POST: 2020-09-01T15:21:02+05:30

===========================================
மருத்துவ மாமணி தாரா நடராசனின் கட்டுரை பருமன் படுத்தும் பாடு – வாசுதேவப் பிள்ளை அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மலரில் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
===========================================

நம் உடலில் கொழுப்புச்சத்து அளவுக்கு மேல் அதிகமாக இருப்பதை உடற்பருமன் என்று கூறலாம்.வயிற்றுப்பகுதியினைச் சார்ந்த கொழுப்புத்தன்மையைக் கூடுதலாக்குகிறது. பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ச்சியும் செழிப்பும் மிக்க நாடுகளில் மட்டும் பரவலாகக் காணப்பட்ட உடற்பருமன் இப்பொழுது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக நம் சமுதாயத்தின் இளைய தலைமுறையை அதிகம் பாதித்து வருகின்றது. நமது வாழ்க்கைத் தரம், வாழ்வியல் முறை, போதிய உடல் உழைப்பின்மை, தரமற்ற உணவு முறை ஆகியவையே குழந்தைகளின் உடல் பருமன் கூடுவதற்குக் காரணமாகின்றன.

இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டின் குழந்தைகளை அதிகம் பாதித்த நோய்களான நிமோனியா, அம்மை, போலியோ போன்றவைகளில் பெரும்பாலானவை தடுப்பு மருந்துகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன. எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் ஓரளவிற்குக் குறைந்துள்ளது. காலப்போக்கில் வாழ்க்கைத் தரம் பொருளாதார வளர்ச்சியை ஒட்டி முன்னேறிக்கொண்டு இருப்பதால், வறுமைக்கோட்டின் கீழிருந்த மக்கள் ஓரிரு தலைமுறைகளாகப் படிப்படியாகத் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டுவிட்டார்கள். கிராமிய வாழ்க்கையைத் துறந்து, மேல்படிப்பையும், வேலை வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு நம்மில் பலர் நகரங்களில் குடியேறிவிட்டோம். இதனால் நம் அன்றாட வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் ஆகியவை பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளன. இத்தகைய மாற்றங்களைச் சார்ந்த வாழ்வு நிலைதான் உடல் பருமனாகிவிட்டது. –

குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதால் பல்வேறு
நோய்களுக்கு ஆளாதல்,

1. நீரிழிவு நோய் – இடுப்புச் சுற்றளவு (Abdominal Obesity) அதிகம் கூடுவதால் சிறு வயதினிலேயே நீரிழிவு நோய் (இரண்டாம் வகை) ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

2.உடல் பருமன் அதிகரிப்பால் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்காமல்
தடைப்படுகின்றது. இதனால் உண்ணும் உணவில் உள்ள சத்துப்பொருள்கள் உடலில் உள்ள உயிர் அணுக்களில் சேராமல் பலவித நோய்கள் தோன்றுகின்றன.

3. Polysystic Ovarian Syndrome – பெண் குழந்தைகளின்
சினை உறுப்புகளில் பல கட்டிகள் உற்பத்தியாவதற்கு அதிக வாய்ப்புகளைத் தோற்றுவிக்கின்றன. அதிக எடையுள்ள இளம் பெண் குழந்தைகளுக்கு (Hormonal Imbalance) பருக்களும், ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படுவதால் உடலில் உள்ள அணுக்கள் இன்சுலினை ஏற்காமல் புறக்கணிக்கத் தொடங்குகின்றன.

4.குருதியில் உறிஞ்சப்படாத மிகையான கொழுப்பே உடல் பருமனுக்கு (vascular
Inflammation) அடிகோலுகிறது. தவறான சமுதாய நோக்கினால், உடல் பருமனுள்ள குழந்தைகளை நம் சமூகம் உடல் வளமான குழந்தைகளாகத் தவறாகக் கருதுகின்றது. மேலும் பெற்றோரும், உற்றோரும் அந்தக் குழந்தை வயது ஆக ஆக உடலில் உள்ள கொழுப்புச்சத்து (Puppy fat) தானாகவே குறைந்து விடும் என்று தவறாகக் கணிக்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு மேலும் மேலும் அதிக அளவில் உணவு கொடுப்பதால், அது வளர்ந்தாலும் அதிகப் பருமனாகவே இருக்கும்.

5.குழந்தைகள் பருமனாக இருப்பதற்குச் சில நேரங்களில் அவர்களின் மரபணுக்களையும் காரணம்காட்டுவது உண்டு. சில குடும்பங்களில் பலர் பரம்பரையாகப் பருமனாக இருந்தாலும் அதைப் பரம்பரை நோய் என்று கூறமுடியாது. ஏனென்றால், அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் பருமனாக இருப்பதில்லை. ஆகையால் தலைமுறை என்ற காரணத்திற்கும் மேலாக தவறான உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியோ, உடல் உழைப்பே இல்லாத வெறும் கேளிக்கை முறையுமே ஆகும்.

6.அதிகப் படிப்புச் சுமையினால், இப்பொழுதெல்லாம் ஓடி விளையாடும்
நேரத்திலும் குழந்தைகள் விளையாடாமல் புத்தகமும் கையுமாக இருக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. விளையாடுவதற்கு ஏற்ற திடல்களோ, வெற்றிடங்களோ பல வீடுகளின் அருகில் இல்லாததால் வெளித் திடல்களில் விளையாடும் ஆட்டங்களில் அவர்களால் ஈடுபட முடிவதில்லை. அதனால் அவர்கள் பல மணி நேரங்களை வீட்டில் கணிணி அல்லது தொலைக்காட்சி முன்னால் செலவிடுகின்றனர். விளைவு, அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைப்பதில்லை.

7.முக்கியமாக நாம் கூர்ந்து நோக்க வேண்டிய கருத்து ஒன்று உள்ளது. அது அனைத்திற்கும் மேலாகக் குழந்தைகளின் உணவுப் பழக்கமாகும். கடந்த பத்து ஆண்டுகளில், அவர்களின் உணவு வகை மிகவும் மாறி இருக்கிறது. பெற்றோர் இருவரும் பணிக்குச் சென்று விடுவதே இன்றைய பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களின் சூழ்நிலையாகும். மாலை அல்லது இரவு வீட்டிற்கு வந்து ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைச் சமைக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் உணவு விடுதிகளில் கிடைக்கும் விரைவு உணவுப் (Fast Food) பண்டங்களையே குழந்தைகளுக்கு அளிக்கிறார்கள். இவைகளில் அதிக எண்ணெய் மற்றும் வனசுபதி கலந்திருப்பதால், உடலில் கொழுப்புச் சக்தி அதிகரித்து குழந்தைகளின் எடையும் கூடிவிடுகின்றன.

8. குழந்தைகள் சமவிகித உணவினை (Balanced Diet ) உட்கொள்ளப் பழக்குவது மிகவும் அவசியமாகும். தேவையான சத்துப்பொருட்கள் இருக்கின்றதா என்று சரிபார்த்து அவர்கள் காய்கறி, பழம், பருப்பு வகைகளை உண்பதற்கு சிறு வயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும். அதிகம் சர்க்கரை சேர்த்து விற்பனையாகும் சுவை நீர்களை குடிப்பதற்கு பதிலாக சுத்தமான தண்ணீரை அருந்துவதற்கு பழக்கவேண்டும் பெற்றோர் சுற்றுலாவோ அல்லது கடை வீதிக்கோ செல்லும்பொழுது குடுவைகளில் சுத்தமான நீரைக் கையோடு எழுத்துச் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் குழந்தைகள் தாகம் என்று சொல்லும்பொழுது கடைகளில் கிடைக்கும் சுவை நீர்களான கோக், ஃபாண்டா போன்ற குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்காமல் தாங்கள் எடுத்துச் செல்லும் தண்ணீரைக் கொடுக்கலாம். ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா? ஆகவே சிறு வயதில் நல்ல உணவுப் பழக்கங்களை பழக்கினால், அவர்கள் வயது முதிரும்போதும் அப்பழக்கங்களையே பின்பற்றுவர்.

9. குழந்தைப்பருவத்தில் உடல் பருமனாக இருப்பதை இப்பொழுது ஒரு நோய் என்றே மருத்துவ உலகம் கணிக்கின்றது. முடிந்தவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இது முடியுமா என்பது கேள்விக்குரியதுதான். அதனால் முடிந்தவரை வார நாட்களில் இரவு உணவையும், விடுமுறை நாட்களில் மூன்று அல்லது நான்கு
வேளையும் சேர்ந்து உணவு உண்பதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு சேர்ந்து உணவு உண்ணும் பொழுது வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் அதிக கொழுப்புச் சத்துள்ள கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் குறைந்த அளவில் உண்பதற்கோ அல்லது அறவே தவிர்ப்பதற்கோ அறிவுறுத்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

10. கல்விக்கூடங்களில் சத்தான உணவு பழக்கங்களையும், நல்வாழ்வுக்குரிய வாழ்க்கை முறையையும் முக்கியமான பாடப்பிரிவாக வகுத்துக் குழந்தைகளுக்குப் போதிப்பது அவசியமானதாகும். இன்னும் சொல்லப்போனால், பெற்றோர் உணவுப்பொருட்கள் வாங்கும் பொழுதும், உணவு தயாரிக்கும் பொழுதும் குழந்தைகளையும் தம்முடன் பங்கேற்கச் சொல்லவேண்டும். அப்பொழுது தான் அவர்களின் விருப்பு வெறுப்புகளை நாம் அறிந்துகொள்ளமுடியும், மற்றும் சத்துணவுப் பற்றிய விவரங்களையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் முடியும். மேலும் சத்துணவைத் தயாரிப்பதில் பெற்றோருடன் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு அவ்வுணவைச் சாப்பிடவேண்டும் என்ற ஈடுபாடு அவசியம் ஏற்படும்.

11.உடல் பருமனைப் பற்றிய விழிப்புணர்வு, உடல் உழைப்பின் அவசியம், கொழுப்பு
உணவுகளுக்கு மாறுபட்ட சத்துணவு செய்முறை ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை பல சமுதாய அமைப்புகள் பரப்பி வருகின்றன. உதாரணமாக (CHETNA – Children Health Education through Nutrition and Health Awareness program), (MARG – Medical Education for Children / Adolescents for realistic prevention of Obesity and Diabetes and for Healthy Ageing) என்ற இரண்டு அமைப்புகளும் உடல் பருமனால் ஏற்படக்கூடிய விளைவுகளை விவாதங்கள், நாடகங்கள், விரிவுரைகள், அறிக்கைகள் மூலம் உணர்த்துகின்றன.

12.குழந்தைகளின் அதீத உடல் பருமனைப் பற்றி அலசும் பொழுது குழந்தையின் எடையை எப்பொழுது எப்படி அளக்க வேண்டும் என்று அறிந்து கொள்வது அவசியம். அமெரிக்க NCHS Standard விதியின்படி 98 Centile க்கு மேல் உள்ள குழந்தைகளை அதீத பருமனுடையவர்கள் எனக் கருதுகிறார்கள். அதே போன்று குழந்தை சரியான எடையுடனும் உயரத்துடனும் வளர்ந்து வருகின்றதா என்று பெற்றோர் கவனத்துடன் கண்காணிப்பது அவசியமாகும்.

13. குழந்தை பிறந்தவுடன் அதன் எடையை அளக்கவேண்டியது அவசியமாகும்.
பின் ஒவ்வொரு மாதமும் குழந்தையின் எடையையும், உயரத்தையும் அளந்து,
அப்கார் அட்டவணையில் குறித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். பின் ஒன்று முதல் ஐந்து வயது வரையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அளவிடுவது போதுமானதாகும். குழந்தையின் வளர்ச்சிக் கோடானது அட்டவணையில் உள்ள கோடுகளுக்கு இணையாகச் செல்லவில்லை என்றால் குழந்தையின் வளர்ச்சி நிறைவாக இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

14. குழந்தை சுகாதாரமாக வளர்வதற்கு தாய்ப்பால் உறுதுணையாக இருக்கின்றது. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் நோயெதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமல்லாமல் தாய்ப்பாலானது மலச்சிக்கலை தவிர்த்து குழந்தையின் ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றது.

15.இன்னும் சொல்லப்போனால் தாய்ப்பாலானது குழந்தைகள் பருமனாவதை தடுக்கின்றது என்று பல ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. இது மட்டுமல்லாமல் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமிலங்கள் தாய்ப்பாலில் இருப்பதினால், அப்பாலைக் குடிக்கும் குழந்தைகள் நல்ல அறிவாற்றலோடு திகழ்வார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையாகும். மேலும் தாய்ப்பால் கொடுப்பதினால் தாய்-சேய் உறவு பலப்படும் என்று சொன்னால் மிகையாகாது.

16. வளரும்பொழுது உள்ள வளர்ச்சிநிலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்காணிப்பது மிகவும் அவசியம். உதாரணமாக இரண்டு மாதங்களில் குழந்தைச் சிரிக்க வேண்டும், நான்கு மாதங்களில் கழுத்து நின்று, எட்டு மாதங்களில் தானே உட்கார வேண்டும். மேலும் பன்னிரண்டு மாதங்களில் சுவரையோ அல்லது நாற்காலியையோ பிடித்து நிற்க முயற்சிக்க வேண்டும். இத்தகைய வளர்ச்சி நிலைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால், குழந்தை நல மருத்துவரை அணுகுவதற்குப் பெற்றோர்கள் தயங்கக்கூடாது.

17.குழந்தையின் வளர்ச்சி நிலை பிறந்த பிறகு சரியாக இருக்கவேண்டும் என்றால், தாய், குழந்தை கருவில் இருக்கும்பொழுதே அக்குழந்தையைப் பராமரிக்க ஆரம்பிக்க வேண்டும். நல்ல சத்துள்ள, ஊட்டமான உணவினை கருவுற்ற பெண் உண்பது அவசியமாகும். இரும்புச் சத்து (Iron) உயிர்ச்சத்து (Multi Vitamins), Folic Acid ஆகியவை அதிக விகிதத்தில் இருக்கும் உணவு வகைகளையும், மாத்திரைகளையும் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வதினைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், கருவுற்ற பெண்கள் சத்துணவை உண்ணாமலும், தங்கள் உடல் நலத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து பல தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

18.புதுவிதமான நோய்கள் உற்பத்தியாகும் இக்காலக் கட்டத்தில் பெற்றோர் நோய் தடுப்பு ஊசிகளைக் குழந்தைகளுக்கு அந்தந்த காலக்கட்டத்தில் அளிப்பது தலையாய கடமையாகும். குழந்தை பிறந்தவுடன் போடுவது பிசிஜி தடுப்பு ஊசியாகும். இது குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கின்றது. மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது, நம் நாட்டில் நாற்பது விழுக்காடு குழந்தைகளுக்கு ‘ப்ரைமரி காம்ப்லெக்ஸ் (Primary Complex) ஏற்படுகின்றது. ஆகையால் பிறந்த ஒரு வாரத்தில் இந்த தடுப்பு ஊசியை குழந்தைக்குப் போட்டு விடுவது நல்லதாகும். DPT என்ற தடுப்பூசியில் மூன்று தொற்று நோய்க்கான தடுப்பு மருந்துகள் கலந்துள்ளன. அவை ‘டிப்தீரீயா என்னும் தொண்டை அடைப்பான் நோய், பெர்டுசிஸ் (Pertusis) எனும் கக்குவான் நோய், டெடனஸ் (Tetanus) எனும் இரணஜன்னி நோயாகும். இது 3, 4, 5 ஆகிய மாதங்களில் தலா ஒரு ஊசியாகவும், இரண்டு மற்றும் ஐந்தாவது வயசில் 4வது, 5வது ஊசியாகவும் தற்பொழுது போடப்படுகின்றது. “போலியோ எனும் வைரசு நோய்க்கும் இதே காலக்கட்டத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்படுகின்றது. மேலும் தட்டம்மைக்கான தடுப்பூசியை ஒரு வயதினில் போடவேண்டும் தடுப்பூசியின் அவசியத்தை பெரும்பாலான கிராமத்தில் உள்ளவர்கள் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆகையால் அரசாங்கமானது. கிராமந்தோறும், நல்வாழ்வுப் பணியாளர்களை அனுப்பி குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகளை போட ஏற்பாடு செய்திருக்கின்றது. மக்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துக்கொண்டு இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டால், குழந்தைகளை ஓரளவு தொற்றுநோயின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.

19. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் கால கட்டங்களில் குழந்தையின் எடை உயரம், இடுப்பு, மார்பு நடுக்கையின் சுற்றளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு அவர்களின் வளர்ச்சி சரியான விகிதத்தில் உள்ளதா என்பதினை சரிபார்த்தல் வேண்டும். உடல் வளர்ச்சி மட்டும் அல்லாமல் குழந்தையின் அறிவு, மனம் ஆகியவை தேவையான அளவு வளர்ச்சி அடைந்துள்ளதா என்பதை கண்காணிப்பது அவசியமாகும். அரசாங்கமும் பல அங்கன்வாடி மையங்களை அமைத்து பல நல்வாழ்வுப் பணியாளர்களை நியமித்து இருக்கின்றது. இவர்கள் குழந்தையின் எடையையும், உயரத்தையும், ஐந்து வயது வரை கண்காணித்துத் தேவையான அளவு வளர்ச்சியோ, உடல் நலமோ இல்லையென்றால், அக்குழந்தைகளை மேல் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கின்றார்கள். பொதுமக்கள், இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமக்காக அமைத்திருக்கும் திட்டங்களில் மனமுவந்து பங்கேற்றுக் கொண்டால்தான் இத்திட்டங்கள் சிறப்பாகச் செயற்பட முடியும்.

20.தற்பொழுது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்கள் தங்கள் பாடங்களை ஒழுங்காகப் படிக்கின்றார்களா என்பதினை கண்காணிக்கவும் பெற்றோர் மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றார்கள். அதே போன்று அவர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் வளர்வதற்குத் துணையாக இருந்தால், குடும்பத்தில் அதனால் ஏற்படும் இன்பம் அளவிட முடியாதது. உடல் நலமே தலையாய செல்வமாகும். ஆகையால், குழந்தையின் நலனைப் பேணி பாதுகாப்பதின்மூலம், அவர்களின் வாழ்க்கைப் பாதை செம்மையாக அமைய அடித்தளமிட்ட பெருமையைப் பெற்றோரும் உற்றோரும் அடைவர் என்பது உறுதி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *