கருணீகர் நல்வாழ்வு –
அக்டோபர் 2020
” மருத்துவமாமணி ” தாரா நடராசன் அம்மையார் !
– சிவ சதீசுகுமார் .
டாக்டர் ஔவை நடராசன் அவர்களின் அருமைத் துணைவியாரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் திருமதி தாரா நடராசன் அவர்கள் 14 – 8 – 2020 இயற்கை எய்தினார்.தமிழறிஞர்களின் பிள்ளைகள் இந்நாளில் மருத்துவத் துறையில் டாக்டர்களாகி உள்ளார்களே தவிர தமிழறிஞர் ஒருவரின் துணைவியார் டாக்டர் என்ற பெருமையைப் பெற்ற முதல் பெண்மணி டாக்டர் தாரா நடராசன் அவர்களாவார்.
‘ மருத்துவ மாமணி ‘ டாக்டர் தாரா நடராசன் உலகிற்கும், தமிழிலக்கிய உலகிற்கும் இளைஞர்களை இனங்கண்டு வாழ்த்துவதிலும் வளர்ப்பதிலும் ஔவை இணையருக்கு ஈடு இணையே கிடையாது. நேர்மையே வடிவமாகத் திகழ்ந்த அம்மையார், மருத்துவப் பேராசிரியராக மட்டுமன்றி – நன்கு வீணை மீட்டி சத்தான இசைதரும் வித்தகரும் ஆவார். ஒளவையார் என்ற ஆலமரம் பல வகையான புகழ்க் கிளைகளைப் பரப்ப ஆணிவேராக விளங்கியவர் அம்மையாரவர்கள்.
தாரா அம்மையாரின் மூன்று செல்வங்கள் கண்ணன், அருள், பரதன் பல ஆண்டுகளாகப் பெற்றோர்களின் மருத்துவ நலத்தைக் கண்ணும் கருத்துமாகப் பேணி வருவதை அருகிலிருந்து பார்த்து நான் நெகிழ்ந்துள்ளேன் என்று பல முறை ஔவையாரின் தனிச்செயலாளர் பொன்னேரி பிரதாப் கூறுவதைக் கேட்டு மலைத்துள்ளேன். – மிகப்பெரும் மூப்பியல் மருத்துவர் அண்ணன் கண்ணன், ஆஸ்திரேலியாவிலிருந்தும், மருத்துவர் அண்ணன் பரதன் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் விடியற்காலைமுதல், இரவு நெடுகவும் மருத்துவக் கண்காணிப்பு முறைமை நேர்த்தியாகவும் அமைத்தும், அண்ணன் அருள் தலைமைச் செயலகம் – அண்ணாநகர்,
துரைப்பாக்கம் என்று சுழன்றவண்ணமாக இருந்ததை நான் எண்ணிப் பெருமிதமடைகிறேன்.மேன்மைமிகு குணங்களால் ‘ குன்றின் மேலிட்ட விளக்காய் ‘ ஒளிர்ந்து நிற்கும் அம்மையார், மண்விடுத்து விண் புகுந்தது ஏற்றுக்கொள்ள முடியாததுதான். வாழ்ந்த காலத்தைத் தனதாக்கிக் கொண்ட அம்மையார் என்றும் புகழுடம்புடன் நம் நெஞ்சத்தில் வாழ்வார் .

Add a Comment