செருமானிய கடற்படையைச் சார்ந்த எம்டன் கப்பல் சென்னையில் குண்டு வீசி 106 ஆண்டு ( 22.9.1914 ) நிறைவு :
===================================================================================================
19.9.2018 இல் நான் ஆற்றிய உரை மீளாய்வு
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை
==============================================
டாக்டர் கந்தையா – ஜெயலட்சுமி அறக்கட்டளை சொற்பொழிவு
முதல் உலகப்போரில் புலம் பெயர்ந்த தமிழர்களின் தியாகங்கள்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
முதுபெரும் பேராசிரியர் ஜெயதேவன் அவர்களே,
தலைமைப் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் அவர்களே,
மாணவச் செல்வங்களே,
பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ், எடின்பர்கில் ஆங்கில இலக்கியம் பயின்று, பிறகு பிரெஞ்சு மொழியில் முதுகலை படித்து, புகழ் வாய்ந்த ஆங்கிலப் பேராசிரியராக மலர்ந்து, இன்று ஆங்காங்கில் பணியாற்றி வருகிறார்.
பாரசீக மொழிக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். ஸ்பானிசு நாட்டின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்.
பேராசிரியர் நம் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பனின் கவிதைகளை ஆங்கிலத்தில் செம்மையாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நூலகங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், ஆய்வுக்கூடங்களுக்கும் சென்று முதல் உலகப்போரில் மாண்ட தமிழர்களின் தகவல்களை நுணுக்கமாக ஆவணப்படுத்தி வருகிறார். ஆய்வில் விளைந்த பொருண்மையில் தான் இன்றைய தலைப்பு அமைந்தது.
மாணவர்களே, தென் ஆப்பிரிக்காவில் இன்றளவும் தமிழர்கள் தங்கள் பெயர்களை எழுதும்போது Moodley, Naidoo என்றுதான் எழுதுகிறார்கள். அவர்களுக்கு அது முதலியார் என்றும், நாயுடு என்றும் நாம் சொன்னால்தான் புரியுமே தவிர, அவற்றின் பொருள் தெரியாது.மோரீசிலும் இதே நிலை தான்.தமிழர்கள் தம்மைத் தமிழர்கள் என்றே மறந்து தலைமுறைகள் கழிந்துவிட்டன .
பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ், சிந்தனை வளம் பொருந்திய கருத்துருவை வழங்கினார் .முதல் உலகப்போர் என்னும் எரிதழல் எவரால் எப்படி நடந்தது என்பதை நுட்பமாகத் தெளிவுறுத்தியிருக்கிறார்.
பிரான்சு நாட்டிற்கும் ஜெர்மனி நாட்டிற்கும் போர் நடந்தது. அந்தப் பூசல், பெல்ஜியம் நாட்டில் மூண்டது. பெல்ஜியம் நாடு என்றும் அமைதியை விரும்பும் நாடு என்று கூறி, அந்த நாட்டிற்கு ஆங்கில அரசு 19 ஆம் நூற்றாண்டு இறுதியிலேயே விடுதலை வழங்கியது. அமைதி விரும்பும் பெல்ஜியத்திற்கு ஜெர்மனி ஊறு விளைவிக்கிறது என்று கூறி முதல் உலகப்போர் தொடங்கியது. ஆக, எங்கோ நெறிகட்டியதற்கு எப்படி ஆங்கில அரசு செயற்படுகிறது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலாம் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, அங்கேரி, செருமனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது இந்தியா ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.
எங்கோ நடைபெற்ற போரில் பங்கெடுப்பதற்கும் படுகொலைக்கு இரையாவதற்கும் ஆங்கில அரசு மிகத் தந்திரமாக அப்பாவித் தமிழர்களைக் கொண்ட வேலூர், நெல்லை போன்ற ஊர்களிலும், பல சிற்றூர்களிலும் இருந்து தமிழர்களை முதல் உலகப்போரில் பயன்படுத்தி, எதற்காகப் போரில் ஈடுபட்டார்கள், எதற்காக மாண்டார்கள் என்பது அந்தக் குடும்பங்களுக்குத் தெரியாமல், ஆங்கில அரசு தன்னுடைய வெறிகொண்ட போர் முகத்தைக் காட்டியது.
பேராசிரியர் கிரிகோரி, ஜெர்மானிய கப்பல் எம்டனைப் பற்றி நம்மிடையே சொன்னார்கள். ஜெர்மனியின் ‘எஸ்.எம்.எஸ். எம்டன்’ என்ற நவீன போர்க்கப்பலில் 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை நோக்கி வீரர்கள் வந்தனர். கேப்டன் வான் முல்லர் தலைமையில், வந்த கப்பலில், திருவனந்தபுரத்தை சேர்ந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த பொறியாளர் செண்பகராமன் என்ற வீரரும் இடம் பெற்றிருந்தார். ஜெர்மனியின் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்தின் பிடியில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற சுதந்திர வேட்கையுடன் இருந்தார்.
1914 ஆம் ஆண்டு – செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் “எம்டன்” கப்பல் நிலைநிறுத்தப்பட்டது.
‘எம்டன்’ கப்பலில் இருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டுகள் வீசினர். இதில் சென்னை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. அந்த கப்பல் நம் சென்னைத் துறைமுகத்திற்கு வந்து இரண்டு இலட்சம் லிட்டர் கச்சா எண்ணையை நம் பாரிமுனைத் துறைமுகத் தெருக்களில் கொட்டினார்கள். உயர்நீதிமன்ற மதிற்சுவரை குண்டு வீசித் தகர்த்தார்கள் .
இன்றைக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்ட வரலாற்று ஆவணக் கல்வெட்டாகச் சிதைந்து நிற்கிறது .
வெடிக்காத குண்டு ஐகோர்ட்டு வளாகத்திலேயே கிடந்தது.வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. குண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
சேதத்தை ஏற்படுத்திவிட்டு ‘எம்டன்’ கப்பல் சென்னையை விட்டு ஆழ்கடலுக்கு சென்றது. ஆங்கிலேய கடற்படை பின்தொடர்ந்தும், ‘எம்டன்’ கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயே படைக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த ‘எம்டன்’ கப்பல் 1914 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கடைசியாக எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
” எம்டன் போட்ட குண்டு எரிந்த ஊர்கள் இரண்டு ” என்ற தொடரும் ” இவனென்ன எம்டனா என்னை நடுங்க வைப்பதற்கு ” என்ற சொல் வழக்கும் இன்றும் நம் தமிழர்களிடம் இருப்பது ஒரு நூற்றாண்டு கலக்கமாகும்.
கடற்கரைக்கு அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தைக் கண்டால், முதல், இரண்டாம் உலகப்போரில் மாண்ட வீரர்களின் பெயர்கள் உள்ளன .
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சசி தரூர் , இலண்டன் மாநகரத்திலேயே ஆங்கில அரசு செய்த அழிபாடுகள் என்று தன்னுடைய அழகிய ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியதை நாமனைவரும் அறிவோம்
மாணவர்களே, ஆங்கில கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிக் ஒருமுறை, நம்முடைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை மொத்தமாக நொறுக்கி உடைத்து, அதிலுள்ள பளிங்குக் கற்களை இலண்டன் மாநகரில் விற்கலாம் என்று திட்டம் தீட்டியபோது, பளிங்குக் கற்களின் விலைச் சரிவினால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இப்படிப்பட்ட ஆங்கிலக் கொடுங்கோன்மை முகங்களுக்கு நடுவிலும் நம்முடைய தமிழ் மொழியின்
வளர்ச்சிக்காக பல்வேறு ஆங்கிலத் திருமுகங்கள் தன்னலமில்லாமல் பணியாற்றி வந்ததை தமிழ் படிக்கும் மாணவர்கள் மறக்கலாகாது. சான்றாக, எல்லிஸ், கால்டுவெல், ஜி.யு.போப் , வீரமாமுனிவர் போன்றோரை இன்றும் கடற்கரைச் சிலைகளாகக் கைதொழுது வருகிறோம்.
தமிழ் படிக்கும்போதே, ஆங்கிலத் திறனையும் வளர்த்துக்கொண்டு, வரலாற்று நோக்கையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒப்பில்லாத இந்தப் பணியை ஆற்றும் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் அவர்களை மகிழ்ச்சியோடு என் அண்ணன் என்று போற்றிப் பாராட்டுகிறேன்.
எந்தையாரின் இனிய நண்பரும் பேராசிரியர் குமரவேலுவின் வகுப்புத் தோழரும் ஆஸ்திரிலியாவில் நிறைநாளில் குடியேறிய திரு.கந்தையா அவர்களின் பெயரில் இந்த அறக்கட்டளை அமைந்திருக்கிறது. இலங்கையில் அரசின் பெரிய பொறுப்புக்களில் பணியாற்றியதோடு ஆஸ்திரேலியா சென்ற பிறகும் ஆண்டு தவறாமல் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு வந்து நல்லுரை ஆற்றுபவர்.
அவர் துணைவியாரும் ஆடற்கலை ஆசிரியராக சிட்னி மாநகரில் வாழ்கிறார் .
இந்த அறக்கட்டளை வெல்க !
பேராசிரியர் கந்தையாவின் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் ! .
வாழ்க தமிழ் !
வளர்க தமிழறக்கட்டளைகள் !

Add a Comment