அறிவியலில் தமிழ்வழிக்கல்வி
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை 1-6
– * –
ஒரு நாட்டின் மனித மேம்பாட்டின் தகுதி அந்நாட்டில் குழந்தை நல முன்னேற்ற நிலையோடு பிணைந்ததாகும். இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இன்றுவரை விரைந்து வளர்ந்துவரும் குழந்தை நல மருத்துவம் குழந்தைகளின் நல்வாழ்வுக்குப் பலவழிகளில் சிறப்பாகச் செயற்படுகிறது. கி.பி. இரண்டாயிரத்துக்குள் அனைவருக்கும் நலவாழ்வு என்ற உயரிய குறிக்கோளை எய்த எல்லா மருத்துவத் துறைகளும் நாட்டு மக்களின் நலவாழ்வுக்காக ஆர்வத்துடன் முனைந்து செயற்படுகின்றன.
ஒரு நாட்டின் நலவாழ்வை அறிந்துகொள்வதற்கு அந்நாட்டில் மழலையர் இறப்பு விகிதத்தை(Infant mortality rate) அளவிட்டு அறிய வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் இடையில் ஆயிரம் குழந்தைகளுக்கு இருநூறிலிருந்து இருநூற்றைம்பது குழந்தைகள் வரை ஓராண்டிற்குள் மடிந்தனர். இந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கு ஐம்பத்துநான்காக இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த இறப்பின் காரணங்களை ஆராய்ந்தால் சத்துணவற்ற குறைந்த உணவுண்ணுதல் (Malnutrition), வயிற்றுப்போக்கு, சளி, தொற்றுநோய்கள் போன்ற தடுக்கக்கூடிய நோய்கள் தாம் அதிகமாக நேர்கின்றன. பிறந்த குழந்தைகளில் பலர் குறைமாதக் குழந்தைகளாகவும் எடை குறைந்த மெலிந்த குழந்தைகளாகப் பிறப்பதும் ஒரு காரணமாகும்.
குழந்தை நல மருத்துவம்
1947 ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தை மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் வளர்ந்த மனிதர்களின் சிறுவடிவங்களல்ல. குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால், வளர்ச்சிக்குத் தேவையான உணவுச் சத்துக்கள், அவர்களுக்கு ஏற்படும் பல நோய்கள், குழந்தைகளின் மனவளர்ச்சி போன்றவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு அவர்களுடைய பிறப்பு, உடல், மனவளர்ச்சி, கல்வி போன்றவற்றில் பலவித நலத்திட்டங்கள் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் குழந்தை மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
குழந்தை பிறக்கும் முன்
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தான் குழந்தை நலத்துறை தொடங்கப்பட்டாலும், நம் நாட்டின் மக்கள்தொகையில் 40 விழுக்காடு குழந்தைகளாக இருப்பதை அறிந்து அவர்களுடைய வாழ்வைச் செழுமையாக அமைக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டு குழந்தை நலத்துறை மிக வேகமாக முன்னேறியுள்ளது.
மரபுவழி நோய்களைத் தவிர்ப்பதற்காக நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாகாது என்பதைத் தெளிவாக மருத்துவம் சுட்டிக் காட்டுகிறது. தாய் கருவுற்றபின் சத்துள்ள உணவை உட்கொள்ளவேண்டும். தாய்க்கு இரணஜன்னி தடுப்பூசியையும், இரத்த சோகையைத் தடுக்க இரும்புச் சத்து மருந்தையும் அளிக்கவேண்டும். தாயின் மனநிலை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் திகழ வேண்டும். மருத்துவ மனைக்குச் சென்று சோதனை செய்துகொள்வது, மகப்பேற்று மருத்துவர், தாதியர் உதவியுடன் மகப்பேற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதையும் இன்றைய அறிவியல் வலியுறுத்துகிறது.
குழந்தை பிறக்குமுன் சோதனைகளும் சிகிச்சைகளும்.
தொடக்கத்திலேயே அல்ஒலிச்சோதனை (Ultra Sonography) மூலம் குழந்தையின் வளர்ச்சிநிலை, நஞ்சுப்பையின் நிலைமை, குழந்தையின் உடலமைவு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். மிகச்சிறிய பிறவிக் குறைகளைக் கூட இந்த வகையில் கண்டறிய முடியும். உயிருக்கு ஊறான குறைபாடு என்றால் பெற்றோர்களுக்கு விளக்கிச் சொல்லிக் கருவைக் கலைத்துவிடலாம். சிகிச்சை அளிக்கலாகும் குறைபாடுஎன்றால் குழந்தை பிறந்ததும் தேவையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இன்னும் ஒரு படி மேலே போய் – கருவில் உரு வடிவாகும் குழந்தைக்குக்கூட வேண்டிய மருத்துவ சிகிச்சையானாலும், அறுவை சிகிச்சையானாலும் இப்போது செய்ய முடியும். கருப்பையிலிருக்கும் சிசுவை ஒரு நோயாளியாக நினைப்பதே அண்மைக்காலக் கருத்தாகும். தாய்க்குக் கொடுக்கும் மருந்துகளின் மூலம் குழந்தைகளைப் பற்றும் சில நோய்களைத் தவிர்க்க முடியும்.
கருவில் அறுவைச்சிகிச்சை
1. சிறுநீர்க் குழாயில் அடைப்பை நீக்குதல்
(Pulverisation for Posterior Urethral Valve)
2. மூளை வெண்டிரிக்கிளில் உள்ள மூளை மண்டல நீர் மிகுந்துகொண்டு போனால் இந்த மூளை மண்டல நீரைச் சிறுகுழாய் இணைப்பு (Shunt for Hydrocophalus) மூலம் பனிக்குட நீரில் வடியச் செய்யவேண்டும்.
3. சில இதய நோய்களுக்கான அறுவைச் சிகிச்சை (Atrial Septostomy for certain congenitalal heart diseases)
பிறக்கும் குழந்தைகளை இறப்பிலிருந்து தடுப்பது மட்டுமல்லாது அவர்களின் நீண்டகால நலவாழ்க்கைக்கு இவ்வித மருத்துவ வசதிகள் அடிகோலுகின்றன. குறைமாதக் குழந்தைக்குத் தகுந்த வெட்பதட்பம், பிராணவாயு, உணவு ஆகியவற்றை அக்குழந்தையின் வளர்ச்சிக்கேற்ற வகையில் வசதியாகக் காக்கும் சூடுப்பெட்டி (Incubator) , மஞ்சள்காமாலையினால் தாக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு இரத்த மாற்றுதல் போன்றவைகளும் மற்றும் பல நவீன கண்டுபிடிப்புகள் குறைமாதக் குழந்தையின் வளர்ச்சியைக் கருதிய கற்பகங்களாக அமைந்துள்ளன.
பிறந்தவுடன் மனவளர்ச்சி
பிறந்த குழந்தைக்கும் மன உணர்வுகள் உண்டு. முழுமையான வளர்ச்சிக்குக் குழந்தையின் மனவளர்ச்சியைக் குறைக்காமல் காக்கவேண்டும். மனவளர்ச்சிக்கு முதன்மையான இடத்தை இப்போது மருத்துவம் வழங்குகிறது. குழந்தை பிறந்தவுடன் தாயும் சேயும் ஒன்றாக இருக்கவைப்பது, குழந்தைக்குச் சீம்பாலும், தாய்ப்பாலும் தொடர்ந்து அளிப்பது, தாய்க்கு அறுவைச்சிகிச்சையில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் குழந்தையைத் தாயுடன் சேர்த்து வைப்பது, தாய்சேய் பாசப் பிணைப்பை வளர்க்கும். இந்த வகையில் கனிவு (Tender), உறவு (Affection), அன்பு (Love), பரிவு (Care), காப்பு (Security) என்பதைத் தொடக்க நாள்களில் பெறாத குழந்தைகள் தான் பிற்காலத்தில் சமூக விரோதிகளாக மாறிவிடுகிறார்கள். தெருவில் அலையும் திக்கற்ற பறவைகளாக மாறிவிடுகிறார்கள்.
குழந்தையின் உணவு
குழந்தை பிறந்த நான்கு மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுவது மிகமிக அவசியமாகும். குழந்தைக்குத் தேவையான அளவில் உணவுச் சத்துக்கள், நோய்த் தடுப்புச் சக்திகள் அனைத்தும் தாய்ப்பாலில் தான் உள்ளன. தாய்ப்பாலே தலைசிறந்த பாலென்று அனைவருக்கும் இப்போது உணர்த்தப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டும் முறையைக் கடைப்பிடிப்பதாலேயே இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம். குழந்தையின் நான்காவது மாதத்திலிருந்தே திட உணவைச் சீருணவாக அளிக்கவேண்டும். மேலும் வளர்கின்ற குழந்தைகளுக்குப் புரதச்சத்தே அவசியமாகும். இந்தப் புரதச் சத்து குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி குறையும். அந்தந்த வயதிற்கேற்ற புரதச் சத்து, மாவுச்சத்து, வைட்டமின் சத்து, தாதுச் சத்து இவற்றையெல்லாம் பெற்றோர்கள் தாமும் அறிந்துகொண்டு, இல்லையென்றால் கேட்டறிந்து தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். இந்நிலையில்தான் பெண் கல்வியில்லாத நமது பழைய சமுதாயத்தைக் கண்டு நாண வேண்டியுள்ளது. வைட்டமின் `ஏ` சத்துக் குறைவினால் குழந்தைகள் கண்பார்வை இழக்கநேரிடும். மருத்துவ மனைகளில் இலவசமாகக் கொடுக்கின்ற வைட்டமின் `ஏ` சத்து மருந்தை வாங்கி அளித்தாலேயே குழந்தைகளின் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கலாம். நம் நாட்டில் வைட்டமின் சத்துக் குறைவினால் ஏற்படும் கண் பார்வை இழப்பு அதிகமாக இருப்பதும் பெரிய அவலமாகும். அயோடின் சத்து இல்லாத குழந்தைகள் மூளை வளர்ச்சி கெடும். அவர்களுக்கு இப்போது கடையில் விற்கின்ற அயோடின் கலந்த உப்பைக் கொடுத்தாலே மூளை வளர்ச்சியின்மையைத் தவிர்க்கலாம்.
அடுத்ததாக, குழந்தைகளுக்குக் குடிநீர் பாதுகாக்கப்பட்ட தூய நீராக இருக்கவேண்டும். நீரைக் கொதிக்கவைத்துக் கொடுக்கவேண்டும். உணவையும் குடிநீரையும் இந்தவகையில் உட்கொண்டோமானால், 50 சதவிகித நோய்களைக் கண்டிப்பாகக் குறைத்துவிடலாம். இந்த வகையில் நலக்கல்வி சுகாதார மையங்களில் வலியுறுத்தப்படுகிறது.
தடுப்பூசிகள்
`வரும் முன் காப்பது` என்பது குழந்தை நலப் பிரிவில் தலையாய மருத்துவமாகும். தடுக்கக்கூடிய தொற்று நோய்களிலிருந்து குழந்தைகள் இறப்பதைத் தடுப்பதற்காகப் பலவகைத் தடுப்பூசிகளும், சொட்டு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு எல்லாக் குழந்தைகளும் அந்நலங்களைப் பெற நமது தமிழக அரசின் நலவாழ்வுத்துறைச் செவிலியர்கள் பேருதவி புரிகின்றனர். இப்போது காசநோய்த் தடுப்புக்கு BCG, இளம்பிள்ளை வாதத் தடுப்புக்கு Polio Vaccine, தொண்டை அடைப்பான், இரணஜன்னி, கக்குவான் இருமல் ஆகியவற்றுக்கு DPT , தட்டம்மை, தாளம்மை, ரூபல்லா என்ற மூன்றுக்கும் MMR முதலான தடுப்பூசிகளை குழந்தையின் ஒரு வயது முடிவதற்குள் போட்டுவிடவேண்டும். மகப்பேற்றுத் தாய்க்கு இரணஜன்னி தடுப்பூசி போடுவதனால் பிறக்கும் குழந்தையை இந்நோயிலிருந்து காக்கலாம்.
வயிற்றுப் போக்கு
வயிற்றுப் போக்கால் தான் மிக அதிக அளவில் குழந்தைகள் இறந்தனர். வயிற்றுப் போக்கினால் உப்புநீர் வெளியேற்றமே வற்றிவிடுவதால் இறப்பு நேர்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கிய உப்பு சர்க்கரைக் கரைசல் நீரை உலக அளவில் இந்த நோய்க்கு அளித்த்தன் பயனாக 10,00,000 குழந்தைகளை இறப்பிலிருந்து மீட்க முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்பு குறுகிய காலத்திலேயே நெடுந்தூரம் சென்று ஒரு திருப்புமுனைக்கே வந்துள்ளது. இந்த உப்பு சர்க்கரைக் கரைசலை, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மருத்துவ முன்னேற்றமாகக் கருதுவது சாலப் பொருத்தமாகும்.
இந்தியா முழுவதிலும் எல்லா மாவட்டங்களிலும், பெரு நகரங்களிலும் வயிற்றுப்போக்கு மருத்துவமும் பயிற்சிக்கூடங்களும் அமைத்து மருத்துவர், மருத்துவச் சார்பாளர் அனைவருக்கும் வயிற்றுப் போக்குக்காக முறையான சரியான மருத்துவத்தைப் பயிற்றுவிக்கிறார்கள். இங்கு வயிற்றுப்போக்கைப் பற்றிப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பெற்று, வயிற்றுப்போக்குக்குச் சிகிச்சை மையம் அமைத்துள்ளனர். இவ்வகையான மையங்கள் பம்பாய், தில்லி, சென்னை, பெங்களூர், கல்கத்தா போன்ற இடங்களில் செயற்படுகின்றன.
முடிவுரை
இவ்வாறு கடந்த ஐம்பது ஆண்டுகளில் குழந்தை நலமருத்துவம் மிகவேகமாக வளர்ச்சி பெற்றுப் பலவித ஆய்வுகளின் மூலம் தீராத நோய்களைத் தீர்க்க முடிகின்றன. ஆனாலும் கூட நம் குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை நல வசதிகள், சீரான சுற்றுப்புறச் சூழ்நிலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நல்ல சத்துணவு, சிற்றூர்களில் போதிய மருத்துவ வசதிகள், பெண்கல்வியில் முன்னேற்றம், பெண்களின் பொருளாதார உரிமை போன்றவையெல்லாம் இன்னும் பின்தங்கியே இருக்கின்றன. சிறு குடும்ப வாழ்வைப் பலரும் ஏற்று நடப்பதால் பிறக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சிறந்த குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் மற்றும் அரசினரின் கடமையாகும். இந்த அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாம் அப்போதுதான் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய வசதியை வகுக்க முடியும்.
இப்போது பிறக்கும் குழந்தைகள் ஏதோ குழந்தை பிறந்தது, வளர்ந்தது, வாழ்கின்றது என்றில்லாமல் அந்தக் குழந்தைகளின் வாழ்வு மிகுந்த சிறப்புடையதாக அமைய வேண்டும். சிறப்பாகக் குழந்தை நலத்தைப் பேணி வளர்க்கவேண்டும். சீரிய மருத்துவ நலங்களைப் பெறுவதன் மூலமே மனநிலையில் குறைபாடுகள் இல்லாமல் சமூகப் பழக்கவழக்கங்களில் குறைபாடுகள் இல்லாமல் பெற்றோர்களுடைய அன்பாலும், அரவணைப்பாலும் குழந்தைகள் சிறப்புடன் வளர முடியும். உரிமைவாழ்வை நமது நாடு எய்தியபிறகு குழந்தை நலத்தைப் பெரிதும் பேணி வருகின்றனர். இல்லாமை, கல்லாமை இந்த இரண்டு வாள்முனைகளின் நடுவில் அகப்படும் எவையும் துண்டுபடுவது இயற்கையாகும். விரைந்து இவைகளை நீக்கினால் நோய்கள் குறையும். வளவாழ்வு அமையும். நாட்டில் பிறக்கும் பிள்ளைகள் பிள்ளைக்கனியமுதாய், பேசும் பொற்சித்திரங்களாய் அமைவர். இன்றைய அறிவியல் ஊழியில் கணத்துக்குக் கணம் மருத்துவ அறிவியல் வளர்கிறது. குழந்தைகள் நல மருத்துவத்தில் அரிய பெரிய அகன்ற நுண்ணிய கண்டுபிடிப்புகள் ஓங்கிவளர்கின்றன. வளரும் குழந்தைகளைப் பார்த்துத்தான் ஒரு நாட்டின் வாழ்வையும் வரலாற்றையும் வரையும் திறம் அமைய வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோள்.

Add a Comment