தின செய்தி நாளிதழில் இன்று (29.06.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 41)
‘‘ஈரமும் வீரமும் இணைந்த புரட்சித்தலைவர்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
அப்போது மழைக் காலங்களில் இயற்கை சீறியபோதெல்லாம் ஏழை எளிய மக்கள் இன்னல்களுக்கு இரையானார்கள். வெள்ள நீரில் மக்கள் தவிக்கும் நிலை உருவானால் வினாடியும் தாமதிக்காமல், அரசு என்ன செய்யப் போகிறது என்று காத்திராமல், ஏதோ திருமண வீடுபோல புரட்சித்தலைவரின் வீட்டில் சமையல் தொடங்கிவிடும். ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சமைத்து, அவற்றை அண்டா அண்டாவாக நிரப்பி அல்லற்பட்டவர்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று, பொட்டலங்களாகக் கட்டி வழங்காமல், விருந்துபோல பரிமாறிச் சாப்பிடச் சொல்லி அவர்கள் பசியாறுவதைக் கண்டு மகிழ்ந்தவர் மக்கள் திலகம். இந்தச் செயற்பாடுகளைப் பின்னணியில் இருந்து மேலாண்மை செய்தவர் அருளாளர் ஆர்.எம்.வீ.
அப்பொழுதெல்லாம் ‘மழை பெய்து வெள்ளம்’ என்றால் அங்கே புரட்சித்தலைவர் சாப்பாடு போடுவது என்பது நிலையான நிகழ்ச்சியாகவே ஆகிவிட்டது. அதைப் போலவே எங்குக் குடிசைகள் தீப்பற்றி எரிந்தாலும் அங்கே உடனே உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்ய புரட்சித்தலைவர் தவறியதே இல்லை.
அந்நாளில் மலிந்திருந்த ரிக்ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கியவர் வள்ளல் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் பின்னணி சுவையானது என்று அருளாளர் விளக்கியதை எழுத்துச் செம்மல் இராணி மைந்தன் வரைந்து காட்டியதை அப்படியே எடுத்தாள்கிறேன்.
ஒருநாள் புரட்சித்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தார். மழைக் காலம் அது. வழியில் ஒரு நெகிழ்ச்சியான காட்சியைக் கண்டார். ரிக்ஷாவில் அமர்ந்து செல்பவர் மழையில் நனையாமல் இருக்கையின் மேலிருந்த படுதாவுக்குள் பத்திரமாக இருக்க, ரிக்ஷாவை ஓட்டிச் செல்லும் தொழிலாளி சொட்டச் சொட்ட நனைந்து சென்ற காட்சி புரட்சித்தலைவரைத் துணுக்குற வைத்தது.
வீட்டுக்குள் சென்றதும் தன் தமையனார் எம்.ஜி.சக்கரபாணியிடம் தான் கண்ட காட்சியை உருக்கமாக விவரித்தார்.
‘‘ரிக்ஷாக்காரன் மழையில் நனையாமல் எப்படி வண்டி ஓட்ட முடியும்?” என்று இயல்பாகக் கேட்டார் சக்கரபாணி.
‘‘ஏன்… இதற்கு வேறு வழியே இல்லையா?” என்று துடிப்போடு எம்.ஜி.ஆர். கேட்க, நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவரான அவருடைய அண்ணன், ‘‘ரிக்ஷாக்காரன் மழைக்கோட்டு போட்டுக் கொண்டா ஓட்டுவான்” என்று பேச்சுவாக்கில் சொல்ல, எம்.ஜி.ஆருக்குப் பொறி தட்டியது.
மழையில் நனையாமல் ரிக்ஷா ஓட்ட ரிக்ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்குவது என்ற எண்ணம் அந்த வினாடியே அவர் மனத்தில் உருவாகிவிட்டது.
உடனே, அருந்துணைவரான ஆர்.எம்.வீயை அழைத்துத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆர்.எம்.வீக்கோ, சட்டென்று ஏதும் புரியவில்லை. ‘‘மழைக்கோட்டு தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்று விசாரியுங்கள். புதுமையாக ஏதும் செய்ய முடியுமா என்றும் யோசியுங்கள்” என்றார் புரட்சித்தலைவர்.
புரட்சித்தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பழகிவிட்ட ஆர்.எம்.வீ. உடனே செயலில் இறங்கினார். சிக்கனமாக இதைச் செய்ய முடியுமா என்று விசாரித்தார். கருத்து வேகமும், கணக்கிடும் திறமையும் கொண்ட ஆற்றலாளர் ஆர்.எம்.வீ.
பிளாஸ்டிக் என்ற பொருள் அறிமுகமாகியிருந்த நேரம் அது. தேவி தியேட்டர் அதிபர் இராஜகோபால் செட்டியாரின் சகோதரர்கள் அப்போது பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களிடம் ஆர்.எம்.வீ. உடனே விசாரித்தார். அந்நாளில், பத்து ரூபாய்க்குள் ஒரு பிளாஸ்டிக் மழைக்கோட்டை தயாரிக்க முடியும் என்று தெரிய வந்தது. புரட்சித்தலைவரிடம் சொன்னார். கிட்டத்தட்ட ஆறாயிரம் மழைக்கோட்டுகள் தயாராயின. நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் இப்போது வள்ளுவர் கோட்டம் அமைந்த இடத்தில் மிகப்பெரிய பந்தலிட்டு ரிக்ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்கி மகிழ்ந்தார். இப்படியெல்லாம் நெஞ்சின் ஈரத்தை ஊற்றாகக் கொண்டிருந்தார் புரட்சித்தலைவர். பின்னாளில், அவர் முதலமைச்சராக மாறி அரசாண்ட பெருமிதம் அனைவரும் அறிந்தது.
முதலமைச்சராக இருந்த, புரட்சித்தலைவர் நலிந்த நிலையில் இருந்தபடியே, வழங்கிய விடுதலை விழாச் செய்தி, குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளையொட்டி நியூயார்க் நகரிலிருந்து அவர் வெளியிட்ட விடுதலை விழாச் செய்தியின் ஒரு பகுதி…
‘‘நான் வணங்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழிநடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே! இந்தியச் சுதந்திரத் திருநாளையொட்டி உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை பெற்ற இந்தியா இன்று தனது நாற்பதாண்டு நிறைவை விழாவாகக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்த இலட்சக்கணக்கான தியாகிகளுக்கு இந்நாளில் நமது அஞ்சலியைக் காணிக்கை ஆக்குவது நமது நீங்காக் கடமை ஆகும்.
சுதந்திர இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய சக்தியாக எழுந்து வருகிறது. சமாதான சகவாழ்வு என்கிற மிகப்பெரிய குறிக்கோளுக்கு நமது நாடு குரல் கொடுத்து வருகிறது. கடந்த நாற்பதாண்டுகளில் விவசாயம், தொழில் வளர்ச்சி, கல்வி, பாசனம், மின்உற்பத்தி, போக்குவரத்து போன்ற எல்லாத் துறைகளிலும் பெருத்த முன்னேற்றம் கண்டுள்ளோம். என்றாலும் வறுமை, அறியாமை, சமூகக் கொடுமைகள், வேலையின்மை போன்ற தீமைகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.
மைய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சரிவரச் செயல்படச் செய்வதும், அவற்றின் பயன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது நமது ஆக்கப்பூர்வமான கடமைகள் ஆகும்.
ஒற்றுமையும், முயற்சியும், உழைப்பும் இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்பதை முன்னேறிய நாடுகளின் வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இந்நிலையில், நமது ஒன்றுபட்ட சக்தியின் வலிமையைக் குலைக்கும் வகையில் மதவெறியும், சாதிவெறியும், வன்முறைவெறியும் ஆங்காங்கே தலைதூக்கி வருகின்றன. இந்தத் தீய சக்திகளை அடியோடு ஒழிக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றியில்தான் நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த ஆண்டு விடுதலை விழாவை ஓரளவு நிம்மதியுடன் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது எனலாம்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக மக்கள் உள்ளத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது நமக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது.
இந்நிலை காண, அண்ணாவின் பெயரால் அமைந்த தமிழக அரசு சிறிதும் தொய்வின்றி கடந்த சில ஆண்டுகளாகப் பெரு முயற்சி செய்து வந்ததைத் தமிழகம் அறியும்.
நமது உள்ளத் தவிப்பை உணர்ந்த இந்தியப் பிரதமர் அன்னையார் அவர்கள், தீவிர முயற்சி எடுத்து அயராது பேச்சுவார்த்தை நடத்தி ஓர் உடன்பாடு கண்டுள்ளார். மாபெரும் தேசமான இந்தியாவின் தலைவராகவும், நடுநிலை நாடுகளின் நாயகராகவும், உலக சமாதானக் காவலராகவும் நின்று, பெரும் பொறுப்பை ஏற்று இந்திய-இலங்கை உடன்பாடு கண்டதன் வாயிலாக நமது பிரதமர் அவர்கள் மிகப்பெரிய சரித்திரச் சாதனை நிகழ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. இந்த உடன்பாட்டின் காரணமாக இந்துமாக்கடல் பகுதியில் அமைதிக்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாகத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு இலங்கைத் தமிழ்ப்பகுதிகளில் அமைதி ஏற்படுவதையும், அங்குள்ள மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி வருவதையும் கண்டு தமிழக மக்கள் பெரிதும் நிம்மதி அடைய வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களைச் சமஉரிமை படைத்தவர்களாக நடத்துவதுதான் இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக இருக்கும் என்பதை அங்குள்ள பெரும்பான்மையினர் உணரவேண்டும். மாபெரும் தேசமான இந்தியாவின் நல்லெண்ண முயற்சிக்கு வலிவு சேர்ப்பதே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர்-தமிழர் ஆகிய அனைவரின் கடமை என்பதையும் இந்நேரத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த உணர்வுகளோடு தமிழக மக்கள் கூடுதல் உற்சாகத்துடன் நாட்டுக்கான கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களையும், சமூக நலத் திட்டங்களையும் வெற்றியுடன் நிறைவேற்றி சீரான வளர்ச்சிக்கு வழிகாட்டும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சாதி மதப் பூசல்கள், வன்முறைகள், தலைகாட்டாத வகையில் அமைதிப் பூங்காவாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தேசிய ஒருமைப்பாட்டு முயற்சிகளுக்கு வலிவு சேர்க்கிற பணிகளில் தமிழ்நாடு ஆர்வமுடன் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இதே நிலையைத் தொடர்ந்து கட்டிக் காத்திட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடுகிறேன்.
வன்முறை, வெறித்தனம், வதந்தி பரப்புதல், மக்களைப் பிளவுபடுத்தல் இவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ள சீர்குலைவுச் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் என்று இன்று நாம் அனைவரும் சபதம் ஏற்றிடுவோம்!
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும், ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்.
நாடு இன்றிருக்கும் சிக்கலான சூழ்நிலையில் சிறுபான்மை மக்களின் நலனைக் காத்தும், ஏழை, எளிய மக்களின் உள்ளக் கிடக்கைகளுக்கு உருவம் கொடுத்தும், பயங்கரவாதத்தை எதிர்த்தும், அந்நியச் சக்திகளின் தீய எண்ணங்களை முறியடித்தும், தனது அயராத உழைப்பாலும், சிறந்த இராஜதந்திரத்தாலும் இந்திய நாட்டைக் கட்டிக்காத்துவரும் நமது பிரதமர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்போம்.
இத்திருநாளில் தேசிய ஒற்றுமை ஓங்கவும், அனைத்து முயற்சிகளுக்கும் நாம் துணையாக நின்று நாட்டையும் மக்களையும் உயர்த்துவோம்.
‘உழைப்பவரே உயர்ந்தவர், உழைப்பே உயர்வு தரும்’ எனும் மூலமந்திரத்தை மனத்தில் இருத்தி, ‘உழைப்பால் நாட்டை உயர்த்திட வாரீர்’ என அனைவரையும் அன்புக் கரங் கூப்பி விடுதலைத் திருநாள் வாழ்த்து கூறி மகிழ்கிறேன்.
வாழ்க சுதந்திரம்! வாழ்க தமிழ்நாடு! வெல்க இந்தியா!
அண்ணா நாமம் வாழ்க!”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment