அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35
‘தாய்மொழியால்தான் தலைநிமிர முடியும்’
முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, எவருமே எதிர்பார்க்காத அளவுக்கு, தொலைத்தொடர்பு வசதி இப்படியெல்லாம் வாய்க்குமா வளருமா என்று எண்ணிப்பார்க்காதபொழுது, நான் பணியாற்றிய ‘கிளியா’ விளம்பர நிறுவனத்தில் ஒருமுறை Morgan Stanley போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனத் தலைவர்கள் அமெரிக்காவிலிருந்து தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை செய்தியாளர்களுடன் காணொலி வாயிலாகத் தொடர்பாளர் கூட்டத்தை ஒருங்கிணைக்கின்ற வாய்ப்பை நான் பெற்று நடத்தியதில் மகிழ்ந்தேன்.
செப்புக் கம்பிகளை உருவாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விளம்பரத்தைப் பம்பாய் கிளியா நிறுவனம் வெளியிட்டபோது, உலகத்தின் பல்வேறு நாகரீகங்கள் எப்படியெல்லாம் செப்பு நாணயத்தை வெளியிட்டிருந்தார்கள் என்பதையும், செப்புக் கம்பிகளின் நெடுங்காலத் தொல்வரலாற்று தகவல்களையும், தொடர் விளம்பரங்கள் மூலமாகச் சாசன வரிகளாக ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுக் காட்டியது. அச்சு வடிவங்களை அகழ்ந்தபோது கண்டெடுத்த பழைய ஆவணங்களைக் கடத்தும் கருவியாகச் செப்பு பயன்படுகிற பாங்கினைக் காட்டும் உண்மைகளையும் படிப்படியாகக் காலத்தால் உணரத் தொடங்கினோம். ஒப்பரிய உலோகமான செப்பு நாகரிக உலகத்தின் நரம்பாக இயங்கி வருகிறது என்ற பொருள்பட விளம்பரப்படுத்தினோம்.
வெறும் வெட்டி ஒட்டும் விளம்பரதாரர்களாக இல்லாமல், வரலாற்றை மீளவும் வரைந்து காட்டும் ஆய்வாளர்களாக அமைய வேண்டும் என்றே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாடமாகப் பயின்றோம்.
கிளியா விளம்பர நிறுவனம், 1995-ஆம் ஆண்டில் சிறந்த சாதனை படைத்துப் பத்தாண்டுகளாக விளம்பரத் துறையில் பணியாற்றியதன் அடையாளமாக அடையாறு பாலத்திற்கு அருகில் ‘1986-1995 Clea alone, ahead. 10 eventful years’ என்ற மிகப்பெரிய விளம்பரத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தோம். இது வெளிவந்த போது நான் சொன்னேன், எழுதப்பட்ட விளம்பரம் செலவல்ல; ஏராளமானவர்களையும் வரவேற்கும் வரவு என்றேன்.
கிளியா நிறுவனத்தின் முன்னால் தலைவராகத் திகழ்ந்த திரு. அனீஷ் பேனட், கிரியா விளம்பர நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டு வந்த ‘Above par’ என்ற வணிக இதழில் விளம்பரங்களை வெளியிடும் போது சமுதாயச் சிந்தனையோடு எழுத்தறிவு, எய்ட்ஸ் நோய், குழந்தைத் தொழிலாளர் கொடுமை, கொத்தடிமை முதலிய பல்வேறு நலவாழ்வு விளம்பரங்களுக்கு நடுப்பக்க முதன்மையை இலவசமாகவே தருகிறேன் என்று கூறினார்கள். கூறியதைப் போலவே செய்தும் காட்டினார்கள். விளம்பர உலகம் இப்படியெல்லாம் முயற்சிசெய்தால், விளம்பரம் என்பது ஒரு செலவல்ல. சமுதாய முற்போக்குக்கு ஒரு நல்வரவாக அமையும்.பஞ்சாப் சிங்கம் திரு அனிசு பானட் சமூக சிந்தனையாளராக மலர்ந்து இன்றைக்கு சிறப்பாக சண்டிகரில் வாழ்ந்து வருகிறார். அவருடைய துணைவியார் திருமதி சாந்தி தமிழ் மகளாக அவர் குடும்பத்திற்கு மகரந்தம் சேர்த்து வருகிறார்.பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்களது இனிய இல்லத்தில் தங்கிப் பேறு பெற்றவன்.அவருடைய தங்கை விமான ஏரணங்கு செல்வி நீரஜாவின் வீர மறைவை முன்னிட்டு நமது தினச்செய்தியில் கட்டுரை வரைந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
——————————————————-
நினைப்புகளையும், மனத்தில் பதுங்கியிருக்கும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு அமைந்த வாயிலாக மொழி அமைகிறது. மொழி ஒரு மனிதனை அடையாளங் காட்டுவதோடு, அவருடைய வாழ்வு, வளம் முதலியவற்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு மனிதனைப் பிறர் மதிப்பிடவும், முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் மொழி அவனாகவே அமைந்து விடுகிறது. மொழியென்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் உருவான நாள் முதல் பதிந்த பண்பாட்டு சுவடுகளைத் தாங்கியுள்ளது. இதன் மேம்பாட்டிற்காகக் கோடிக்கணக்காகச் செலவிடத் தயங்கக் கூடாது. இந்த நிலையில், வல்லமை உடையவர்கள், வணிகவளம் கொண்டவர்கள், ஏமாற்றத் தெரிந்தவர்கள், பேரறிவுடையவர்கள் என்ற வகையில் மக்கள் இனம் வளர்ந்ததோடு அவரவர்கள் தனித்தனியாகத் தங்கள் நாடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். இடத்தாலும், பரப்பாலும் சிறிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும், வல்லமையால் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் வாயிலால் மிகப் பெரிய நாடுகளைக்கூடத் தங்களுக்குக் கீழ் வசப்படுத்திக் கொள்ளவும், தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொள்ளவும் முடிந்தது. ஆங்கில அரசாளுகையின் வரலாறு இப்படித்தான் ஏற்பட்டது. ‘ஆங்கிலத்தின் மூலம் எவரையும் அடிமைப்படுத்த முடியாது’ என்றே கூட ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலம், அடிப்படையிலேயே அதிகாரக் குருதியோடும் மொழியாக இருக்கிறது என்பார்கள். இதனால், பல நாடுகள் ஒற்றுமையின்மையாலும், காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியை இழந்தாலும், எளிதாக அடிமைப்பட நேர்ந்தது. அடிமைப்பட்டாலும், அறிவு உழைப்பு, முயற்சி இவைகளையெல்லாம் தங்களை அடிமைப்படுத்திய அரசுகளின் மொழி வாயிலாகவே மீண்டும் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. அதனால்தான், ஆங்கில அரசுதான், நம்மை அடிமைப்படுத்தியது என்றாலும், ஆங்கிலக் கல்வியினால் ஏற்பட்ட தெளிவே அடிமைத் தளையை நீக்கிக் கொள்ளவும் நமக்கு உதவியது.
கல்வி, தொழில், நீதிமன்றம், அரசு நடவடிக்கைகள், தகவல் சாதனங்கள் அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆங்கில ஆட்சியில் ஆங்கில மொழி எங்கும் பரவியது. அதுவே சில நிலைகளில் சிக்கலாகவும் நமக்கு அமைந்தது.
ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கல்வி தருவது கடமையென்றாலும் கூட அவன் அயலவனாக இருந்த காரணத்தால் பொதுக்கல்வி தந்தபோது அடித்தளத்து மக்கள் அந்த ஆங்கில மொழிக் கல்வியைப் பெற முடியாமல் பின்தங்கினர்.
மாட்டுத் தோலை அறுத்துப் பழகியவர்களுக்கும், காலணி தைத்தவனும்தான் மருத்துவக் கல்வியை எளிதாகப் புரிந்து கொண்டு வந்திருக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து கற்களை உடைத்தும், சாலைகளைச் செப்பனிட்டும் பயிரிட்டும் பாடுபட்டவன்தான் காவல் துறைக்கு வந்திருக்க வேண்டும். மரங்களை வெட்டிக் கருவிகளைச் செய்தவனும், இரும்பை உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சியவனும் பொறியாளராக வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? இந்த ‘மொழி மாயை’தான் ஒரு காரணமாயிற்று என்று அறிஞர்கள் பலமுறை கூறிவந்தனர். உயர்ந்த நிலையான அறிவைப் பெறுவது போதாது. சமுதாயம் முழுவதுமே அறிவியல், தொழில் நுணுக்கம் முதலிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக, பெறுபவர்களாக மக்கள் மாறும்போதுதான் பிற நாடுகளோடு நாமும் நிகராக வளர முடியும் என்பதைக் காலத்தின் போக்கில் அறிந்தார்கள்.
நாம் இப்போது எவ்வளவுதான் பழகியதாக இருந்தாலும், அயல் மொழியிலேயே அறிவியல் தொழில் நுணுக்கங்களைக் கற்கின்ற பழக்கம் தொடர்ந்து நீடித்து வருமானால், நமது சமுதாயம் வளர முடியாததாகவே மாறி விடும் என்று மொழியாராய்ச்சியாளர்கள் பேசியதும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். அப்படி ஆங்கிலத்திலேயே இருந்து வந்தால், சிலருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தேர்ச்சிக்கும் வேண்டுமானால் அது உதவலாம். ஆனால், சமுதாயத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவாது. பள்ளத்தில் விழுந்திருக்கும் எல்லோரும், எழுந்து நிற்கும் ஒட்டுமொத்தமான சமூகமுன்னேற்றம் வந்தால், தமக்கு ஏதேனும் சங்கடம் வருமோ என்று சந்தேகிக்கும் சிலரின் தன்னலப் போக்குகளால், தாய்மொழிகள் தலையெடுக்க முடியாமற் தடுமாறுகின்றன. இந்த நிலையில், நாட்டுக்கு விடுதலை வந்ததும், மாநிலங்கள் மொழிவழியாக அமைந்ததும், கல்வி, ஆட்சி, சட்டம், நீதி, தொழில்வளம், அறிவியல், தகவல் சாதனங்கள் எல்லாம், அந்தந்த மாநில மொழிகளில் மெல்ல வரத் தொடங்கின என்றால், மக்கள் விழிப்புற்று அந்தத் துறைகளில் பங்கேற்கத் தொடங்கினார்கள் என்று பொருள். ரேடியோ, நியூஸ்பேப்பர், ரயில்வே, அன்றாட கருவிகள் எல்லாவற்றையும், அவர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கியதும், பழக்கத்தில் இருந்த ஆங்கில மொழி மெல்ல மெல்ல நீங்கிச் சில நிலைகளில் தாய்மொழி ஆற்றலோடு இப்போது வந்து விட்டது. இப்பொழுது, வானொலி, செய்தித்தாள், தொடரி என்றே சொல்லத் தொடங்கி விட்டோம். கேபினெட் என்பது அமைச்சரவை என்றும், உலகச் செய்திகள் பலவற்றைச் சிற்றூர்களில் அறிந்து கொள்ளவும் பேப்பர் தாள் என்றும், இங்க் மை என்றும் வந்ததால் ஒருபெரிய அதிசயம் நடக்க ஆரம்பித்தது. சான்றாக, தமிழ் மொழியில் மூன்று லட்சம் சொற்கள் என்றால், ஆதிக்கம் கொண்டிருந்த ஆங்கிலம் ஒன்பது லட்சம் சொற்களைக் கொண்டது. மேலும் ஆங்கிலம் தனி ஆளுகைவலிமை பூண்டிருந்த காலத்தில், தமிழ் வாய்மூடிப் பதுங்கியிருந்தது. ஆகவே, ஆங்கிலத்தில் பத்துச் சொற்களுக்குத் தமிழுக்கு ஒரு சொல்லை வைத்துக் கொண்டு ஈடுகட்ட முடியுமா? என்றும் ஐயம் ஏற்படலாம். Plan, Scheme, Project, Model என்று எல்லாவற்றையும் திட்டம் என்று சொல்லி வருகிறோம். அதனால் ஒரு பெரிய குறையில்லை. அட்வெர்டைஸ்மென்டு என்று 1965 வரையில் கூட எழுதிவந்தோம். பிறகுதான் விளம்பரம் என்று சொல்லிப் பார்த்தோம். விளம்புதல் என்றால் நான்கு பேருக்குப் பரவலாக எடுத்துச் சொல்லுதல் என்பது பொருள்.
சுற்றுலா, கூட்டுறவு என்ற சொற்களைப் போல விளம்பரம் என்ற சொல் தமிழுக்கு நல்வரவாயிற்று. ஆங்கிலத்தின் பொருளைவிட அழுத்தமான கனத்தைக் கொண்ட அரிய சொல்லாக இது அமைந்திருக்கிறது. ஒரு மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர், டூரிசத்திற்கு நிகராகச் சுற்றுலா என்றவொரு சொல்லை வேறு எந்த மொழியிலும் தமிழைப் போல் காணவில்லையென்றாராம். ஏனென்றால் ‘யாத்ரா’ என்றுதான் அனைவரும் முதலில் கூறினர். நான்கைந்து பேருக்கு உணவு பரிமாறுவதைக்கூட விளம்பு என்று கூறும் வழக்கமுண்டு. இன்னும் ‘குழம்பை விளம்பு’ என்று சமையற் கூடத்தில் சொல்லும் வழக்கமுண்டு. மேல்நாட்டில் உள்ள பழக்கத்தால் பல்வேறு அறிவுத் துறைகள் அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம், தமிழுக்குக் கொண்டுவரவேண்டியது அரிய முயற்சிதான், ஆனால், செய்யவேண்டிய முதற்பணியாகும்.
‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’
என்றும்
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
கலைச்செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’
என்று பாரதியார் நமக்கு வலியுறுத்தியதையும் நாம் கணம் தவறாமல் நினைவிற்கொள்ள வேண்டும்.
வளரும்…
– முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment