POST: 2020-06-19T10:31:42+05:30

ஔவை – 85
•••••••••••••••••••

என் முதல் சந்திப்பு ஔவை நடராசன் அவர்களுடன்…

—–புலவர் இளஞ்செழியன்

கரந்தையில் படித்த போது
கவிப்பொன்னி வளவன் என்னை
சரபோஜி கல்லூ ரிக்கே
வாவென அழைத்துச் சென்றார்!
வரவேற்றார் ஔவை! அன்னார்
வாயினில் வந்த வார்த்தை
சுரமென இனித்த தங்கே!
சுகமான சந்திப் பென்பேன்!

உணவுண்டோம்! உபச ரித்தார்!
உரையாடி மகிழ்ந்தோம்! பின்னர்
உணர்வுக்கோ மாலை நேரம்
உரித்தபலாச் சுளையைப் போலே
அணியென மாண வர்கள்
அங்கேதான் திரண்டி ருக்க,
கணீரெனக் குரலெ டுத்துக்
கவிச்சுவை தந்தார் பொன்னி!

நடராச ஔவை அந்நாள்
நண்பராய் ஆன பின்பு
தொடர்ந்திந்நாள் வரைக்கும் நானோ
தொடர்ந்தவர் நண்ப னாகத்
தொடர்கின்றேன்! தொய்வே இல்லை!
தோழமைக் கினியார் ஔவை!
வடக்கயி றன்ன ,கெட்டி
நட்பெங்கள் நட்பே என்பேன்!

பெருவளப் பூரார் என்றே
பெரும்பாலும் அழைப்பார் என்னை!.
திருவுளம் கொண்ட ஔவை
திறமைக்கார் இணையிங் குரைப்பீர்?
கருவினில் திருவு டையார்!
கவிதையாய் உரையி ருக்கும்!
வருகையில் நான்காம் ஔவை!
வாழ்த்துவோம்! வாழ்த்து வோமே!

//// புலவர் இளஞ்செழியன்

குறிப்பு
1957அல்லது1958
பொன்னி புலவர்
வகுப்பில் 3ஆம் படித்தபோது நான் முதல் ஆண்டில்
படித்தேன்.அ.அறிவொளியும் என் வகுப்புத்
தோழரே.பொன்னியின்
நிழலாய் நான் இருந்தேன்.1970இல்
திருச்சியிலிருந்து
நான் சென்னை வந்து
இராயபுரம் எட்டியப்பர்
பள்ளியில் தமிழாசிரியர் பணி
ஏற்றதே பொன்னி வளவன் ஏற்பாடுதான்.

*************************************************************************

நினைத்தாலே இனிக்கும்!

புலவர் இளஞ்செழியன்

‘பேச்சுப் பாடகர்’ என்றும்,’பாதி
அண்ணாத்துரை’என்றும்
உவமைக்கவிஞர் சுரதாவால்
புகழப்பட்டவர் ஔவை நடராசன்
அவர்கள்.

1971களில் தமிழகத்தில் தி.மு.க.
ஆட்சி புரிந்த காலம்!முத்தமிழறிஞர் கலைஞர்
அப்போது முதலமைச்சர்! டாக்டர்
நாவலர் கல்வி அமைச்சர்!மன்னை நாராயணசாமி கூட்டுறவுத்துறை
அமைச்சர்!மன்னார்குடியில்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்
விழா பெரிய அளவில் ஏற்பாடு
செய்திருந்தார் மன்னையார் அவர்கள்.

டாக்டர் ஔவை நடராசன் தலைமையில்,மன்னார்குடி
நோக்கி,ஓர் அணி புறப்பட்டது!
எதற்காக?கவியரங்கத்தில்
கவிதைமழை பொழிவதற்கும்,
பட்டிமன்றத்தில் பட்டை கிளப்புவதற்கும்!அந்த அணியில்
அப்போது யார் யார் தெரியுமா?
கவியரசர் பொன்னி வளவன்,
கவிஞர் வைரமுத்து,சேலம்
முருகுசுந்தரம்,தத்துவக்கவிஞர்
குடியரசு,தஞ்சைப்புலவர்
தொல்காப்பியன்,புலவர் ஆடலரசு,
தஞ்சை கூத்தரசன்,நான் இத்தனை பேர்களும் அடக்கம்ஔவையின் அந்த
அணியில்!
போருக்குச் செல்லும் வேங்கைகளைப்போல் நாங்கள்
சென்றோம்!

மன்னார்குடி மக்கள் அமைச்சர்
மன்னையார் ஏற்பாட்டில் கடல்
அலைபோல் திரண்டிருந்தார்கள்.
கூட்டம் அலைமோதியது!ஒருவருக்கொருவர்
கொருவர் தலைமோதியது!

கூட்டம் தொடங்கியது!மாண்புமிகுஅமைச்சர்
மன்னை நாராயணசாமி அவர்கள் அனைவரையும் பாவேந்தரின்
பைந்தமிழால் வாழ்த்தி
வரவேற்றார்! கையொலியின்
ஓசை ஓய்ந்து அமைதியின்
ஆட்சி அரசோச்சிய அந்த நேரத்தில்
ஔவையின் ஒய்யாரத்தமிழ் ஓங்கு தமிழ்
தலைமைக் கவிதையாய்
ஒலித்தது!அவர் குரல் ஒலிக்க
ஒலிக்க,மக்களின் கையோசையும் விண்ணைத் தொட்டது.
.கவிஞர்கள் ஒவ்வொருவரையும் ஔவை அவர்கள் அறிமுகப்படுத்திய விதம்,எங்களையும் அரங்கத்தாரையும்குதூகலத்தில்
குளிக்கவைத்தது.

வஞ்சனையில்லாமல் தமது வண்ணத்தமிழ்ச்சொற்களால்
சொற்களால் எவரையும் தம்
வசப்படுத்திக் கொள்ளுகிற சித்தர் அல்லவா ஔவை!ஔவை தலைமையில் புறப்பட்ட அந்த அறிவுப்படை,ஆற்றல் படை
கவியரங்கம் பட்டிமன்றம்
இரண்டிலுமே
மன்னை‌ மண்ணிலேபுகழ்க்காவி
யங்களை எழுதிவிட்டுத் திரும்பின.மன்னையார் வைத்த
நளபாக விருந்திலும் நாங்கள்
புளகாங்கிதம் அடைந்தோம்.

அடுத்த கூட்டம் சின்னமனூரில் நடந்தது
ஔவை தலைமையில்,இதே
படையுடன்!வழக்கறிஞர்
கஸ்தூரி,புலவர் பூங்கோதை,
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றச்
செயலாளர் கெ.பக்தவத்சலம்
மூவரும் எங்களுடன் சேர்ந்து
கொண்டார்கள்.வழக்கம்போல்
கவியரங்கம் நடந்தது!அண்ணாவின் நிலைத்த
புகழுக்குக் காரணம் அவருடைய
எழுத்தா?பேச்சா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது!நான் அண்ணாவின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவருடைய எழுத்தோவியமே என்று பேசினேன்.தலைமை
தாங்கிய பாதி அண்ணாத்துரை
என்னும் ஔவையோ,அடடா,கூடிய
மக்கள்எல்லாம் கோடி புண்ணியம்
செய்திருந்தால் அல்லவோ, இப்படி ஒரு மகானின் செந்தமிழ்
அருவிப்பேச்சைக்
கேட்டிருக்க முடியும் என்று தங்களுக்குள்
பேசிக்கொண்டார்களாம்!அப்படி
ஒரு பேச்சுப் பிதாமகன் ஔவை
நடராசனார் அவர்கள்!

ஔவைப் பெருமகனார் தமது
85ஆவது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிற இந்த நேரத்தில்,அவரைப்
பற்றிய வரலாற்று நிகழ்வுகளை
உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

********************************************************************
ஔவை நடராசன் அவர்களுடன்
என் அந்தநாள் நினைவுகள்!

1990!
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் தேசியப் பேரவைத் தலைவர் பாவலர் ஐ.
இளவழகு அவர்களின் நீண்டகால
வேண்டுகோளை ஆய்வு செய்து, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழக அரசின்
விருந்தாளிகளாக ஏற்று,இருவார காலம் அவர்கள் சென்னைமுதல் கன்னியா குமரிவரை அரசின் செலவில்
தமிழகச்
சுற்றுலா செல்வதற்கும் ஆங்காங்கே விடுதிகளில் தங்குவதற்கும்,அன்றைய
முதலமைச்சர் முத்தமிழறிஞர்
டாக்டர் கலைஞர் அவர்கள், அதற்கான அரசாணையைப் பரிவுடன்
பிறப்பித்தார்கள்.எந்த
அரசும் செய்யாத புதுமை இது!

அப்போது தமிழக அரசின்
தமிழ்ப் பண்பாட்டுத்துறைச்
செயலாளராக இருந்தவர் ஔவை நடராசன் அவர்கள்.அரசின் ஆணையை மெச்சி,அதனை
அருமையாய் நிறைவேற்றிச்
செய்தக்க செய்து,மலேசியத்
தமிழ் எழுத்தாளர்களின்
மனங்களைக் குளிர்ந்த சோலைவனங்களாக மாற்றிய
மாமனிதர் ஔவை நடராசன்
அவர்கள்.

அதிகாரிகளுடன் வானூர்தி
நிலையம் சென்று,வங்கக் கடலுக்
கப்பால் இருந்து வந்த அந்த மலை
நாட்டு எழுத்து வள்ளல்களை
அரசின் சார்பில் மாலையிட்டு
வரவேற்ற தமிழ்ப் பண்பாட்டுத்
தலைமகன் ஔவை நடராசன்
அவர்கள்.

நானும்,மலேசியக் கவிவாணர்
ஐ.உலகநாதன் அவர்களும்,மலேசிய எழுத்தாளர்களுக்கு,அவர்களால்
நியமிக்கப்பட்ட
தொடர்பாளர்கள் என்ற முறையில் எங்கள் நண்பர்கள் சிலருடன்
வானூர்தி நிலையம் சென்றிருந்து, மலேசியத் தமிழ்
எழுத்தாளர்களுக்கு மாலைகளால் மரியாதை செய்து மகிழ்வுடன் வரவேற்றோம்.

நானும் மலேசியக் கவிவாணர்
ஐ.உலகநாதன்(ஐ.இளவழகுவின்
அண்ணன்) அவர்களும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழகத் தொடர்பாளர்களாக இருந்து பணி
யாற்ற பாவலர் ஐ.இளவழகுஅவர்கள்,தமிழக
முதல்வருக்கு முன்கூட்டியே தந்தி கொடுத்திருந்தார்.அதனால் நான்
செயல்பட்டேன்.அப்போது நான்
திமுகவில் இல்லாமல் இருந்தும்
கலைஞர் என்னைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்
கொண்டார்.

ஔவை நடராசன் அவர்களும்,
கரந்தையில் நான் படித்த காலத்தி
லிருந்து என்னுடன் பழகியவர்,
என்னை நெடிது அறிந்தவர்
என்பதால்,என் விருப்பப்படியே
மலேசிய எழுத்தாளர்களை வழி
நடத்திச் செல்வதற்கான முழு
இசைவையும் எனக்கு வழங்கியிருந்தார்.

தமிழக அரசின் தனி அதிகாரியாக இதற்காக இராஜன்பாபு என்பவரை ஔவை
அவர்கள் எங்களுக்குத் தந்திருந்தார்.

ஔவைப் பெருமகனாரின் அறிவுறுத்தலை
ஏற்று,அவர் எங்களுக்கு எல்லாவகையிலும் இனிய உதவியாளர் ஆனார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குத்
தமிழக அரசின் தலைவிருந்து-
நடுக்கோட்டு வாழை இலை
விருந்து-பதினாறு வகையும் பாங்குற
அச்சிட்டுத் தரப்பட்டு நடந்த
இன்னடிசில் அறுசுவை விருந்து-சென்னை
சிறிலேகா உணவு விடுதியின்
கூட்ட அரங்கில் முதலமைச்சர்
கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில் நடந்தது.அன்றைய
கல்வி அமைச்சர் பேராசிரியர் க.
அன்பழகன் அவர்களும் அந்த
வரவேற்பு விருந்து நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதற்கெல்லாம் இயக்குகின்ற நெம்புகோல் போல இருந்து,
அந்த நிகழ்ச்சியை
நேர்த்தியுற நிகழ வைத்தவர்
ஔவை அவர்கள்.

விருந்து நடைபெறுவதற்கு முன்பு,
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை வரவேற்கிற
விழாவும் முதலமைச்சர் கலைஞர்
தலைமையில் நிகழ்ந்தது.நான்தான் மேடையில்
நிகழ்ச்சி நெறியாளனாக இருந்தேன்.எழுத்தாளர் பேரவையின் தலைவர் என்ற
முறையில்,பாவலர் ஐ.இளவழகு அவர்கள், வரலாறு கண்டறியாத
தமிழக அரசின் வரவேற்புக்கும்
சுற்றுலா ஏற்பாட்டுக்கும் நன்றி
சொல்லி,நல்லதோர் உரையாற்றி
னார்.இளவழகுவும் நானும் இணைந்து,
இரண்டு இமாலய ரோஜாப்பூ
மாலைகளை-கலைஞருக்கும்
பேராசியருக்கும் அணிவித்தோம்.
அரங்கம் அதிர்ந்தது.

அனைத்தையும் அழகாய் நிகழ
வைத்த ஔவை அவர்கள், அடக்கத்தின் வடிவமாய் அரங்கத்தின் எதிரே
முன்வரிசையில்,புன்னகைப்பூ இதழ்களுக்கிடையே பூத்தவராய் அமர்ந்திருந்தார்.மேடையில் வந்து
தோன்றவில்லை!

எனது கைவண்ணம் என்கிற
மைவண்ண மலர் ஒன்றையும்
“மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கங்களின் தேசியப் பேரவை
தமிழகச் சுற்றுலா மலர்” என்ற
தலைப்பில் 56 பக்கங்களிலே
உருவாக்கியிருந்தேன்.கலைஞர்
அவர்களின் கையிலே அந்த மலரைக்
கொடுத்து,மேடையிலே அதனை
வெளியிடும்படி வேண்டினேன். அவரும் எனது கரத்திலிருந்து அதனைப் பெற்று, வெளியிட்டு,அதற்கொரு வெளிச்சத்தை விதைத்தார்.

கலைஞருக்கு முன்பாக ,பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்,மலேசியத் தமிழ்
எழுத்தாளர்களை வரவேற்றும்,
மலையகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே நிலவி
வரும் நீண்டகாலத் தொடர்புகள்
பற்றியும்,அவருக்கே உரிய நடையில் அருமையாகப் பேசினார்!

கடைசி முழக்கம் கலைஞர்
முழக்கம்! அவர் தனது கரகரத்த
குரலெடுத்து,மிகுந்த கையொலிக்
கிடையே தனது கடல் மடையைத்
திறந்தார்! மகிழ்ச்சி ஆரவாரம்
பொங்க,வரவேற்பு விருந்து
நிகழ்ச்சி, அன்று ஒரு புதிய
வரலாறு எழுதியது!

மறுநாள், மலேசியத் தமிழ்
உறவுகளுக்குச் சென்னையில்
நட்சத்திர உணவு விடுதிகள்
பலவற்றில்,மலேசியா வாசுதேவன், நடிகர் சிவக்குமார்,
இயக்குநர் ஏக்நாத்,
வி.ஜி.சந்தோசம்
போன்றோர் வரவேற்பும் விருந்தும்
வழங்கிச் சிறப்பித்தனர்.

மூன்றாம் நாள் அரசு ஏற்பாடு
செய்திருந்த சிற்றுந்துகளில்,
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின்
தமிழகச் சுற்றுலா தொடங்கியது.

திருவரங்கம் சென்றோம்.திருச்சி
சென்றோம்.இந்த இரண்டு இடங்
களிலும் வரவேற்பும் விருந்தும்
வழங்கினார்கள்.வற்றாத
பொன்னிநதி மக்களின் வஞ்சனை சேராத வரவேற்பில்
மலேசியத் தமிழர்கள் மயங்கிப்
போனார்கள்.அடுத்ததாக, மதுரை
சென்றோம்.

மதுரைமா நகரில் எங்களுக்கு
மதுரமான வரவேற்பும் மங்கலமான விருந்தும் வழங்கியவர் யார் தெரியுமா?

டாக்டர் திருமதி தாரா நடராசன்
அவர்கள்! அந்த விருந்து விளைச்சலும் அதிமதுரச் சொல்லழகர்
ஔவையால்தான்! அப்போது
டாக்டர் தாரா நடராசன் அவர்கள்
மதுரை ராஜாஜி மருத்துவ
மனையின் (டீனாக)தலைவராக
இருந்தார்கள்.அன்பே உருவாகி
வந்த அம்மாஅவர்கள்,
எங்களைக் கனிவுடன்வரவேற்று,
விரும்பி உண்பதோர் விருந்தும் படைத்துப் பெருமைப்படுத்தினார்கள்.
மலைநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களோ, மகிழ்ந்தும்
நெகிழ்ந்தும் போனவர்களாய்
அம்மா அவர்களுக்கு நன்றி
சொன்னார்கள்.அன்றுமுதல்
இன்றுவரை அம்மா தாரா
நடராசன் அவர்கள்மீது நான் பேரன்பும்
பெருமதிப்பும் கொண்டவன்
ஆனேன்.

மதுரையிலிருந்து திருநெல்வேலி!அங்கிருந்து
கன்னியாகுமரி!அங்குக் காண
வேண்டியதையெல்லாம் கண்குளிரக் கண்டார்கள் மலேசிய
எழுத்தாளர்கள்.மறுநாள்
திரும்பினோம்! வருகிற வழியில் வள்ளியூரில்
ஈப்போ திருமதி இராமநாயகம்-அது தனது சொந்த ஊர் என்று
இறங்கிக் கொண்டார்.அடுத்ததாக,
வடக்கன் குளம் வந்தோம்!

ஈப்போ அன்னக்கிளி இராசையாவின்
ஊர் அது!அங்கும்
அவருடைய முயற்சியால் மகிழம்பூவாய் வரவேற்பு விழா ஏற்பாடு
செய்திருந்தார்கள்.ஆளுக்கொரு
புத்தகக்கட்டுப் பரிசு வழங்கி,வயிற்றுக்கும் நல்லுணவு
படைத்தார்கள்.வாழ்க வடக்கன்
குளம் என்று இன்றும் என் மனம்
வாழ்த்துகிறது.அன்புச்சகோதரி
அன்னக்கிளி இராசையாவுக்கும்
நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்
ளேன்.
அடுத்து எங்கே? மறுபடியும்
மனத்தை மயக்கும் மதுரை!
இரவு அங்கே தங்கினோம்!

இரவுபோய் காலை வந்தது! பசியாறினோம்!
பயணச்சிற்றுந்துகள்புறப்பட்டன!,
திருச்சி வழியாகச் சென்னை வந்து சேர்ந்தோம்!
தவமிருந்து மலேசியத் தமிழ்
எழுத்தாளர்கள் பெற்ற தமிழகச்
சுற்றுலா இது!
மறக்க முடியுமா? மறைக்கத்தான்
முடியுமா?
கலைஞருக்கும் ஔவைக்கும்
கைகுவித்த வணக்கமும் நன்றியும் காலமும் உரியதாகும்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *