ஔவை – 85
••••••••••••••••••
அருட்தந்தை ஔவை!
=====================
—-பொறியாளர் திலகம் கார்த்திகேயன்.
திருச்செங்கோடு
எண்ணற்கரிய சான்றோர்களாலும் எண்ணுதற்கரிய ஆளுமைகளாலும் போற்றப்பட்ட – போற்றப்படுகின்ற – போற்றப்படவிருக்கின்ற தமிழறிஞரும் தாமரை விருதினருமான ஐயா திரு. ஔவை நடராசன் அவர்களுடனான சந்திப்பும் அதைத் தொடர்ந்து இன்று வரை அவருடனான உள்ள நெருக்கமும் என் வாழ்வில் நான் பெற்ற பேறு.
நான் தமிழ் மாணவனல்லன். அவருடைய அனுபவமும் ஆற்றலும் படிந்த அவருடைய அணுக்கனுமல்லன். இருப்பினும் இன்று நான் அவரால் அடையாளம் காணக்கூடியவனாக இருக்க காரணம் என்ன? நினைத்துப் பார்க்கிறேன். என் நெஞ்சம் இனிக்கிறது.
திரு. ஔவை ஐயா அவர்களைப் பற்றி நான் பல ஆண்டுகளுக்கு முன் செவி வழிச் செய்தியாக அறிந்திருக்கிறேன் – என் சித்தப்பா திரு. இரா.பொய்யாமொழி வாயிலாக. திரு. பொய்யாமொழி அவர்கள் ஐயாவுக்கு அணுக்கமானவர். சீர் கருணீகர் வகுப்பினைப் பிற்படுத்தப்பட்டோர் வரிசையில் சேர்க்கப்பட, மேனாள் முதல்வர் கலைஞர் அவர்களிடம் பரிந்துரை செய்ததில் ஐயா அவர்களுடைய பங்கு மிக அதிகம் என்று அவர் கூற நான் கேட்டிருக்கிறேன். அவருடைய அறிவாற்றலையும் அதன் வழியாகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்றுத் திறம்பட பணியாற்றியதையும் அறிவேன்.
ஐயா அவர்களின் தந்தையார் ஔவை துரைசாமி பிள்ளையவர்களின் திருவருட்பா – மூலமும் உரையும் பத்துத் தொகுதிகளும் எனது சிறிய நூலகத்தை அலங்கரிக்கிறது. அவற்றை எனக்கு தன் அன்பளிப்பாக வழங்கியவர் என் பெரியப்பா புலவர். திரு. மு. ப. மாரிமுத்து. என் தந்தையார் திரு. மு. ச. பாலகிருட்டிணனும் ஆசிரியராகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றவர். நல்ல தமிழ் ஆர்வலர். இளமைப் பருவத்தில் திராவிட இயக்கச் சிந்தனைகளாலும் அண்ணா – கலைஞர் – நாவலர் போன்றோரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர். கூடுதலாக ஐயா திரு. ஔவை நடராசன் அவர்களாலும் எங்கள் ஊரான திருச்செங்கோட்டில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். அந்த புகைப்படமும் இன்றும் என் தந்தையாரின் மேசையை அலங்கரிக்கிறது. கி.பி. 2010 ஆம் ஆண்டு வரை ஔவை அவர்களைப் பற்றி நான் அறிந்தவை அம்மட்டே.
நான் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலமது. கி.பி. 2007 ஆம் ஆண்டுத் தொடக்கம் சுழற்கழக சங்கத்தில் உறுப்பினனாகச் செயலாற்றிக் கொண்டிருந்தேன். கி.பி. 2011 ஆம் ஆண்டு ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றேன். அந்த ரோட்டரி ஆண்டில், எமது சங்கம் இடம் பெற்றிருந்த ரோட்டரி மாவட்டம் 3212ன் ஆளுநராகத் திரு. பா. ஆறுமுக பாண்டியன் பதவியேற்றார். மாதந்தோறும் நிகழும் சந்திப்புகளிலும் கருத்தரங்குகளிலும் அவர் மறவாது – தவறாது உச்சரித்துக் கொண்டிருந்த ஒரு பெயர் ‘தமிழறிஞர். ஔவை நடராசன்’. மிகப் பெருமிதத்துடன் – ஒரு செய்தியுடன், ஐயா அவர்களது பெயரை இணைத்து அடிக்கடி அவர் குறிப்பிட்டு வந்தது என்னை மிகவும் ஈர்த்தது. செய்தி இதுதான். ஐயாவும் அம்மா திருமதி. தாரா நடராசன் அவர்களும் நாகர்கோவிலில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்த இரயிலில் பயணிக்கிறார்கள். இரயில் மதுரையைக் கடந்தவுடன் ஐயா அவர்களுக்குத் திடீரென உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அம்மர் ஒரு தேர்ந்த மருத்துவராதலால் முதலுதவி அளித்த பின் தீவிர சிகிச்சைக்காக நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். இரயில் பயணித்த வண்ணமாயிருக்கிறது. தகவல் தமிழக அரசு காவல் துறையை எட்டுகிறது. நெல்லை மாவட்ட காவல் ஆணையருக்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்ட காவல் ஆணையர், உடனடியாக தொடர்பு கொண்ட நபர்தான் திரு. பா. ஆறுமுக பாண்டியன். ஏற்கனவே, தமது ஊர்க்காவல் படை சேவைகளால் காவல் துறைக்கு அறிமுகமான திரு.ஆறுமுக பாண்டியன் சிறந்த ரொட்டேரியனாகவும் அறியப்பட்டவர். ஐயா அவர்களது உடல் நலம் குறித்த விபரங்களை அறிந்து கொண்ட அவர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். நெல்லை சந்திப்பின் ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு ஆம்புலன்ஸ் விரைகிறது. ஐயா அவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டி எந்த வாயிலுக்கு அருகில் நின்றாலும் உடனே அவரை அழைத்துக் கொண்டு சிறந்த மருத்துவ மனைக்கு விரைய வேண்டும் என ஏற்பாடு. ரயில் நெல்லை சந்திப்பில் நின்ற அடுத்த நிமிடம் ஐயா திரு. ஔவை அவர்களோடு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு விரைகிறது. உடனடி உயிர்க் காப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆம்புலன்ஸ் பின்னர் சில மணிநேரம் கழித்து மதுரை அப்பல்லோ மருத்துவ மனைக்கு விரைகிறது. ஐயா அவர்கள் நலமடைகிறார். அடுத்த சிறப்பு நிகழ்வாக, ஐயா அவர்கள் இந்திய அரசின் தாமரை விருதைப் பெறுகிறார்.
இந்தச் செய்திகளை எங்களோடு பரிமாறிக் கொண்ட திரு.பா.ஆறுமுக பாண்டியன், ஒரு சிறந்த தமிழறிஞரின் அரிய உயிர் காக்கப்பட காரணம் தமது ரோட்டரி சங்க நட்புறவே என்று பெருமிதப்படுவார். கூட்டந் தோறும் ரோட்டரி ஒரு தமிழறிஞரைக் காத்தது’ என்று பேசிவந்த அவருரையில் ஒரு ஆதங்கம் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. அது, அவர் ஐயா திரு. ஔவை அவர்களை நேரில் சந்தித்ததே இல்லையென்பதுதான். முகம் காணாமல், தன்னால் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் உடல் நலம் சீர்பெற உதவ முடிந்தது என்ற அவரது பெருமிதத்துக்குப் பின்னால் என்றேனும் தான் அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்ற அவா இருந்ததை உணர்ந்தேன்.
கி.பி. 2011 அக்டோபர் மாதம் .. ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு. பா. ஆறுமுக பாண்டியன் உறுப்பினராக இருக்கும் திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்க உறுப்பினர்களும் எங்கள் ஸ்பிக்நகர் ரோட்டரி சங்க உறுப்பினர்களும் தங்கள் குடும்பத்தோடு ஒருங்கிணைந்து அளவளாவும் ஒரு கூடுகை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோம். அதில் சிறப்பம்சமாக நாம் வாழும் சமூகத்துக்குத் தமது அறிவாற்றலால் சிறந்த தொண்டாற்றிய அறிஞர்கள் இருவரை அழைத்து வந்து அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டுமென முடிவெடுத்தோம்.
அப்போதுதான் ஐயா திரு. ஔவை அவர்களைச் சந்திக்கும் எண்ணம் எனக்குள் உதித்தது. ஒருவரையொருவர் சந்திக்காத நிலையிலும் உதவியினாலும் அன்பாலும் உள்ளத்தால் பிணைக்கப்பட்ட திரு. ஆறுமுகபாண்டியனையும் ஐயா திரு. ஔவை அவர்களையும் சந்திக்க வைக்கும் எண்ணம் ஆவலாக எழுந்தது. என் தந்தை வாயிலாக சித்தப்பா திரு. இரா.பொய்யாமொழியுடன் தொடர்பு கொண்டேன். அவரும் ஐயா திரு. ஔவை அவர்களோடு பேசி, நேரில் சந்தித்து ஐயா அவர்களுடைய வருகை குறித்த ஒப்புதலைப் பெறலாம் என்று சொன்னார்கள். நான் சென்னைக்கு விரைந்தேன்.
ஸ்பிக் உர விற்பனையாளர்கள் நலச் சங்க விருந்தினர் விடுதி சென்னை தி.நகரில் பசுல்லா சாலையில் உள்ளது. நானும் சித்தப்பாவும் அங்கே சந்தித்தோம். ஐயா திரு. ஔவை அவர்களுடைய அலுவலகம் திலகர் சாலையிலிருந்தது. அந்த இனிய காலைப் பொழுதில் ஐயா அவர்களை முதன் முதலாக நேரில் சந்தித்தேன். மிக்க பெருமிதத்தை உணர்ந்தேன். அவர்களுடைய அடி தொழுது ஆசி பெற்றேன். இனிய உபசரிப்புடன் விபரங்களைக் கேட்டறிந்து, எனது அழைப்பையேற்று ரோட்டரி சங்கங்களின் சந்திப்பில் கலந்து கொள்ள சம்மதித்தார். அவருக்கிருந்த பணிச் சுமைகளுக்கிடையில் அவர் வர சம்மதித்தது எனக்கு இமயத்தில் கொடி நாட்டிய இன்பத்தை தந்தது. அதோடு அவர் ரோட்டரி குடும்ப சந்திப்பில் அம்மா டாக்டர் தாரா அவர்களோடு வந்து சிறப்பிக்க ஒத்துக் கொண்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அறிமுகமில்லாத ஒரு சாதாரண மனிதனின் அழைப்புக்கு அன்று அவர் அளித்த மிக இணக்கமான ஒப்புதலை இன்றும் நான் எண்ணியெண்ணி வியக்கிறேன். பல வியப்புகளின் தொகுப்புதான் ஐயா திரு. ஔவை அவர்கள் என்பதை நான் அன்று முதல் உணர்ந்தவண்ணமாயுள்ளேன்.
ஐயா அவர்களோடு அன்று பேசிக் கொண்டிருந்த போது இரு மொழித் திட்டம் பற்றி அவர்களிடமிருந்து ஒரு கருத்து வெளிப்பட்டது. அவர்களுடைய தலைமுறையில் எடுக்கப்பட்ட அந்த கொள்கை முடிவு எங்கள் தலைமுறையை பாதித்ததோ? என்ற கேள்வி அவரிடமிருந்து எழுந்தது. நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருந்த உண்மை அடிப்படையில் ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ‘ என பதிலளித்தேன்.
அறிவியல் தொழில் நுட்பத்தை பொறுத்தமட்டில், ஆங்கிலமும் தமிழும் போதுமானவை என்ற என் கருத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். மேலும், புதிய மொழியொன்றைக் கற்றுக் கொள்வது, ஆர்வம் மற்றும் அத்தியாவசியத்தைப் பொறுத்தே அமைகிறது என்பதற்குத் தொழிலக உற்பத்திக்காக நான் விஜயம் செய்திருந்த ஜோர்டன்
அனுபவமும் குஜராத் அனுபமும் என்னுடைய சாட்சிகளாக இருந்தன. அகமிக மகிழ்ச்சியுடன் தூத்துக்குடி திரும்பினேன்.
21.10. 2011 என் வாழ்வில் ஆகச் சிறந்த பொன்னாள். தூத்துக்குடி விமான நிலையம் – சென்னையிலிருந்து வந்த விமானம் தரையிறங்கியது. எனது ஆவல் பறவை சிறகடித்துப் பறந்தது. பன்னாட்டளவில் புகழ்மிக்க தமிழறிஞர் – மேனாள் துணை வேந்தர் – தாமரை விருது தாங்கிய நெடிதுயர்ந்த கம்பீர தமிழ்மகன் ஐயா ஔவை ஒரு சக்கர நாற்காலியை மெல்லென தள்ளியபடி வர, நாற்காலியில் அம்மா தாரா நடராசன். தங்கப் பதக்கம் திரைப்படம் எனக்கு நினைவு வந்தது. புன்னகை பூத்த முகத்துடன் இருவரும் வர, சற்றுத் தொலைவிலிருந்த படி வணக்கம் கூறி வரவேற்றேன். விமானப் பயணிகள் அலுவல்கள் நிறைவு பெற்ற கையோடு, இருவரையும் ஸ்பிக் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றேன்.
ஸ்பிக் நிறுவன வளாகம் ஐயா அவர்களுக்குப் புதியதல்ல. ஏற்கனவே, இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில் பல முறை ஸ்பிக் நகரிய கலாச்சார மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை ஐயா நினைவு கூர்ந்தார்கள். மிக இனிமையான அளவளாவலை முடித்துக்கொண்டு எனதில்லம் திரும்பினேன். ஐயா அவர்களின் தேவைகளை அறிந்து கூற, எனது சித்தப்பா திரு. இரா. பொய்யாமொழி என்னுடனிருந்தார்கள். ஐயா அவர்களது ஸ்பிக் விஜய நிகழ்ச்சி நிரலைப் பின்வருமாறு வடிவமைத்திருந்தோம். 21.10. 2011 அன்று ஸ்பிக் கலாச்சார மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூடலில் சொற்பொழிவு. 22.10. 2011 அன்று ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம் மற்றும் திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்திருந்த குடும்ப விழா கூடுகையில் ஐயா அவர்களது மொழி சேவைக்காக விருதுக்கான சிறப்புரை. 23.10.2011 அன்று காலை திருச்செந்தூர் முருக தரிசனம், பிற்பகல் தூத்துக்குடி எஸ். ஏ. வி மேனிலைப் பள்ளியில் உள்ள நெடும்படர் ஆல மரத்தைப் பார்வையிடல், மாலை சென்னை பயணம்.
21.10.2011 அன்று மாலை ஸ்பிக் நகரியத்திலிருக்கும் ஜிம்கானா புல்வெளியில் ஐயா அவர்களது பேருரை. ‘எதைப் பற்றி பேச வேண்டும்?’ என்று ஐயா கேட்க, எனக்கேதும் தோன்றாமால், ‘எதைப் பற்றி பேச வேண்டுமானாலும் பேசுங்கள் ஐயா!
நீங்கள் எதுப் பற்றி பேசினாலும் அது எங்களுக்குப் பயன்தரும்.’ என்று நான் சொல்ல, ஐயா புன்னகைத்தார்கள். புல்வெளியில் மேடையில் ஐயா மட்டும். நாங்களெல்லாம் அவருரைக்காக காத்திருந்தோம். அம்மா, என் மனைவி அகிலா, மகள் ஆரபி உட்பட ஸ்பிக் நிறுவனப் பணியாளர்கள் புல்வெளி அரங்கத்தில். ஐயா நம் தமிழர் வாழ்வியலை அழகாக விளக்கி உரையாற்றினார்கள். அவர்கள் அன்று ஆற்றிய சொல்லுரையிலிருந்து சில துளிகளை இங்கே பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.
ஐரோப்பிய மொழிகளில் இசையின் ஆதிக்கம் நிறைந்த மொழி இத்தாலி. அறிவியலின் ஆதிக்கம் நிறைந்த மொழி ஜெர்மானிய மொழி. சட்டத்தின் திடமான வார்த்தைகள் நிறைந்த மொழி பிரெஞ்சு மொழி. அதிகாரத்தின் ஆதிக்கம் நிறைந்த மொழி ஆங்கிலம். உலக மொழிகளில் ஆன்மிகத்தின் தாக்கம் அதிகம் நிறைந்த மொழி சமஸ்கிருதம். ஆனால், தன்னளவில் இரக்கமும் உருக்கமும் நிறையப் பெற்ற மொழி நம் தமிழ் மொழிதான்.
நன்றி என்பதற்கு நன்மை என்று பொருள். நல் + இ = நன்றி. எனவே, ‘நன்றி கூறல்’ என்பதற்கு பதிலாக ‘நன்றி பாராட்டுதல்’ என்பதே சரி.
இயற்கையை ஆண்டு வாழ்கின்றவன்தான் விஞ்ஞானி. நெருப்பைக் கண்டு பயந்து அதைத் தெய்வமாக வணங்கியவனும் மனிதன்தான். அது நம்மைப் போல இயற்கையான ஒன்று. ஆனாலும் அது சுடும் என்பதை உணர்ந்து சற்றே ஒதுங்கி நின்றவனும் மனிதன்தான். அதைப் பக்குவமாகக் கையாளவும், சீறினால் பாதுகாப்பாக சமாளிக்கவும் வழிகளைக் கண்டறிந்து எரிமலைக்கு அருகிலேயே அட்டை வீடுகளை கட்டிக்கொண்டு அது சிவக்கும் அழகை அனுபவிப்பவனும் மனிதன்தான்.
நாம் சில சமயங்களில் சரியாக மொழி பெயர்க்கத் தவறுகிறோம். விலங்குகள் தங்கி வாழும் பகுதியை ‘சரணாலயம்’ என்று குறிப்பிடலாமா? அங்கே அவை பாதுகாப்புக்காக சரணடைந்து வாழவில்லை. அது விலங்குகளின் இயல்பான வாழிடம். அந்த பகுதியை ‘விலங்கு வனம்’ என்று குறிப்பிடலாம். கேரளச் சகோதரர்கள் அதைச் சரியாகச் செய்கிறார்கள். புலிகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வாழச் செய்யும் பகுதியை அவர்கள் ‘புலி வனம்’ என்று சரியாகச் சொல்கிறார்கள்.
மேற்கண்டவை போன்று ஐயாவின் பல கருத்துச் செறிவுகள் அன்றைய கூட்டத்தை சென்று சேர்ந்தன. பிறகு நேயர்களுடன் கலந்துரையாடல். கூட்டம் நிறைவுற்ற பிறகு, ஐயா – அம்மாவுடன் நாங்களும் விருந்தினர் மாளிகைக்குச் சென்று அளவளாவினோம். அடுத்த நாள் நிகழ்ச்சிகள் குறித்து ஐயா அவர்கள் கேட்டார்கள். விளக்கினேன். தத்தம் தொழிற்சார் சேவைக்காகப் பெருமை மிகு இரு ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வைச் சுருக்கமாக விவரித்தேன். ஐயா அவர்களோடு ‘நெகிழி விஞ்ஞானி’ என்னும் புகழைப் பெற்றிருந்த மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் திரு. ஆர். வாசுதேவன் அவர்களுக்கும் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளோம் என்பதைத் தெரிவித்ததும் ஐயா திரு. வாசுதேவன் அவர்களுடைய கண்டுபிடிப்பை மிகுந்த ஆவலுடன் கேட்டறிந்தார். நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த நான்கு கோட்பாடுகளை – அதாவது REFUSE, REDUCE. RECYCLE. REUSE என்று ஐயாவுக்கு நான் எடுத்துரைத்தபோது, அந்த முதல் கோட்பாடு ஐயா அவர்களை ஈர்த்தது. பொதுவாக, REDUCE. RECYCLE. REUSE என்னும் 3R கொள்கைதான் ஒரு பொருளின் பயன்பாட்டைத் தவிர்க்கக் கூறப்படுவது வழக்கம். REFUSE என்ற அந்தப் புதிய கொள்கை ஐயா அவர்களைக் கவர்ந்ததை உணர்ந்தேன்.
22.10.2011 மாலை 6.30 மணி. ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கமும் திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய குடும்ப விழா நிகழ்வில் ஐயாவும் அம்மாவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஐயா திரு. ஔவை அவர்களும் ரோட்டரி மாவட்டம் 3212ன் ஆளுநர் திரு.பா.ஆறுமுக
பாண்டியனும் சந்தித்து மகிழ்ந்தார்கள். வெகுநேரம் அளவளாவி மகிழ்ந்தார்கள். முன்னம் நிகழ்ந்தவற்றை நினைவுகூர்ந்து களிப்புற்றார்கள். அந்த மகிழ்ச்சி இன்பம் தனித்துவமிக்கதாக இருந்ததை என்னால் உணரமுடிந்தது. அதற்காகத்தானே ஆசைப்பட்டேன். நிகழ்ச்சியில் ஐயா அவர்கள் அறம் சார் சேவை குறித்து நிறைய
உண்மைகளை எடுத்துரைத்தார்கள். அம்மா டாக்டர் திருமதி தாரா நடராசன் அவர்கள் தாம் மதுரை மருத்துவ கல்லூரியின் தலைவராக இருந்த காலத்தில் ரோட்டரி சேவைகள் குறித்து அறிந்தவற்றை அரங்கத்துக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். நெகிழி விஞ்ஞானி பேராசிரியர். திரு. ஆர். வாசுதேவன் அவர்கள் தமது கண்டுபிடிப்புகளையும் நெகிழியின் தீமை குறித்தும் காணொலிக் காட்சி வாயிலாக விளக்கிக் கூறினார்கள். பொழுது மிகவும் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. அந்த நிகழ்வில் மிகவும் மெய்சிலிர்த்துப்போனவர் திரு. பா. ஆறுமுக பாண்டியன்தான். தமது வாழ்க்கையின் பயனை உணர்ந்ததாக என்னிடம் பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தார். அவர் அன்று அடைந்த மகிழ்ச்சியின் தொடர்ச்சி 2012 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ரோட்டரி மாவட்ட மாநாட்டில் ஐயா அவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்குமளவுக்கு நீண்டது. ஆனால், அப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து சகோதரர் கண்ணன் அவர்கள் சென்னைக்கு வந்ததும் அதன் தொடர்பாக குடும்ப நிகழ்வுகள் அமைந்ததும் ஐயாவும் அம்மாவும் திருவனந்தபுர ரோட்டரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கவில்லை.
23.10.2011 காலை ஐயாவும் நெகிழி விஞ்ஞானி பேராசிரியர். ஆர். வாசுதேவன்
அவர்களும் நெகிழி சாலை குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டார்கள். ஐயா பேராசிரியரிடம் சென்னை சென்றதும் அதற்கான பரிந்துரைகளைச் செய்வதாக கூறினார்கள். அதன் விளைவை சில நாட்கள் கழித்து செய்தித் தாள்களின் வாயிலாக அறிந்தேன். சென்னை மாநகராட்சியில் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களது ஆணைக்கிணங்க பேராசிரியர் திரு. ஆர். வாசுதேவனால் நெகிழி சாலை அமைந்தது.
23.10.11 அன்று காலை ஐயா அம்மாவுடன் திருச்செந்தூர் விஜயம். ஸ்பிக் நிறுவனத்தால் சிறப்பு விருந்தினர்களாக ஏற்கப்பட்ட ஐயாவும் அம்மாவும் திருச்செந்தூர் முருகனை சேவித்தார்கள். திருச்செந்தூர் செல்லும் போதும் திரும்பும் போதும் நான்தான் மகிழுந்துக்குச் சாரதி. ஏகப்பட்ட செய்திகளை ஐயா வழங்கியபடி இருக்க பயணம் இனிதாக அமைந்தது.
மதியம் தூத்துக்குடியில் எஸ் ஏ வி மேனிலைப்பள்ளியில் இருக்கும் ஆயிரம் விழுது ஆலமரத்தை பார்வையிட்டோம். 1980லிருந்து 2011 வரை தூத்துக்குடியில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அந்த மரமும் தெரிந்திருக்கவில்லை. அதன் முக்கியத்துவமும் தெரியவில்லை. அதுபற்றிய செய்தி ஐயாவுக்கு எப்படியோ தெரிந்திருக்க, அதைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அழகேசன் அவர்களைத் தொடர்பு கொண்டு அதைக்காணும் வாய்ப்பை ஐயா ஏற்படுத்தினார்கள். ஐயா அவர்களால் பேராசிரியர் முனைவர் திரு. அழகேசன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு, நான் பணி ஓய்வு பெற்று ஊர் திரும்பிய பின்னரும தொடர்கிறது. அவருடைய முத்துநகர் தமிழ்ப் பேரவை நிகழ்ச்சிகளுக்கு நானும் மறவாது செல்லும் ஆர்வலனாகிப் போனேன். எங்கள் ரோட்டரி சங்க நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளும் நல் வாய்ப்பு நிகழ்ந்தது. அவருடைய துணைவியார் டாக்டர் இராஜேஸ்வரி அழகேசன் அவர்களும் அம்மா திருமதி. தாரா நடராசன் அவர்களைப் போலவே சிறந்த மகப்பேறு மருத்துவர். ஆலமரக் கதைக்கு வருவோம். நாங்கள் அந்தப் பள்ளியில் பார்த்த அந்த ராட்சத ஆலமரம் ஆப்பிரிக்கா கண்டத்தில்தான் காணப்படுகிறதாம். அதன் விதை தூத்துக்குடிக்கு வந்தது எப்படி? என்ற ஆராய்ச்சியில் நாங்களனைவருமே ஈடுபட்டோம். காரணம் ஐயா திரு. ஔவை அவர்கள்தான்.
அன்று மாலை ஐயாவும் அம்மாவும் சென்னைக்கு விமானத்தில் பயணப்பட்டார்கள். அகிலா – ஆரபி – இனியன் திருச்செல்வம் என்ற உயிரெழுத்துகள் முதலான எனது குடும்பத்தில் தமிழ்ப் பேரறிஞர் ஐயா திரு. ஔவை நடராசன் அவர்களது அறிவார்ந்த குடும்பம் உள்ளன்பால் இணைந்த தருணம் அந்த மூன்று நாட்கள். என் வாழ்வில் உள்ளுந்தோறும் உவப்பூட்டும் நினைவுகள் அவை.
அதன் பிறகு, ஐயா அவர்களைச் சில மாதங்கள் கழிந்து ஸ்பிக் விருந்தினர் மாளிகையிலேயே சந்தித்தேன். திருநெல்வேலியோ அல்லது நாகர்கோவிலோ – எனக்குச் சரியாக நினைவில்லை. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். இராஜபாளையம் குமாரசாமி ராஜா நினைவு விழா நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்த ஐயா அவர்களையும் அம்மா அவர்களையும் சந்திக்க நானும் என் துணைவியார் அகிலாவும் சென்றோம். சென்னை – மதுரை விமானம் கால தாமதத்தால் அன்று சந்திக்க இயலாமல் ஸ்பிக்நகர் திரும்பினோம்.
சில ஆண்டுகள் கழிந்து, ஐயா அவர்களிடமிருந்து அழைப்பு. ஸ்டெர்லைட் ஆலை குறித்து விபரம் கேட்டார்கள். சொன்னேன். இளவல் ந. அருள் தூத்துக்குடி வருவதாகக் குறிப்பிட்டார்கள். முனைவர் திரு. ந. அருள் அவர்களை ஸ்டெர்லைட்டின் தாமிரா நகரியத்தில் விருந்தினர் விடுதியில் சந்தித்து மகிழ்ந்தேன் . ஐயா அவர்களிடம் நான் கண்ட அதே ஆளுமை. ஆலை விபரங்களை அவருக்கு எடுத்துரைத்தேன். அங்கேயே அவருக்கு உயர் நிலை அதிகாரியாகும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருந்தும் நல்வாய்ப்பாக அதை அன்று அவர் ஏறகாதது எனக்கு பின்னாளில் நிம்மதியைத் தந்தது. அதன்பிறகு ஐயா ஔவை அவர்களுடைய இனிய குடும்பத்துக்கும் எனது குடும்பத்துக்கும் பிணைப்பு இன்னும் பலப்பட்டது. திரு. ந. அருள் தன் அன்பு மகள் செல்வி. ஆதிரைக்கு நாளொரு குறள் போதிப்பது உட்படப் பல தகவல்களை வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் பரிமாறிக்கொள்வோம். ஐயா அவர்களுடைய அண்ணா நகர் இல்லம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அவர் வசித்த துரைப்பாக்கம் இல்லத்திற்குச் சென்றிருக்கிறோம். அளவளாவியிருக்கிறோம்.
எனது மகன் செல்வன். இனியன் திருச்செல்வம் திருமணத்தை முன்னிட்டு நடந்த திருமண உறுதி விழா நிகழ்ச்சிக்கு ஐயா, அம்மா, இளவல் ந. அருள் ஆகியோர் வந்திருந்து மண மக்களை வாழ்த்தியதை மறக்கமுடியுமா? ஐயா-அம்மா அவர்களுடைய வாழ்த்துகளோடு மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ வேண்டுமென்ற எங்களுடைய வேண்டுகோளுக்கு அம்மாவும் ஐயாவும் இணங்கி இசைவளித்ததை மறக்கமுடியுமா?
அண்ணாநகர் இல்லத்தில் ஒருமுறை பொறியாளரான என் மகன் இனியன் திருச்செல்வம், திருக்குறள் எழுதப்பட்ட காலம் எதுவென ஐயாவிடம் வினவினார். பள்ளிப்பருவந்தொட்டு அவருக்குள்ளிருந்த கேள்வி. உடனே, ஐயா என் மகனிடம், பீலி பெய் சாகாடும் குறளை எடுத்துக்காட்டி, திருக்குறள் எழுதப்பட்ட காலத்தின் மேன்மை குறித்தும், அந்த நாளிலேயே செறிந்திருந்த தமிழர் தொழில் நுட்பத் திறன் குறித்த விளக்கத்தை சில மணித்துளிகளிலேயே தெள்ளென எடுத்துரைத்தார்கள். அவர்கள் அந்த விளக்கத்தை எடுத்துரைத்த விதம் இன்று நினைக்கும் போதும் இனிக்கிறது. அவர்தான் ஐயா!
நகை – ஈகை – இன்சொல் – இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக்குடிக்கு
என்கிறார் திருவள்ளுவர். அதன் விளக்கம் ஐயா ஔவை அவர்களுடைய குடும்பம். நல்ல மனைவி – நல்ல பிள்ளை – நல்ல குடும்பம் தெய்வீகம் என்றார் கவியரசு. அதன் விளக்கம் ஐயா திரு. ஔவை – அம்மா டாக்டர் தாரா நடராசன் அவர்களை மையப்புள்ளியாக வைத்து வரையப்பட்ட அழகான அன்பான அமைதியான குடும்பம். அவர்களுடைய அன்புக்குப் பாத்திரமான நாங்கள் இன்றளவும் அவர்களுடைய குடும்ப
நிகழ்வுகளில் பங்கேற்கும் சிறப்பைப் பெறுகிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற சகோதரர் கண்ணன் அவர்களுடைய அருமை மகள் நாட்டிய அரங்கேற்றத்துக்கு ஐயா அவர்கள் தன் கைப்பட பரிவுடன் ஔவை நடராசன்’ என்றெழுதி, இளவல் முனைவர் ந. அருள் தர வழங்கிய அழைப்பிதழ் என்னிடம் பத்திரமாக உள்ளது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். ஐயாவையும் அம்மாவையும் சந்தித்து ஆசி பெற்றோம். அப்போது ஐயாவை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைப்புவிடுத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளினி. ஐயா அவர்கள் இருக்கையிலிருந்து மெல்ல எழுந்துவிட்டார்கள். ஆனால், உறுதியாக நிற்க இயலாமல் சற்று சிரமப்பட்டார்கள். அந்த நிலையிலும் ஐயா அவர்கள் நகைச்சுவையோடு சொன்னதை இன்றும் நினைத்து வியக்கிறேன். அதை அப்போது வியப்பு-வேதனை கலவையாகத்தான் அனுபவிக்கமுடிந்தது. ஆனால். அதை இப்போது நினைக்கும் போதுதான் அவர் தன் வலியைக் கூட இலக்கியச் சுவையால் ஆற்றிக் கொள்ளும் வித்தக மருத்துவர் என்பதை உணர முடிகிறது.
ஐயா சொன்னார்கள் : ‘கற்க கசடற . கற்பவை கற்றபின் நிற்க .. என்றார் திருவள்ளுவர். நான் முதலிரண்டையும் செய்துவிட்டேன் . நிற்கத்தான் முடியவில்லை’
அவர்தான் ஔவை.
வாழ்க ஔவை! வாழிய பல்லாண்டு!

Add a Comment