POST: 2020-07-06T07:06:33+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (06.07.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 42)

‘‘தாய்க்குலம் செய்த தனித்தவம்..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

ஆயிரம் பணிகள் இருந்தாலும், சில நேரங்களில், தம் சிந்தனையை சிறு குறிப்பில் பறிகொடுத்துவிடுகிற பழக்கம் புரட்சித்தலைவருக்கு உண்டு. ஒரு முறை நடந்ததை நினைவுகூர்கிறேன். முதலமைச்சரின் செயலாளராக மூத்த ஆட்சிப்பணி அலுவலரான இலட்சுமி நாராயணன் பணியாற்றிய காலமது. எதிலும் படாமல் அகலாது, அணுகாது சிறந்த பணியாற்றியவர். ஆமாம், மகன் என்றால், மகளையும் குறிக்கும். அதுதான் சட்டம் என்கிறார் செயலாளர். அதென்ன திருக்குறள்?
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்’ என்பதில் ‘‘ஏன் மகள் என்று சொல்லக்கூடாது?” என்று கேட்டார். நான் மருண்டு போய் நின்றேன். ‘‘ஈன்ற பொழுதில் மகள் என்று தாயிடம் சொன்னால் அம்மம்மா நான் பட்ட இந்த வேதனையை என் மகளும் பெறக்கூடாது என்ற தாயின் கனிவு ததும்ப மகன் என்றிருந்ததால், மகளுக்கு அந்த பாடில்லை என்று நினைத்தாளாம். அதனால்தான், மகள் என்று சொல்லவில்லை என்று கூறுவார்கள்” என்று சொன்னேன். ‘‘தாயின் பரிவு அப்படித்தான். நன்றாகச் சொன்னீர்கள்” என்று பரிவோடு அழைத்து, என் முதுகில் தட்டினார். ‘தாயின் மனம், அப்போதுகூட எவ்வளவு கனிவான மனம்’ என்று கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘‘என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தாய்மார்களே…”, என்று கூட்டத்தில் அழைக்கும் வழக்கம் அரசியல் தலைவர்களிடம் புரட்சித் தலைவர்தான் முதன் முதலில் தொடங்கினார்.
தாய்மார்கள் எந்த முறையீடுகளைச் சொன்னாலும், அவர் மனம் நெகிழ்ந்துபோய் உடனே செய்து முடிப்பார். தாய்க்குலம் என்ற சொல்லே அவரால்தான் அடிக்கடி கூறப்பட்டது.
தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றிப் பயணம் செய்வதற்கு உதவும் வண்ணம், மகளிர் மட்டும் என்னும் சிறப்புப் பேருந்துகள் கூட ஒரு தாயின் முறையீட்டால் பிறந்தது.
சென்னையில் சாலிக்கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்திற்கு அவர் இட்ட பெயர் அவரது தாயாரின் பெயர்தான். அடையாறில் இருந்த அவரது திரைக் கூடத்தின் பெயரும் சத்யா நிறுவனம்.
தாயை மையப்படுத்திய பாடல் காட்சிகளைக் கொண்டுதான் படிப்பிடிப்பைத் தொடங்கினார். தமிழில் தொடங்கிய வார இதழுக்கு அவர் இட்ட பெயர் ‘தாய்’. இப்படி அன்னைமார் நிகழ்ச்சியில், நெஞ்சம் உருகிய நிகழ்ச்சியாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
மயிலாடுதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. மக்கள் வெள்ளம் அலைமோதியது. எல்லையில்லாத மக்கள் கூட்டத்தில் இடிபாட்டுக்கிடையில் மேடை அருகே தாய்மார் இருவர் காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.
இருவருக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துகளை ஏற்றவாறு, கையசைத்தபடியே மேடைக்கு புரட்சித்தலைவர் வந்தார். தள்ளுமுள்ளு தாங்காமல் மக்கள் முண்டி வந்தனர். அந்தப் பெரும் நெரிசலில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதை எப்படியோ எம்.ஜி.ஆர் கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை எப்படியாவது அழைத்து உடனே மேடைக்கு கீழே அமர வைத்தார். அவர்களுக்கு உணவும், குழந்தைகளுக்கு பாலும் தரச் சொன்னார். அந்தத் தாய்மார்கள் இருவரும் புரட்சித்தலைவரிடம், ‘‘எங்கள் கஷ்டத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க சொன்னார்கள்.
கூட்டத்தில் பேசி முடித்ததும் அவர்களைக் காண்பதற்காக மேடையில் இருந்து இறங்கினார். அந்தத் தாய்மார்கள், ‘‘வறுமையால் துன்பப்படுகிறோம், எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்கள் தையல் தொழில் செய்து பிழைத்துக்கொள்வோம். அதற்கு உதவி பண்ணுங்க” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை புரட்சித்தலைவர் வாங்கி வரச் சொன்னார்.
தன்னிடம் உதவி வேண்டுபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு உதவும் பொன்மனம் படைத்தவர் புரட்சித்தலைவர். உடனே, தையல் மெஷின்களை வாங்கி வருமாறு சொன்ன மறுகணம் ஓடோடிச் சென்ற உதவியாளர்களை திரும்ப அழைத்து, ‘‘காலில் மிதித்து தைக்கும் மெஷின் இல்லை. கையில் இயக்கி தைக்கும் மெஷின்” என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. பிறகு, தையல் மெஷின்களை அவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்ட இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க கண்கண்ட தெயவம்” என்றனர். அவர்களோடு தம் கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, ‘‘நான் சாதாரண மனுஷன்தாம்மா, தெய்வம் இல்லை. இந்த நிலைமையிலும் உழைத்துப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!” என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு ஒவ்வொருவர் கையிலும் ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்.
எத்தனையோ நிகழ்ச்சிகள் இவ்வாறு நடந்தன. தாய்மாரிடம் காட்டிய பரிவுக்கு வேறொரு நிகழ்ச்சியையும் நண்பர்கள் கூறினர். புரட்சித்தலைவரின் நெருங்கிய நண்பரும் படத் தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணம் கோவையில் நடைபெற்றது. அதில் புரட்சித்தலைவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு வந்தார்.
இது நடந்துக்கொண்டிருக்கும்போதே திடீரென தனது உதவியாளர்களைப் பார்த்தார். கூட்டத்தில் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி விட உதவியாளர்களை மீண்டும் பார்த்தார். புரட்சித்தலைவர் பார்வையின் பொருள் அவர்களுக்குப் புரியும். அமைதியாகக் கூட்டத்தில் மக்களோடு கலந்த உதவியாளர்கள், குறிப்பிட்ட அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கிருந்த ஓர் இளைஞரைப் பிடித்தனர். அங்கேயே அந்த இளைஞரை நிறுத்தி வைக்குமாறு எம்.ஜி.ஆர். குறிப்புச் செய்தார்.
அந்த இளைஞரை உதவியாளர்கள் பின்னர் அழைத்து வந்தனர். ‘‘பெண்கள் நிரம்பிய கூட்டத்தில் நீ எப்படி நடந்து கொள்கிறாய்? உன்னுடைய தாய், தமக்கை அல்லவா அவர்கள்?” என்று கேட்டவாறே இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் புரட்சித்தலைவர். பொறி கலங்கிப்போய் நின்ற இளைஞரிடம், ‘‘இனிமேல் இப்படி நடக்கக் கூடாது” என்று ஆத்திரம் பொங்கக் கடிந்து கொண்டார். ‘‘சத்தியமா இனி இப்படி நடந்துக்கொள்ள மாட்டேன் தலைவரே. என்னை மன்னித்து விடுங்கள்.” என்று காலில் விழுந்து கெஞ்சிய இளைஞரிடம், ‘‘இனிமேல் என் கூட்டம் எங்கு நடந்தாலும் உன்னை நான் பார்ப்பேன். கூட்டத்தை நீயே ஒழுங்கு செய்யும் வேலையைச் செய்ய வேண்டும்” என்று கூறியனுப்பினார். இப்படி தாய்க்குலத்திற்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்ற மனம் கொண்டவர் புரட்சித்தலைவர்.
எங்குச் சென்றாலும் தாய்மார்கள்தான் தன்னை வாழ்வித்தவர்கள் என்ற அடிப்படையில், தாயையும், உடன் பிறப்பையும், தலைவர் அண்ணாவையும் மூன்று தொடர்கள் அமைந்த கண்ணியாக பேச்சைத் தொடங்குவார்.
மகளிர் மாட்சியை மதித்த மனத்தோடு அவர் ஆற்றிய பாரதியார் நூற்றாண்டு தொடக்க விழாச் சொற்பொழிவின் சில பகுதிகளைக் காணலாம்…
‘‘நேற்றைய நிகழ்ச்சியையும் இன்றைய நிகழ்ச்சியையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். நேற்றுப் பேசிய பெண்களின் பேச்சு போராட்டத்திற்குத் தயாராக இருந்தது. இன்று இங்கே பேசிய ஆண்களின் பேச்சு, சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இருந்தது.
நேற்று எழுச்சியுடன் நடை பெற்ற மகளிர் பேரணியை ஊர்வலம் என்று சொல்வதா? பேரணி எனச் சொல்வதா? போராடச்செல்லும் வீராங்கனைகளின் அணிவகுப்பு என்று சொல்வதா? என்று எண்ணிப்பார்க்கும் போது எந்தப் பெயர் சொல்லி அழைத்தால் பொருத்தமாக இருக்குமோ அந்தப் பெருமைக்கு வழிவகுத்த அந்த வீராங்கனைகளுக்கு நான் தலை வணக்கம் செலுத்துகிறேன்.
அவர்களை ஊர்வலத்தில் கலந்துகொள்ள அனுமதித்த அவர்களது குடும்பத்து ஆண்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எவ்வளவு பெரிய நம்பிக்கையில் பெண்களை அவர்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவர்களது தகுதியை உணர முடியும்.
என் வாழ்நாளில் இதுபோன்ற ஊர்வலத்தை இதுவரை நான் கண்டதில்லை. அதிகப் பொதுமக்களும் அரசில் வேலை செய்யும் அதிகாரிகளும் தங்களை ஊர்வலத்தில் இணைத்துக்கொண்டு சில கிலோமீட்டர் தூரம் நடந்து வரும் நிகழ்ச்சியை இதுவரை நான் கண்டதே இல்லை. நேற்று, வங்கியில் பணிபுரிவோர், தனிப்பட்ட மகளிர் அனைவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் எதுவும் போடவில்லை. அவர்கள் தாங்களாகவே வந்து கலந்து கொண்டது, எதிர் காலத்தைப் பற்றி நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருக்கிறது.
நேற்று செல்வி ஜெயலலிதா அவர்கள் இங்கே ஒரு பயங்கரமான கருத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார். அது பத்திரிகைகளில் எல்லாம் வந்திருக்கிறது. ‘‘வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்துபவர்களை தூக்கில் போட வேண்டும்” என்று சொன்னார். அதையும் உடனே போடவேண்டுமாம், காலதாமதம் கூடாதாம். கருணை மனு போடுவதற்குக் கூட நேரம் தரக்கூடாதா? என்ன கோபம்? என்ன ஆத்திரம்? நேற்று இதுபற்றிச் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.
திருமணம் செய்து கொள்ள வரும் ஆண்கள், தட்சணை கேட்பது என்றால் அது நியாயமில்லை. நான் சொல்வதெல்லாம் பெண்கள் ஆண்களிடம் தட்சணை கேட்க வேண்டும் என்பதுதான்.

‘‘நான் படித்தவள்; பணியாற்றுகிறேன்! எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?” என்று பெண்கள் கேட்க வேண்டும். ஸ்ரீதனம் என்கிறார்கள். ஸ்திரீ தனமா, ஸ்திரீ தானமா, எது எப்படி ஆயிற்று என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெண்களைத் தானமாகக் கொடுத்து, சொத்துகளையும் கொண்டு செல்கிறார்கள். அப்படிக் கொண்டு செல்பவர்கள் பெண்களை வாழ வைக்க வேண்டாமா? அரைப் பவுன் நகை குறைந்து விட்டது என்பதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்துவிட்டால், அதை அனுமதிக்கலாமா?” என்று தாய்க்குலத்துக்கான குரலாக ஒலித்தார் புரட்சித்தலைவர்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *