தின செய்தி நாளிதழில் இன்று (07.09.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 51)
“சந்தனப்பேழை என்னதவம் செய்ததம்மா!”
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தமிழக முதல்வர், புரட்சித்தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் 24-12-87 காலை மறைந்தது தமிழ் நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கலைத்துறையில் சிறந்து விளங்கிய அவர் தமிழக அரசியலில் முனைப்பாக இறங்கி ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். மக்களிடையே தம் கலைத்திறமைக்கு இருந்த நல்லாதரவைப் பயன்படுத்தி அரசுப் பொறுப்பை ஏற்றார். தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பைத் தம் உடல் நலம் குன்றியபோது கூடக் கைவிடாது இறுதிவரை ஆட்சிப் பொறுப்பிலேயே இருந்து உயிர் நீத்தார்.
1984-இலிருந்து கடுமையான நோயினால் தாக்கப்பட்டார். அவருக்குள்ள பொருள் வசதிக்குத் தொடர்ந்து அரசுப் பொறுப்பில் நீடிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. இருப்பினும் மக்களுக்கும் நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணம் குன்றிவரும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது அரசுப் பொறுப்பில் அவரை இருக்க வைத்தது.
புரட்சித் தலைவர் முதல்வராக இருந்து தொடர்ந்து பத்தாண்டுகள் நிலையான அரசைத் தமிழகத்திற்கு அளித்ததே முதல் சாதனை, ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக உதவி சென்று சேரும் வகையில் சத்துணவு, வீட்டு வசதி போன்ற நல்ல திட்டங்களைச் செயற்படுத்தியது அவருடைய பெரும்பணியாகும். மொழிக்காக அவர் தம் தலையான பணியென்று தமிழ்ப்பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்ததைப் பொன்வரிகளாகக் குறிப்பிடலாம். இலங்கைத் தமிழர்கட்கு அவர் செய்த பல்வேறு உதவிகளில் பல வழிகளிலும் தாய்த் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களைக் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். விடுதலைப் புலிகள் அவரிடம் பெற்ற உதவி எழுத்தில் வடிக்க முடியாதது.
இத்தகைய அரும்பணிகள் ஆற்றிய அவர் மக்களிடம் நேரடித் தொடர்பு வைப்பதையே பெரிதும் விரும்பினார். இரத்தத்தின் இரத்தமான ‘உடன் பிறப்புகளே’ என்று இளைய தலைமுறையினரை அரவணைத்த பாங்கும் இளமையில் தாயால் வளர்க்கப்பெற்ற காரணத்தால் தமிழ்த் தாய்க்குலத்தின் மீது அவர் காட்டிய பாசமும் பரிவும் அவரை மக்களோடு மக்களாக இணையச் செய்தது. நலிவுற்ற பிரிவினர் மீது அவர் காட்டிய பற்று மறக்க முடியாதது.
மொத்தத்தில் மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்த எம். ஜி. ஆர். அவர்களின் மறைவு தமிழ்மக்களின் எதிர் காலத்திற்கு ஒளி குறைந்ததாகவே அமையும்.
டாக்டர். எம். ஜி. ஆர். இலங்கையில் உள்ள கண்டியில் 1917 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17 ஆம் நாள் மருதூர் கோபால மேனன் – சத்தியபாமா என்னும் பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர். திரு. மேனன் கண்டியில் குற்றவியல் நடுவராகப் பணியாற்றினார். அவர் திடுமென மறையவே அன்னை சத்தியபாமா தம் மக்களை அழைத்துக்கொண்டு கும்பகோணத்தில் குடியேறினார். இரண்டு வயதில் தமிழகம் வந்த எம். ஜி. ஆர். தம் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியுடன் பள்ளிக்குச் சென்றார். வறுமை காரணமாக மூன்றாம் வகுப்பின் இடையிலேயே எம்.ஜி.ஆர். படிப்பை முடித்துக்கொண்டு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தம் வாழ்க்கையில் ஏற்பட்ட இந் நிகழ்ச்சியே எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் உந்தியது. தமிழகத்தின் ஏழை, எளிய சிறுவர் அனைவருக்கும் சத்துணவு அளித்து வறுமை காரணமாக யாரும் கல்வியை விட்டு விடக் கூடாது என்று திட்டமிடச் செய்தது. இதனை உலகமே இன்று போற்றுகிறது. எந்த ஆட்சி வரினும் இத்திட்டத்தை இனி, கைவிட முடியாத அளவு நிலையான பணியாக அமைந்து விட்டது.
நாடகங்களில் நடித்து வந்தவர் 1936 இல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இத் துறையில் 1948 முதல் 1978 வரை கொடிகட்டிப் பறந்தார். 136 திரைப்படங்களில் நடித்துப் பெயரும், புகழும், பெருஞ் செல்வமும் சேர்த்த பின் தமிழக அரசியலில் முழுமையாக நுழைந்தார். தொடக்கத்தில் காங்கிரசுக் கட்சியில் ஈடுபாட்டுடன் திகழ்ந்தாலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கொள்கைகளில் ஈடுபட்டுத் தி.மு.கவில் சேர்ந்து அண்ணா வின் இதயக் கனியாகத் திகழ்ந்தார்.
பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் 1972 இல் அவர் அனைத்திந்திய அண்ணா தி.மு.கவைத் தோற்றுவித்தார். 1977 தேர்தலில் வென்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். 1984 இல் முதன் முதலாகக் கடுமையான நோய்க்கு ஆளானார். அதிலிருந்து மீண்டவர் முழு நலமடையாதிருப்பினும் தமிழக முதலமைச்சர் பணியில் ஒரு சிறிதும் வழுவாது இறுதி வரை பணியாற்றி வந்தார். இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்னுள்ள தமிழக வரலாற்றில் அவருக்கு ஒரு முக்கியமான சிறப்பிடம் என்றென்றும் உண்டு.
புரட்சித் தலைவர் அவர்களை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் தாமரைத் திரு. வ. சுப்பையா பிள்ளையிடம் மாறாத அன்பு கொண்டிருந்தார். 1968 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சங்கவிலக்கியங்கள் அனைத்தையும் ஒரு பொன்னான பேழையில் வெளியிட்டது. அதனை புரட்சித் தலைவர் தம் பொற்க்கரங்களால் முதலில் வாங்க வேண்டுமென்று தாமரைத் திரு வ. சுப்பையா பிள்ளை விரும்பினார்கள். கலைமாமணி, கவிஞர், புத்தனேரி ரா. சுப்பிரமணியம் உதவியுடன் பொன்னாலான பேழையைப் புரட்சித்தலைவர் இல்லத்திற்கு எடுத்துச் சென்றனர். நூற்பேழையைக் கண்டவுடன் புரட்சித் தலைவர் மகிழ்ந்து வ.சு. ஐயாவைப் பாராட்டி உடனே அதற்குரிய தொகையைத் தன் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்புத்தார். அதற்குப் பிறகு தாமரைத்திரு வ. சுப்பையா பிள்ளையை கண்டபோதெல்லாம் பாராட்டி மகிழ்வார்.
புரட்சித் தலைவர் முதல்வரான பிறகு தாமரைத்திரு வ. சுப்பையா பிள்ளைக்குத் தமிழக அரசின் சார்பில் ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்ற விருதையும் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கப் பதக்கத்தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
புரட்சித் தலைவர் மறைந்தவுடன் செந்தமிழ்ச் செல்வி இதழில் பெருங்கவிஞர் ‘கலைமாமணி’ டாக்டர் புத்தனேரி. ரா. சுப்பிரமணியம் வடித்த இரங்கற்கவிதை பின்வருமாறு:-
புகழ் வரலாறு படைத்த புரட்சித் தலைவர்
துடிக்குதே உள்ளம்! ஆறாத் துயரினால் வெப்பக் கண்ணீர் வடிக்குதே கண்ணும்! எங்கள் மக்களின் திலகம் ஆவி நொடிக்குளே மீளாத் தூக்கம் நுகர்ந்திடக் கால தேவன் பிடிக்குளே சிக்கிக் கொண்ட பேரிடி விழுந்த தையோ ! அதிர்ச்சியால் அகத்திற் குள்ளே அரற்றினேன்!
நெடிய நட்பின் முதிர்ச்சியால் சோகச் சொற்கள் முந்தியே வந்தும்
கண்ணீர் உதிர்ச்சியால் பொங்கும் பாச உணர்ச்சியால்
தளதளக்கும் நெகிழ்ச்சியால் இரங்கல் பாடல் நிகழ்த்தினேன் அடக்கத் தோடே!
பலமுறை எமனை ஓட்டி மூன்று நற்பிறவி கண்ட பொன்மனச் செம்மல் அன்புப் புன்னகை மன்னன்
தன்னை இம்முறை இரக்கம் இன்றி இரவிலே கால தேவன் வன்முறைக் கொள்ளை கொண்டான் மாரடைப் பென்னும் பேரால் சேரமான் ஆட்டன் அத்தி திருமுகக் காந்த ஈர்ப்பை
நேரிலே எம். ஜி. ஆரின் நிகரிலா வடிவில் கண்டோம்: பாரியை மிஞ்சும்
வள்ளல் பரிவுடன் அனைவருக்கும் மாரிபோல் வழங்கி வந்தார்
மக்களின் இதய தெய்வம். மக்கள்ளன் பக்கம் என்றே
வையகம் வியக்க வைத்த மக்களின் திலகம் பூமி
வாழ்வினை நீத்த செய்தி திக்கெலாம் நடுநடுங்கத் தீயெனப் பரவி
ஆறாத் துக்கமாம் கடல் நெருப்பாய்ச் சுடுவதால் துடிக்கின்றோமே!
தாயினை இழந்து சேய்கள் தவிப்பதைப் போலே
அன்புத் தாய்க்குலம் போற்றும் ஈகைத் தமிழ்க்கலைப் புரட்சி வீரர்;
தாயவர் தமைப் பிரிந்த துன்பமே புவனம் எங்கும் ஆயிரம் கோடி
வாயால் அரற்றினும் தீரா தம்மா!
சத்துண வளித்த பாசத் தாயினை இழந்தோம் என்றே
எத்தனை இலட்சம் சேய்கள் ஏங்கியே தவிக்கும் அம்மா!
‘ரத்தத்தின் ரத்தம்’ என்றே இன்மொழிக் குரல்
கொடுத்த பத்தரை மாற்றுத் தங்கம் பாரினைத் துறந்தார்
அந்தோ! பேரறிவாளர் அண்ணா பெருமிதக் கொள்கை
ஏந்தித் தேர்தலில் வெற்றி கண்டு திறல்மிகும் முதல்வரானார்;
பாரத ஒருமைப் பாடும் பைந்தமிழ் இனப்பண் பாடும்
சேரவே ஈரைந் தாண்டு சிறந்த நல்லாட்சி செய்தார்.
சாதனை வீரர் ஏழை தமக்கெலாம் தெய்வமாக
ஆதரவளித்த வள்ளல் அருள் முகப் பொலிவு மிக்கார்
பூதலம் அதனில் மங்காப் புகழ் வரலாறு கொண்ட
மேதையின் மறைவு தந்த வேதனைக் கெல்லை ஏது?
முத்தமிழ்த் தலைவ ரோடு முப்பத்தைந் தாண்டுக் காலம்
எத்துணை நெருக்கமாக இணக்கமுற் றிருந்தேன்!
அந்த உத்தமர் ஒரு சகாப்தம்;
உயரிய வாழ்வு கண்டு சத்தியம் நேர்மை காத்த தமிழக முதல்வர் எங்கே?
பாரதிதாசன் மேன்மைப் பரிசினை எனக்கு நல்கி மார்புறத் தழுவிச்
செம்மல் வழங்கினார் பொன் பதக்கம்; பார்புகழ்த் தமிழின் கீர்த்திப்
பழங்கலை இயக்ககத்தின் ஓர் இயக்குநராய் என்னை உயர்த்தினார்
எம். ஜி. ஆரே. எத்தனை அந்தரங்கம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்!
எத்தனை விழாக்களுக்கே என்னையும் அழைத்துச் சென்றார்!
எத்துணைப் பாசத் தோடே என் தமிழ்க் குடிலைத் தேடி உத்தமர் வந்தார்
அந்த உறவெலாம் மறக்கப் போமோ! பல்கலைக் கழகம் ஏழு படைத்த
ஓர் முதல்வர் இந்தத் தொல்புவி யதனில்
வேறே சுட்டு தற் கெவரும் இல்லை!
நல்லறக் கொடையி னாலே நாடெலாம் போற்றும்
வள்ளல் இல்லையே இந்நாள் என்னும் ஏக்கமே தீர்வ தெந்நாள்?
இலங்கையில் தமிழ் இனத்தின் இணையிலா உரிமை
காக்கக் கலங்கிடா நெஞ்சால் இராசீவ் காந்தியின் ஆற்றல் எல்லாம்
துலங்கிடும் ஒப்பந்தத்தின் சுடர்ஒளித் தூண்டு
கோலாய்க் கலங்கரை விளக்குப் பாதை காட்டினார் எம். ஜி. ஆரே.
புயலாய் மாறிப் புரட்சியின் தலைவராக யாவரும்
வியந்து போற்றும் அறக்கொடை முதலமைச்சர்!
சாவது பிச்சை கேட்கத் தன்னையே தந்த வள்ளல்;
நாவதன் பயனே வெற்றி நாதரைப் பாடல் அன்றோ !
இடமன வலிமை வெற்றிச் சின்ன மாய் ஓங்கி என்றும்
கடமையும் கட்டுப் பாடும் காத்தவர் எம். ஜி ஆரின் இடம்
அதை நிரப்ப வல்லார் எவர் எனும் கேள்வி
விம்மிப் படர்வதால் மக்கள் உள்ளம் பதைத்திடும் துயரம் அந்தோ !
பெரும்புகழ்ப் பெரியார் மாண்ட பேர்பெறும் திசம்பர்த் திங்கள்
இருபத்து நாலாம் நாளில் இணையிலா எம். ஜி ஆரின் திருமுகம்
உயிரை நீத்த செய்தியே சமதர்மத்தின் ஒருபெரும் விந்தை தானோ?
உழலுதே சிந்தை தானே ! சென்னையில் எழிலார் வங்கத் திரைகடற்கரையின்
ஓரம் தன்னிக ரில்லா அண்ணா சமாதியின் இதயப் பக்கம்
பொன்மனச் செம்மல் மேனி, புகழ்மணம் ஏற்ப தற்கே
சந்தனப் பேழை என்ன தவத்தினைச் செய்த தம்மா!
பொன்மனச் செம்மல் இந்தப் புவியினைப் பிரிந்தார்
என்றே என் மனம் நம்ப வில்லை!
எத்தனை கோடி மக்கள் நன்மனம் கோயில் கொண்ட
நாயகர் எம். ஜி. ஆரின் புன்னகை என்றும் வாழும் புகழெனும் பொலிவினாலே.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com
*****

Add a Comment