POST: 2020-08-25T09:17:57+05:30

தின செய்தி நாளிதழில் 24.08.2020 அன்று வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 49

இமயம் வளர்ந்த வரலாறு

….. முனைவர் ஔவை நடராசன்,

மேனாள் துணை வேந்தர்

———————————————————

என்னுடைய இனிய நண்பர் நாகை தருமனை புரட்சித்தலைவரின் இணையற்ற அறிவுத் தொண்டராகவும், ஆற்றல் வாய்ந்த எழுத்துத் திலகமாகவும், பெரும் நூலாசிரியராகவும் நாடே கண்டு வியந்தது. புரட்சித் தலைவர் தொட்டால் பொன்னாய் மிளிரும் என்பதற்கேற்ப ‘எழுத்துச் சுடர்’ நாகை தருமன், எளிய குடும்பப் பிண்ணனியில் இருந்து வாழ்வைத் தொடங்கி, திரைப்படம், நாடகம், ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் பணியாற்றுவதே பெரும் பணியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அண்மையில் தமிழக அரசு, புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடியபோது, என்னுடைய மகன் அருள், அவரைத் தேடி அவர் வாழும் லாயிட்சு குடியிருப்பில் சென்று அளவளாவியதை மிக நெகிழ்ச்சியாக என்னிடம் தெரிவித்தான். தருமன் அவர்கள் என் மீது கொண்ட அந்த அளப்பறிய அன்பை என் மகன் கன்னத்தை தடவி, முத்தமிட்டு அவனை வாழ்த்தி வழியனுப்பியபோது, என்னுடைய பொன்னான நினைவுகள் மலரத் தொடங்கின.

பொன்மனச் செம்மல் மிக நுணுக்கமாகத் தன்னுடைய அறிவுத் தொண்டர்களைத் தெரிவு செய்வதை நான் பல்லாண்டுகளாக நன்கறிவேன். எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், அந்த எழுத்தால் என்ன விளைவு வரும் என்பதை நுண்மாண் நுழைபுலத்துடன் சிந்தித்த பெரும் சிந்தனையாளர் நம் புரட்சித்தலைவர் என்று சொன்னால் மிகையாகாது. பேரறிஞர் அண்ணாவிடம் படிப்படியாகப் பயின்று, எழுத்தெண்ணி இதழ் பணியில் முத்திரை பதித்தார். ‘மறைந்த மாமேதைக்கு தலைவர்கள், அறிஞர்கள் இதய அஞ்சலி’ என்று எழுபதுகளில் ஒரு அருமையான நானூறு பக்கங்கள் கொண்ட நூல் வெளியானது. அந்நூல், பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு, அனைத்து தலைவர்களின் அறிக்கைகள், கடிதங்கள் மிக நுட்பமாக தொகுக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஒரு அருமையான நூலாகும். அதைத் தொகுத்து வெளியிட்ட பெருமை தருமனைச் சாரும்.

அவ்வரிசையிலேதான் புரட்சித்தலைவரைப் பார்த்துப் பார்த்து, பழகிப் பழகி, உணர்ந்து உணர்ந்து அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்களை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தவர்களில் அறிஞர் தருமனுக்குத்தான் முதலிடம். ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.’, ‘பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.’, ‘இதயக்கனி எம்.ஜி.ஆர்.’, ‘திரைக்கலைஞர்கள் பார்வையில் எம்.ஜி.ஆர்.’ என்று வெளிவந்த படைப்புகளே பல நூறாகும்.

புரட்சித் தலைவரிடம் பழகி திரையுலகத்தில் தன்னைத் தோய்த்துக் கொண்டு அவர் நடித்த ‘மீனவ நண்பன்’, ‘நவரத்தினம்’ போன்ற படங்களுக்குக் கதை-வசனம் எழுதி, துணை இயக்குநராகப் பணியாற்றியதெல்லாம் என் நினைவுக்கு வருகிறது.

சமயம் சார்ந்த திரைப்படங்களின் ஒளி விளக்கான திரு.ஏ.பி.நாகராஜனுக்கு உதவியாக பல பக்திப் படங்களுக்கும் இவர் வசனம் எழுதியதையும், பாடல் எழுதி வழங்கியதையும் என்னிடம் பலமுறை சொல்லிப் பெருமைப்பட்டார்.

நடிகர் திலகம் நடித்த ‘துணை’ படத்திற்கு கதை-வசனம் எழுதிப் புகழ் பெற்றார். அண்ணா பத்திரிக்கையின் பெரும் தூணாய் பணியாற்றி புரட்சித் தலைவரே ‘நாகை தருமன் கட்டுரைகளைப் பார்த்தால் போதும் நான் பார்க்கத் தேவையில்லை’ என்று கூறும் அளவிற்கு மாபெரும் நம்பிக்கையைப் பெற்றார். பிறகு, ‘நவமணி’, ‘தாய்’ பத்திரிகைகளில் பணியாற்றியதை நான் நன்கறிவேன். எனக்கு மிகவும் நெருக்கமாக, ‘வீடுதோறும் வள்ளுவர்’ என்ற மிகப்பெரிய இலக்கியத் திட்டத்தை வகுத்துக் கொண்டு திருவள்ளுவர் படங்களை ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு வழங்கி, குடும்பத்தில் மூத்தவர்கள் படத்தையும் வழிபடும் தெய்வங்கள் படத்தையும் வைத்திருப்பது போல, இல்லத்தின் வாயில்களில் வள்ளுவப் பேராசானின் படத்தைப் பொருத்த வேண்டும் என்று பல்லாண்டுகளுக்கு முன்பே புரட்சி செய்த பெருமை இவரைச் சாரும். இன்றைக்கும் அவருடைய வீட்டு வாயிலில் திருவள்ளுவர் படம் மிளிர்வதைக் காணலாம். அவருடைய இனிய தொண்டர்களாக இளவர் தேனி ராஜா தாசனும், திருப்பூர் இரவிச்சந்திரனும் திகழ்கிறார்கள். எழுத்துச் சிகரம் நாகை தருமன் பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றாலும், இதுவரை நிறைவேறாத ஒரு பரிசு உள்ளது. வயதான ஔவை சொல்வதைக் காட்டிலும், யார் பரிந்துரைக்க வேண்டும் என்றால், எந்த விருதுக்கு என்றால், இளமைக்கு இளமையும், திறமைக்குத் திறமையும், புலமைக்குப் புலமையுமான மேனாள் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர், நாடறிந்த பேச்சாளர், சிந்தனையாளர், மேனாள் அவைத்தலைவர், என் இனிய மாணவர் டாக்டர் காளிமுத்துவின் தலைமாணாக்கரான முனைவர் வைகைச்செல்வன், தமிழக அரசின் ‘பேரறிஞர் அண்ணா’ விருதை எழுத்துச் சிகரம் நாகை தருமனுக்கு வழங்குமாறு தமிழக அரசிடம் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

நண்பர் நாகை தருமன் புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு அரிய தொகுப்பை என் மகனிடம் வழங்கியிருந்தார். அந்த கையெழுத்துப் படியில் 1951 முதல் 1987 வரை முப்பத்தாறு ஆண்டு காலம் நம்மை மீள் பார்வை பார்த்து மலைக்க வைக்கிறது.

புரட்சித்தலைவர்தான் அவருடைய ஒவ்வோர் படி வளர்ச்சிக்கும் காரணம். அவரைப் பற்றிய சில அரிய செய்திகளை தொடர்ந்து என் பகுதியில் நான் வெளியிட்டு மகிழ்கிறேன்.

புரட்சித்தலைவர் வளா்ந்த வரலாறு

– நாகை தருமன்

1951: மர்மயோகி வெளிவந்து. ‘சர்வாதிகாரி’ ‘ அந்தமான் கைதி’, ‘என் தங்கை’, ‘குமாரி’, ‘நாம்’, ‘ஜெனோவா’ போன்ற திரைப்படங்கள் படங்கள் வெளிவந்தன.

1953 – 1963: நாடகக் குழு தொடக்கம்.

1953: அன்னை சத்யா மரணம் அன்னை வாழ்ந்து மறைந்த லாயிட்ச்சு சாலை வீட்டை அவர் விரும்பியபடி வாங்கினார். புரட்சித்லைவர் ‘சத்யா இல்லம்’ என்று பெயரிட்டார்.

4-1-1958: பண்டித நேருவுக்குக் கருப்புக்கொடி காட்டக் கழகம் முடிவு. கழகத் தலைவர்கள், புரட்சித்தலைவர் கைது.

1959: தமிழ் நடிகர் சங்கத் தலைவரானார். ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

16-10-1959: தங்க வாள் மதுரையில் பரிசளிப்பு

1959: சீர்காழியின் நாடகம் நடந்தபோது எலும்புமுறிவு காலில் ஏற்பட்டது.

1959-64 சென்னை மாநகராட்சித் தேர்தல்களில் கழகம் வெற்றி பெற அயராது அரும் பணியாற்றினார்.

1957-62 பொதுத்தேர்தல்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம். ‘கழகத்திற்கு நிதியளிப்பதைவிட, உன் முகத்தைக் காண்பித்து இலட்சோபலட்சம் மக்கள் ஆதரவைத் திரட்டு’ என்று பேரறிஞர் அண்ணா கூறினார்.

1963 தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவைக்கு பேரறிஞர் அண்ணா விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 – ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்புக்கு முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் இணைந்து கதாநாயகியாக நடிக்க புதிய இளம் பெண் வருகிறார்.

1967 பரங்கிமலைத் தொகுதியில் வெற்றி! அண்ணா ஆட்சி! தமிழ்நாடு சிறுசேமிப்புத் திட்டத் துணைத் தலைவராகிறார்.

12.1.1967 துப்பாக்கியால் எம்.ஜி.ஆர் வீட்டில் எம்.ஆர்.ராதா அவரைச் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக் கொண்டார்.

1.1.1968: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் உலகமே வியக்கும் அளவுக்குப் பிரமாண்டமாகப் பிரமாதமாக… பேறிஞர் அண்ணா முதல்வராக இருந்த இந்தச் சமயத்தில் நடந்தது.

1968: ‘அடிமைப்பெண்’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகராகச் சிங்கப்பூர் சினிமா இரசிகர் சங்கம் தேர்ந்தெடுத்தது.

3.2.1969 பேரறிஞர் அண்ணா மறைவு. இராஜாஜி மண்டபத்தில் அண்ணாவின் உடலை அவர் தாயாருக்கும் காண்பித்தல். ஊர்வலத்தில் சோகமாக வேனில் வருவது.

1971: பொதுத்தேர்தலில் கழக வெற்றிக்காக இரவு, பகலாகப் பல நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம். மீண்டும் அவர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

10.7.1972 : ‘பாரத்’ விருதுபெற்ற எம்.ஜி.ஆர் சிங்கப்பூருக்குக் கலைக்குழுவுடன் பயணம். செல்வி ஜெயலலிதா சென்றார்.

1.10.1972: எம்.ஜி.ஆர் மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கருத்து முழக்கம்.

8.10.1972: திருக்கழுக்குன்றத்தில் வரலாறு படைத்த மாபெரும் கூட்டம். புரட்சித்தலைவர், கழகத் தலைமையிடம் கணக்குக் கேட்டு, ஊழலை ஒழிக்கத் திட்டம் தருகிறார்.

10.10.1972: புரட்சித்தலைவர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம். நாடு முழுதும் கொந்தளிப்பு. பல்லாயிரக் கணக்கானவர்கள் கைது

16.10.1972 : அண்ணா தி.மு.கழகம். தொடக்கம். கழகக் கொடியின் அமைப்பைப் புரட்சித்தலைவர் வெளியிடுகிறார்.

22.5.1973 அண்ணா தி.மு.கழகம் பெற்ற முதல் வெற்றி! திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி!

1.7.1973 சோவியத்து ரசியா, இலண்டன், பாரீசு, நைரோபி உலகப் பயணம் சென்று 18.8.1973 தாயகம் திரும்பினார்.

29.9.1973 ‘அண்ணாயிசம்’ அறிவிப்பு.

4.1.1974 கழகப் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்வு.

22.2.1974 புதுவையில் 11 இடங்களில் வெற்றி! கோவை சட்டசபைத் தேர்தலில் வெற்றி!

16.4.1974 புதுவையில் கழக அரசு பதவி ஏற்பு.

25.10.74: அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த பல்கலைக் கழகங்களான விசுகான்சின், சிகாகோ, பெர்க்லி, கலிபோர்னியா, பெனிசில்வேனியா, ஆகியவைகளின் அதிகாரப்பூர்வமான அன்பழைப்பு!

31.1.1976: புரட்சித் தலைவர் தர்மயுத்தம் வெற்றி! கலைஞர் கருணாநிதி அமைச்சரவை- சட்டசபை கலைப்பு! குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம்

1977: பொதுத் தேர்தல். புரட்சித் தலைவர் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம். பிரதமர் இந்திரா காந்தியுடன் கலந்து கொண்ட கூட்டங்கள்

20.3.1977: புதுவை உள்பட 40 இடங்களில் புரட்சித் தலைவர் தலைமையில் போட்டியிட்ட கழக முற்போக்குக் கூட்டணி 36 இடங்களில் வெற்றி!

15.6.1977: அருப்புக் கோட்டை தொகுதியில் 29,378 வாக்கு வித்தியாசத்தில் புரட்சித் தலைவர் வெற்றி.

16.6.1977: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 195 இடங்களில் போட்டியிட்டு, 127 இடங்களில் வென்று, தனிப் பெரும்பான்மை பெற்றது கழகம்.

17.6.1977: புதுவை சட்டமன்றத் தேர்தலில் 14 இடங்களில் வெற்றி! 2.7.77-ல் எஸ்.ராமசாமி முதல்வராகப் பதவி ஏற்பு

30.6.77: புரட்சித் தலைவர் தமிழக முதல்வராகப் பதவியேற்பு!

“ஒரு இயக்கத்தைப் புதிதாகத் தொடங்கி, 56 மாதங்களில் ஆட்சியைப் பிடித்த மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவர் என்ற அறிவிப்பு!

18.9.77: தந்தை பெரியார் சிலை திறப்பு. பாபு ஜெகஜீவன் ராம் சிலையைத் திறந்து வைக்கிறார். நாவலர் நெடுஞ்செழியன் கழகத்தில் இணைகிறார்.

1981: அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக ஆட்சி நீக்கப்பட்ட்து. குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்ட கழகம் அழிந்தது என்று கணக்கு போட்டவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டினர். மே மாதம் நடந்த தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதுரையில் போட்டியிட்டு வென்றார். கழகம் அமோக வெற்றி பெற்றது. மீண்டும் முதல்வரானார்.

1982: அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தில் செல்வி ஜெயலலிதா உறுப்பினராகச் சேர்ந்தார். கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம்

1983: சென்னைப் பல்கலைக் கழகம், புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது

1984: தன் வளர்ச்சியை விரும்பாத சிலரால், புரட்சித் தலைவருக்கு இக்கட்டான நிலை ஏற்படுவதைத் தவிர்க்கப் புரட்சித் தலைவி நினைத்தார். இதனால் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

… ஔவை நடராசன்

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *