ஓசையொலியலாம் ஆனாய் நீயே..!
புலவர் தி.வே.விஜயலட்சுமி
நம் கண்ணுக்கு மிகத் தொலைவில் இருப்பதாகத் தெரியும் தாரகைகள் – விண்மீன்கள் வீசும் பளிச்சென்ற வைரவொளிக்கு முன் எவ்வொளியும் நிற்கவியலாது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காவிரியாறு போன்ற பல்வேறு நதிகளின் பரவிய மணலைக் கூட எண்ணலாம்; ஆனால், தாரகை நட்சத்திரங்களை எண்ண ஒரு பிறவி போதாது. தாரா என்றால் தேவதை என்றும் சொல்வார்கள். (தார்) + நகை = ஜொலித்தல். கோடிக்கணக்கான நட்சத்திரக் குவியல்களின் நடுவில் பளீரென்று மின்னிடும் தாரகை எங்கள் டாக்டர் தாரா அம்மா ஒருவரே எனில் மிகையில்லை.
என்னைக் காணும் போதே பீறிடும் மகிழ்ச்சி. எனக்கு இன்ப அதிர்ச்சி. முழுமதியையொத்த முகத்தில் குமிழியிடும் சிரிப்பு. அவரை நான் முதலில் தி.நகர், திலகர் தெருவில் அறிஞர் ஒளவை அவர்கள் இருந்த அலுவலகத்தில் 2013 – இல் சந்தித்தேன்.
அண்ணாநகரிலிருந்து தி.நகர் வந்திருந்தவர் என்னைக் கண்டதும், “நீங்கள் திருக்குறளில் ஆழ்ந்த புலமை கொண்ட புலவர் விஜயலட்சுமிதானே..! நெய் மணக்கும் சோறுடன் விதவிதமான உணவு வகைகளுடன், இங்கு வந்து, இலக்கியங்களில் ஆர்வங் காட்டுவது நீங்கள்தானே..?” என்று கேட்டவுடன், எனக்கு அதிர்ச்சி.
நான் வாயைத் திறக்குமுன்னே ஒருவரைப் பற்றி அறிந்ததை நிரல்படச் சுவையாகப் பேசும் அவர் உரையாடலில் மனத்தைப் பறிகொடுத்தேன். பிறகு என் குடும்பப் பின்புலம், டாக்டரின் தனிப்பட்ட விருப்பங்கள் இன்னும் பல செய்திகளைப் பல நாட்கள் பழகியதுபோல் பகிர்ந்து கொண்டோம்.
பின்னர், என்னைச் சந்திப்பதற்கே தி.நகர்க்குப் பன்முறை வருவார். தமிழிலக்கியங்கள் சிறப்பு, திருக்குறள் ஆய்வுகள் இவற்றில் எத்துணை நாட்டம்..! நாவேந்தரைத் துணையாகக் கொண்டவர்க்குத் செந்தமிழில் நாட்டம் இல்லாது போகுமா..? அவ்வாறே மிகச் சிறந்த மருத்துவரை மனையாளாகக் கொண்ட சொல்வேந்தர் தன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமா..? அலைபேசியில் நாளும் அவரிடம் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் மற்றும் உணவு முறை பற்றிக் கேட்டறிவதைக் கண்டிருக்கிறேன்.
துணிவான, தெளிவான சிந்தனையுடையவர். கண்டிப்பு, காலமறிதல், கடமை தவறாமை இவற்றில் தாரா அம்மாவை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை; இனி பிறப்பதும் அரிது. நிரம்பிய கல்வியறிவும், நேர்கொண்ட பார்வையும், திறம்பட்ட மெய்ஞ்ஞானமும் நிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும் பொருந்திய குழந்தை நல மருத்துவராக இருந்த தாரா அம்மாவைப் பற்றி ஒளவை அவர்கட்கு மிகப் பெருமை. விமானத்தில் அமர்ந்து பைலட்டை அரைமணி நேரம் உற்றுப் பார்த்தால் உடன் விமானத்தை ஓட்டத் தொடங்கும் நுண்ணறிவு வாய்ந்தவர் தன் மனைவி என்று அடிக்கடி சொல்வார்.
பல மருத்துவமனைகளில் தலைசிறந்த மருத்துவராக விளங்கி வெற்றிச் சிகரத்தை எட்டியிருந்தாலும் தம் இல்லப் பொறுப்பில் என்றும் தவறாத நிலைப்பாடுடையவர். அன்பான மனைவியாய், பாசமிகு தாயாய், கடமையைப் போற்றும் காரிகையாய், எந்தவொரு தலைப்பிலும் பலமணி நேரங்கள் பேசக்கூடிய பேச்சாற்றலும் பொருந்திய, பொலிவுமிக்க மதியாளராய் இலங்குபவர் என்பனவற்றை அவருடன் பழகியவர் அனைவரும் அறிவர்.
அம்மாவுடன் பழகிய நாட்கள் அத்தனை எளிதில் மறக்க இயலாத மாண்புறு நாட்கள். அம்மா அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், கல்வி, மருத்துவப் படிப்பு என அனைத்துச் செய்திகளையும் என்னிடம் ஒருநாள் இரண்டு மணிநேரம் தி.நகரில் பேசிக் கொண்டிருந்தார். திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனை தொடங்கி – சென்னையில் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை முதல் பணியாற்றிய அனைத்து மருத்துவமனைகள், குழந்தைகள் உடல்நலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு எனப் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்வார். அத்துடன் தன் மூன்று மக்களையும் பாசமிகுந்த பொறுப்பான தாயாகக் கவனிக்கத் தன் பதவி உயர்வைக்கூட விடவேண்டிய நிலை ஏற்பட்டதைச் சொல்லி வருத்தப்படுவார்; மகிழவும் செய்வார்.
தஞ்சை அரிமா சங்கத் தலைவியாக, அங்கே பல்கலைக்கழக வளாகத்தில் மகளிர் கேட்டதற்காக – பல்கலைக்கழக விநாயகர் கோயில் ஒன்றைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கட்டி, இறைப்பணியிலும் தமக்கு ஈடுஇணை யாரும் இல்லை எனத் திகழ்ந்த தாரா அம்மாவின் பன்முக ஆளுமைகள் கேட்கக் கேட்க என் மனம் குளிர்ந்தது.
முனைவர் ஒளவை அவர்கள் உந்துதலால், அவர் கூறிய பாராட்டுரையால்தான் என் புலமையை நான் அறிய முடிகிறது என்று நானும் என்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வியந்தார். மனம் வருந்தினால் ஊக்கப்படுத்துவார். “நீங்கள் நிறைய எழுதுங்கள். எனக்கும் படிப்பதற்குக் கொடுத்தனுப்புங்கள்” என்று உற்சாகமூட்டுவார். என் இலக்கிய கட்டுரைகள் தினமணி, கலைமகள், அமுதசுரபி இதழ்களில் படித்துப் பாராட்டுவார். உண்மையில் நான் இழந்த தாயை மீண்டும் பெற்ற நிலைக்கு மாற்றப்பட்டேன் என்றுகூடச் சொல்லலாம்.
இதனிடையில் நான் கர்நாடக இசையிலும் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவள் என்பதை அறிந்தவுடன் அம்மா அவர்கள் அடைந்த மகிழ்வுக்கு அளவில்லை.
ஔவை எக்கருத்தையும், நுண்மாண் நுழைபுலத்தால் நுணுக்கமாகச் சிந்திக்கும் ஆற்றல் பெற்று எழிலுற உரையாற்றும் ஏந்தல். அவர் துணைவியாரோ எழில் முகத்துடன், தண்டமிழ் இசைப் பாடல்களில் ஈடுபாடு கொண்ட ஏந்திழையார். ஆம்..! நான் வீணை வாசிப்பதில் பயிற்சியுடையவள் என்றவுடன் நான் வீணை வகுப்புகள் நடத்தும் திருவல்லிக்கேணி இல்லத்திற்கு அடிக்கடி வந்து வீணையைக் கையில் ஏந்தி மீட்டத் தொடங்கி, ஒரு பாடலைக் கற்றால், அது மனத்தில் பதியும் வரை பலமுறை வாசித்துப் பார்ப்பார்.
அப்போது அவர் முகத்தில் பளிச்சிடும் இன்பப் புன்னகைக்கு ஈடு இல்லை. என்னை அரவணைத்து ஆசிகள் வழங்கிய நாட்கள் பல. நான் தரையில் அமர்ந்தும், அவர் கட்டிலில் அமர்ந்தும் வீணை கற்கும் போது, குருகுலம் இப்போது என்னால் மாறிவிட்டதோ என்று சொல்லிச் சிரிப்பார். வயது முதிர்ந்த நிலையில் அண்ணாநகரில் இருந்து வந்து சென்றதை நினைத்தால் என் கண்கள் இன்னும் பனிக்கின்றன. நெஞ்சம் கனக்கிறது.
“முத்தைத்திரு”, என்ற திருப்புகழ் மற்றும் பல தமிழ்ப் பாடல்களில் விருப்பம். தோடி ராகத்தை வாசிக்கும் போது, முகத்தில் மந்தகாசம்தான். தோடி ராகத்தை மெதுவாகப் பாடியவுடன் அம்மா, விஜி… “நீங்கள் பாடினால், மும்மூர்த்திகளும், தமிழிசைவாணர்களும் கேட்க ஓடிவருவார்கள். நான் பாடினால் அவர்கள் ஓடிவிடுவார்கள். நீங்கள்தான் தேடி அழைத்துவரவேண்டும்” என்று நகைச்சுவையாகப் பேசுவார்.
குழந்தைகள் நலத்தைக் குறித்த இயல்பான ரசிக்கும்படியான சொற்பெருக்கு, இசைத் தமிழைக் குறித்து ஓர் இளம்பெண்ணைப் போல் ஆர்வமாகக் கேட்டு, வீணையில் மீட்ட முயலுதல் இவற்றையெல்லாம் காணும் போது கலைவாணியே தாரகையாய் ஒளிர்வது போன்ற அழகிய தோற்றம் தெரியும்.
தாரா அம்மா அவர்களை நான் இறுதியாக, ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில், “ஸ்ரீராம் கலை இலக்கியக் கழகம் பிப்ரவரி மாதம் 2020 இல் நடத்திய பாரதி விழாவில்” சந்தித்து அருகமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன். தொலைபேசியில் அவ்வப்போது உரையாடுவோம்.
ஒளவை அவர்கள் பிறந்த நாளில், அண்ணா நகர் சென்று இருவரிடமும் ஏப்ரல் மாதம் ஆசிகள் பெற்று வருதல் வழக்கம். அதற்கும் இவ்வாண்டு செல்லவில்லை.
சூலை 3 – ஆம் நாள் எங்கள் குடும்பத்தில், என் சகோதரியின் கணவர் திடீரென இறைவனடி சேர்ந்துவிட்டார். செய்தியைக் கேட்டு வருந்தி ஆறுதல் தெரிவித்தார். சில நாட்கள் கழித்து தங்களைச் சந்திக்க அண்ணாநகர் வருவதாக வாக்களித்தேன். “உடம்பைப் பார்த்துக்குங்க..! உங்களுக்கே பெருந்துயரம், நாம் நிச்சயமாகப் பார்ப்போம்” என்பதுவே இறுதியாக என்னிடம் பேசினது.
நிறைவு…
அன்பும், பண்பும், அறிவும், உருவும், திருவும் நிரம்பப் பெற்றவர்களைக் கூற்றுவன் இம்மாயவுலகில் விட்டு வைக்கமாட்டான். தாம் அத்தகையோரைச் சுமக்க விரும்பி விடுவான் போல் உள்ளது. சிவனடியார்களுக்காக இறையவர், மறையவர், புலையர், வேடன், அடியார் எனப்பல வேடங்கள் ஏற்று வந்து அன்பு நுகர்ந்து ஆட்கொண்டருளினார் என்பது வரலாறு.
அவ்வாறே தாரா அம்மாவும், மருத்துவம், கலை, இறையுணர்வு, இயல் இசை நாடகம் என்ற பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்ததால் அவர் ஈசன் இணையடி நிழலை அடைந்திருப்பார் என்பது திண்ணம்.
நம்மையெல்லாம் காப்பார் என்பது உறுதி.
நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், விழித்தாலும், இமைத்தாலும் அறிஞர் ஒளவை அவர்களுக்கு அம்மாவின் நினைவு எப்போதும் இருக்கும்.
அறிஞர் ஒளவை நடராசன் துணைவியார் டாக்டர் தாரா நடராசன் அவர்கள் கொள்ளை நோய்க்கு இரையான செய்தி எல்லோரையும் திடுக்கிட வைத்தது .தாரா அம்மையார், “வீணை வித்தகி” என்று யாரும் அறியாத செய்தி நம்மை வியக்க வைக்கிறது.
நாமும் அவர் குடும்பத்தாருடன் இணைந்து அம்மாவை உளத்தில் இருத்தி நினைவு கூர்வோமாக..!

Add a Comment