POST: 2020-09-18T12:08:28+05:30

பாவேந்தரும் – மழலையர் நலமும்
( டாக்டர் தாரா நடராசன், எம்.டி. டி.சி.எச். )

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை நான் நேரில் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். என்னுடைய இல்லத்திற்கே ஒரு முறை வந்திருக்கிறார் என்பது பெருமையாக உள்ளது. ‘பாரதப் பாசறை” எனும் நாடகத்திற்கு ஒத்திகை பார்க்க வந்திருந்தார். என் வீட்டிற்கு அடுத்த வீட்டில்வ நடிகர் “பிரண்டு இராமசாமி” குடியிருந்தார். அவர் இல்லத்தின் மேல்மாடியில் அப்போது ஒத்திகை நடந்தது. அடுத்த வீட்டில் என் கணவரும் நானும் இருப்பதையறிந்து தானாக வந்தார். அப்போது நான் குழந்தைகள் நோயியற் பட்ட மேற்படிப்பு மருத்துவம் பயின்றுக்கொண்டிருந்தேன். அதை அறிந்த அவர், பெரிதும் மகிழ்ச்சியடைந்ததோடு நண்டும் நத்தையுமாக நம் நாட்டுக் குழந்தைகள் நலிந்து, மெலிந்து நோஞ்சான்களாக இருக்கிறார்களே என்று அவர் வருந்திக் கூறியது என்நினைவுக்கு வருகிறது. பிஞ்சுக் குழந்தைகள் பற்றி பாவேந்தர் பாடிய பாட்டுக்களில் அறிவியல் உண்மைகளும் அடங்கியுள்ளன. ஆறு வயதில் மட்டுமே குழந்தைகள் பள்ளிக்குப் போய்ப் படிக்கலாம் என்றிருந்த நிலைமை மாறி ஐந்து வயது இருந்தாற் போதும் என்ற நிலைக்கு வந்து, இப்போது மழலையர் பள்ளிக்கு மூன்று வயது நான்கு வயதுப் பிள்ளையும் அனுப்புகின்ற நிலைமை வந்துள்ளது. ஆனால், பாவேந்தரோ குழந்தையின் இரண்டு வயதிலேயே பள்ளிக்கு குழந்தையைக் கொடுத்துவிடு என்று பாடுகிறார். இது புரட்சியான திட்டமாகும். பிஞ்சுக் குழந்தையைப் பற்றி ஆர்வத்தோடு பாடியதோடு இளைஞர் இலக்கியம் என்ற நூலிலும், தாலாட்டு முதலிய பாடல்களிலும் குழந்தை மீது மிகுந்த ஈடுபாட்டுடன் புரட்சிக்கவிஞர் பாடியிருக்கிறார்.

ஒரு நாட்டினுடைய பெருமை என்பது நாட்டின் மலைகளால், காடுகளால், இயற்கை வளங்களால் கணக்கிடப்பட்டுக் கூறப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இப்போது நாட்டின் பெருமை மலைகள் அல்ல;
காடுகள் அல்ல இயற்கை வளங்கள் அல்ல; செல்வச் செழுமைகளல்ல; அந்த நாட்டில் பிறக்கின்ற குழந்தைகள் எப்படிக் காக்கப்படுகிறார்கள் என்பதற்கேற்பவே அந்த நாட்டின் பெருமை அறியப்படுகிறது என்று அறிவியலாரும், மருத்துவர்களும் கருதுகிறார்கள்.
குழந்தைகள் அழகானவர்கள், மென்மையானவர்கள், மகிழ்ச்சியூட்டுபவர்கள் என்று மட்டுமே நாம் கற்றிருக்கின்றோமே தவிர மிக எளிதில் நோய்க்கு இலக்காகக் கூடியவர்கள், முழுநேரக் கண்காணிப்புத் தேவைப்படுபவர்கள், தூய்மை இல்லாத இடத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் நோய்களுக்கு மிக எளிதில் ஆளாக நேரிடும் என்பதையெல்லாம் நமது மக்கள் தெளிவாகக் கூர்ந்து அறியவில்லை. ஒரு குழந்தையை 5 ஆண்டுகள் கவனிப் புடன் வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு வாய்த்த மாபெரும் பொறுப்பு என்பதை பெற்றோர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும். 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 80 முதல் 110 குழந்தைகள் முதலாண்டு முடிவதற்குள் மாண்டுவிடுகின்றனர். எந்த நாட்டில் இளங்குழந்தைகள் அதிகமாக இறந்து போகிறார்களோ அங்குச் சுகாதாரம் இல்லை; துப்புரவு இல்லை; நல்ல மருத்துவக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை; மக்களுக்கு, அதிலும் குறிப்பாக மகளிருக்குப் போதிய கல்வி வளம் இல்லை என்பது பொருள். குறைந்த அளவுக்குக் குடும்பத்தை வைத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டு இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்று அவர்களைப் பொலிவாகவும் வலிவாகவும் வளர்ப்பது ஒவ்வொருவருக்கும் அமைந்த நற்கடமையாகும். இது தெரியாமல் ஐந்தாவது குழந்தை அரசாளும்” என்றும், எட்டாவது குழந்தை புகழை எட்டிப் பிடிக்கும், என்றும் பொருளற்ற பழமொழிகளை நம்பிக்கொண்டு, பிள்ளைகளை அளவின்றிப் பெறுவது நாட்டின் பெருமையைக் குலைப்பதாகும். அளவோடு பெற்று வளத்தோடு வாழ்வோம் என்கின்ற கருத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே பாடிக்காட்டிக் குடும்ப நலத்திற்கு வழிகாட்டிய பெருமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களையே சாரும் என்றால் மிகையாகாது.
சாவதற்கோ பிள்ளை?
தவிப்பதற்கோ பிள்ளை?
தொத்து நோய்; ஏழ்மை
பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே
பிள்ளையோ பிள்ளை”

என்று பாடியவர் பாவேந்தர்.

மக்களைப் பெற்று அவர்களைச் சிறப்புடன் வளர்த்துத் தக்க குடிமக்களாக ஆளாக்குவது பெற்றோரின் மாறாக் கடமையாகும். தம்மைவிடத் தம் மக்கள் சிறந்தவர்களாக உருவாக வேண்டும்-பெரிய சிறப்பினையும் அடைதல் வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோர் அக்குழந்தைகட்கு உண்மையான பெற்றோராய் அமைந்திடுவர் என்னும் பொருள்பட வள்ளுவப்பெருந்தகை வலியுறுத்துவதை நாம் உணரவேண்டும். பல குழந்தைகளைப் பெறும்போது சரியான முறையில் அவர்களைப் போதிய ஊட்டத்துடன் வளர்க்கவியலாது போகின்றது. எனவே, குறைந்த அளவே குழந்தைகளைப் பெறுதல் வேண்டும் என்பதை,
“நன்மக்கட்பேறு பற்றி நானுரைப்பது ஒன்றுண்டாம்
ஈண்டுக் குழந்தைகள் தாம் எண்மிகுந்து
போகாமல், வேண்டும் அளவே
விளைத்து, மேல் வேண்டாக்கால்
சேர்க்கை ஒழித்துக் கருத்தடையேனும் செய்க”

எனும் வரிகளின் மூலம் பாரதிதாசன் வலியுறுத்துவது காணலாம்.
மற்றுமொரு பாடலில்,
“காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம் ?”

என்று கேட்பார்.

அலுவலகத்து வேலையை வேண்டுமென்றால் பெண்களுக்குப் பகுதிநேர வேலை என்று கூடச் சொல்லலாம். இப்படிச் சொல்வதால் புற உலகப் பணியை நான் குறைத்து மதிப்பிடுவதாகக் கருதக் கூடாது. ஆனால், குழந்தை களை வளர்ப்பது என்பது ஒரு முழுநேரப் பணியாகும் என்று வலியுறுத்தலாம். குழந்தை பெற்ற பிறகு ஆறு மாதமும் குழந்தை பெறுவதற்கு முன்னர் மூன்று மாதமேனும் கண்டிப்பான விடுப்புக்கள் வழங்குகின்ற நாடுகள் உள்ளன. ஒரு மனைவி கருவுறுகிறாள் என்றால் கருவுற்ற நாள் தொடங்கி மகப்பேறு முடியும் வரையில் தாயும், தந்தையும் தவறாமல் பிள்ளை வளர்ப்புப் பயிற்சி வகுப்புக்குச் சென்று வரும் வழக்கம் மேலை நாடுகளில் உண்டு. ஆனால் நம் நாட்டில் படித்தவர்கள் கூடத் தன் மனைவியை மகப்பேற்றுக்குத் தான் இல்லாத தாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்ற ஒரு வகையான வழக்கம் இருந்து வருகிறது. தாய்வீடு பரிவான இடம் என்றாலும் கணவனும் உடனிருப்பது மிகவும் நல்லதாகும். பணத்தட்டுப்பாடும், வறுமையும், மூடப்பழக்கமும் இதற்கெல்லாம் காரணமாக லாம்.

பாவேந்தர் பாரதிதாசன் சீர்திருத்தக் கவியரசர். புரட்சி எண்ணங்களை வாழ்க்கையில் கொண்டவர். புதுமையான கருத்துக் களைப் பாடல்கள் மூலம் பரப்பியவர். பிஞ்சுக் குழந்தைகளின் உடலும் வடிவும்,
அன்னத்தின் தூவி அணிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச்சித்தரித்த மெல்லியலே!

என்று மழலையின் மென்மை மிகுந்த அழகு மிளிரும் தோற்றத்தைப் புனைந்து அழகாகக் கூறியுள்ளார்.

பிஞ்சுப் பிள்ளையை இருகையால் எடுத்து ஏந்தும் முறையைத் தன் கணவனுக்குக் கூறுங்கால், பிறந்தவுடன் குழந்தையைத் தூக்குவதற்கு எல்லோரும் விரும்புவார்கள். ஆனால், கைக்குழந்தையைத் தாக்குவது எல்லோருக்கும் எளிதல்ல என்று கூறியதோடு,
இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை
உறுத்தாமல் தூக்க ஒரு திறம் வேண்டும்,

என்று சொல்லி, குழந்தையின் தலை தானாக நிற்காது, ஆகையால் தலையையும் உடலையும் ஒருசேரத் அனைத்துப் பிடித்தால் தான் பிறந்த இளங்குழந்தையை வாய்ப்பாகத் தூக்க முடியும் என்பதை விளக்கும்.

குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை
அம்மலர்ந்தண்டே அழகிய மெல்லுடல்;
தண்டுடல் மலர்த்தலை தாங்குமா ?
தலை, உடல், இரண்டையும் ஒருங்கு தாங்கி
உலைஅமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல் போல்
தவறாது தூக்குவது தலையாய கடன்

என்று கூறுவது வியப்பைத் தருகிறது.

குடும்பவிளக்கு என்னும் நூலில் குழந்தை பிறகு குழந்தையின் ஒவ்வொரு அசைவும் மிக நுணுக்கமாகத் தீந்தமிழில் பாவேந்தர் புனைந்துரைப்பதன் மூலம் ஓர் தமிழ்க்குழந்தையை நம்முன் கொண்டு நிறுத்துகிறார். ‘சிறுகுழந்தை விழியி லேயே ஒளியாய் நின்றாள்’ என்று அழகு தேங்கிய இடமாகக் குழந்தையின் விழியழகைச் சுட்டிக் காட்டுவதும் கருதிப்பார்க்கலாம்.

குழந்தைகள் வளரும்போதே அவர்களைப் பரிவோடு வளர்த்தால் மட்டும் போதாது, பண்போடும் வளர்க்க வேண்டும். இன்றைய குழுந்தைகள் தாமே நாளைய உலகத்தின் நாயகர்கள். எனவே,
இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்
இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்

என்று பாவேந்தர் பாடியுள்ளார். ‘நம் நாடு என்ற தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளே” என்ற திரைப்பாடல் பாவேந்தர் பாதையில் அமைந்திருப்பதை நாம் கேட்டிருக்கிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *