தமிழ்நாடு கருணீகர் சங்கம் – முதல் மாநாடு மலர் – 1991
பாவேந்தரும் – மழலையர் நலமும் ….
மருத்துவமாமணி தாரா நடராசன்
குடும்பவிளக்கு என்னும் நூலில் குழந்தை பிறகு குழந்தையின் ஒவ்வொரு அசைவும் மிக நுணுக்கமாகத் தீந்தமிழில் பாவேந்தர் புனைந்துரைப்பதன் மூலம் ஓர் தமிழ்க்குழந்தையை நம்முன் கொண்டு நிறுத்துகிறார். ‘சிறுகுழந்தை விழியி லேயே ஒளியாய் நின்றாள்’ என்று அழகு தேங்கிய இடமாகக் குழந்தையின் விழியழகைச் சுட்டிக் காட்டுவதும் கருதிப்பார்க்கலாம்.
குழந்தைகள் வளரும்போதே அவர்களைப் பரிவோடு வளர்த்தால் மட்டும் போதாது, பண்போடும் வளர்க்க வேண்டும். இன்றைய குழுந்தைகள் தாமே நாளைய உலகத்தின் நாயகர்கள். எனவே,
இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்
இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்
என்று பாவேந்தர் பாடியுள்ளார். ‘நம் நாடு என்ற தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளே” என்ற திரைப்பாடல் பாவேந்தர் பாதையில் அமைந்திருப்பதை நாம் கேட்டிருக்கிறோம்.
எல்லாக் கவிஞர்களும் குழந்தைகளைப் பற்றிப் பாடினாலும் பாவேந்தர் பாடலுக்கு ச் சிறப்பு உண்டு. கற்பனைக் காட்சிகளையே பாடாமல் பாவேந்தர் வாழ்க்கை நெறிமுறைகளைப் பாடினார். நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்ற கருத்தினைப் பாவேந்தர் எடுத்துரைத்தார். நல்ல குடும்பம் எப்படி அமைய வேண்டும் என்பதற்காகவே குடும்ப விளக்கு என்ற புதுமையான இலக்கியத் தையும் படைத்தார். நம்முடைய சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் அதிகம். கடவுள் நம்பிக்கையை வாழ்க்கைக்கு ஒரு தேவை போலப் பழக்கத்தால் நாம் கருதினாலும், குழந்தைகளுக்கு நோய் வருமானால் வேண்டுதல் செய்வதில்தான்’ பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றார்களே தவிர, “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி” மருத்துவரிடத்தில் விரைந்து வந்து காட்டுவதற்கு நம் மக்கள் முன் வருவதில்லை. இதனைப் பாவேந்தர் குறிப்பிடும்போது, ‘முடுகிவரும் நோய்க்கெல்லாம் கடவுள்தனை வேண்டியே முடிவடைய மார்க்கம் உண்டு’ என்று சாடுகிறார்.
‘நேர்பட ஒழுகு’ என்னும் சில வரிகளில் புரட்சிக் கவிஞர் குழந்தைகளுக்கு வேண்டிய அறிவுரைகளையும், துப்புரவுக்கான கருத்துக்களையும் எழுதினார். “தரையில் உட்கார வேண்டாம்; கண்ட இடத்திலே புரண்டால் கரியாகப் போகும் சட்டை; தண்ணீரில் ஆடக் கூடாது; சரியான நிலையில் நடப்பாய்; சுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே; நல்ல சுவரிலும் கதவிலும் கிறுக்காதே; கண்ணாடி எடுத் தால் மெதுவாக வை; கை தவறிவிட்டால் உடைவது மெய்; மற்றவர் பொருளை எடுக்காதே; கண்ட இடத்தில் துப்பாதே; காலில் சேற்றை அப்பாதே; துண்டு துணிகளைக் கிழிக்காதே; துடுக்காய் எவரையும் பழிக் காதே; நொண்டியைக் கண்டு சிரிக்காதே; எழுதி முடித்தபின் உன் பலபம், அதை எடுத் துப் பையில் வைப்பது சுலபம்; படுக்கையை விட்டு எழுந்தால் பாயைச் சுருட்டு,
கடன் வாங்கக் கூடாது தம்பி – மிகக்
கருத்தாய்ச் செலவிட வேண்டும்
உடம்பினைக் காப்பாற்ற வேண்டும்
உணவினில் நல்லுணவை உண்பாய்
உடைந்திடக் கூடாது நெஞ்சம் – நீ
உண்மைக்குப் பாடுபடும் போதில்!
அடைந்ததைக் காப்பாற்ற வேண்டும் – நீ
அயற் பொருள் பறிக்க எண்ணாதே.
என்று அறிவுரை கூறுவது பள்ளி செல்லும் சிறார்களுக்குக் கற்பிக்க வேண்டிய நல்லொழுக்கப் பாடமாக அமைகிறது.
காலையில் எழுந்து வயிறு கழித்துப்
பாலைப் போல பல்லைத் துலக்கிப்
பட்டுப்போல உடம்பு குளித்துச்
சிட்டுப் போலத் தலையை வாரித்
தடுக்கில் குந்தித் தந்ததை உண்டும்
படம்பை உடுத்திச் சுவடி எடுத்தும்
துள்ளிக் கூடம் விட்டுப்
பள்ளிக் கூடம் பறக்குமாம் கிளியே !
என்ற கருத்துரை குழந்தையின் அன்றாடக் கடமையைக்காட்டும்.
புரட்சிக் கவிஞர் வீட்டில் பெண் மகவு பிறந்த உடனேயே “மூச்சொடும் அழகொடும் பெண் குழந்தை முத்துப்போல் பிறந்தாள்” என்று சொல்லி,
“இளகிய பொன் இறுக்கின்
சிற்றுடல் இரு நீலக்கண்
ஒளிபடும் பவளச் செவ்வாய் “
என்ற பாடல் மூலம் கவியரசர் அன்பைச் செலுத்துகிறார்.
பல வீடுகளில் பெண் மகவு பிறந்தவுடனே “ஐயோ பெண்மகளா?” என்று வருந்திக்கேட்பவர் நடுவில் பெண் பிள்ளை பிறந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்து
‘மண்ணில் பட்டால் மாசுபடும் என்று என்
கண்ணில் வைத்தே காப்பேன்’
என்று ஒரு தந்தையின் பொறுப்புணர்வோடு பாடுவதைக் காணும்போது நாம் எல்லோரும் பெருமகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும். பாவேந்தர் தன்னையே பெண்ணாக மாற்றிக்கொண்டு மகளின் ஒவ்வொரு அசைவையும் எடுத்துக் காட்டும்போது பெண்ணினத் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.
வான் பார்த்துக் கிடந்த மேனி, கவிழ்ந்தும் மலர்க்கை ஊன்றித் தவழ்ந்தும் நின்றும் அங்கும் இங்கும் தள்ளாடி நடந்து வருகின்ற பெண் குழந்தையின் வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் பாவேந்தர் அழகாகப் பாடியுள்ளார்.
கவிஞர் தாலாட்டுப் பாடல் இசைக்கும் போது ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார். யாருமே குழந்தைகளிடம் உண்மையை முழுவதுமாகச் சொல்வதில்லை. ஆனால் கவிஞரோ நமக்குப் புரியாத, ஏன் ? பழக்கத்தில் கொண்டுவராத சில செய்திகளைக் குழந்தையிடம் பாடி அவர்களாவது இனிமேல் புது உலகத்தைக் காண வேண்டும்மாறு இந்தப்பாட்டைப் பாடினார் போலும்.
“மூடத்தனத்தின் மூடைநாற்றம் வீசுகின்ற காடு
மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”
என்று கூறித் தொட்டிற் பழக்கமாகவேப் பாலை ஒழுங்காகத் தாய்ப்பாலோடு சேர்த்து ஊட்ட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்.
குழந்தைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. பெற்றவர்கள் குழந்தைகளின் மனவியல்பை அறிந்து அவர்களுடைய ஆற்றலை, சூழ்நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா ? குன்றினைப் போல் வலிமையோடிருக்க வேண்டும். பல கலை ஆய்ந்து தொழில் பல கற்று வாழ்வில் புதுமைகளைக் காண வேண்டும். அதை விட்டு விட்டுத் தலை மட்டும் பெரிதாக வளர்த்து உடலை மெலிதாகவும் வளர்க்கக் கூடாது. அது போலப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைச் சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தால் பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். தெருவிலே சிறுநீர் கழிப்பது, வீட்டோரத்து மூலைகளில் மலங்கழிப்பது,
நடக்கும் பொது வழியில் எச்சில் உமிழ்வது; தெருக்களில் காலணிகளைத்தேய்த்து நடப்பது போன்ற தீய பழக்கங்களை முளையிலேயே தடுத்துத் திருத்த வேண்டும். அப்போதுதான் தூய்மையாக வீட்டைப் போல நாட்டையும் நாம் பார்க்கலாம். எளிமையாக உடைகளை அணிந்தாலும்கூட அதில் ஓர் எழில் மிளிர வேண்டும். குழந்தைகளின் ஆர்வத்தை அறிந்து போற்ற வேண்டும். அதற்காகத்தான் பெற்றோர்களிடம் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பாடுகிறார்.
“சேவல் என நிமிர்ந்து, சிறுத்தையெனப்
பகையைச் சீறும்
குழந்தைகளைப் பெற்று”
அதுபோலவே இளமையில் கல்வி கற்கும் இன்றியமையாமையையும் புரட்சிக் கவிஞர் கற்பிக்கிறார். பள்ளிக்குச் செல்லாத சிறுமியை அழைத்து மணியடித்தும் கையில் சுவடிப்பையை எடுக்க நேரம் வாய்க்கவில்லையா ? அல்லது பாடம் எழுதி மறந்த தொல்லையா ? என்று வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்து இறுதியில் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டும் என்று பாவேந்தர் கேட்கும்போது குழந்தைகளுடைய மனவியல்பை அறிந்த மருத்துவராகவே”புரட்சிக் கவிஞர் காட்சியளிக்கிறார்.
“தலைவாரிப் பூச்சூடி உன்னை – பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை”
என்று ஒரு தந்தை கூறுவதோடு கற்பதுதான் பெண்களுக்கு ஆபரணம், கெம்புக்கல் வைத்த நகை தீராத ரணம் என்று கூறி கற்ற பெண்களை மட்டுமே இந்த நாடு கண்களில் ஒற்றிக் கொள்ளும் என்றும் இளமையிலேயே கல்விப்பாலை ஊட்டிடுவதோடு குழந்தை நல நிறுவனத்தின் தேவையையும், அமைப்பையும் கூடச்சுட்டியுள்ளார்.
குழந்தைகளை அழகின் கொழுந்துகள் என்று மட்டுமே பாடிவந்த கவிஞர்களிடையே குழந்தை வளர்ப்பு, நோயிலிருந்து காப்பு, மனத்திண்மை உருவாக்கம், பகுத்தறிவுத் தெளிவு, குழந்தை நலநிறுவனத் தேவை முதலிய பல்வேறு நிலைகளையும் சீர்திருத்தப் பாங்கில் பாடிய பெருமை பாவேந்தரையே சாரும். பாவேந்தரின் நூற்றாண்டில் அவருடைய பல கனவுகளில் சிலவற்றை யாவது நிறைவேற்ற நாம் முயல்வோம்.

Add a Comment