16.9.2017
குறுந்திரை நெடுந்தொடர்களில் வீழ்ந்தபோது!
================================================
அமெரிக்க நாட்டிலும், ஆஸ்திரேலியாவிலும் நானும் என் துணைவியாரும் தங்கியிருந்தபோது ஆங்கில நெடுந்தொடர்களைத் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். அப்போது, கிடைத்த ஓய்வு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கழித்து எனக்கு ஓய்வாகவும் சாய்வாகவும் அமைந்திருக்கிறது.
நான் தொடர்ந்து கண்டுவரும் குறுந்திரை நெடுந்தொடர்களைப் பற்றி நினைத்ததைக் கூற விழைகிறேன்…..
நாள் தவறாமல் மாலை 6.30 மணி முதல் 09.30 மணி வரை குறுந்திரைத் தொடர்களை கண்டு வரும் வாய்ப்பினைப் பெற்றேன்.
மகிழ்வதா? வருந்துவதா? என்று மாறித் மாறி தவிப்புக்கு ஆளானேன்.
“பகல் நிலவு“ வாழ்க்கையின் மங்கிய வெளிச்சத்தைக் காட்டுகிறது.
“மௌன ராகம்“ இளம் பிள்ளையைக் கொடுமைப்படுத்தும் ஈனர்கள் மீது தாங்க முடியாத எரிச்சலைத் தருகிறது.
“அத்தை“ இசைவாணனின் மனைவி என்ற அரக்கியர்களை என்னால் கண் திறந்து பார்க்க முடியவில்லை.
பாடுகிற பிள்ளை யாழை மீட்டுவதுபோல பாடினாலும் புரட்சிக்கவிஞரின் பொன் வரிகளை எங்கேனும் பாட வைக்கலாகாதா??
துன்பம் நேர்கையில் என்பதை எங்கேனும் சேர்க்கச் சொல்லுங்கள்.
பகல் நிலவு, பாடாத பண், பணிப்பெண் முடிசூடுகிறாள் என்ற பொருண்மைகளில் வருகின்ற தொடர்களைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.
விடாது பழி செய்து வெறுப்பினால் நம்மை உமிழ வைக்கிற மூன்று மருமகளும் ஒரு குடும்பத்தில் கொடிய நஞ்சாகக் கலந்திருப்பதை எண்ணி நகைக்க முடிந்தது.
பணிப்பெண்ணின் பண்பும் பரிவும் அழகும் வனப்பும் பெரிய ஆறுதலைத் தருகின்றன. எந்தத் தொடரிலும் பேய் வருவதும், காளி, நீலி வருவதும் பொய்க்கதைகளுக்கு விஜய் சூட்டும் பூமாலைகளாகக் காண்போர் மனத்தில் கசப்பை உருவாக்குகின்றன.
திருந்தினால் சரி, வருந்துபவருக்கு ஆறுதலாக இருக்கும்.
……. பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment