நமது காவலன் ஆகஸ்டு 01 – 15 இதழில் வெளியான கட்டுரை
ஔவை-85
•••••••••••••••••
மனத்திற்கு இனியவர் – மாமனிதர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
(திரு.இரா.கண்ணன் அவர்களின் ஆங்கில வாழ்த்துரையின் தமிழாக்கம்)
எனது முதல் தெய்வமாக நான் கருதுகிற வழக்கறிஞர் திரு. தி.ராமலிங்கம் 1980-81களில் என்னை அப்பாவுக்கு (டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்) அறிமுகம் செய்து வைத்தார். எனது பல செயல்கள் திரு.இராமலிங்கம் அவர்களை ஒத்திருக்கும். நான் அப்பாவை நேரில் காண்பதற்கு முன்பே அவர் அப்பாவைப் பற்றி என்னிடம் அதிகம் கூறியுள்ளார். குமுதம் இதழில், ஒருமுறை அவ்வை திரு து நடராசன் எனும் அப்பாவின் முழுப்பெயரைஅவைத்திரு தி. நடராஜன் (பார்வையாளர்கள் நிறைந்த அவையை தன்வசப்படுத்தும் வல்லமை நிறைந்தவர்) என ஒரு சொல் பல பொருள் வடிவில் குறிப்பிடப்பட்டு, அப்பாவின் உரைத்திறன் பெரிதும் பாரட்டப்பட்டு எடுத்துரைக்கப்பட்டிருந்தது. அவர் குறித்த இந்த அறிமுகம் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு மிக எளிதாகக் கிடைத்தது. பரந்த மனம் உடைய பண்பாளர் அவர். சாலை வணிகர் முதல் வழிப்போக்கர் வரை அனைவரும் அவருக்கு ‘இராஜா’தான். அவரின் வாய் ஒரு நாளைக்கு நூறு முறை ‘இராஜா’ எனும் மந்திரச் சொல்லை உச்சரிக்கும். அப்பாவின் ‘இராஜா’ எனும் இச்சொல், என்னை அவருடன் நெருக்கமாக இணக்கம் கொள்ளச் செய்து அவரின் அரவணைப்பைப் பெற்றுத் தந்தது. ‘இராஜா’ என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. அவர் மனம் ஒரு பெரிய பேரரசாகும். பல இராஜாக்கள் ஆண்டனர்.
அப்பாவை நான் எவ்வளவு அதிகமாகப் பார்த்தேனோ, அவ்வளவுக்கு அதிகமாக அவரைக் கண்டு வியந்து அவரால் நான் ஈர்க்கப்படேன். ஈடில்லாப் புலமை நிறைந்த ஒப்பற்ற அறிவுக் களஞ்சியமாக அவர் திகழ்ந்தபோதிலும் தலைக்கனம் சிறிதுமில்லா தங்கமாக மிளிர்ந்தார்.. மேடையிலும் பிற இடங்களிலும் அப்பா ஆற்றிய உரைகள், அவர் புத்தங்களை எவ்வளவு ஆழமாகவும் நுணுக்கமாகவும் வாசிப்பார் என்பதை சான்றுரைத்தன. இருப்பினும் அவர் மென்மேலும் புத்தகங்கள் படிப்பதில் மிகுதியான ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுப்பும் வினாக்கள் நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டுவனவாக இருக்கும். புதுமையான சிந்தனைகள் நிரம்பிய தமிழ் அறிஞர். ஆழ்ந்த கருத்துக்களை மிக எளிமையாகவும் நகைச்சுவையாகவும் தெரிவிக்கும் ஒப்பற்ற வரம் பெற்ற பெருந்தகையாளர் அவர். ஒருமுறை அய்யா அரு.சங்கரின் (என் மற்றொரு கடவுள்), இல்லத்தில், மொழிபெயர்ப்பாளரின் பேச்சுக்குப் பிறகு தாஸ் கேப்பிடல் (மூலதனம்) குறித்த தனது கருத்துக்களை அப்பா பதிவு செய்தார். ‘சுரண்டல்’ குறித்து அவர் குறிப்பிடுகையில், ஒரு தாய் இட்லி தட்டுகளில் இருந்து மீதமுள்ள இட்லிகளை சுரண்டி எடுக்கும் காட்சிதான் தன் கண் முன் நிழலாடுகின்றன எனக் கூறினார். மார்க்சின் சுரண்டல் மற்றும் மிகை மூலதனம் போன்ற, அடிப்படையில் புரட்சிகரமான ஒரு சிந்தனை, நம்மைப் போன்ற ஒரு பிற்போக்குத்தனமான சமூகத்தில் வேரூண்றுவதற்கு காலங்கள் சில ஆகும் என்பதே அப்பாவின் வாதம்.
பிறருக்கு, அப்பா ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி மற்றும் வழிகாட்டி ஆவார். அவ்வப்போது, கலை, அறிவியல், வரலாறு என பற்பல துறைகள் குறித்து அவர் கலந்துரையாடுவார். அவரின் கருத்துக்கள் புதியனவாகவும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதுமாக இருக்கும். தன்னுடன் இருப்பவர் இளைஞராக இருக்கும்போதிலும், அவரை தன்வசம் ஈர்த்து வயது வேறுபாடின்றி அவ்விடத்தை அவர்களுக்கு ஏற்ற இடமாகக் கருதச் செய்யும் ஆற்றல் படைத்தவர். அவருடனும் அவர் சுற்றத்தாருடனும் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாகும்.. தமிழ் அறிஞர்கள், அமைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் எப்பொழுதும் அப்பாவை சூழ்ந்திருப்பர். அத்தகையவர்களுடன் இருப்பதையே அப்பாவும் விரும்பினார். அரிதாகவே அவர் தனிமையில் இருந்தார். கூட்டங்களுக்காக அவருடன் பயணம் செய்வது ஒரு அற்புதமான அனுபவம். அவருக்கு வழங்கப்பட்ட அதே வகையான உணவு மற்றும் சலுகைகள், தனது சக பேச்சாளர்களுக்கும் (அவர் எங்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூறுவார்) வழங்கப்படுவதை அவர் உறுதி செய்தார். அவரது சிந்தனைத்திறனும் பிறர் மீது அவர் காட்டும் அக்கறையும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
நான் அவ்வப்போது தலைமைச்செயலகத்தில் அவரை சந்திப்பேன். சிறிது அரிசி, பருப்பு வகைகள் மற்றும் மோர் அடங்கிய எளிமையான மற்றும் நீரிழிவிற்கான உணவை அப்பா உட்கொள்வார். அவரைக் காண வரும் பல பார்வையாளர்காளிடம் கேட்டுக்கொள்வது போல், என்னிடமும் உணவு உண்ணுமாறு கூறுவார். அவர் என்னைப் பற்றியும் எனது எதிர்கால திட்டங்கள் மற்றும் கனவுகளைப் பற்றியும் கவனமாகவும் அக்கறையுடனும் விசாரிப்பார். அவரின் இந்த கனிவு எனக்கு புதியதொரு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். பகிர்ந்தளித்தலும் பரிவும் அவரின் மரபணுவில் இரண்டற கலந்த குணங்களாகும்.
அவரின் இந்த அன்பும் பரிவும் தான் என்னை அவரை அடிக்கடி சந்திக்கச் செய்தது. மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்த என்னைப் போன்ற இலட்சியவாதிகளுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்கக்கூடிய மேன்மையாளர் அவர். நவநாகரீக தேவைகளுக்காக பிற மொழிகளை பயன்படுத்தாமல், தமிழை மட்டுமே பயன்படுத்தி குடிமைப் பணி உயரத்தை அடைந்த வெற்றியாளர். நவீன உலகிற்கு ஏற்ற சொற்கள் தமிழில் எளிதில் கிடைக்கப்பெறாத சூழலில் அப்பா ஆங்கிலத்தில் மிக இயல்பாக உரையாற்றுவார். அவரின் மேற்கோள்கள் அவரின் நினைவாற்றலையும் இரு மொழி புலமையையும் வெளிப்படுத்தின. தமிழ் அவர் மனைவி என்பதையும் ஆங்கிலம் அவர் தோழமை கொண்ட துணைவி என்பதையும் நான் உணர்ந்தேன். தனது மனைவியான தமிழ்மொழிக்கு உண்மையான கணவராக விளங்கிய அப்பா, தனது துணைவியான ஆங்கிலத்தையும் தன்வசப்படுத்தி இருந்தார். நான் அறிந்தளவில், தமிழ் அறிஞர்கள், அப்பாவின் ஆங்கிலத் திறன் குறித்தும் புலமை குறித்தும் மிகக் குறைவாகவே எடுத்துரைத்தனர். உண்மையில், தமிழ் அறிஞர்கள் பலர் அப்பா அளவிற்குப் பொதுவுடைமையாளர்களாக இல்லாத காரணத்தால் அவர்கள் தங்களைத் தமிழ் உலகத்துடன் மட்டும் இணைத்துக் கொண்டு, அரசாங்கத்தின் அல்லது அதிகாரத்திடமிருந்து இயன்றவரை விலகியே நின்றிருந்தனர்.
இலக்கியம், மொழி, கலைகள், அரசு என பல்வேறு துறைகளை மிக எளிதாகக் கடந்துச் சென்ற பன்முகத்தன்மை வாய்ந்த அப்பா என்னை மிகவும் கவர்ந்தார். ஒரு அரசு ஊழியராக, அப்பா நடைமுறைப் புதுமைகள் புரிவதாக விமர்சகர்கள் கருதினர். சில விமர்சனங்கள் பொறாமை காரணமாக எழுந்தது என்றும் மீதமுள்ளவை ஒரு அரசு ஊழியர் சந்திக்க நேரிடும் சவால்கள் குறித்த அறியாமையின் காரணமாகவே தோன்றியது என்றும் நான் கருதுகிறேன். அனைத்து தரப்பினர்களின் மதிப்பையும் அப்பா பெற்றார். புத்தக வெளியீடு, ஆண்டுவிழா, பாராட்டு விழா, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, வணிக நிறுவனம், அங்காடித் திறப்பு அல்லது ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டைப் போன்ற பெரிய மாநாடு என எந்த விழாவாக இருப்பினும் அப்பா அங்குத் தோன்றுவார். அத்தகைய விழாக்களும் அப்பாவை ஆவலுடன் எதிர்பார்த்து அவரின் உரைக்காக ஆர்வத்தோடு காத்திருந்தன. எவற்றையும் மிக எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய மென்மையான மற்றும் அறிவாழம் வாய்ந்த அழகிய தமிழ்மகன் அவர்.
பரந்த மனம், நிருவாகத் திறன் மற்றும் வழிகாட்டும் பண்பு ஆகியவை அப்பாவின் இரண்டாம் குணநலன்களாகும். நம்மில் பலர் அவரைத் தொடக்கம் முதலே அப்பா என்றே அழைத்து வந்தோம். டி.கே.எஸ் வில்லாளன், கே.சுமதி, இராமலிங்க ஜோதி ஆகியோரையும் நான் அறிவேன், மிகுந்த அன்புடனும் உவகையுடனும் நான் அவரை அப்பா என்று அழைக்கிறேன். பலரைப் போன்று எனக்கும் தந்தையை ‘டாடி’ என்றழைக்க்க கற்றுக் கொடுக்கப்பட்டது. நான் ‘அப்பா’ என்று அழைத்தது அவ்வை அப்பாவை மட்டுமே.. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதுடன் ஒரு வகையான அமைதியையும் மனநிறைவையும் அளிக்கிறது. உண்மையில், அவர் என்னை ஒரு மகனைப் போன்றே நடத்தினார்.
அவருடன் நூற்றுக்கணக்கான நாட்கள் செலவிட உண்மையில் நான் வரம் பெற்று வந்திருக்க வேண்டும். திருமதி சாவித்திரி ராகவேந்திரா அத்தை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் அவர் என்னை அறிமுகப்படுத்தினார், நான் அப்பாவின் மாணவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே எந்நேரமும் சாவித்திரி ராகவேந்திரா அத்தையைக் காண எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. (அவரின் தலையீட்டின்பேரில், எனது வழக்கை ஆக்கப்பூர்வமாக அணுகுமாறு பல்கலைக்கழக குழுவிடம் நீதியரசர் பக்தவச்சலம் அவர்கள் கூறினார். அவர்களும் அவ்வாறே நடந்தனர். எனது எல்.எல்.எம் படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் ‘சமநிலைச் சான்றிதழ் (equivalency certificate) பெற வேண்டியிருந்தது.நம் நாட்டைப் போல் இரண்டாண்டு என்று இல்லாமல் மேற்கத்திய நாடுகளில் எல்.எல்.எம் என்பது ஓராண்டுக் கால படிப்பாகும்) அப்பா இந்த வாய்ப்பை மட்டும் எனக்குப் பெற்றுத் தரவில்லை. எனக்கு அவர் நல்கிய வாய்ப்புகள் எண்ணற்றவை. அவர் எனக்கு அருளிய இத்தகைய அரிய வாய்ப்புகளுக்காக நான் எவ்வாறு நன்றிக்கடன் செலுத்தப் போகிறேன்?
1981 முதல் 1989 வரை அப்பா என் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டார். எனது உயர்கல்வி முதல் திருமணம் வரையில் என் வாழ்வில் அவரின் பங்கு அளப்பரியன. அமெரிக்காவின் ஆய்வுக் கூடங்களுக்கு நான் அளித்த மூன்று கடிதங்களில் அப்பாவின் கடிதமும் ஒன்று. ஒவ்வொரு முறை அவர் எனக்கு கடிதம் எழுதும்பொழுதும் அவர் வெளிப்படுத்திய உயர்ந்த மனப்பாண்மையை நான் நினைவுகூர்கிறேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த அரிய எழுதுபொருட்களில் வடிவமைக்கப்பட்ட அவரின் கடிதத்தைத் தமிழ் கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுச் செயலாளருடன் காட்டி நான் பெருமிதம் கொண்டேன். இது என் அமெரிக்கப் பதவிக்கு துவக்கப் புள்ளியாகும்.
விமான நிலையத்தில் என்னைக் காணப் பெருமைமிக்க அப்பா வந்திருந்தார். அவரின் பல மாணவர்களுள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற முதல் மாணவர் நான். ஓராண்டுக்கு முன்னர், வழக்கறிஞர் மன்றத்தில் நான் பதிவு பெற்றதைத் தொடர்ந்து கவியரசர் பொன்னிவளவன் மற்றும் அரு சங்கர் அய்யா ஆகியோருடன் இணைந்து அப்பா என்னைப் பாராட்டினார். அப்பா என் மீது மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
எனது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான மற்றொரு போராட்டத்தை அமெரிக்காவில் நான் கண்ட பின்னர், 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளில் சேர்ந்தேன். 1996 ஆம் ஆண்டில், அருசங்கர் அய்யாவும், அப்பாவும் எனது முதல் புத்தக வெளியீட்டில் என்னைப் பாராட்டினர். முதல்வர் கலைஞர் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டார். ஆனால், 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் ஐக்கிய நாடுகளுக்குத் திரும்பியபோது அப்பாவுடனான எனது தொடர்பு குறையத் தொடங்கின.
இதற்கிடையில், அருசங்கர் அய்யாவும் அப்பாவும் என் திருமணத்தில் முக்கிய பங்காற்றினர். தனது மகளை எனக்கு மணமுடிக்க உஷாவின் தந்தையிடம் அப்பா வேண்டியதை எண்ணி அவர் மிகவும் பெருமிதம் அடைந்தார். அப்பா என்னிடம் தனிமையில் ‘ஏன் இராஜா இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்? என ஏமாற்றமளிக்கும் வகையில் வினவியது வேறு கதை. நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
அகவை முதிர்ந்து உடல்நிலை குன்றியிருந்த போதிலும், 26.04.2015 அன்று சுட்டெரித்த வெயிலில் எனது தந்தையின் இறுதிச் சடங்கில் அப்பா பங்கேற்றபோது நான் மெழுகைப்போல் உருகி போனேன். ஆனால், பிறருக்கு உதவிக்கரம் நீட்டுதல் உட்பட அவரின் எந்தச் செயலும் இதனால் தடைப்படவில்லை. மன உறுதியும் உற்சாகமும் நிரம்பிய இத்தகைய நபரை நான் கண்டதில்லை அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். உடல்நலம் குன்றிய போதிலும் மன வலிமை குன்றாத மாணிக்கம் அவர். நூற்றுக்கணக்கானவர்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளார்கள். அவருடைய எழுச்சியூட்டும் உரைகள், சிந்தனைகள் மற்றும் அறம் சார்ந்த குணத்திற்கு பலர் அடிமை என்றால் அது மிகையாகாது. புதுமையான ஆனால் நடைமுறைகேற்ற சிந்தனைகளை உடைய நெறியாளார். அவரின் கருணை எல்லையற்றது. என்னை ஈன்றெடுக்காத தந்தையாக ‘அப்பா’ எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய அருட்கொடை. அகவை 85-ஐ கடந்த நிலையில், அப்பா இன்று ஒரு முழுமதியாக மிளிர்கிறார். அவருடன் இருப்பது மன அமைதியையும் மனநிறைவையும் ஒருவருக்கு அளிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. இறைவனின் அருள் அவருக்கு எப்பொழுது இருக்க வேண்டும். அவரின் குலம் ஓங்க வேண்டும்.
அறிஞர் இரா.கண்ணன்
அரசியல் உறவு அலுவலர் – ஐ.நா. உதவித் திட்டம், சோமாலியா

Add a Comment