POST: 2020-11-21T13:27:36+05:30

டாக்டர் செந்தில் மீனாவின் மணிவிழாச் செய்தி

என் அருமைத் தங்கை கே.வி.எஸ் மணிமேகலையின் புகழ்பூத்த குடும்பத்தின் மாணிக்கமாகத் திகழும் என் அன்புக்குரிய மைத்துனன் டாக்டர். செந்தில் மீனாவின் மணிவிழாச் செய்தி அறிந்து நான் மட்டில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியின் போதும் கூட செந்திலுடைய திறமையையும், தகுதியையும் ஆற்றலையும், தான் கொண்ட கல்வியில் அவர் தலை நிமிர்ந்து நின்ற பெருமிதத்தையும் என்னுடைய துணைவியார் திருமதி. தாரா அவர்கள் பாராட்டாத நாளே இல்லை.

அருமைத் தங்கை மணிமேகலை தன்னுடைய செல்வப் பிள்ளைகளை எவ்வளவு செழுமையாக வளர்த்திருக்கிறார்கள் என்று சொல்வதென்றால், திரு.இராஜன் அறிவுச்சுடராக விளங்கும் திருமதி. வேணி, எப்போதும் பரபரப்பும் சுறுசுறுப்புமாகத் தன்னுடைய பணிகளை ஆற்றி வருகின்ற கதிர், இந்த மூன்று பேரையும் நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இராஜன் தன்னுடைய அமைதியால், ஆன்ற திறமையால் புகழ் பெற்றவன்.

செந்தில் மாணவப்பருவத்திலிருந்தே கல்வித் துறையில் எவ்வளவு பெரிய தலைசிறந்தவராகத் திகழ்ந்தார் என்பதை நான் அறிவேன். எனக்கு நன்கு நினைவுக்கு வருகிறது, செந்தில் மருத்துவக்கல்லூரி சேரும் போது எனக்குக் கிடைக்குமா மாமா என்று கேட்டார். உனக்கில்லாமல் யாருக்குக் கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு இருந்த அந்த நாளிலேயே மருத்துவக் கல்லூரியில் முதல் வரிசையில் இடம் கிடைத்தது.

மருத்துவக் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு மேனிலை மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்று நினைத்த போது அதே போல் என் அலுவலகத்திற்கு வந்து மாமா நான் எம்.டி-க்கு முயல்கிறேன் என்றார். இப்போதே சொல்கிறேன் உன் பெயர்தான் முதலில் வரும் என்று சொன்னேன். முதலில் செந்தில் பெயர் தான் வந்தது.

செந்திலுக்கு அருமையான வாழ்க்கைத் துணைவியாக விளங்கும் திருமகள் மீனாவை நான் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும்.குடும்பத்தைக் கட்டிக்காப்பதிலும் கணவருடைய உணர்வுகளையெல்லாம் போற்றி மகிழ்வதும், ஓர் இடத்திற்குச் சென்றால் அங்கேயுள்ள சுற்றத்தார், உறவினர், நண்பர் என அனைவரிடத்திலும் பரிவு காட்டி விருந்தோம்புவதில் மீனாவுக்கு நிகரில்லை.

செந்திலும் மீனாவும் மணிவிழாக் காண்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படி சொல்லலாம் செந்திலுக்கும் மீனாவுக்கும் பிறந்த அருமைப் பேத்தி டாக்டர். கிருத்திகாவைச் சிறப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும். தொடக்கப் பள்ளியிலிருந்து படிக்கும்போதே நான் மருத்துவராக வேண்டும் என்று ஆணையிட்டுப் படித்த அன்புக் களஞ்சியம் தான் கிருத்திகா.

மீனாவுக்கு இன்னொரு பாராட்டையும் நான் சொல்லவேண்டும். மீனா தானாக செந்திலை அழைத்துக் கொண்டு போய்க்கண்டறிந்த மாப்பிள்ளை தான் பேராசிரியர் டாக்டர் அரிஹரன் . டாக்டர் அரிஹரனை என்னுடைய தங்கையின் குடும்பத்தில் அவ்வளவு பேரும் அப்படிப் பாராட்டுவார்கள். இத்தனைக்கும் பெரிய அறுவை மருத்துவம் நடைபெறும் போதெல்லாம் உடன் நிற்கிற ஈடில்லாத தகுதிவாய்ந்த மரப்புநிலை மருத்துவராக நோயாளிகளை அழைத்துப்போய் அறுவை சிகிச்சையை வெற்றி பெறச்செய்து முடிப்பதற்குப் பெருந்துணையாக நிற்கிற திறம் அரிஹரனுக்கு உண்டு.

” நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லி மகிழ்ந்தார். அருமைத் தங்கை மணிமேகலையே ஒரு பல்கலைக்கழகம்தான். மறைந்த எங்கள் மாமா கே.வி.எஸ் அவர்கள் அன்புக் கடலாக வாழ்ந்தவர். அந்தக் குடும்பத்தில் இளையவராகத் திகழும் செந்திலுக்கு மணிவிழா நாம் நடத்த வேண்டும் என்று நினைப்பது எனக்குப் பெருமிதத்தைத் தருகிறது; எனக்குச் சிறப்பைத் தருகிறது.

ஒளவை குடும்பத்திற்கு ஓர் அணி .அற்புத விளக்காகத் திகழ்கிற செந்தில் – மீனா பல்லாண்டுகள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி மகிழ்கிறேன். செந்திலைப் போலவே மீனாவைப் போலவே , கிருத்திகாவும் – அரிஹரனும் நம் குடும்பத்திற்கு உலகப்புகழ் சேர்க்கும் நம்பியாகவும் – நங்கையாகவும் விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வாழ்க செந்தில் !
வளர்க மீனாவின் புகழ் !!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *