கட்டுரை
—
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 62)
‘ஆயிரம் நிலவே வா!’
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
புரட்சித்தலைவருக்குப் பிடித்தமான கவியரசர் புலமைப்பித்தன் அவரோடு அடிக்கடி உரையாடி மகிழ்பவர் .ஈழத் தமிழர் உணர்வில் தன்னையே தணலாய் மாற்றிப் பொங்குபவர். எதிர்பாராமல் புலவர் தேர்வில் முதனிலை பெற்றவர் திரைத்துறைக்கு வந்ததே ஒரு விபத்து என்று, தான் பாடல் எழுத வந்தது பற்றிப் புலவர் புலமைப்பித்தன் என்னிடம் ஒருமுறை கூறினார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரை திரையுலகில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் புலமைக்கனல். அவர் எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் திறமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்வார்கள். பிறவிப் பொதுவுடைமையாளர். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் எழுச்சிவீரர். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதியார், பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சியில், பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவர். “படத்துக்காகப் பாட்டெழுதுவது என் இலட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல. என் முகங்களில் ஒன்று” என்று புன்னகைப்பவர் புலமைப்பித்தன்.
1960 களில் புலவர் புலமைப்பித்தனும் நானும் ஒரே மேடையில் மதுரை மகளிர் கல்லூரியில் இலக்கிய இன்பம் பற்றிப் பேசினோம். புலவரின் பேச்சு மகளிர் கூட்டத்தில் பெரிய ஆரவார அலைகளை எழுப்பியது. அன்று முதல் எங்கள் நட்பை நாங்கள் போற்றி வருகிறோம். புலமைப்பித்தன் உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, அவர் சிரிப்பு என அத்தனையும் பால் வெள்ளை!
“பஞ்சாலைக் கூலித் தொழிலாளி தான் நான். புலவர் படிப்பை முடித்துவிட்டுக் கோவையில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1966 – ஆம் ஆண்டு இயக்குநர் கே. சங்கர் என்னைச் சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் வரையும் வாய்ப்பு. யார் யாரோ எழுதிச் சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் மின் பணிமனை அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே ‘குடியிருந்த கோயில்’ படத்துக்காக நான் எழுதியபாடல்தான்-
நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார் – யார்?
தாய் யார் ? மகன் யார் ? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார் – யார் ?
உறவார் ? பகை யார் ?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ ?
‘ஒரு பித்தன் பாடுவது போல் எழுதுங்கள் !’ என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது ‘நான் யார்?’ என்ற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தானைக் கேட்டாலும் இதைத்தான் கேட்பார்.
பட்டினத்தானும் இவனும் ஒன்று தானே… இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் கூறினாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சி எண்ணங்களை எழுதிக் கொடுக்கத் தொடங்கினேன். எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் இடம்பெற்ற
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே – ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே !
என்ற பாடல். இன்றைக்கும் கேட்ட நொடியில் சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல்.
நிலம், தீ, நீர், வளி, வான் என்ற ஐந்து அடிப்படைப் பொருள்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது – மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே – உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே…
என்று ‘இதயக்கனி’ படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை. என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மதிப்பும் மயக்கமும் உண்டு. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே – அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே. என்ற, ‘நீதிக்குத் தலைவணங்கு’ பாட்டு வரிகளைக் குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு ஓர் அரசாங்கம் தந்த உச்சகட்டப் பாராட்டு இதுவாகத்தான் இருக்கும் என்று கூறலாம்.
எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை.
‘அடிமைப் பெண்’ படத்தின் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலில் வரும்,
பொய்கையெனும் நீர்மகளும் பூவாடை போர்த்து நின்றாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ?
என்ற வரிகள் காதலின் தவிப்பை விளக்கினால், ஆண் – பெண் உறவை இலக்கியத்தரமாக வடித்த பாடல்.
சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது
என்ற வரிகள், காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தது. அதுதான் என்னை இயக்குவது. புண்ணியப் பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த நாட்டைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணியப் பூமியா? இந்த ஆதங்கத்தில்தான்,
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை – நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை
தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும்
காடா ? – இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா…
என்று ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் எழுதினேன்.
வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு;
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம்தாண்டா சோறு
என்று ‘நல்லநேரம்’ படத்துக்குப் புலவர் எழுதிய பாடல் பற்றிப் பேசியபோது திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம். இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு, பாடும்போது நான் தென்றல்காற்று
என்றும் எழுதமுடிகிறது.
தனிப்பட்ட முறையில் எந்த உணர்வு மனதை ஆட்கொண்டிருந்தாலும் பாடல் எழுதுவதற்கான சூழல் சொல்லப்பட்டவுடன் மன்னனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் என்ற பழைய தொடர் சொல்வார்களே அதுபோல மாறித்தான் எழுதுவேன். பள்ளிப்பக்கமே எட்டிப் பார்த்திராத ஒருவன், தனக்குத் தெரிந்த மொழியில் தன் துயரத்தைச் சொல்ல வேண்டிய சூழலில்,
வட்டுக் கருப்பட்டியை வாசமுள்ள
ரோசாவை
கட்டெறும்பு மொச்சுதுன்னு
சொன்னாங்க
கட்டுக்கதை அத்தனையும்
கட்டுக்கதை –
அதைச் சத்தியமா நம்ப மனம்
ஒத்துக்கல்லே…
என்று ‘ ரோசாப்பூ ரவிக்கைக்காரி ‘படத்துக்காக எழுதினேன். தன் மனைவி பற்றி ஊருக்குள் ஏதேதோ பேசுவதை நம்ப முடியாமல் தன் நெஞ்சை அறுக்கிற கொடுங் குமுறலைக் கண்ணீர் வழியக் கதைநாயகன் பாடுவதைப் பார்க்கும் போதே நமக்கும் நெஞ்சு விம்மிப் போகும்.
‘அழகன்’ படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று இயக்குநர் கே.பாலச்சந்தர் குறிப்பிடும் ‘சாதி மல்லிப் பூச்சரமே..’ பாட்டின் சரணத்தில்,
எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு
சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா ?
என்று எழுதியிருப்பேன்.
அதே படத்தில் மொழி விளையாட்டாக,
தத்தித்தோம் வித்தைகள்
கற்றிடும்
தத்தைகள் சொன்னது
தத்தித்தோம்
தித்தித்தோம் தத்தைகள்
சொன்னது
முத்தமிழ் என்றுளம்
தித்தித்தோம்
கண்ணில் பேசும் சங்கேத
மொழியிது
கண்ணன் அறிய
ஒண்ணாததா ?
உன்னைத் தேடும் ஏக்கத்தில்
இரவினில்
கண்ணுக்கிமைகள்
முள்ளாவதா?
என்றும் எழுதியிருப்பேன்.
என்னை மதித்துப் போற்றும் – இசைஞானி இளையராஜா ஒருமுறை என்னை
அழைத்து விட்டிருந்தார்.
பாரதியின் வழித்தோன்றலாக என்னைக் கருதிக்கொண்டிருக்கிறேன். அதே பாரதியார், தனக்குப் பிடித்த, வேறாருவர் எழுதிய பாடலைப் பாடுவதுபோலக் காட்சிஅமைப்பு. அதற்கு என்னை எழுதச்சொன்னார். என் முப்பாட்டனையே கவர்ந்த பாடலை எழுதும் உணர்வோட்டத்தில் நான் எழுதினேன்.
வரிப்புலி அதள் தரித்தவன் எழில்
கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன்
துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி
வகுத்திடத் துணை வேண்டும்
என்று நாத்திகனான நான், ஆத்திகம் பேசும் ஒரு பாடலை எழுதினேன். ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ ?’ என்ற பாடல் பெற்ற வரவேற்பைப் பெற்றது.
எனக்குள் ஒரு தணல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.
சில பொழுது எரிந்து கொண்டும் சில பொழுது கனிந்து கொண்டும். அதனால்தான் இருபத்தொன்பது வயதில் தத்துவப்பாடலும், அறுபத்திரண்டு வயதில்,
உன்னைப் படைத்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்கினான்
காதல் பிச்சை வாங்கினான்
என்றும் எழுத முடிந்தது.
அந்த நெருப்பு இருக்கும்வரை என் பாடல்கள் பிறந்து கொண்டு தான் இருக்கும்!”
புலமைக்கனலாக வாழும் புலமைப்பித்தன் இலக்கிய வாய் திறந்தாள் குமரகுருபரரின் பிள்ளைத் தமிழைத் தேன் போலக் கூறுவார் .அவரும் பிள்ளைத்தமிழ் எழுதிய பெருமையுடையவர்.
அரசவைக்கவிஞர், சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவர் என்ற பொறுப்புக்களுக்குப் பொலிவூட்டினார்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment