மாதர் குல மாணிக்கமே!
கருந்தேன் அமுதக் கடல்வியக்கும்
…..கனியை யொத்த மனமன்றோ !
மருத்து வத்தைக் கற்றுலகில்
……..மகத்தா னநற்ப ணிசெய்தீர் !
பெருவ ரத்தை யாமடைந்தோம்
……பிறவிப் பயனைத் தாமடைந்தீர் !
உரும றைந்துப் போனாலும்
…….உள்ள மிங்கே தான்வாழும் !
எல்லை யில்லா மகிழ்வதனை
…..இல்ல றத்தில் தாம்கண்டீர் !
தொல்லை பலவும் தாண்டியுயர்
…..துறையில் மகவை வாழவைத்தீர் !
கல்லைக் கூட கனியவைக்கும்
……கருணை உள்ளம் தமதன்றோ !
இல்லை தமக்கோர் ஈடென்போம்
……என்றும் உலகம் போற்றும்தாய் !
சொல்லச் சொல்ல வியப்பூட்டும்
…..செயலில் தம்மைக் காண்கின்றோம்
நல்ல நல்ல கருத்தாலே
……..நாட்டை வீட்டை ஆண்டவர்தாம் !
வல்ல துணையாய் இங்கிருந்தே
……..வாழ்வை உணர்த்தி வாழ்ந்தவர்தாம் !
வெல்லம் போன்றே பேச்சினிக்கும்
……..விழியில் கருணை ஒளிதெரியும் !
பொம்மை போன்று வாழாமல்
……பெண்மை வியக்க வாழ்ந்தவர்தாம் !
தம்மைக் கண்டு துணைவருமே
……தயங்கு வாராம் ஏனென்றால்
செம்மை யாக தம்செயலைச்
…….செய்து முடிக்கும் அறிவரசி !
அம்மை அப்பன் அருள்பெற்றே
……அகத்தை ஆளும் அன்பரசி !
இங்கே தங்கள் நினைவேந்தி
……இதயம் கனக்க வாழ்கின்றார்
எங்கே? அந்த முகமென்று
……இளமை உணர்வை மீட்டுகிறார் !
சங்கே முழங்கா ஓரில்லம்
………சாற்றும் அன்பில் நாமுறைந்தோம் !
அங்கே இறைவன் அழைத்தானே!
……அவனுக் கும்தான் தாம்வேண்டும் !
சேயைக் காக்கும் முறைசொன்னீர்
……சிந்தை மகிழும் இதையெண்ணி !
நோயைப் போக்கி உயிர்வரத்தை
……..நாளும் ஒருவர்க் களித்தவர்தாம் !
வாயை வயிற்றைக் கட்டியிங்கே
………வளர்த்த பெற்றோர் மகிழ்கின்றார் !
தாயை இங்கே யார்மறப்பார்
…….தாரா அம்மை தமைமறவோம் !
காதல் உற்றே கைப்பிடித்தீர்
……..கணவன் மனைவி வாழ்வின்று
மோதல் அதனில் முடிந்ததுண்டு
…….மாறாய் அன்பை உகந்தளித்தே
ஈதல் குணத்தால் பண்பரசி
…….இல்ல றத்தில் வெற்றிகண்டீர் !
சாதல் ஒன்றே முடிவெனினும்
……….சாகா வரமாய்த் தாம்வாழ்வீர் !
பாவலர்.அம்பாளடியாள் சாந்தரூபி
சுவிசர்லாந்து

Add a Comment