தின செய்தி நாளிதழில் இன்று (27.07.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 45)
‘‘மதி நுட்பம் நூலோடுடையார்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்போதே, மாணவர் மன்ற நிகழ்வுகளில் தலைவர்கள் பலரை உரையாற்ற அழைப்பது வழக்கம். அந்த வகையில்தான் புரட்சித்தலைவரை அழைத்து அவரை பேச வைத்து கல்லூரிப் பருவத்திலே நான் சிறப்படைந்தேன். அதேபோலதான் நான் விரும்பி அழைக்க முயன்றது மூதறிஞர் இராஜாஜியைத்தான்.
மூதறிஞர் இராஜாஜி மீது எப்படி ஈடுபாடு என்று கேட்டால், தந்தை பெரியாரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். பலமுறை தந்தை பெரியார் தன்னுடைய விடுதலை, குடியரசு இதழ்களில் மூதறிஞர் இராஜாஜி வெளியிடுகின்ற ஒவ்வொரு கருத்துக்கும் மறுப்புரை வழங்குவார். மிக இயல்பாக தந்தை பெரியார் சொன்னது, ‘‘மூதறிஞர் எது சொன்னாலும் கண்ணை மூடி மறுத்தால், சிந்திக்கும் பழக்கம் அனைவருக்கும் வளரும்.” அதனாலோ என்னவோ அவர் மீது தனியார்வம் வளர்ந்தது. மூதறிஞர் இராஜாஜி 10.12.1878-ல் பிறந்தவர். தந்தை பெரியார் 17.09.1879-ல் பிறந்தவர். மூதறிஞர் மறைந்த தேதி 25.12.1972. பெரியார் மறைந்த தேதி 24.12.1973.
தந்தை பெரியாரின் புரட்சிப் புதுமை திருமணத்தை முழுமையாக ஆதரித்து நல்வாழ்த்து வழங்கியவர் மூதறிஞர்தான். மூதறிஞரின் பெயரன் இந்திய அயலகத் துறையின் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய இராஜ்மோகன் காந்தி ஓர் அழகான ஆங்கில நூலை எழுதியுள்ளார். அந்நூலில் அண்ணல் காந்தியடிகளுக்கு ஏறக்குயை ஐம்பது கடிதங்களையும், அவருடைய மாப்பிள்ளை தேவதாசு காந்திக்கு இருபது கடிதங்களும் அவருடைய பெயரன் இராஜ்மோகன் காந்திக்கு இருபது கடிதங்களையும் மிக செவ்விய முறையில் மூதறிஞர் எழுதியதை வெளியிட்டிருக் கிறார்கள்.
இந்த நூலைப் படித்த பிறகுதான் மூதறிஞரின் சிந்தனை ஆழம் பொருந்திய கருத்துகளை மேலும் காண முடிகின்றன. மூதறிஞர் எழுதிய “குறை ஒன்றும் இல்லை” என்ற இசைப்பாடல் உலகப்புகழ் எய்தியது. அவர் எழுதிய சோக்ரதர், வாழ்வியல் சுருக்க நூல் அறிவாழம் கொண்டது.
மூதறிஞர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது, ஒவ்வொரு அரசுக் கோப்பிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்புகளை எழுதி விளக்கம் பெறாமல் அந்த கோப்பை நிறைவு செய்வதில்லை.
அந்நாளில், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களில் முதற்பணி நிலையே Under Secretary என்பதாகும். பணியில் மூத்தவர்கள், பதவியுயர்வு பெற்று வருகிறபோது, இருவருக்கும் வேறுபாடு காட்ட இரு சொற்கள் Assistant Secretary, Under Secretary பயன்பட்டன. அது ஏன், வேறுபாடு காட்ட வேண்டும் என்று அப்போது பணி மூப்பு பெற்றோர் ஒரு முறையீடு வைத்திருந்தனர். மூதறிஞரின் செயலாளர்களில் ஒருவர் பணிமூப்பு கொண்டவர்களுக்கும், இந்தப் பெயர் மாற்றத்தை நீக்குவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் கருதிப் பார்க்க வேண்டும் என்று விண்ணப்பம் வைத்திருந்தார். ஆங்கிலத்தில், மூதறிஞர் எழுதிய குறிப்பு சார் செயலாளர் எப்போதும் செயலாளராவதில்லை, ஆனால், முதல் படி நிலையில் சேர்ந்த ஆட்சிப் பணி அலுவலர் குறைந்தது பத்தாண்டுகளில் செயலாளராகி விடுவார்கள். (They are under study for the Secretary Post. For Assistant Secretaries it is a high attempt to think about Secretary Post) என்று எழுதியதை ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவார்.
சென்னை இராஜாஜி மண்டபத்தில் 08.12.1977 அன்று மூதறிஞர் இராஜாஜி அவர்களின் 100ஆவது பிறந்த நாள் விழாவில், அன்னாரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து புரட்சித்தலைவர் ஆற்றிய உரை…
“தன் மனத்தில் தோன்றுவதை வெளிக்காட்டி அதைச் செயல்படுத்தப் பின்வாங்குபவன் பொறுப்பேற்கத் தகுதியற்றவன்” என்று மூதறிஞர் இராஜாஜி அவர்கள் சொன்னார்கள்.
இராஜாஜி அவர்களின் நேர்மையைப் பற்றியும், நிருவாகத் திறனைப் பற்றியும் இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். யாருக்கும் அஞ்சாமல், விட்டுக்கொடுக்காமல், கருத்தை எடுத்து வைப்பதில் வல்லவர் இராஜாஜி அவர்கள்.
அதுபோல என் உள்ளத்தில் எழுந்த கருத்தைச் சொல்வது அவரைப் பின்பற்றுகிற நீங்களும், மேடையிலே அமர்ந்திருப்பவர்களும், விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
ஒருமுறை இராஜாஜி அவர்கள் தில்லியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, அசம்பாவித நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மரியாதை தெரியாத ஒருவன் – இங்கிதம் தெரியாத ஒருவன் – பெரியவர்களை மதிக்கத் தெரியாத ஒருவன் – அழுகிய கோழி முட்டையை அவர் மீது எறிந்துவிட்டான்.
அந்த அழுகிய கோழி முட்டை அவர் சட்டையில் பட்டுவிட்டது. ஆத்திரப்படாமல் துடைத்துக் கொண்டார். அப்போது அவர், “நான் எதற்காகப் பாடுபடுகிறேன், உழைக்கிறேன் என்றால், இப்படிப்பட்ட அழுகிப் போனவர்களின் உள்ளத்தைத் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான்” என்றார்.
இராஜாஜி அவர்களின் பணிகளை எண்ணி, அமரர் பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற செயல்பட்டு வருகிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். மக்கள் நாணயமாக வாழ வேண்டும் என்று இராஜாஜி அவர்கள் விரும்பினார்கள். மக்கள் நாணயமாக வாழ்வதற்குப் பாதுகாப்புத் தர வேண்டியது அரசின் கடமை என்பதை நான் உணருகிறேன்.
இங்கே பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களும், புத்தகங்களும் வழங்கப்பட்டதைப் பார்த்தீர்கள்.
எதற்காக இவைகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இவர்களின் பேரன், பேத்திகள் இவர்கள் பெற்ற பரிசுகளைப் பார்க்கும்போது, மூதறிஞர் இராஜாஜியின் 100ஆவது பிறந்த நாள் விழாவில் பெரியவர்கள் மற்றும் ஆளுநர் முன்னிலையில், முதலமைச்சர் வழங்கினார் என்ற செய்தியைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பெருமையாக இருக்கும்.
அதற்கு மாறாகத் தனது தாத்தா வெடிகுண்டு வைத்தார்; தீ வைத்தார்; பஸ்ஸைக் கொளுத்தினார்; கல்லெறிந்து பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினார்; பெண்கள் என்றும் பாராமல் கல்லெறிந்து, அவர்களைக் காயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார், கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற செய்தியைப் பார்ப்பார்களேயானால், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் இருக்க, அவர்கள் ஆக்க முயற்சியில் ஈடுபட, ஊக்கம் அளிக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுகிறேன்.
இன்றைக்கு மூதறிஞர் இராஜாஜி அவர்களை எதற்காகப் பாராட்டுகிறோமோ, அந்த மூதறிஞர் பிறந்த நாட்டில், நாட்டின் முன்னேற்த்திற்காக யார் தடையாக இருந்தாலும் – அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். ஆட்சியில் இருக்க உரிமை வழங்கும் மக்களின் நம்பிக்கையை பெற்ற மூதறிஞர் இராஜாஜி அவர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் செயல்பட்டார்கள். இராஜாஜி அவர்கள் பதவிக்குச் சென்று சட்டமன்றத்தில் பேசும்போது ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார்கள் என்பதை நான் கூறியிருக்கிறேன்.
“நான் தொலைநோக்குப் பார்வையோடு 100 ஆண்டுகளுக்குப் பயன்படும் திட்டத்தைப் போடுகிறேன். ஆனால், அதே நேரத்தில் அடுத்த வினாடி பதவி விலக இராஜினாமா கடிதத்தை சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்” என்று குறிப்பிடுவார்கள். மாஜிஸ்திரேட்டாக இருந்து, நீதிபதியாக, உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
மூதறிஞர் இராஜாஜி அவர்கள் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக, உயர்ந்த பதவியில் இருந்தவர். ஆனாலும்; இராஜாஜி அவர்கள் உயர்ந்த பதவி, சின்னப் பதவி என்று கணக்குப் பார்க்காமல், மக்களுக்கு தொண்டாற்றுவதில் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி அவர்கள் மேற்கு வங்கத்தின் கவர்னராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
அதற்குப்பிறகு, தமிழகத்தில் பல மாநிலங்கள் ஒன்றாக இருந்த சென்னை மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவாக இருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக – வேறு கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக – முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
அப்போது திறமையான நிருவாகத்தால், தூய்மையான ஆட்சியை நடத்தினார். தனக்கு கெட்ட பெயர் வரும் என்று கருதாமல் மக்கள் நலனுக்காகத் துணிச்சலோடு செயல்பட்டார். கட்சி நலன் கருதாமல், பொதுமக்களின் நலனையே முக்கியமாகக் கருதிச் செயல்பட்டார்.
தமிழகத்தில் மீண்டும் உண்மையான மதுவிலக்குக் கொண்டு வர வேண்டும் என்று இராஜாஜி அவர்கள் கூறினார்கள். இராஜாஜி அவர்கள் கண்ட கனவை நனவாக்க மதுவிலக்கு கண்டிப்பாக அமல் நடத்தப்படும்.
உறவு, கட்சி, ஜாதி, மதம், வசதி படைத்தவர்கள், வேண்டியவர்கள் என்று எதைப்பற்றியும் பாராமல், இராஜாஜி அவர்களின் கொள்கையான மதுவிலக்கு அமல் நடத்தப்படும். மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கையை நிறைவேற்ற எது குறுக்கே நின்றாலும் அது அகற்றப்படும்.” என்றார்.
அதேபோல, 24.12.1979 ஆம் நாளன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராஜாஜி முழு உருவச் சிலைத் திறப்பு விழாவில் உரையாற்றிய புரட்சித்தலைவர்,
‘‘அ.இ.அ.தி.மு.க-வை நான் தொடங்கியதும் முதல் முறையாக மூதறிஞர் இராஜாஜியைச் சந்தித்தேன். அவர் ஆசி கூறி என் கையைப் பிடித்து, அவரது உறுதியினால் கண்ணீர் விடவில்லை-என்னைப் போன்றவர்கள் என்றால் கண்ணீர் விட்டுப் பேசியிருப்பார்கள்-கண்ணீர் விடாமல் உறுதியோடு பேசினார்.
‘‘மதுவிலக்கு ரத்தினால் நாட்டு மக்களை எங்கேயோ அழைத்துச் செல்கிறார்கள்: அவர்கள் நல்வழியில் வாழ உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்று என்னிடம் சொன்னார்கள் காலம் நிச்சயம் செய்யும் என்றேன். அந்தக் காட்சியைப் பார்க்க நான் உயிரோடு இருக்க வேண்டுமே என்றார். அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் இந்தச்சிலை நாம் செய்யும் கொள்கைத் திட்டங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
தமிழக அரசு எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்காது. எந்த வகையிலும் அதை அனுமதிக்காது. நாலே முக்கால் கோடி தமிழக மக்களின் சார்பில் இராமச்சந்திரன் என்ற முறையில் இல்லாமல், முதலமைச்சர் என்ற முறையில் இதைக் கூறுகின்றேன்.
மூதறிஞர் இராஜாஜி அவர்கள், தியாகத்தால் – அறிவாற்றலால் – மக்கள் தொண்டால் – உயர்ந்து நின்றார். அவரின் அறிவாற்றலை உலகம் போற்றியது. அவருக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வடக்குக் கடற்கரைச் சாலைக்கு இராஜாஜி சாலை என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இராஜாஜியின் பிறந்த ஊர்ப்பக்கத்தில் இருக்கும் ‘‘சிப்காட்” நகருக்கு ‘‘இராஜாஜி நகர்” என்று பெயர் மாற்றப்படும்.” என்றார்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment