ஔவை – 85
•••••••••••••••••
உண்மையாய் உதவிய உத்தமர் ஞானத்தந்தை ஔவை
—————————————————————
முனைவர் இரா.குணசேகரன்
இணை இயக்குநர் (ப.நி)
கலை பண்பாட்டுத்துறை
—————————————————–
எனக்கு ஞானத்தந்தையாக விளங்கும் ஔவை அவர்களின் உதவி செய்திடும் பாங்கினை குறிப்பிடும் வாய்ப்பினை பெருமையாக எண்ணி மகிழ்கிறேன்.தஞ்சாவூர் வழக்கறிஞர் திரு. வீசு.இராமலிங்கம் அவர்கள்மூலம் 1989 ஆம் ஆண்டு நான் அவர்களுக்கு அறிமுகம் ஆனேன்.தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் மேனாள் மத்திய இணை அமைச்சர்அண்ணன் ச.சு.பழநிமாணிக்கம் மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோரின் முழுமுயற்சியால் தமிழ்வளர்ச்சிதுறையில் உதவி இயக்குநர் பணியிடத்திற்காக விண்ணப்பித்த போது அய்யா செய்த உதவியை மறக்கமுடியாது.உதவி இயக்குநர் பணியிடத்திற்கு நேரிடையாக நியமிக்க முடியாது என்ற நிலையில எங்களுக்காகவே முதுகலை ஆசிரியர் ஊதிய நிலையில் தமிழாய்வு அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கவாம் என்ற எண்ணத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடமும் இனமானப்பேராசிரியர் அவர்களிடமும் தெரிவித்தார்கள்.அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதால் நாங்கள் ஒன்பதுபேர் தமிழாய்வு அலுவலர்களாகநியமிக்கப்பட்டோம்.
பயிற்சி முடிந்தநிலையில் அவரவருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இதில் சிறப்பு என்னவென்றால் எனக்கு சிவகங்கை மாவட்டம் என்று முடிவு செய்திருந்த நிலையில் எனக்கு தஞ்சைக்கு அருகில் பணியிடம் இருக்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.அதற்கு எனக்கேத்தெரியாமல் உதவி செய்தவர் அன்று அரசுச்செயலராக இருந்த ஔவை அவர்கள்.
எனதுதிருமணத்தை நடத்திவைப்பதற்காக நான் எந்த ஏற்பாடும் செய்யாதநிலையில் சென்னையில் இருந்து வருகை தந்து தலைமை தாங்கி மணவிழாவினை நடத்தி வைத்தார்கள்.
திருமணத்திற்குப் பின்னர் நான் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை செல்வது அறிந்து அன்றைய தமிழ்வளர்ச்சி இயக்குநர் ஐயா பெரியாண்டவன் அவர்களிடம் அவர்களாகவே கூறி தஞ்சைக்கு மாறுதல் கிடைத்திட உதவி செய்தார்கள்.
இது போன்று எத்தனையோ உதவிகளைக் கேட்காமலே செய்துள்ளார்கள். அவர்கள் கீழ் பணியாற்றும் அலுவலர் என்றைய நிலை இல்லாமல் மகனாகவே நடத்தினார்கள். அதற்கு ஏற்றார்போலவே அன்புத்தாய் மருத்துவர் அம்மாவும் அன்புத்தம்பி மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் அவர்களும் எங்கள் குடும்பத்தின்மீது அளவற்ற அன்பு காட்டிவருகிறார்கள். நான் அரசுப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்றபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில், என்னைப் பற்றி பொன்வரிகளால் இழைத்து என்னை வாழ்த்தி எழுதியதை நான் என்னென்று சொல்வேன். நான் என்றும் அவருக்கு கடமைப்பட்டவன்.
அந்த வாழ்த்து வரிகள் என் நெஞ்சின் வைர வரிகளாகும்.
கொள்கைச் செம்மல் குணசேகரன்
பணி நிறைவு பாராட்டுரை
****************************************
(18.10.1990 முதல் 31.05.2019 வரை)
நேற்று நிகழ்ந்தது போல் என் நினைவில் நிற்கிறது. அடக்கமும் ஒடுக்கமும் நற்பண்பும் நல்லிணக்கமும் கொண்ட நண்பர் குணசேகரன் மறைந்த வழக்கறிஞர் இராமலிங்கம் அவர்களால் எனக்கு அறிமுகம் ஆனார்.
அன்பிற்கும் பண்பிற்கும் வாய்த்த அருமந்த திருமகனாகிய குணசேகரன் தமிழ் வளர்ச்சித் துறையிலும், கலைப் பண்பாட்டுத் துறையிலும் இணை இயக்குநர் என்ற நிலைக்கு உயர்ந்து சிறந்த பணிகளை செம்மையாக ஆற்றினார்.
பொதுவாழ்வில் தகுதி வாய்ந்த குணசேகரனுக்கு வாய்த்த துணைவியாரும் திருமகளின் உயர்ந்த செல்வங்களாக அவர் குடும்பத்திற்கு துணை நின்று வருகின்றனர்.
அரும்பணி ஆற்றி அரசு பணிகள் புரிந்து ஓய்வு பெறும் குணசேகரன் நற்பணிகளை தொடர்ந்து ஆற்றி புகழ் பெறுவார் என்பதில் ஐயமில்லை.
அலுவலால் அவருடைய இலக்கியப் பணிகள் முடிவடையாமல் முடங்கின. அவர், தன் பணிகளில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இருபத்து எட்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், பதினான்கு நாட்கள் சிறப்பாக பணி புரிந்த குணசேகரனை நான் பாராட்டுகிறேன்.
—– முனைவர் ஔவை நடராசன்
================
அனைவரிடமும் பரிவுகாட்டவேண்டும் என்பதனைக் கற்றுக்கொடுத்த ஞானத்தந்தை ஔவை அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவது ஒன்றுதான் ஔவை அவர்களுக்கு நாங்கள் செய்யும் கைமாறு.
தமிழறிஞருள் தலையாய அறிஞராகத் திகழும் என் ஞானத் தந்தையை நாங்கள் நினைத்து உருகாத நாளில்லை.

Add a Comment