாசத்தாலும் பிணைந்திருக்கின்றன. இந்த இணைப்பு இதயங்களின் கலப்பு தொடர்ந்திருக்க வேண்டும். இந்த இணைப்பு மேம்போக்காக இல்லாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவதாக அமைதல் வேண்டும்.

இதயத்திலிருந்து எழுகிற எண்ணங்கள்தான் எப்பொழுதும் நிலைக்கும். பாரதியாரின் கவிதைகளும் நிலைப்பதற்கு அவைகள் இதயத்தின் குரலாக இருந்ததுதான் காரணம். ஆகவேதான் பாரதி, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறான்.
மேற்குவங்க அரசின் பலமான அஸ்திவாரமும் அதன்மீது எழுப்பப்பட்டிருக்கிற தமிழக அரசின் அன்பளிப்பான பாரதி சிலையும் இரு மாநிலங்களின் இணைப்புகளாக இதய ஒற்றுமையைக் காட்டுகின்றன.
பாரதியார் தமது கருத்துகளை ஒரு மதத்திற்காகச் சொல்லவில்லை. ஒரு மாநிலத்திற்காக சொல்லவில்லை, உலகத்திற்காகச் சொன்னார். உலகம் முழுவதற்குமாகச் சொன்னதால்தான் மகாகவி பாரதியாராக இங்கே வாழ்ந்தார். அவரது வாழ்க்கையில் அவர் எத்தனையோ உதாரணங்களைச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக அவர் சொன்னதை நான் இங்கே எடுத்துக் காட்ட வேண்டியது எனது பெரும் கடமை என எண்ணுகின்றேன்.

மனிதர்களுக்குள்ளேதான் சாதியைப் பற்றிச் சொல்லுகின்றார்கள். ஆனால், மிருகங்களைக்கூட சாதி வாரியாக நாம் பிரித்துவிட்டோம் என்று அவர் குறிப்பிடுகின்றார். பார்ப்பனப் பாம்பு, பறப் பாம்பு என்று பாம்புகளில் கூட பிரிவினையை சாதியை ஏற்படுத்திவிட்டோம் என்று அவர் குறிப்பிடுகின்றார். ஏறத்தாழ 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார் என்பதை எண்ணும்போதுதான் அந்தக் காலத்தில் இருந்த மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இருந்தார்கள். அவர்கள் மத்தியில் சொல்லும் பொறுப்பினை அன்று பாரதியார் ஒருவரால்தான் பெற முடிந்தது. என்பதை எண்ணும்போது அதுதான் மகாகவி பாரதியார் என நம்மால் பாராட்டப்பட வேண்டிய தகுதி உடையவராகிறார்.

மாதச் சம்பளம் பெற முடியாத நடந்து போகக்கூடச் சக்தியற்ற தையல் போடாத சட்டையைப் போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த ஒருவர் பணத்தைச் சம்பாதிக்கச் செல்லாமல், ‘ஏதோ பாட்டை எழுதினோம். அதனால் புகழ் அடைந்தோம்’ என்று அதைப்பற்றி மட்டும் கவலைப்படாமல் நாட்டைப் பற்றி சமுதாயத்தைப்பற்றி அவர் அக்கறை காட்டினார். அதற்காக எழுதினார் என்றால், நாம் நினைத்து நினைத்துப் பாராட்டி அஞ்சலி செலுத்த வேண்டிய ஒருவராக பாரதியார் நம்முன் நின்று கொண்டிருக்கின்றார்.

எல்லா மதத்தினரும் அவரைக் கோபித்துக் கொண்டார்கள். எங்கும் அவருக்கு வேலை கிடையாது. கொடுக்கப்பட்ட இடத்திலும் அதற்கு எச்சரிக்கையும் சம்பளக் குறைவும்தான் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக பிரிட்டிஷ் ஆதிக்கம் அவரைத் துரத்திப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தது. இவ்வளவுக்கும் இடையில்தான் புரட்சிகரமானக் கருத்துகளை நாட்டில் பரப்பினார் என்பது, இரவீந்தரநாத தாகூர் அவர்கள் கவிதை எழுதும்போது பாராட்டினார் என்பதையும், வந்தே மாதரம் கீதத்தை உருவாக்கியபோது அவர்தான் முதலில் அதை எழுதி மக்கள் மத்தியிலே தமிழகத்தில் பரப்பினார் என்பதையும் நான் எடுத்துச் சொன்னால் அதைக் கேட்கின்றவர்கள் அதிசயிக்க மாட்டார்கள். என்றாலும் தங்கள் உள்ளத்திலே கேட்காமல் இருக்கமாட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இன்றை தினம் நாம் சொல்லுகிறோம் விதவையைத் திருமணம் செய்யலாம் என்று அன்று பேசவே முடியாது. ஆனால், அன்றைய தினம் அவர் அதற்காகப் போராடினார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டுமென்று வாதாடினார். பெண்களை யாருக்கும் அடிமையாக்கக் கூடாது என்று அவர் சொன்னார். எல்லாவற்றுக்கம் மேலாக ஒருவன் பட்டினி கிடந்தால் கூட இந்த உலகத்தையே அழிக்க வேண்டும் என்று சொன்ன ஒரே ஒருவர் பாரதியார் மட்டும்தான். அந்தக் குறிப்பிடத்தக்க ஒருவர், இந்தியா முழுமைக்கும் என்றும் சொந்தம் என்று சொன்னால் உலகத்திலே இருக்கின்றவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால், வங்காளத்திலே, வங்காளத் தலைநகரத்திலே இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்படும் என்று இன்று அறியும்போது, இந்தியா எந்த அளவிற்கு மாநிலத்திற்கு மாநிலம் தொடர்பு வைத்திருக்கிறது என்பதையும், அண்ணன், தம்பியாக இருக்கிறோம் என்பதையும் இங்கே மற்றவர்கள் சொன்னதை நான் அடையாள பூர்வமாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, தலைவணங்குகிறேன், என்று கூற விரும்புகிறேன்.

சில ஆஸ்தீக நம்பிக்கையுள்ளவர்களுக்கு மழை வருவது ஒரு நல்ல அடையாளம் என்று சொல்வார்கள். அதிலும் வறட்சிப் பாகத்திலிருந்து வந்திருக்கின்ற நான் இங்கே மழை பொழிவதைப் பார்க்கும்போது பெருமகிழ்ச்சி அடையத் தவறமாட்டேன். இந்தப் பெயரை வைக்கும் போதே மழைத் தூற்றல் போடுகிறது என்றால், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் நாம் எவ்வளவு வளமாக வாழ முடியும் என்பதற்கு இதை அடையாளமாகக் கொள்ள முடியும் என்று கருதுகின்றேன்.
அவருடைய கொள்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், அன்றி இந்தியாவிற்கே விமோசனமில்லை என்பதைச் சொல்லி, இத்தகைய வாய்ப்பைத் தந்ததற்காக முதலமைச்சர் அவர்களுக்கும், குழுவினருக்கும் என் நன்றியைக் கூறி, வாழ்க பாரதி நாமம், அண்ணா நாமம் என்று சொல்லி விடை பெறுகிறேன்.”

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *