மு.பி.பா. மறைவு!
=================
பேராசிரியர் மு.பி.பா. மறைவைக் கேட்டு அதிர்ந்தேன். என் மகன் அருள் இதை நேற்று என்னிடம் கூறியபோது என்னால் நம்ப முடியவில்லை.
எண்பதைத் தொட்ட வயதென்றாலும் கட்டுக்குலையாமலும், திராவிடத் தழல் அணையாமலும் திகழ்ந்த பெருமை மு.பி.பா. அவர்களைச் சாரும்.
மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தின் உணர்வுகளில் ஊன்றித் திளைத்த மாணவராகவும், தலைவராகவும், பேராசிரியராகவும், முதல்வராகவும் திகழ்ந்த பெருமை மு.பி.பா. அவர்களைச் சாரும்.
தலைவர் கலைஞரிடத்திலும், தலைவர் ஸ்டாலின் இடத்திலும் அவர் பெரு மன நெகிழ்ச்சியுடைவர் என்பதை பல நிலைகளில் நான் அறிந்திருக்கிறேன்.
பத்து நாட்களுக்கு முன்பு கூட, சௌந்தர பாண்டியனாரைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன், படித்தீர்களா என்று கேட்டார்.
திராவிட இயக்கம் தமிழுக்கு ஆற்றி வருகின்ற பணிகளையெல்லாம் நாடு மறந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குமிங்கும் சென்று திரட்டிய கருத்துகளை அவர் தொகுத்து வந்ததும், நூலாக எழுதியதையும் நாம் மறக்க முடியாது.
எல்லா நிலைகளிலும் விழிப்பாக வாழ்ந்த பேராசிரியர் மு.பி.பா. அவர்கள் எப்படி இந்த தவிப்புக்கு ஆளானார் என்று நம்மால் அறிய முடியவில்லை.
அவருடைய நன்மக்களும், தந்தையின் மீது பரிவு காட்டிய மக்கட் செல்வங்களாகத் திகழ்ந்தார்கள். பேராசிரியர் மு.பி.பா. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர். அவர் வாழ்வதோடு அவருடைய கனவாக மிளிர்ந்த ஐயாபுரம் தொகுதியில் அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருப்பதை நான் என் கண்களால் காண வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஐயாபுரத்துக்கே அவருடைய இல்லத்துக்குச் சென்று நான் விருந்து அருந்தியவன்.
வாய்ப்பு கிடைக்கும்போது, அண்ணா நகரில் அவருடைய இல்லத்துக்கு ஒருமுறை சென்று வந்திருக்கிறேன்.
பேராசிரியர் மு.பி.பா. கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் சென்று கழகக் கருத்துகளை பரப்பியதை அயல்நாட்டு தமிழ் மக்கள் எப்போதும் நினைவுகூர்ந்து பேசுவார்கள். இவர் திராவிட இயக்கத்துக்கு வாய்த்த இன்னொரு மன்னனாக, இரண்டாம் மன்னனாக வாழ்ந்து திகழ்ந்தவர். அவர் காட்டிய வழி நாட்டுக்கு நலம் பயப்பதாகும்.
—– முனைவர் ஔவை நடராசன்

Add a Comment