POST: 2020-12-08T11:30:14+05:30

அன்புள்ள கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் அவர்களுக்கு
அருட்செல்வரின் செயலாளர் திரு . இரவி அவர்களின் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி .

காதலாகிக் கசிந்து – கண்ணீர் மல்கக் கலைமகள் கட்டுரையைப் படித்தேன் .
வழிந்த கண்ணீரைத் தவிர நான் எப்படி நன்றி கூறுவேன் .

நீங்களும் – உங்கள் குடும்பமும் எல்லா நலங்களைப் பெற்று

வாழ்க ! வாழ்க !!

அன்போடு

ஒளவை நடராசன்
7 12 2020
சென்னை .
,………………………………………..

அருட்செல்வர் அடிச்சுவட்டில் ‘ மாபெரும் சக்தியுடன் பயணித்த மன உறுதியும் வாழ்க்கையை நல்லவிதமாக ( பாசிடிவ்வாக ) அணுகும் மன நிலையும் இருந்தால் வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது.

டாக்டர் ஔவை நடராசன்

அருட்செல்வர் ஐயா அவர்களால் தொடங்கப்பட்ட இராமலிங்கர் பணி மன்றம் ஒரு பல்கலைக்கழகம்
என்று பல்துறை நிபுணர்கள் அழைப்பார்கள். ஏனெனில் தொழில் துறை, இலக்கியத் துறை, அரசியல் துறை, சட்டமன்றம், நீதித்துறை, ஆராய்ச்சி, மொழி வளர்ச்சி, சமூக ஒற்றுமை, ஆன்மிகம், சமயம் இப்படி எல்லாத் துறைகளிலும் தமக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து அவைகளுக்கு ஆதரவு நீருற்றி வளர்க்கும் மாமனிதராக, பல்துறைச் செம்மலாக விளங்கிய அருட்செல்வர் அவர்கள் தோற்றுவித்த இராமலிங்கர் பணி மன்றம் மேற்கூறிய அனைத்தையும் உள்ளடக்கி சிகரத்தில் ஏறி சிம்மாசனம் அமைத்த பெருமன்றம்.
இராமலிங்கர் பணிமன்ற விழாக்களில் பங்குபெறாத அறிஞர் பெருமக்களே இல்லை எனலாம்.

இங்கு பேசப்படாத பொருளே இல்லை எனலாம். இராமலிங்கர் பணிமன்ற மேடையில் பேசியவர்கள். பங்குகொண்டவர்கள் பெரும்பாலும், தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டில் மட்டுமல்லாமல், உலக அளவில் பேசப்படுகிறார்கள். புகழப்படுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா , முதலமைச்சர் பக்தவச்சலம், முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, கோவை அய்யாமுத்து, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மேலவைத் தலைவர் திரு மாணிக்கவேலர், குடியரசுத் தலைவர் திரு ஆர். வெங்கட்ராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. சஞ்சீவி ரெட்டி, ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங். மேனாள் முதல்வர் திரு. வைத்தியலிங்கம், மேனாள் மத்திய அமைச்சர் மற்றும் கேரள மாநில ஆளுநராக இருந்த திரு பா.இராமச்சந்திரன், மேனாள் ஒரிசா மாநில ஆளுநர் திரு. எம்.எம். இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பேராசிரியர் க.அன்பழகன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார், தவத்திரு வேதாத்திரி மகரிஷி. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், நீதியரசர் எம்.எம். இஸ்மாயில், நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார், நீதியரசர் திரு கைலாசம், நீதியரசர் இராமசுப்பிரமணியம், அருளாளர் இராம வீரப்பன். திரு இராஜாராம். திரு. பூவராகன், முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம், தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சந்தரனார், திரு நெ. சுந்தரவடிவேலு, திரு. கி.வா. ஜகந்நாதன், கிருபானந்த வாரியார் சுவாமிகள், பெரியசாமித் தூரன், டாக்டர் சுப.மாணிக்கம், திரு ஓ.வி. அழகேசன், திரு. அவிநாசிலிங்கம் செட்டியார், திரு.கோ. கலிவரதன். திரு.மு. அருணாசலம், திரு. ஏவி.எம். சரவணன், திருமதி. சரோஜினி வரதப்பன், மருத்துவர் இராமதாஸ், டாக்டர் சிலம்பொலி செல்லப்பன், நயவுரை நம்பி ஜெகத்ரட்சகன், டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு, டாக்டர் வி.சி. குழந்தைசாமி, டாக்டர் முத்துக்குமரன், டாக்டர் மார்கண்டன், புலவர் புலமைப்பித்தன், கவிப்பேரரசு திரு. வைரமுத்து, கவியரசர்கள் டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியன், திரு. சக்திக்கனல், திரு சிதம்பரநாதன், திருமதி பொன்மணி வைரமுத்து, திருமதி. பிரேமா, சொல்வேந்தர் திரு. சுகி சிவம், வழக்கறிஞர் திரு த. இராமலிங்கம், வழக்கறிஞர் திருமதி சுமதி, திருமதி. பாரதி பாஸ்கர், திருமதி பர்வீன் சுல்தானா, டாக்டர். சுதா சேஷையன், டாக்டர் பிரமீளா குருமூர்த்தி, தினமலர் திரு ஆர். கிருஷ்ணமூர்த்தி, தினமணி திரு. வைத்தியநாதன், டாக்டர். செல்வக்கணபதி, டாக்டர் இ. சுந்தரமூர்த்தி, கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா திரு. திருப்பூர் கிருஷ்ணன், கல்கி திரு. இராஜேந்திரன், டாக்டர் விக்கிரமன், டாக்டர் ஆர். நாகசாமி, திருமதி சௌந்தரா கைலாசம், திரு. வலம்புரி ஜான், முனைவர். ஞானசுந்தரம், நடிகர் சகஸ்ரநாமம், திரு. தா. பாண்டியன், திரு. ஜெயகாந்தன், திரு. அப்துல் ரகுமான், கவிஞர் பாலரமணி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, புலவர் முருகையா, திரு. முருகசரணன், இளம்புலவர் திரு. வெங்கடேசன் இப்படி சொல்லிக்கொண்டே போனால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும்.

நான் முக்கியமாக இங்கே குறிப்பிட்டுச் சொல்லவிரும்புவது தனிச் சிறப்பு வாய்ந்த இராமலிங்கர் பணிமன்றத்தின் முதல் செயலர் டாக்டர் ஔவை நடராஜன் அவர்கள் என்பது தான்.
டாக்டர் ஔவை நடராஜன் அவர்களை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கலாம். டாக்டர் நடராஜன் அவர்கள் ஒரு தமிழ்க் கலைக் களஞ்சியம்.

பெரும்புலவர் தமிழ் பேரறிஞர் புலவர் ஔவை துரைசாமி அவர்களுக்கு மகனாகப் பிறந்து மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்என்னுஞ் சொல் என்னும் குறளுக்கு இலக்கணம் வகுத்தவர். 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இராமலிங்கர் பணி மன்றத்தின் முதல் செயலர். இன்னும் சொல்லப்போனால் இராமலிங்க மிஷன் என்ற பெயரில் இருந்ததை இராமலிங்கர் பணி மன்றம் என்ற பெயர் மாற்றிட ஆய்வு செய்த காரணகர்த்தாக்களுள் ஒருவர்.

டாக்டர் ஔவை நடராஜன் அவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் துறை விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தவர். அந்த ஆண்டில் அருட்செல்வர் ஐயா அவர்கள் வள்ளற் பெருமானின் நூற்றாண்டு விழாவினை கோவையில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தினார்கள். முன்னாள் தமிழக முதலமைச்சர் உத்தமர் ஓ.பி.ஆர். அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் அருட்பா அரசு திரு. கிரிதாரி பிரசாத் அவர்களுக்குப் பிறகு “மனமெலாம் தித்திக்கும்” என்ற தலைப்பில் டாக்டர் ஔவை நடராஜன் அவர்கள் உரையாற்றினார். ஒளவை அவர்கள் ஆற்றிய உரை அருட்செல்வர் ஐயா அவர்களை பெரிதும் ஈர்த்த து. உத்தமர் ஒ.பி.ஆர். அவர்களும் இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் நமக்குப் பெரிதும் தேவை என்று அந்த விழாவிலேயே கூறினார்.

இந்நிலையில் அருட்செல்வர் ஐயா அவர்கள் இராமலிங்கர் பணிமன்றத்தை ஆரம்பிக்கும் முனைப்பில் ஈடுபட, தவத்திரு ஊரன் அடிகளாரும், அருட்பா அரசு திரு. கிரிதாரி பிரசாத் அவர்களும் அருட்செல்வர் ஐயா அவர்களிடம் நம் பணிமன்றத்திற்கு செயலராக தமிழ்ப் புலமை வாய்ந்த இளைஞர் திரு. ஔவை நடராசன் அவர்களையே நியமித்துவிடலாம் என்று ஆலோசனை கூற, அருட்செல்வர் ஐயா அவர்களும் ஒளவை அவர்களைப் பார்த்து, நீங்கள் மதுரையை விட்டு சென்னைக்கே வந்து விடுங்கள். நாம் இராமலிங்கர் நிறுவனம் தொடங்கலாம் என்று சொன்னதோடு மதுரை தியாகராசா கல்லூரி உரிமையாளர் திரு. கருமுத்து தியாகராசருக்கே கடிதம் எழுதி அவருடைய முழு சம்மதத்துடன் சென்னைக்கு ஔவை அவர்களை வரவழைத்து இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வைத்தார்கள்.

1965ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலராக பொறுப்பில் இருந்தார்கள்.ஔவை அவர்கள் செயலராகப் பொறுப்பேற்ற சமயம் இராமலிங்கர் பணி மன்றத்தின் தொடக்க காலம். இராமலிங்கர் பணி மன்றத்தின் பணிகளை நெறிப்படுத்திய பிதா மகன்களுள் டாக்டர் ஔவை அவர்களும் ஒருவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் மூலம் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் உருவாக்கிய சிறந்த பேச்சாளர்களை நாம் அளவிட முடியாது.

அண்ணல் காந்தியடிகள், வள்ளற் பெருமானின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள் முதல் எட்டாம் நாள் வரை எட்டு நாட்கள் சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏவி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக விழா நடைபெறும்.

இங்கே முக்கியமான ஒன்றை அவசியம் பதிவிட வேண்டும். ஏ.வி.எம். நிறுவனம் திரு. மெய்யப்பச் செட்டியர் அவர்கள் அருட்செல்வர் ஐயா அவர்களின் செயற்கரிய செயல்களைப் பார்த்து ‘தமிழுக்கு இல்லாத இடமா” என்று கூறி, இராமலிங்கர் பணி மன்றம் நடத்தும் வள்ளலார் காந்தி விழாவினை நம் கல்யாண மண்டபத்திலேயே தொடங்கலாம் என்று கூறினார்கள். அதன்படி இன்றளவும் வள்ளலார் காந்தி விழா ஏ.வி.எம். மண்டபத்திலேயே எட்டாம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திரு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் இராமலிங்கர் பணி மன்றத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்கள்.

இராமலிங்கர் பணி மன்றத்தின் ஆற்றல்மிகு செயலராக வீற்றிருந்த டாக்டர் ஒளவை. நடராசன் அவர்களது அறிவையும் ஆற்றலையும் கருதி, அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள், அரசுத் துறையில் ஒளவை அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவிரும்பி அவரை மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக்கினார்கள்.

டாக்டர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு முதல்வரான புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி, ஆர். அவர்கள், தமிழுக்கு ஒரு தனித்துறையையே ஏற்படுத்தி, ஒளவை அவர்களை அதன் செயலாளராக ஆக்கினார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழுக்கென்றே ஒரு துறை, அதன் முதல் செயலாளர் என்ற பெருமையை டாக்டர் ஔவை நடராஜன் அவர்கள் பெற்றார்கள்.

அதற்குப் பிறகு முதலமைச்சர் பொறுப்பில் இருந்த புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா அவர்கள் டாக்டர் ஔவை அவர்களை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்கள்.
அரசுச் செயலர், துணை வேந்தர் என்ற பெரும் பதவிகளை வகித்த ஒரே தமிழறிஞர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களே.

தமிழகத்தின் மூன்று முதலமைச்சர்களுடன் நல்ல முறையில் பணியாற்றிய ஒருவர் உண்டு என்றால் அவர் நம்முடைய ஔவை நடராஜன் அவர்கள் தான் என்பதை நான் இங்கே மகிழ்ச்சியுடன் பதிவிட விரும்புகிறேன்.
இராமலிங்கர் பணிமன்றத்தின் நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட பலரும் டாக்டர் ஒளவை நடராசன் அவர்களைப் போன்றே புகழின் உச்சியில் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்று கூறுவது மிகையாகாது.

ஔவை அவர்கள் இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலர் பொறுப்பில் இருந்து அரசுத் துறையில் பொறுப்பேற்கச் சென்றபொழுது அருட்செல்வர் ஐயா அவர்களிடம் அனுமதி பெற்று ஆசிபெற்றே சென்றார்கள்.
டாக்டர் ஔவை அவர்கள் இதை நினைவு கூறும்பொழுது “இந்தப் பணிகள் எல்லாம் நான் பெறுவதற்கும் இது நிகழ்வதற்கும் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றிற்கும் காரணம் தலைவர் அருட்செல்வர் அவர்கள் தான்.

இராமலிங்கர் பணி மன்றம் ஏணிப்படிகளாக இருந்து உச்சியைத் தொடுவதற்கு வாய்ப்பளித்தது. அருட்செல்வர் ஐயா அவர்கள் என்னை மகனைப் போல நடத்தினார். நீங்கள் எந்தப் பதவிக்குப் போனாலும், எந்த இடத்திற்குப் போனாலும் இராமலிங்கர் பணி மன்றம்தான் உங்களுக்கு நிலையான இடம் என்று சொல்லி ஆசீர்வதித்து என்னை அனுப்பி வைத்தார். அது இன்றளவும் தொடர்கிறது. இன்று வரை என் வாழ்வு இராமலிங்கர் பணிமன்றத்தில் தான் நிலைத்திருக்கிறது. ஒரு சமயம் நான் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு இதய மருத்துவம் செய்து கொண்டு தவித்துத் துடித்த பொழுது அருட்செல்வர் அவர்கள் என்னைத் தொட்டுத் தடவி எப்படியும் விழாவிற்கு வந்து வரவேற்புரை ஆற்றுவீர்கள் என்று சொன்னதை நினைத்தால் என் நெஞ்சம் நெகிழ்கிறது. கண்ணீ ர் வடிகிறது என்கிறார்.”

மேலும் ஔவை அவர்கள் குறிப்பிடுகையில், “நான் எந்தப் பொறுப்பில் இருந்தபோதும் தலைவர் அவர்கள் அந்தப் பொறுப்புக்கு என்னை அழைத்துப்போய் அமர்த்தியிருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த அருட்செல்வர் ஐயா அவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது. நூறு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டால் உங்களுக்கு நிதிச் சுமை இருக்காது. நான் உடன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதுகிறேன் என்றார்.”

”ஒருமுறை புரட்சித் தலைவரைப் பார்ப்பதற்காக கோட்டைக்கு அருட்செல்வர் ஐயா வந்திருந்தார். பார்த்து முடிந்தவுடன் புரட்சித் தலைவர் அவர்களிடம் என்னுடைய செயலாளரைப் பார்த்து வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அது யார் என்று புரட்சித் தலைவர் கேட்க, இருவருமே பேசிக்கொண்டே என்னுடைய அறைக்கு வந்ததைக் கண்ட எனக்கு மேனி சிலிர்த்தது. என் மனமெல்லாம் தித்தித்தது.” என்று ஔவை நடராசன அவர்கள் அருட்செல்வர் அவர்களைப் பற்றி நன்றியுடன் நினைவு கூறுகிறார்.

அரசுப் பணி ஓய்விற்குப் பிறகு அருட்செல்வர் ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று மீண்டும் சக்தி நிறுவனத்திற்கு வந்த ஔவை நடராசன் அவர்கள் அருட்செல்வர் அவர்கள் இருந்தவரை ஐயா அவர்களின் ஆலோசகராகப் பொறுப்பில் இருந்தார்கள்.

அரசுப் பணி ஓய்விற்குப் பிறகு அருட்செல்வரின் ஆலோசகராக பொறுப்பிற்கு வந்த பிறகும் ஐயா அவர்கள் முக்கிய வேலையாக ஔவை அவர்களை அழைத்தால், ஐயா அவர்களிடம் குறிப்பெடுப்பதற்காக கையில் எப்பொழுதும் நோட்டும் பேனாவையும் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். சில சமயங்களில் என்னுடைய அறைக்கு வந்து “ரவி, ஐயா அழைக்கிறார்கள். குறிப்பு எடுப்பதற்காக நோட்டும் பேனாவும் கொடு” என்று என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டு பயபக்தியுடன் தான் ஐயா அவர்களின் அறைக்குச் செல்வார் என்பதை நினைக்கும்பொழுது டாக்டர் ஔவை அவர்கள் அருட்செல்வர் ஐயா அவர்களிடம் வைத்திருந்த மதிப்பும் பக்தியும் நமக்குப் புரியும்.

தமிழகத்தின் மூன்று முதலமைச்சர்களுடன் நல்ல முறையில் பணியாற்றிய ஒருவர் உண்டு என்றால் அவர் நம்முடைய ஔவை நடராஜன் அவர்கள் தான் என்பதை நான் இங்கே மகிழ்ச்சியுடன் பதிவுடன் விரும்புகிறேன்.

என்னிடம் ஔவை அவர்கள் மிகவும் நெருங்கிப் பழகுவார்கள். என்னை அவருடைய மகன் போன்றே நடத்துவார்கள். அவருடைய துணைவியார் மருத்துவர் தாரா நடராஜன் அவர்கள் என்னிடம் மிக்க அன்பு கொண்டவர். நான் பலமுறை டாக்டர் ஔவை நடராஜன் அவர்களின் இல்லம் சென்று உரையாடிவிட்டு வருவது உண்டு. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய திருமணத்தை அருட்செல்வர் ஐயா அவர்களுடன் வந்திருந்து நடத்தி வைத்த பெருமகனார் டாக்டர் ஔவை அவர்கள். எங்களின் நட்பும் உறவும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இருந்து வருகிறது. என்னுடைய மண விழாவிற்கு வந்து வாழ்த்தியவர் என்னுடைய மணி விழாவிற்கும் வந்து ஆசிர்வதித்தவர்.

மேலும் என்னுடைய மணி விழாவினை முன்னிட்டு ஒரு மலர் வெளிவரவேண்டும் என்று பெரிதும் விரும்பி அருட்செல்வர் ஐயா அவர்களிடம் அவரே மலர் குறித்து பேசி அவரே முன்னின்று வெளிக்கொண்டு வந்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன்.

அருட்செல்வர் ஐயா அவர்கள், ஐயா அவர்களுடைய மருமகனார் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள், பல ஆதீனகர்த்தர்கள், தொழில் அதிபர்கள், நீதியரசர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பல்துறை அறிஞர் பெருமக்களுடன் டாக்டர் ஔவை அவர்களே தொடர்பு கொண்டு கட்டுரை பெற்று ஒரு மிகச் சிறந்த மலரை வெளிக்கொண்டு வந்து என்னுடைய மணி விழாவில் வெளியிட்டு என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் பெருமைப்படுத்தினார்கள்.

அதில் “ரவியை எனது தனிச் செயலர் என்ற பதவியின் பெயரால் அடையாளப் படுத்துவதை விடவும், அவரை எங்கள் சக்தி இல்லத்தின் ஓர் உறுப்பினராக, உறவினராக, உரிமையாளராக இனம் காட்டுவதுதான் ரவிக்கு நான் செய்கிற சிறப்புகள் எல்லாவற்றையும் விட என் மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகும்” என்று அருட்செல்வர் அவர்கள் குறிப்பிட்டிருந்தது என்னுடைய பாக்கியமாகவே கருதி பெருமைப்படுகிறேன். ஒரு சிறு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒரு சமயம் ஔவை அவர்கள் ஒரு முக்கிய வேலை காரணமாக இரயிலில் துணைவியார் மருத்துவர் திருமதி தாரா நடராஜன் அவர்களுடன் திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தார். இரயில் மதுரையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. நடு இரவு நேரம், அந்த நேரத்தில் கடுமையான குளிர் வேறு. இச் சூழ்நிலையில் ஒளவை நடராசன் அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு திடீரென்று நினைவிழந்து போயிருக்கிறார்.

நடு இரவு நேரம், அப்பொழுது எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் யார் என்னை அழைப்பார்கள் என்ற நினைப்பில், தொலைபேசியை எடுத்து பேசியபோது, ஔவை அவர்களின் துணைவியார் தொலைபேசியில் என்னிடம் பேசினார். நிலைமையைக் கூறியபொழுது நான் திக்குமுக்காடிப் போனேன்.
உடனே ஒளவை அவர்களின் துணைவியாரிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறிவிட்டு, சென்னையில் இருந்த நான், உடனே திருநெல்வேலியில் இருந்த எங்கள் ஏ.பி.டி. அலுவலகத்திற்கு போன் செய்து, கிளை மேலாளரிடம் அவசர நிலையைக் கூறி, ஏ.பி.டி. காரை அடுத்த சில நிமிடங்களில் மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைத்து, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

இது நடந்து பல்லாண்டுகள் ஆகிவிட்ட பொழுதும், ஔவை அவர்கள் இன்று வரை இந்நிகழ்ச்சியை இச் சம்பவத்தை சொல்வதை நிறுத்தவில்லை .

இராமலிங்கர் பணி மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பாடுபட்டு வரும் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் அருட்செல்வர் ஐயா அவர்களின் தளபதிகளில் ஒருவர் என்று சொல்வது மிகப் பொருத்தமாகவே இருக்கும் என்று கருதுகிறேன். .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *