அவ்வையின் அன்பு மொழியில்…!
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் கலைமகள் ஆசிரியர்
இனிக்க இனிக்க பேசக் கூடியவர் அறிஞர் ஔவை நடராசன். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா நடத்தும் வள்ளலார் விழாவில் இவரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். என்னை முழுமையாக இவரிடம் அறிமுகம் செய்தது என்னுடைய நண்பரும் அருட்செல்வர் அவர்களிடம் தனிச் செயலராக இருந்த இரவி சார்தான்.
என்னிடம் ஔவையார் அப்போது ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.
“ஒரு நாளைக்குஏ.என். எஸ் அவர்கள் எவ்வளவு மணி நேரம் படிப்பார்கள்?”
நான் சொன்னேன்,” குறைந்தது 8 மணி நேரம் படிப்பதற்காக அவர் செலவழிக்கிறார்” என்று தெரிவித்தேன்.
“மகிழ்ச்சி. அவை என்ன நூல்கள்?” மறுபடியும் அவரிடமிருந்து கேள்வி எழுந்தது.
” சாதாரண துண்டுக் காகிதம் கிடைத்தால் கூட அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதையும் படிப்பார். வேதம், பைபிள், குர்ஆன், திருமுறைகள், திவ்ய பிரபந்தம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றோடு பிறமொழி இலக்கிய நூல்களையும் படிப்பார்” என்றேன்.
ஐயா ஔவை நடராசனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. காரணம், பல நூல்களை கற்றறிந்த மாமேதை அவ்வை நடராசன். எனவே, வாசிப்பின் ரகசியமும் வாசிப்பின் வலிமையும் என்ன என்பது அவருக்குத் தெரியும்.
இப்படி நாங்கள் பேசிய ஐந்து நாட்களுக்குப் பிறகு அருட்செல்வர் அவர்கள் இரவி அவர்களையும் அழைத்துக் கொண்டு கை நிறைய நூல்களை தூக்கிக்கொண்டு திரு ஏ.என்.எஸ் வீட்டிற்கு வந்தார்கள். அருட்செல்வர் இரண்டு மணி நேரம் ஏ. என். எஸ். உடன் உரையாடினார்கள்.
எனக்கு பின்பு தான் தெரிந்தது, ஔவை அவர்கள் சிவராமன் ஒரு படிப்பாளி என்று அவரிடம் சொல்லி இருக்கிறார்.அருட்செல்வர் பலவிதமான நூல்களை படிப்பதற்கு தானே சுமந்து கொண்டு வந்து சிவராமன் இடம் சேர்த்தார் என்பதே ரகசியம்.
ஔவை நடராசன் எழுதிய ‘வாழ்விக்க வந்த வள்ளலார்’ என்கிற நூலை மிகவும் சிலாகித்து ஏ. என். எஸ் அவர்கள் என்னிடம் பேசியதுண்டு. இந்த நூலை பலமுறை அவர் படித்து இருக்கிறார். அதேபோல் அருட்செல்வர் வழங்கிய இன்னொரு நூல் ‘வள்ளலார் விஷன் ஆன் நியூக்ளியர் பிசிக்ஸ்’ எனும் நூல். இதையும் பலமுறை படித்து மகிழ்ந்து போனார் ஏ.என்.எஸ்.
பத்மஸ்ரீ, கலைமாமணி இப்படி பல விருதுகள் பெற்றிருக்கும் ஔவை நடராசன் அவர்கள் சைவத்திற்கும் வைணவத்திற்கும் சாட்சியாக நிற்கிற முதுபெரும் அறிஞர். கம்பராமாயணத்தில் எவ்வளவு புலமை உண்டோ அதே புலமை பெரிய புராணத்திலும் இவருக்கு உண்டு.
பொருள் பொதிந்த பட்டிமன்றங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாக தலைமை தாங்கி நல்ல தீர்ப்புகளை வழங்கி தமிழ் சான்றோர்கள் இதயத்தில் எப்போதும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருப்பவர் ஔவை நடராசன் அவர்கள்.
இவருடைய மகன் முனைவர் அருள் அவர்களிடம் அடிக்கடி பேசி அவ்வை நடராசனின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்வேன்.
ஐந்து மாதங்களுக்கு முன்பாக சேக்கிழார் விழாவில் இவரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டேன். நான் மிகவும் விரும்பி மதிக்கும் ஒரு தமிழறிஞர் ஔவை நடராசன். “தம்பி நல்லா இருப்பா..!”என்று இவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு பெரிய வாழ்த்தாக நினைத்தேன். கலைமாமணி விருது வாங்கியதும் இவருடைய உதவியாளர் பிரதாப் தொலைபேசியில் என்னை அழைத்தார். ” ஐயா தங்களிடம் பேசவேண்டும்” என்று சொல்லி தொலைபேசியை அவர்களிடம் கொடுத்தார்.
“வாழ்த்துக்கள் தம்பி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் நிறைய விருதுகள் உனக்கு காத்திருக்கின்றன. கலைமகள் மிகச் சிறப்பாக வெளியாகிக்கொண்டு வருகிறது. என்னுடைய கட்டுரையும் வெளியிடுகிறீர்கள். அருள் கட்டுரையும் வெளியிடுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி” என்றார்.இந்த அன்பு மொழியில் இவர் சொற்பொழிவாற்றும் போறான் நான் கரைந்து போனேன்.
இவர் சொற்பொழிவாற்றும் போதும் எந்தவித குறிப்பையும் கையில் வைத்திருக்க மாட்டார். தலைப்பை ஒட்டி தன்னுடைய எண்ணங்களை ஆணித்தரமாக பதிவு செய்யக் கூடியவர். சில நேரங்களில் அவருடைய சொற்பொழிவைக் கேட்கும் பொழுது தேர்ந்த ஒரு பேராசிரியர் மாணவர்களுக்கு சுவைபட வகுப்பு எடுப்பது போல் இருக்கும். தஞ்சாவூர் மன்னர் சரபோசி கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்த பேராசான் அல்லவா இவர்.
இவருடைய திறமையைக் கண்டு கொண்டவர் இருவர். ஒருவர் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா. இன்னொருவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இவருடைய ஆளுமையையும் தமிழ் மீது இவர் கொண்டிருக்கும் தீராத காதலையும் எடைபோட்டு இவரை தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் ஆக்கினார் எம்ஜிஆர். இவருடைய காலகட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை பல வளர்ச்சிகளைக் கண்டது.
தாரா அம்மையார் என்கிற மருத்துவரை திருமணம் செய்ததால் இவருடைய வாழ்க்கை சீராகவே அமைந்தது. சரியான உணவு பழக்கங்களுடன் தமிழை இவர் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நேசிப்பதால் இவருடைய வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கிறது. அண்மையில் தாரா அம்மையாரின் மரணம் பேரிழப்பை துயரத்தோடு நிகழ்த்துவது மிகுந்த வேதனை.
இவருடைய சொற்பொழிவுகளை எல்லாம் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் இவருடைய மகன் முனைவர் அருள் முயன்று வருகிறார். அது, தமிழ் சமூகத்துக்கு கிடைக்கப்போகும் மிக அரிய அறிவுக் கருவூலமாக இருக்கும் என்பது திண்ணம்.
இவரும் என்னுடைய தகப்பனார் திரு சிவசைலம் அவர்களும் ஒரு முறை சேர்ந்து இரயிலில் பயணம் செய்தார்கள். அக்காலகட்டத்தில் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் முனைவர் ஔவை நடராசன்.
“மெய்ப்பொருள் என்பதன் பிற பொருள்கள் உங்களுக்கு தெரிகிறதா?” என்று என் தந்தையை பார்த்து ஒரு கேள்வியை கேட்டாராம். “உண்மைத் தன்மை என்று பொருள் கொள்ளலாம்” என்கிறார் என் தந்தை.
“ஒரு பொருளின் தன்மை எப்போதுமே மாறாது. உண்மை எப்போதுமே உண்மையாகவே இருக்கும். எனவே, உண்மைத் தன்மை என்பது கூட நல்ல சொல்தான்” என்றாராம் ஔவையார். “மற்றவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களை பாராட்டுகிற குணமும் அதற்கு புது பொருளும் எண்ணமும் ஔவை அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அதை அவர் ஏற்றுக் கொண்டு புதிய விளக்கத்தையும் சொன்னார். அந்தப் பயணம் எனக்கு நல்ல பயணமாக அமைந்தது” என்று அடிக்கடி என் தந்தையார் குறிப்பிடுவார்.
‘சங்ககாலப் புலமைச் செவ்வியர்’ இதுதான் இவர் முனைவர் பட்டத்திற்காக எடுத்துக்கொண்ட தலைப்பு ஆகும்.பொதுவாக உபரித் தகவல் தருவது என்னுடைய வழக்கம். ஆளுமை திறன் கொண்ட இந்த தமிழ் அறிஞர் டெல்லி அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் சில காலம் இருந்திருக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது அறிஞர் பெருமக்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது இவற்றுடன் அம்மாநாட்டின் பொதுச் செயலாளராகவும் இவர் இருந்திருக்கிறார். கந்த கோட்டத்தில் உள்ள முருகப்பெருமானை வள்ளலார் பாடியுள்ளார். ‘ஒருமையுடன் நின்று திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்கிற அந்தப் பாடலுக்கு ஔவை நடராசன் அவர்கள் ஒருமுறை காந்தி வள்ளலார் விழாவில் அற்புதமான விளக்கத்தைத் தந்தார்.
‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்’ இதற்கு அவர் சொன்ன விளக்கம் “பல தலை படாமல் ஒரு தலையாக ஒரு நெற்றிக்கண் இயங்கும் மனத்தின் ஒருமை நினைவு ஆதலால் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் என்றார் வள்ளலார். ஒரு நெறிய மனம் வைத்தனர் ஞானசம்பந்தன் என்பார் திருஞானசம்பந்தர்”. இப்படி அப்பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஔவை அர்த்தம் சொன்னபோது அரங்கமே கைதட்டி மகிழ்ந்தது! ஔவை அவர்களுடைய வரவேற்புரையில் ஈர்க்கப்பட்டு காந்தி வள்ளலார் விழாவிற்கு வருகின்ற கூட்டம் அதிகமானது என்று சொன்னால் அது மிகையல்ல.
அருட்செல்வரின் உற்ற நண்பராக விளங்கிய இவர், ‘கம்பர் விருந்து’ என்ற நூலையும் திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிற்கும் விளக்கம் சொல்லும் நூல்களையும் இயற்றியுள்ளார். எந்த சபையில் நான் பேசினாலும் ஔவை அவர்களின் பெயரைச் சொல்லி அவர் பேசிய நுணுக்கமான விஷயங்களை எடுத்துச் செல்வதுண்டு. இவரும் எனக்கு ஒரு மானசீக ஆசான்! ஔவை நடராசன் அவர்களின் பரிபூரண ஆசியை என்னாளும் வேண்டுகிறேன். 90 வயது கலைமகள் இந்த மூத்த தமிழறிஞரை பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறது.
ஔவையின் அன்பு மழையில் நாளும் நனைவது தமிழுலகத்திற்கே பெருமை.ஆசிரியர் கி.வா.ஜ. வுடன் நெருங்கிய நேசம் பூண்டுள்ள ஔவைக்கும் எனக்கும் ஓர் நல்லுறவு இருப்பதில் வியப்பில்லை. இந்த அன்பு தொடர்ந்து வருவது மாண்பு உடையது.

Add a Comment