POST: 2020-12-18T11:12:13+05:30

சிந்தனைக் கவிஞர் சிவசூரியநாராயணன்
சிந்திய கண்ணீர்ப்பா !

டாக்டர் தாரா நடராசன் நாமம் வாழ்க !

1)
சீரிருக்கும் சிறகிருக்கும் செந்தமிழர் பேறெனவே
நீரிருக்கும் அன்னமென நின்றிருக்கும் விண்மீனாய்
பேரிருக்கும் பெண்மணியாய் பீடிருக்க உலவியநீர்
ஊரிருக்கும் உறவெல்லாம் உதறிவிட்டுச் சென்றீரேன் ?

2)
மாண்புடனே மருத்துவத்தில் வல்லவராய் மண்ணுலகில்
காண்பவர்கள் களிப்படைய காலமெல்லாம் சாதித்தீர் !
பூண்டிருந்தீர் சேவையதைப் பொன்னான அணியெனவே !
தூண்நிகர்த்த தூமலர்நீர், துணைவிடுத்துப் போனீரேன் ?

3)
வல்லவராய் மழலையர்க்காய் வாழ்வெல்லாம் உழைத்தீரே,
நல்லவராய் நன்மைபல செய்தவராய் நானிலத்தில்
இல்லையெனச் சொல்லாமல் இன்புடனே உதவிடவே
நல்லவறக் கட்டளையை நாட்டியநீர் சென்றீரேன் ?

4)
இல்லறத்தில் இருந்தபடி இயன்றவரை பணிசெய்தீர் !
நல்லறத்தை நெஞ்சிருத்தி நன்மக்கள் பேறடைந்தீர் !
வல்லவராய் முத்தெனவே மக்களொரு மூன்றடைந்தீர் !
எல்லையிலா உலகிற்கே இயன்றவரை உழைத்திடவே !

5)
சிந்தையிலே உம்மைப்போல் திகழ்சேவை உடையோராய்
வந்தநல்ல மைந்தரிலே வளர்த்தளித்தீர் இருபிள்ளை !
தந்தையவர் வழிசென்று தமிழுக்கே உழைக்கவென
தந்தநல்ல ஓர்பிள்ளை தந்தைக்கே நிகராவார் !

6)
மழலையரின் நலங்கருதி வாழ்வெல்லாம் உழைத்தீர்நீர் !
குழந்தையரே குடும்பத்தின் வேரென்று கொண்டாடி
உழைத்தவரே, பாவேந்தர் உள்ளிருந்தே உமையியக்கப்
பிழைத்தனவே பிள்ளைகள் பெற்றோரும் களித்தனரே !

7)
நோய்நாடி நோய்முதலை நாடியதை அறிந்திருந்து
சேய்நாடி பிணிநுழையும் வழியடைத்த சீருடையீர் !
தாய்நாடி தமிழ்நாடி தண்டமிழர் உயிர்நாடி
பாய்நாடி வீழாமல் பரிந்துநின்ற பாக்கியம்நீர் !

8)
மாதரிலே மாணிக்கம் ! மனத்தினிலே வைரம்நீர் !
தீதறியா நெஞ்சுடையீர் ! செந்தமிழின் முத்தும்நீர் !
பாதையொன்றைப் போட்டளித்த பச்சைநீர் ! பவழம்நீர் !
ஏதும்நிகர் இல்லாத எழிலும்நீர் ! இசையும்நீர் !

9)
காதலினால் இல்லத்தைக் காத்தளித்த காரிகைநீர் !
மோதுகின்ற கருணையினால் முத்தமிழர் குடிகாத்தீர்!
போதெல்லாம் ஒளிவீசும் புகழணிந்த தாராநீர் !
ஆதலினால் உம்நாமம் அருந்தமிழ்போல் நின்றிருக்கும்!

10)
அவ்வைநட ராசரவர் அன்புமழை நனைந்தீர்நீர் !
செவ்வையாய் மனைகாத்தீர் ! செம்மாந்து பணிசெய்தீர் !
எவ்விதமே நும்முடைய இயல்பெல்லாம் எடுத்துரைப்போம்
இவ்விதமே ஒருசிலவே இயம்பிடுதென் நெஞ்சின்றே !

– சிவ சூரியநாராயணன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *