மருத்துவ மாமணி தாரா நடராசன் (1932-2020)
குறித்து, அவரின் மகன் ந.அருள் உலகத்தமிழ் 19.08.2020 இதழில் எழுதிய கவிதை
தாய்மை எனும் அருமருந்தே!
விண்ணிலங்கு மீன்களுக்கு விளங்கொளிசேர் ஞானத்தாயே
மண்ணிலங்கு மழலைகட்கு மருத்துவம்ஈ உயிர்த்தாயே
கண்ணிலங்கு மையிருளில் கன்னியர்கள் கலக்குறுநாள்
ஒண்திறலால் உயர்வுற்ற உயர்புகழாய் ஒளிர்தாயே!
தாராத வளமில்லை என்னைக்கும் எமக்கும்அன்னாய்
பேராத நிலைத்திறத்தால் பெற்றறியாப் பேறுமில்லை
சேராத புகழில்லை செய்திறத்தால் நேர்த்தியினால்
தீராத நோய்க்கேற்ப திருத்துவித்தாய் மருத்துவத்தை!
தத்தைநடைக் கிள்ளைமொழித் தளிர்களுக்கு உயிர்க்காவல்
அத்தனன்னாய் அன்னையொப்பாய் அயர்வரியா துழைத்துயர்ந்தாய்
சொத்துளோர்க்கே கைகூடும் மருத்துவத்தை ஏழையர்க்கும்
வைத்ததொரு பெருநிதியாய் வழங்குகின்ற கருணையன்னாய்!
—– ந.அருள்

Add a Comment