மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ( பகுதி – 61 )
அண்ணன் காட்டிய அறம் !
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்
தம்பியின் பெரும்புகழில் அண்ணனுக்கு அவ்வளவு பெருமை இருந்ததென்றால் எம் ஜி சக்கரபாணி அவர்களுக்கே அது பொருந்தும் .சிவந்த மேனியும் நரைத்த முடியும் பற்கள் தெரியச் சிரித்தபடி எப்போதும் இலக்கியச் சிந்தனை உடையவராகப் பெருமிதமாக இருந்தார் என்று உவமைக் கவிஞர் சுரதா சொல்லக் கேட்டிருக்கிறேன் . தமிழை வனப்பாக ஒலிப்பதில் எம் ஜி சக்கரபாணி அவர்கட்கு நிகரே இல்லை என்று சொல்லலாம் இன்னும் கூட 80 வயது கடந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கெல்லாம் ” மருதநாட்டு இளவரசி ” திரைப்படத்தில் அவர் பேசும்போது ” நடக்கும் பொன்வண்டே ஏன் நடுங்குகின்றாய் ” உன்னைப் படைத்த கடவுளே வந்து உண்மையைச் சொல் என்றாலும் நீ ஊமையாக இருக்கவேண்டும் தெரிகிறதா என்று அவர் எழுத்துக்கு எழுத்து அழுத்தம் கொடுத்துப் பேசுவதை கேட்டு நடுங்காதவரில்லை .எப்போதுமே எதிர்வினை ஆற்றும் நடிப்பில் வில்லனாகவே தான் அவர் வருவார் ,அவர் பற்கள் தெரிய உரக்கச் சிரிக்கும் போது கொடுமையும் – கொலைவெறியும் ஒரே வடிவத்தில் தெரியும் .இலக்கியம் போலவே அவருக்கு இசையிலும் நுணுக்கம் தெரியுமாம் .அந்நாளில் சுப்பையா நாயுடு இசைத் துறையில் புகழ் பெற்றவர் . அவர் புரட்சித் தலைவர் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் .எம் ஜி சக்கரபாணிக்கு நெருங்கிய நண்பர் அந்த வகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உவமைக் கவிஞருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இந்நாளில் சுரதா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் .
உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா
உவமைக் கவிஞர் ஒரு பாடல் எழுதிய போது ” முன்னேற்றம் இவனது உயிராகும் ” என்று முதல் வரி அமைந்தது .நாயுடு அவர்கள் எம் .ஜி .சக்கரபாணியுடன் சேர்ந்து உயிருக்குத் திருவள்ளுவர் சொல்லுகிற எதுகை வரக்கூடாது என்றார் .உடனே நம் உவமைக்கவிஞர் நூறு ரூபாய் கட்டுங்கள் என்றாராம் .
” முத்தமிழ் இவன் நாவில் பயிராகும் ” என்றாராம் .பெரியவர் பெரிதும் மகிழ்ந்து இருநூறு ரூபாய் மகிழ்வோடு தந்தாராம் .புரட்சித்தலைவரைச் சின்னவர் என்றும் அண்ணனை பெரியவர் என்பது வழக்கம் .
நாடக உலகத்தில் வியப்பான நிகழ்ச்சிகள் உண்டு நாடகத்தில் திருடனாக முரடனாக எதிர்வினை ஆற்றுபவர்கள் வாழ்க்கையில் மிகவும் அடக்கமானவர்கள் ,பொறுமைசாலிகளாகக் கோபம் கொள்ளாதவர்களாக இருப்பார்களாம் .அதற்குச் சான்று வேண்டும் என்றால் எம் ஜி சக்கரபாணி ,பி .எஸ் .வீரப்பா , நம்பியார் மூவரையும் நினைத்துப் பார்க்கலாம் ஆனால் மூவருக்கும் எப்போதுமே வில்லன் வேடம் தான் பொருத்தமாக இருக்கும் அவர்களின் கண்களே அச்சத்தைத் தரும் அதுபோல வீரப்பாவுக்கே உரிய வெடிச் சிரிப்பும் வில்லன்களில் நம்பியாரின் துள்ளலும் துடிப்பும் சொல்லலாம் .
ஆனால் மூவரும் இயல்பில் மிக நல்லவர்கள் .எவரிடத்திலும் வெகுண்டு ஒரு சொல்கூடக் கூறாதவர்கள் அப்படி அமைதியான வடிவம் கொண்டவர்களுக்குக் கொடிய குணம் கொண்ட வில்லன்கள் வேடம் எப்படிப் பொருந்தியதோ ? நிஜவாழ்வில் எம் ஜி சக்கரபாணி அவ்வளவு அமைதியானவர் அவர் யாரையும் பகைத்துக் கொண்டதே இல்லை.
ஏழ்மை ,எளிமை ,நட்பினிமை பெருமிதம்,வேதனை ,வெற்றி ,வியப்பு முதலியன என்று அடுக்குவதால் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் பலதிறப்பட்டன . எந்தவொரு செயலிலும் , திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணன் காட்டும் வழியையும் முடிவையும் கேட்ட பின்பே நிறைவேற்றுவது வழக்கம். அண்ணன்-தம்பி என்ற உறவுக்கும் – ஒருமைக்கும் நல்லிலக்கணமாக இருந்தனர் .
திரு. சக்கரபாணி தேர்ந்த கலைஞர் மட்டுமன்று ; முதிர்ந்த உலகியல் அனைத்தும் தெரிந்தவர் ; ஆராய்ச்சியில் வல்லவர்; கூர்மையான மதிநுட்பம் படைத்தவர்; தொழில்துறையில் வருங்கால நிலையை முன்னதாகவே வகுத்துணரும் ஆற்றல் மிக்கவர்.தம்பியிடம் எல்லையற்ற அன்பும் பரிவும் உடையவர். திரு.சக்கரபாணி அவர்கள், வித்வான் வே. இலட்சுமணனிடம் பகிர்ந்துகொண்ட அரிய தகவல்கள் அவருடைய சொற்களிலேயே அவர் குறிப்பிட்டதால் சிலவற்றை இங்கே காணலாம்.
” என் தந்தையார் திரு. கோபாலன் , சட்டத்துறையிலும், ஆசிரியத் துறையிலும் மிகவும் தேர்ந்த நிபுணராக விளங்கினார். பத்திரிகைகளில் தேவையெனக் கேட்டு வெளிவரும் விளம்பரம் பார்த்துப் , பல ஊர்களுக்கு விண்ணப்பித்து, பல ஊர்கள் சென்று வரும் அலுவல் புரிந்தார். அவ்வாறு பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதில் என் தந்தையாருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியிருந்தது . உங்கள் அப்பாவுடன் நானும் பல ஊர்கள் சென்று அலைந்து சுற்றியுள்ளேன் என்று என் தாயார் சத்யா அடிக்கடி கூறுவார்கள். அம்முறையில் தான் எங்கள் தந்தையார் கண்டி மாநகர் சென்றதும், கண்டியில்தான் எம்.ஜி.ஆர். பிறந்தார்.
பின், கேரளா வந்து தான் என் தந்தையார் காலமானார். தந்தை இறந்த பின்னர்தான், நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து நிலையாகத் தங்கிவிட்டோம். நாடகம் நடிக்கும் பொருட்டும் கேரளாவில் பல ஊர்களுக்குச் சென்றுள்ளோம் . என் தந்தை இறந்த தருணம் எனக்கு நன்கு நினைவில் உள்ளது. சிறிது நோய்வாய்ப்பட்டிருந்தார். ஒருநாள் மாலைநேரம் அவரே மருந்தின் பெயரை எழுதி கடைக்கு ஒரு பணியாளரை அனுப்பினார்.பின்னர் சிறிது தூரம் நடந்தார். தன்னால் முடியவில்லையென்று கூறி வீட்டுக்குள் வந்து கட்டிலில் படுக்காமல், கீழே போட்டிருந்த மெத்தையில் படுத்தார். மூன்றுமுறை நாராயணா என்று முணுமுணுத்தார் நான்காம் முறை நாராயணா என்று சொல்லும் போதே உயிர் பிரிந்தது. அவர் தீவிர வைணவ பக்தர். எனக்கு முதலில் நீலகண்டன் என்று பெயர் வைத்து விட்டார்கள். இவ்வாறு சிவன் பெயரை வைத்ததால், இரண்டு நாள்கள் எவரிடமும் அவர் பேசாமல் இருந்தார். பின் என் பெயர் சக்கரபாணி என்ற வைணவப் பெயராக வைக்கப்பட்டது.
எங்கள் தந்தைக்கு மூன்று மனைவியர் . மூத்த மனைவியை மணவிலக்குச் செய்து விட்டார். இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண் மக்கள், அவர்களில் மூத்தவர் பெயர் நாராயண மேனன். அவர்கள் இருவரையும் எங்கள் தாயார் சத்தியபாமா அவர்கள்தான் வளர்த்தார்கள். எனக்கு இரண்டு மனைவியர். மூத்த மனைவி தங்கம்மா 1942-இல் காலமானார். மூத்த மனைவிக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. என் இரண்டாம் மனைவி மீனாட்சியம்மாவுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. என் தாயாரின் ஊரான வடவலூரில் ஓர் இடம்வாங்கி சத்திய விலாசம் என்று பெயரிட்டுள்ளோம். கோவைப் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் அங்கு நின்று வணங்கிச் செல்வார்கள் “தம்பியைப் பற்றிச் சொல்லவேண்டும் .ஆயிரத்தில் ஒருவன் என் தம்பி .
புரட்சித் தலைவர் நாடக நடிகராக இருந்தபோதே, ‘மணிக்கொடி’ இலக்கிய வட்டம் பற்றியும் இலக்கிய வளர்ச்சி குறித்தும் செய்திகள் அறிவதிலும், அவற்றைப் பற்றி விவாதிப்பதிலும் மிக ஆர்வங்கொண்டிருந்தவராவார். எம்.வீ. மணி மூலமாக மணிக்கொடி பற்றிய செய்திகளை நன்கறிந்திருந்தார். இலக்கிய இதழ்களையும், வெளியீடுகளையும் ஊன்றிப் படித்து வந்தார். பின்னாளில், நடிகன் குரல், சமநீதி போன்ற கலை இலக்கிய சமுதாய அரசியல் இதழ்களைப் புரட்சித் தலைவர் இலக்கிய மணம் கமழும் வகையில் தீந்தமிழில் நடத்தியதற்கு அவருக்கு இருந்த தமிழிலக்கிய ஆர்வமே சிறந்த காரணமாகும்.
1959 – ஆம் ஆண்டு இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களுடன் தமிழ் நடிகர் சங்கம் அமைக்க முற்பட்டார். புரட்சித் தலைவரின் பெருமுயற்சியால், தென்னிந்திய நடிகர் சங்கம் எனப் பின்னர் அது அமைக்கப் பட்டது.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், பலர் இவரிடம் உதவிகள் பெற்றுள்ளனர். இவரால் படித்து முன்னேறிய மாணவர் பட்டியல் நீளமானது. புரட்சித் தலைவரால் உதவிபெற்று எழுந்து நிற்கும் பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , அறநிலையங்கள் , ஆலயங்கள் கணக்கற்றவை. புயல் வெள்ளம் விபத்து போன்ற இயற்கைச் சீற்றமும் – பேரிடரும் சூழ்ந்த காலத்தில் புரட்சித் தலைவரின் கொடைக்கரங்கள் நீளும்; துயர் துடைக்கும்.
மறைந்த திரைப்படக் கலைஞர்கள் குடும்பத்தை ஆதரித்து, அவர்கள் மக்கட்செல்வங்களுக்குத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்து அதன்மூலம் அவர்கள் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தவர் புரட்சித் தலைவர்.
‘ரிக்க்ஷாக்காரன்’ திரைப்பட வெற்றிவிழாவின்போது, சென்னையிலுள்ள 6000 ரிக்க்ஷாகாரர்களுக்கு மழைக்கோட்டுக்கள் அளித்து அவர்கள் உள்ளத்தில் நீங்காத இடப்பெற்றிருக்கிறார் .
ஐந்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மதுரை மாநகரில் நடந்தது பற்றி நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன் அதற்கென ஒரு சிறப்பான கவியரங்கம் அமைக்க வேண்டும் என்று கருதினோம் .அப்போதிருந்த அரசியல் சூழலுக்கு ஏற்பத் தலைவருக்கு மனதில் நெருடல் வரக்கூடாது என்ற நிலையில் தலைமை தாங்கக் கவியரசர் வாலியை அழைக்கலாம் என்று சொன்னேன்.
அது சரி ! வாலி நாடக நடிகர் படங்களுக்குப் பாடல் எழுதுவார் .அவ்வளவு பெரிய கவியரங்கத்துக்குத் தமிழ்ப் புலவர்கள் நிரம்பிய அவையில் எடுபடுமா என்று கேட்டார் .அண்ணா நான் நம்புகிறேன் சூழுலுக்கேற்றபடி திறமையாகப்பாடுவார் என நான் கூறியபோது கூடப் புரட்சித்தலைவரிடம் கேட்டு அவர் சரியென்றால் நான் இசைகிறேன் என்றார் கவியரங்கம் ஒப்பற்ற கவியரங்கமாக அமைந்தது .
கவிஞர் வாலி அன்றைய தலைமை உரையில் புரட்சித்தலைவரின் படங்களில் பெயரைத் தொடருக்குத் தொடர் அடுக்கிக்காட்டினார் . அரங்கம் தவிடுபொடியானது .பல்லாயிரம் மக்கள் புரட்சித்தலைவர் வாழ்க புரட்சித்தலைவர் வாழ்க என்ற முழக்கமிட்டனர் எம் ஜி ஆருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி .கவிஞர் வாலியையும் என்னையும் ஒருசேரத் தழுவிக்கொண்டு ஒளவை நீங்கள் வாலியைப் பற்றி எழுதவேண்டும் என்றார் .
நான் கவிஞர் வாலியின் நூலுக்கு அணிந்துரை எழுதினேன் .”அருமையில் எளிய அழகே போற்றி ” என்ற திருவாசகத் தொடர்தான் கவியரசர் வாலியின் கவிதை வரிகளுக்கு நான் வரைகின்ற புனை கோலமாகும்.
மொழியை உளியாக்கிக் கற்பனை விரல்களால் செதுக்கிய கலைத் தேரை திரை வீதிகளில் ஒட வைத்துத் தேரோட்டம் நடத்தியவர் கவிஞர் வாலி.
ஏட்டில் இருந்த ஏராளக் கருத்துக்களைப் பாட்டில் கொண்டு வந்த பாவலர், வாலி, நாட்டில் இருந்த கவிஞர்களில் எதுகை மோனையோடு திரைக் கூட்டில் இருந்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இலக்கியம் ஒரு சிறகாகவும், இசைப் பாடல்கள் மறு சிறகாகவும் கலை வானில் பறந்த கவிக்குயில் வாலி. வீட்டில் தங்கிய பொழுதுகளை விடவும் பாட்டில் தங்கிய பொழுதுகளே அதிகம்.
முறைப்போரிடம் துணிவும், பழகுவோரிடம் பணிவும் காட்டுவதே அவர் பழக்கம் கவிஞருக்கு.
கவிச் சக்கரவர்த்தியே நீ மரபில் பாடியதை நான் புதிதில் பாடுகின்றேன். என்னுள் புகுந்து எழுது, இறைஞ்சுகின்றேன்.தொழுது விதைப்பது என் வேலை; விளைவிப்பது உன் மூளை என்ற அவையடக்கம் அவருடைய அன்பு நெறியைப் பிழிந்து பொழிகிறது. வாலியின் வைர வரிகள் இழையோடாத இதழ்களே இல்லை .குதித்தோடும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை வாலியின் பாடல் முணுமுணுக்காத வாயே இல்லை. அவ்வளவு ஏன், ‘ அம்மா என்று அழைக்காத உயிரில்லையே ‘ என்ற பாடல் வெல்வெட்டில் பொறிக்கப்பட்டது போல் திருச்சி ஐயப்பன் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறதாம் .
இது காவியக் கவிஞரின் வைர வரிகளுக்கு கோயிலே நடத்தியிருக்கிற குடமுழுக்கு. வீட்டுப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டிய எத்தனையோ வரிகளைத் தன் பாட்டுப் புத்தகத்தில் தந்திருப்பவர் அவர் ” தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லை ” , ” எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ” , ” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ,இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ” ” நட்பைக் கூட நான் கற்பைப் போல எண்ணுவேன் ” இப்படித் திரைக் குரலிலேயே திருக்குறள் எழுதிப் பார்த்தவர் வாலி.
பாட்டில் மட்டுமல்ல; ஏட்டில் எழுதிய விதைகளிலும் வார்த்தைகளால் வலை விரிக்க வல்லமை உண்டு வாலியிடம். பாண்டவர் பூமியும், அவதார புருஷனும், கிருஷ்ண காவியமும், தமிழ்க் கடவுளும், இராமானுஜ காவியமும், ஆறுமுக அந்தாதியும் நூல்களால்ஆன வலை மாதிரி தாள்களால் ஆன வலை தான் என்பது அவற்றை வரிக்கு வரி விடாமல் படித்தவர்களின் வாக்குமூலம்.
முத்தமிழ்க்கலைஞர் அவர் தலைமையில் வருமாறு அழைத்து தலைவருக்குப் பெரும் புகழ் பெற்றது .பதிப்பகத்து வரலாற்றில் நூறாண்டுகள் நெடிய வரலாறாகும். நாட்டுப் பற்றும், கலைப் பற்றும் நரம்புகளில் முறுக்கேற்றும் நிலையில் பெரிய சிந்தனையாளர்களைக் கொண்டு, அரிய நூல்களைத் தருகின்ற அல்லயன்ஸ் பதிப்பகத்தாரின் பயணம் நூறாண்டுகளைத் தாண்டுகிறது.
இப்படிப் பாட்டுப் பயணத்தில் வாகை சூடியவரும் ஏட்டுப் பயணத்தில் எதிரெ எவருமில்லாத நிலையில் என்றும் புகழ் வளர்ப்ப வரும் சந்திக்கும் இடம்தான், ‘வாலியின் வைரவரிகள்.
எழுதுவது ஒரு வகை; எண்ணுவது ஒரு திறம் பழகுவது ஒரு பண்பு; பரிவை வளர்ப்பது ஒரு தனிக் கலை; இவ்வளவும் இணைந்து நின்றால் இவர்தான் கவியரசர் வாலி.
நூற்கடலுக்குள் நீந்தும் நண்பர் பண்பாளர் அல்லயன்சின் அதிபர் திரு. சீனிவாசன் அவர்கள் மதித்தும் தொகுத்தும் மலரச் செய்திருப்பதுதான் வாலியின் வைர வரிகள்.
பதிப்பகத்தைப் புகழ்வதா ? பாடியவரைப் புகழ்வதா ? மதித்துத் தொகுத்தவரைப் போற்றுவதா ?’ என்று எண்ணி என் அணிந்துரையை வாலிக்கு நான் அணிவிக்கும் வைர மாலையாகப் படைக்கின்றேன் என்று எழுதியதை இப்போது நினைக்கிறேன் .
—– ஒளவை நடராசன்
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com
=========

Add a Comment